ஒன்றிய அரசு, மும்மொழிக் கொள்கையை எப்படியாவது தமிழ்நாட்டின் மீது திணித்து விட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நவோதயாப் பள்ளிகள் தொடர்பான வழக்கிலும், ஒன்றிய அரசின் வாதங்கள் அப்படித்தான் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இரு மொழிக் கொள்கைக்கான போராட்டம் ஏறத்தாழ ஒரு நூறாண்டுக்கு முந்தையது. 1927-ஆம் ஆண்டு தந்தை பெரியார் எழுதிய ‘இந்தி மொழியின் ரகசியம்’ என்ற கட்டுரைத் தொடங்கி, 1937 முதல் 2024 வரை ஹிந்தித் திணிப்புக்கு எதிரான பெரும் போர்க் களங்களைத் தமிழ்நாடு கண்டுள்ளது. 1967இல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘இருமொழிக் கொள்கை’ ஒன்றிய அரசாலும் அப்போதே ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. அதன் பின்னர் 1976-இல் இந்திய அரசால் “இந்தியும், ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழிகள்” என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்ட இந்திய அலுவல் மொழிகள் விதிகளிலும் (Official Language Rules, 1976), விதி 1(ஆ) -இல் “They shall extend to the whole of India, except the State of Tamilnadu”, “இது இந்தியா முழுமைக்கும் செல்லும் – தமிழ்நாடு நீங்கலாக” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் ஒன்றிய அரசுகள் இதனை முழு மனதோடு செய்திருக்கின்றனவா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் அதற்குப் பிறகும் பலமுறை, பல வழிகளில், ஹிந்தித் திணிப்பு முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லா நேரத்திலும் தமிழ்நாடுதான் விழிப்போடு இருந்து அத்தகைய முயற்சிகளை தொடக்கத் திலேயே தடுத்து வந்துள்ளது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ் உணர்வாளர்களும் மற்றும் பல அமைப்புகளும் இப்பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
ஒன்றிய அரசுதான் இத்தகையத் திணிப்பு முயற்சிகளில் இடைவிடாமல் ஈடுபடுகிறது என்றால், தற்போதைய தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளைப் பார்த்தால், ஆள்வோரின் கட்டுப்பாட்டில்தான் அரசு இருக்கிறதா? என்னும் அய்யத்தைத் தோற்றுவிக்கிறது. ‘தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்க விட மாட்டோம்!’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறார். இதுதான் அரசின் நிலைப்பாடு என்றால், சில துறைகள் அரசின் கட்டுப்பாடு இல்லாமல் இயங்குகின்றனவா? தமிழ்நாடு அரசுக்குட்பட்ட துறைகளிலேயே ஹிந்தித் திணிப்பு அரங்கேறிக் கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து வருகின்றனவே!
கடந்த வாரம் தமிழ்நாடு அரசின் மாநில நெடுஞ்சாலைத் துறை அமைத்த சாலைகளின் வழிகாட்டும் பலகைகளில் ஹிந்தி இடம்பெற்றிருந்ததை ஊடகங்கள் எடுத்துக் காட்டின. ‘விடுதலை’ அதனைக் கண்டித்தது. பிறகு திருத்தப்பட்ட படங்கள் வெளியாயின. தற்போது இரண்டு வெவ்வேறு துறைகளிலிருந்து ஹிந்தி சேர்க்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. மதுரை கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் கோயிலின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய பெயர்ப் பலகையில் தமிழ் நீக்கப்பட்டு ஆங்கிலமும், ஹிந்தியும் மட்டுமே கொண்ட பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு? தமிழை நீக்கி ஹிந்தியைக் கொண்டுவரும் அளவுக்கு ஊடுருவல் நிகழ்ந்திருக்கிறதென்றால் இதற்கு அத்துறையின் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?
இன்னொரு புறம் கோவை, கரூர் அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துப் பையில் ஏற்ெகனவே இருந்த தமிழ் ஆங்கிலத்துடன் தற்போது ஹிந்தியும் இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது அந்த மருத்துவமனைகளில் இருக்கும் அதிகாரிகளின் செயல்தான் என்றும், கடந்த சில மாதங்களாகவே இந்த மருந்துப்பை விநியோகிக்கப்படுகிறது என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள். எப்படியாயினும், யார் ஆட்சியாயினும், தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கைதான் அரசின் கொள்கையாக இருக்கிறது என்பதை புரியாதவர்களா இன்று அதிகாரத்தில் அமர்ந்திருப்போர்?
அரசு ஊழியர்களின் நடத்தை விதிமுறைகளும், அரசு நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பான அரசு ஆணைகளும் விரிவாகவும், தெளிவாகவும் பயிற்றுவிக்கப்பட்டுத்தானே, ஒவ்வொரு வரும் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். பிறகு தமிழ்நாட்டின் அடிப்படை உணர்வுப்பூர்வமானப் பிரச்சினையான இரு மொழி கொள்கையில் இத்தகைய குளறுபடிகள் நடப்பது ஏன்?
தமிழ்நாட்டின் பண்பாட்டு அரசியல் தளத்தில் மொழிக் கொள்கை ‘நீறு பூத்த நெருப்பாக’ அணையாமல் இருக்கிறது. அதை ஊதிப் பெரிதாக்கும் வேலையில் ஒன்றிய அரசும், மாநில அரசும் இறங்கக் கூடாது. எந்த ஊடுருவலையும் அழித்தொழிக்கும் வல்லமை படைத்தது திராவிட மாமருந்து என்பதை ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுவது நம் கடமை!
