பெரியார் என்ற சொல் சமூக மாற்றத்துக்கான ஒரு குறியீடு! – மே.து. ரா. –

9 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெரியார் தனியர் அல்லர் – பெரியார் ஓர் இயக்கம் –
பெரியார் ஒருபோர் வாள் – பெரியார் ஓர் ஏவுகணை!

தந்தை பெரியார் அவர்களை இழிவுபடுத்தக்கூடிய தாக்குதல்கள் கடந்த நூறு ஆண்டுகளாகத் தொடர்வது தான். இதில் ஒன்றும் வியப்பில்லை.

பல நூற்றாண்டுகளாக நீடித்துக்கொண்டிருந்த சமூகக் கட்டமைப்பு அவலங்களுக்கு எதிரான பெரும் போரினைத் தனித்துத் தொடங்கியவர் பெரியார்.

கடவுள் மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஜாதி மறுப்பு, பார்ப்பனிய மேலாண்மை எதிர்ப்பு, ஸநாதன அழிப்பு, மூடநம்பிக்கைத் தகர்ப்பு, பெண் விடுதலை, பெண்ணுரிமை, பெண் மறுமணம், பெண் கல்வி, சமூக நீதி, தன்மதிப்பு, பகுத்தறிவு, இன விடுதலை, பொதுவுடைமை என்பன போன்ற அனைத்துக்குமான போராட்டங்களை ஒன்றிணைத்து, ஒரே முனைப்பில் நடத்தியவர் பெரியார்.

சமூகம் எதிர்கொண்டிருந்த பல நூற்றாண்டுச் சீரழிவுகளைச் சீராக்கப் பெரியார் மேற்கொண்ட நட வடிக்கைகள், ஒவ்வொருவரையும் ஏதோவொரு வகையில் தாக்கத்துக்குள்ளாக்கி உள்ளன. இன்றும் அந்த நிலை மாறவில்லை என்று கூறலாம்.

பெரியார் எதிர்ப்பில்
குறையாத வன்மம்

பெரியார் வாழ்ந்த காலத்தில் எழுந்த எதிர்க் குரல்களின் வன்மம் இன்று வரை சற்றும் குறையவில்லை என்றே கருதவேண்டியுள்ளது. சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட தற்காலத்தில் பகைக் கருத்துக்களின் வெளிப்பாடுகள் வேறுவேறு வடிவங்களைப் பெற்றுவருகின்றன. தனிப்பட்ட உரையாடல்களில் முடங்கிக் கிடந்த வன்மங்கள், ஏடுகளின் அச்சிலும் பொதுநிகழ்வுகளின் பேச்சிலும் ஓரளவு எல்லைகளைக் கடக்காமல் இருந்தன.

ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றி இழிவான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொய்யான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. அனைத்துக்கும் தக்க மறுமொழிகள் ஆங்காங்கே பதியப்பட்டுவிடுகின்றன என்பதில் அய்யமில்லை.

ஆயினும், மூத்த ஊடகவியலாளரான மாலன், வேறு வகையில பெரியாரைச் சிறுமைப்படுத்தும் முயற்சியொன்றில் இறங்கியிருக்கிறார்.

“ஈரோட்டுப் பெரியாரைப் பற்றி இன்று நிறையப் பதிவுகள் படித்தேன். அப்போது ஈரோட்டிற்கு அருகில் உள்ள கோபிச்செட்டிப்பாளையத்தில் வாழ்ந்த லட்சு மண அய்யர் ஞாபகம் வந்தது” என்று தொடங்கி, லட்சுமண அய்யரது பணிகளைத் தனது முகநூல் பதிவில் விவரிக்கிறார்.

கோபி லட்சுமண அய்யர்

1918இல் பிறந்து 2011இல் மறைந்த
கோ.சீ. லட்சுமண அய்யர் அவர்கள், 1952-1955 மற்றும் 1986- 1991 ஆகிய ஆண்டுகளில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சித் தலைவராகப் பணியாற்றியவர்.

அவரைப் பற்றி நீதியர் சந்துரு  ‘இந்து தமிழ்த் திசை’யில்  எழுதிய கட்டுரையின் தகவல்களை மாலன் பயன்படுத்தியுள்ளார்.

அரிசன சேவா சங்கத்தின் சார்பில் அவரது தந்தை தொடங்கிய தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான இரண்டு விடுதிகள், தக்கர்பாபா வித்யாலயம் ஆகிய வற்றையடுத்து, மூன்று குழந்தைகள் காப்பகங்கள் லட்சமண அய்யரால் தொடங்கப்பட்டன. இதற்கான இடமும் அவரால் வழங்கப்பட்டுள்ளது. இவை யாவும் மாநில அரசின் நிதியுதவியுடன் இன்றும் நடந்து வருகின்றன.

கோபியில் 26 பொதுக் கிணறுகளில் நீர் எடுக்கும் உரிமையைத் தலித் மக்களுக்கு வாங்கிக் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குடியிருக்க நிலங்களை வழங்கியுள்ளார்.

2007இல் வார இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காண லில், கோபியைச் சுற்றி 650 ஏக்கர் நிலமும், கோபி நகரத்துக்குள் 40 ஏக்கர் நிலமும் இருந்ததைக் குறித்து வினவியபோது, ‘‘பாதியைத் தர்மமா கொடுத்துட்டேன், பாதி வியாபார நஷ்டத்துல போயிடுச்சு. இப்போது ஒரு சென்ட் நிலம்கூடச் சொந்தம் இல்லை” என்று கூறியுள்ளார். கொடை எவ்வளவு, இழப்பு எவ்வளவு என விவரிக்கவில்லை.

கோபி நகராட்சித் தலைவராக இருந்தபோது, கோபி நகரக் குடிநீர்த் திட்டத்தைக் கொண்டுவந்ததோடு, தன்னுடைய சொந்த நிலத்தை வழங்கியுள்ளார். கோபிக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கூட்டுறவு வீட்டு அடமான வங்கியையும் ஏற்படுத்தியுள்ளார்.

1986இல் மனிதர் மலத்தை மனிதர்களே அள்ளும் முறையைத் தடை செய்துள்ளார். இந்தியாவிலேயே இந்தத் திட்டத்தைக் கோபிச்செட்டிபாளையம் நகராட்சிதான் முதன்முதலில் கொண்டுவந்தது எனக் கூறப்படுகிறது.

சந்துரு கட்டுரையில் இல்லாத செய்தியென, ஆதிதிராவிட மக்களை அழைத்துச் ‘சமபந்தி’ விருந்து நடத்தினார், அவரது வீட்டுக் கிணற்றிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களையும் தண்ணீர் எடுக்க ஏற்பளித்தார், இதனால் இவருடைய இனத்தைச் சேர்ந்தவர்களால் இவர் ஒதுக்கிவைக்கப்பட்டார், அவர் மட்டுமின்றி லட்சுமண அய்யரின் உடன்பிறப்பான ஆனந்தி லட்சுமியையும், அவரது புகுந்த வீட்டினர் பிறந்த வீட்டிற்கு அனுப்பினர் எனறு விவரிக்கிறார் மாலன்.

தவறான தகவல்கள்

லட்சுமண அய்யரின் இறுதி ஊர்வலத்தில் குறைவான எண்ணிக்கையினரே பங்கு கொண்டனர் என சந்துரு வருந்துகிறார்.

‘‘சமூக நீதி பேசும் கட்சிகளும் அரசுகளும் இவரைக் கண்டு கொண்டதே இல்லை. காரணம் அவர்  பிறந்த ஜாதியாக இருக்குமோ’’ என மாலன் உள்நோக்கம் கற்பிக்கிறார்.

சந்துரு, மாலன் ஆகியோர் கூற்றுகளில் பல விவரப் பிழைகளும் தவறான தகவல்களும் உள்ளன என்பதை இங்குப் பொருட்படுத்த வேண்டியதில்லை. 1986இல் மனிதக் கழிவுகளை மனிதர் எடுக்கும் நிலையைக் கோபி நகராட்சிதான் முதன்முதலாக நடைமுறைப்படுத்தியது என்ற தகவல் அடிப்படையில் தவறானது. ஏனெனில், தமிழ்நாட்டிலுள்ள பல நகராட்சிகளில் அதற்கு முன்னரே இம்முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. மேலும், நகராட்சித் தலைவராகச் செய்த பணிகளில் பல வழக்கமான பணிகளாகவே தெரிகின்றன.

எடுத்துக்காட்டாக, கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தந்தை பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது, குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார். இதன்றி, மேலும் பல பணிகளைச் செய்து முடித்திருக்கிறார். ஈரோடு கூட்டுறவு வங்கியினைத் தொடங்கியவர் பெரியார். அதன் முதல் உறுப்பினரும் அவரே. அதைப் போற்றி மதிக்கும் வகையில் இன்று வரை பெரியார் அந்த வங்கியின் முதல் உறுப்பினராகத்  தொடர்ந்து பேணப்பட்டு வருகிறார்.

அதேபோன்று, லட்சுமணன் அய்யர் மறைந்தபோது திமுகவைச் சார்ந்த சுப்புலட்சுமி செகதீசன், என்.கே.கே. பெரியசாமி, மதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அ. கணேசமூர்த்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலின் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடராசன் உள்ளிட்ட பல முன்னணித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரசார்தான் மிகுவளவில் வரவில்லை. நூற்றுக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர் என்பதைக் கலந்துகொண்ட பலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நச்சுச் சொற்கள்

இவை ஒருபுறம் இருந்தாலும், லட்சுமண அய்யரின் பங்களிப்பு, எளிமை, அனைவரிடமும் பழகும் தன்மை, ஈகை, இரக்கம், பரிவு ஆகிய அனைத்தையும் எவரும் மறுக்கவில்லை.

அவரது பெருமைகளையும் சிறப்புகளையும் கூறுவதோடு மாலன் நிறுத்தியிருந்தால் எவரும் குறை காணப் போவதில்லை.

ஆனால், தன்னுடைய பதிவினை முகநூலில் நிறைவு செய்யும்போது நஞ்சு தடவிய ஒரு வினாவினை மாலன் தொடுத்துள்ளார்.

“இப்போது சொல்லுங்கள், யார் பெரியார்?”

மாலனின் உள்நோக்கம், வஞ்சம், இழிவுபடுத்தல் என்பன போன்ற நோக்கங்கள் இந்த நச்சுச் சொற்களில் பொதிந்து கிடக்கின்றன. அவரது உள்ளக்கிடக்கையை அவை காட்டிக் கொடுத்துவிடுகின்றன.

தந்தை பெரியாரது பணிகளை விரிவாக விளக்கி, ஒப்பிட்டு, லட்சுமண அய்யரின் பங்களிப்பைச் சிறுமைப்படுத்த முனையவேண்டியதில்லை. இருந்தாலும், லட்சுமண அய்யரின் பங்களிப்பை ஊதிப் பெருக்கி, பெரியாரின் பணிகளைச் சிறுமைப்படுத்த எண்ணும் மாலன் போன்றோரது வஞ்சத்தினை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. பெரியார் என்று அழைப்பதையே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மூடி மறைக்காமல் தெரிவித்து விடுகிறார்.

பெருமை சேர்த்தோர் பலர்

கடந்த காலத்தில் விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த பலர், ஆங்காங்கு தங்களுடைய நலன்களை முன்னிறுத்தாமல், மக்கள் மேம்பாட்டுக்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர் என்பதில் அய்யமில்லை. கோபிசெட்டிபாளையம் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் அன்று தலைமைப் பொறுப்பில் இருந்த பலர் இத்தகைய பணிகளைச் செய்துள்ளனர் என்பதுதான் உண்மை. பெருமைப்படுத்தப்படக்கூடிய பங்கைப்பை அவர்கள் செலுத்தியுள்ளனர்.

மருத்துவமனைகள், தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், சாலைகள், குடிநீர்க் குழாய்கள் ஆகியவற்றை அன்று நகராட்சிகள் ஏற்படுத்தியிருந்தன. பொள்ளாச்சி நகராட்சி கல்லூரியைக்கூடத் தொடங்கியிருந்தது.

வட்டக் கழகம், மாவட்டக் கழகம் ஆகியன செயல்பட்டுக்கொண்டிருந்த காலகட்டங்களில், அதன் தலைவர்களும் உறுப்பினர்களும் செய்த பணிகள் இன்றும் நிலைத்திருக்கின்றன. 1958ஆம் ஆண்டு வட்ட, மாவட்டக் கழகங்கள் கலைக்கப்பட்டுப் புதிய நடைமுறைகள் வரும் வரை, கல்வி, மக்கள் நலன், சாலைகள் போன்ற பல அடிப்படைகள் செம்மையாக நடைபெற்றிருக்கின்றன. இவற்றையெல்லாம் விவரிக்கவேண்டியதில்லை என்றாலும், ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் பதிவு செய்யலாம்.

டி.எம். காளியண்ணன் போன்றோர்  

ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் (இன்றைய சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருட்டிணகிரி, ஓசூர் மாவட்டங்கள்) மாவட்டக் கழகத் தலைவராக இருந்த டி.எம். காளியண்ணன் என்பவர் மாவட்டம் முழுதும் 1000–க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை ஏற்படுத்தினார். உயர்நிலைப் பள்ளிகளும் மிகுவளவில் தொடங்கப்பட்டன. அன்று பெரிதும் வளமில்லாத மாவட்டமாகக் கருதப்பட்ட நிலையில் மனித வளத்ததைப் பெருக்கிக் காட்டினார்.

இந்திய ஒன்றியத்தின் அரசமைப்புச் சட்ட உரு வாக்க அவையில் உறுப்பினராக இருந்தோரில் இளைய அகவையினர் இவர்தான். அரசமைப்புச் சட்ட அவை உறுப்பினர்களில், 102 ஆண்டுகள் வாழ்ந்து இறுதியாக மறைந்தவரும் காளியண்ணன் அவர்கள்தான். நாடாளுமன்ற உறுப்பினர் (1950க்கு முன்), சட்டப்பேரவை உறுப்பினர் (1952-1967), சட்ட மேலவை உறுப்பினர் (1967-1973) எனப் பல பொறுப்புகளையும் நிறைவேற்றியவர். தீண்டாமை ஒழிப்பை முன்னெடுத்தவர். சிலப்பதிகாரத்தில் தோய்ந்து, ஆண்டுதோறும் இளங்கோ விழாவினைத் தக்காரை அழைத்துத் தவறாது நடத்திவந்தார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளி, மருத்துவமனை, ஊராட்சி ஒன்றியம், கால்நடை மருத்துவமனை வேளாண் அலுவலகம், கூட்டுறவு சங்கம் ஆகிய அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களுக்கும் தாழ்த்தப்பட்டோர் குடியிருக்கவும் நிலங்களைக் கொடையாக வழங்கியவர் ஊராட்சித் தலைவராக இருந்த எசு.பி. சுப்பராயன் என்பவர்தான்.

விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்தோர், பொது வாழ்வுப் பொறுப்புகளைப் பெற்றிருந்தோர் என்றில்லாமல், கடந்த காலங்களில் எளிய மக்கள் பலரும் இத்தகைய  பணிகளைக் கடமையெனக் கருதி மேற்கொண்டிருந்தனர் என்பதை அறியலாம்.

இவர்களைப்போல் ஊருக்கு ஒருவர், நகரத்துக்கு ஒருவர், மாவட்டத்துக்கு ஒருவர் என்று பலரைச் சுட்டிக்காட்ட முடியும். இவர்களும், இவர்களை ஒத்த பெருமக்களும் பெரியோர்தாம், பாராட்டத்தக்கோர்தாம் என்பதை மறுப்பார் இல்லை.

நாட்டின் விடுதலைக்காகக் தங்கள் வாழ்வையே அள்ளித் தந்த மாமனிதர்கள் வரலாற்றில் உண்டு. அரசியல், பொருளிய, சமூக விடுதலைக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்ட ஈகியர் பலர். ஸ்டாலின் குணசேகரன் தொகுத்த ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ (இரு தொகுதிகள்), ஜீவபாரதி எழுதிய ‘காலந்தோறும் கம்யூனிஸ்ட்கள்’ (இரு தொகுதிகள்) போன்றவை நூற்றுக்கணக்கான பெருமக்களில் ஒரு சிலரையே ஆவணப்படுத்தியுள்ளன. இன்னும் ஆவணப்படுத்தப்பட வேண்டியோர் பலர் உள்ளனர்.

பெரியார் என்ற சொல்
மாற்றத்துக்கான குறியீடு

ஆனால், ‘‘யார் பெரியார்’’ என்ற வினாவினை எழுப்பி யதன் வழியாகப் பெரியாரை மறுக்கும் – மறைக்கும் வஞ்சமும், லட்சுமண அய்யரைத் தூக்கிப் பிடிக்கும் மனமும் மயக்கமும் மாலனுக்கு ஏற்பட்டிருப்பது, ‘அவர்களது’ அணையா ஆத்திரத்தைக் காட்டிவிடுகிறது.

எத்தனையோ ஒப்பீடுகளை எடுத்துக்காட்டிப் பெரியாரைச் சிறுமைப்படுத்தும் முயற்சிகள் காலந்தோறும் கையாளப்படுகின்றன.

லட்சுமண அய்யர் போன்றோரின் பெருமைகளைக் குறைத்து மதிப்பிடும் எண்ணம் எவருக்கும் இல்லை. அதைப் போலவே, பெரியாரைத் தாழ்த்த நினைப்பதையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

பெரியார் என்ற பொதுச் சொல்லினை யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை உண்டு. ஆனாலும், பொதுவில் பெரியார் என்றால் அவர் தந்தை பெரியார் மட்டுமே.

உலகின் எந்த முனைக்குச் சென்றாலும் பெரியார் என்றால் அவர் ஒருவர்தான். அவர் தான் பெரியார்.

ஒரு குறிப்பிட்ட ஊருக்கு, நகரத்துக்கு, பகுதிக்கு, நாட்டுக்கு மட்டுமே பெரியார் உரியவர் என எல்லை வகுக்க இயலாது. மனித இனம் முழுமைக்குமான சமூக விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுத்தவர் பெரியார் என்பதைப் புரிந்துகொண்டால் போதும். மறைந்த பின்னரும், லட்சுமண அய்யர் போன்ற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான செயல்பாட்டாளர்களை உருவாக்கி, உலவ விட்டுக் கொண்டிருக்கிறார் பெரியார்.

பெரியார் தனியர் அல்லர். பெரியார் ஓர் இயக்கம். பெரியார் ஒரு போர் வாள். பெரியார் ஓர் ஏவுகணை. அனைத்துக்கும் மேலாக பெரியார் என்ற சொல் சமூக மாற்றத்துக்கான ஒரு குறியீடு.

கதிரவனைக் கையால் மறைக்கும் மாலன்கள் மயக்கத்தில் கிடக்கட்டும்.

நன்றி:

‘காக்கைச் சிறகினிலே’, 2026 அக்டோபர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *