கபிஸ்தலம், அக். 7- கும்பகோணம் கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் 03.10.2026 சனிக்கிழமை மாலை 6 தொடங்கி மணிக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சிந்தனைக்களம் – 15 நடைபெற்றது.
6 மணி முதல் 06.20 வரை நட்புறவாடல் நிகழ்வில் வருகைதந்த ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர்.
6.30க்கு மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர் எம்.திரிபுரசுந்தரி தலைமையேற்க கூட்டம் தொடங்கியது. முதலில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.சேகர் தொடக்க உரையாற்றினார். தனது உரையில், இன்று கபிஸ்தலம் சுயமரியாதை சுடரொளி தி.கணேசனின் 7ஆம் நினைவு நாள் என்பதை எடுத்துச் சொல்லி, தி.கணேசனுக்கம் தனக்கும் உள்ள 50 ஆண்டுகால தொடர்பையும், தி.கணேசன் அவர்களது இயக்கப் பணிகளையும், இப்பகுதியில் அவர் ஏற்படுத்திய கல்விப் புரட்சியையும் எடுத்துக்கூறி அவருக்கு மரியாதை செலுத்திட வேண்டி ஒருநிமிடம் அமைதியாக எழுந்து நிற்க வேண்டினார். கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து திராவிட முன் னேற்றக் கழக பொறுப்பாளரும்,சீரிய பகுத்தறிவாளருமான உம் பளாப்பாடி சா.கிருபாகரன் வர வேற்புரையாற்றினார்.
முன்னிலை உரையாற்றிய ஒன்றிய திராவிடர் கழகச் செயலா ளர் சு.கலியமூர்த்தி விரைவில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் குடும்பங்கள் சந்திக்கும் நிகழ்வு நடத்திட வேண்டும் எனவும் அதற்கு தான் முழு ஓத்துழைப்பு வழங்கு வதாகவும் கூறி முடித்தார்.
தொடர்ந்து தலைமை உரை நிகழ்த்திய மாவட்ட மகளிரணி தலைவர் எம்.திரிபுரசுந்தரி இந்த சிந்தனைக்களம் கூட்டத்திற்கு தொடர்ந்து தான் வருவதாக கூறி கபிஸ்தலத்தில் நடக்கும் எதுவும் சிறப்பாக திட்டமிட்டு நடக்கும் என்பதைக் குறிப்பிட்டு சிறப்பு பேச்சாளருக்கு நேரம் அதிகம் கொடுக்கும்பொருட்டு தனது உரையை முடிப்பதாகக் கூறி முடித்தார்.
சிறப்புரையாற்றும் வழக்குரைஞர் பூவை.புலிகேசியை அறிமுகப்படுத்தி பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வி.மோகன் பேசினார். தனது உரைக்கு ஆதாரமானவை களோடு எப்போதும் பேசும் பூவை.புலிகேசி இப்போது ஒரு பெரிய பையில் ஆதார நூல்களை எடுத்து வந்துள்ளதைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினார்.
பாபநாசம் பகுதியில் மிகவும் அறிமுகமான ஆசிரியர், மாநில அரசின் விருது பெற்றவர், ஒன்றிய அரசின் தேசிய ஆசிரியர் விருது பெற்றவர், மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டு பெற்ற கல்வியாளர் சங்க.கலைசெல்வன் அவர்கள் சிறப்புரையாளருக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
‘காந்தியடிகள்…. படமல்ல, ஒரு பாடம்’ என்னும் தலைப்பில் 75 நிமிடங்கள் உரையாற்றிய உரையாற்றிய பூவை புலிகேசி அவர்கள் காந்தியார் கொலையிலிருந்து தொடங்கி பின்னோக்கிச் சென்று காந்தியாருக்கும் தலைவர் தந்தை பெரியாருக்கும் உள்ள தொடர்பு இருவரது செயல்பாடுகள், அண்ணல் அம்பேத்கர் அவர்களது செயல்பாடுகள் அன்றைய சமூகச் சூழ்நிலை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பேசி, அனைத்துக்குமான ஆதாரங்களை பல்வேறு நூல்களிலிருந்து எடுத்துக் காட்டினார் காந்தியடிகள் பணிக்கும் தந்தை பெரியார், அம்பேத்கர் பணிக்கும் உள்ள தொடர்பு, வேறுபாடுகளை அழகாக எடுத்துக்கூறி தான் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் ஆதாரமான நூல்களை எடுத்துக்காட்டி பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
75 நிமிட உரையை ஆடாமல் அசையாமல் உற்று உள்வாங்கிய பார்வையாளர்கள் அனைவரும் உரையை முடித்தவுடன் பெரிய அளவில் கையொலி எழுப்பினர். மிகச்சிறப்பான ஆய்வுரை என பலரும் பாராட்டினர்கள்.
கூட்டத்தின் முடிவில் தொடர்ந்து வருகை தரும் பார்வை யாளர்களுக்கு நூல் வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வு உண்டு. ஆனால் இந்த முறை மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் தாராசுரம் வை.இளங்கோவன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது சன் நியூஸ் தொலைக்காட்சி நேர்காணல் மற்றும் 12.08.1947 அன்றைய விடுதலை செய்தி மற்றும் 01.02.1979 துக்ளக் செய்தி ஆகியவற்றை தொகுத்து வெளியிட்ட நூல் மற்றும் பாபநாசம் குயில் கண்ணன் தொகுத்த காந்தியார் பற்றிய செய்திகள் ஜெராக்ஸ் நகல்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
இறுதியில் கபிஸ்தலம் மேனாள் லயன்ஸ் தலைவரும், சீரிய பகுத்தறி வாளருமான தெ.இளைய சேகர் நன்றி கூறினார்.
நிகழ்வு முடிந்ததும் வழக்குரைஞர் பூவை புலிகேசியுடன் இயக்கத்துக்கு அப்பாற்பட்டு கூட்டத்திற்கு தொடர்ந்து வருகைதரும் பார்வை யாளர்கள் தங்களது மகிழ்ச்சியையும் பயனாடைக்குப் பதிலாக பணமும் வழங்கி ஒளிப்படமும் எடுத்துக்கொண்டனர்.
கூட்டத்திற்கு பாபநாசம், உத்தாணி, கும்பகோணம், சுந்தரப்பெருமாள்கோவில், இரவாஞ்சேரி, நாச்சியார்கோவில், வலங்கைமான், சீர்காழி, உள்ளிக்கடை, திருநாகேஸ்வரம், போன்ற பகுதிகளிலிருந்து கலந்துகொண்டார்கள்.
கூட்டத்தில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், பொதுவாழ்வில் உள்ளவர்கள், விவசாயிகள், வணிகர்கள், மகளிர் என பலரும் கலந்துகொண்டது குறிப்பிட்த்தக்கது.
அனைவருக்கும் கபிஸ்தலம் சு.கலியமூத்தி கடலை மிட்டாய் வழங்கினார். நாச்சியார்கோவில் வெங்கடேசன் தனது சார்பில் இனிப்பு ரொட்டியை வழங்கி மகிழ்வூட்டினார். தேநீரும் வழங்கப் பட்டது.
கூட்ட நிகழ்வை பெரியார் கண்ணன், மற்றும் உ.நாகராஜ் ஆகியோர் நேரலை செய்தனர். கூட்டம் இரவு 08.10க்கு முடிவுற்றது.
