சென்னை, ஆக். 7- அஞ்சல் துறையில் பழைமையான ஆர்எம்எஸ் சென்னை கோட்டத்தை மற்றொரு கோட்டத்துடன் இணைக்கும் முடிவை கைவிடக்கோரி சென்னை யில் அஞ்சல்துறை ஆர்எம்எஸ் ஊழியர்கள் நேற்று (6.10.2026) உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அஞ்சல் துறையில் 144 ஆண்டுகளாக இயங்கி வரும் ஆர் எம்எஸ் சென்னை (எம்) கோட்டத்தை சென்னை சார்ட்டிங் கோட்டத்துடன் இணைக்கும் முடிவை கைவிடக்கோரி, அகில இந்திய ஆர்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை அண்ணா சாலை தலைமை அலுவலகம் முன்பு நேற்று உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் கிரிபாபு, தேசிய அஞ்சல் கூட்டமைப்பு மாநில செயலாளர் முரளி உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஊழியர் சங்கத்தினர் கூறியதாவது:
இந்திய அஞ்சல் துறையின் முக்கியமான இரண்டு பிரிவுகளில்அஞ்சல்சேவை(ஆர்எம்எஸ்) ஒன்றாகும். இப்பணிகளைமேற்கொள்ளும் சென்னை கோட்ட ஆர்எம்எஸ் நாட்டில் மிக பழைமையானது. இக் கோட்டத்தை சென்னை சார்ட்டிங் கோட்டத்துடன் இணைக்க முடிவு செய்துள்ளனர். இதை கைவிட வேண்டும்.
ஆர்எம்எஸ் சென்னை கோட்டத் தில் 350 பேரும், சென்னை சார்ட்டிங் கோட்டத்தில் 600 பேர் பணியாற்றுகின்றனர். இதை இணைக்கும்போது, ஏற்கெனவே, நிர்வாகம் கொடுக்கும் சலுகைகள் ஊழியர்களுக்கு தாமதமாகும் நிலையில் இணைப்பதனால் அவை தாமதியாகும். இதுதவிர, 350 கி.மீ. தொலைவுக்கு ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் சூழல் உருவாகும். மேலும் போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. எனவே, இணைக்கும் முடிவை கைவிட்டு சங்கத்துடன் பேச வேண்டும்.
