மதுராந்தகம், அக்.5 மின்வெட்டால், தமிழ்நாடு முழுவதும் இருண்டு கிடக்கிறது. இருட்டு என்பதை அவர்களே ஒப்புக்கொண்டார்கள். இருட்டுப் போய் வெளிச்சம் வர வேண்டுமானால், உதய சூரியன் வந்தால்தான் விடியும். எனவே தான், உதய சூரியனுக்கு ஆதரவு கொடுங்கள்; அதன் மூலமாக மதுராந்தகத்திலே மிகப்பெரிய ஒரு புதிய திருப்பத்தை உருவாக்குங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை
கடந்த 1.10.2026 அன்று மாலை 7 மணியளவில், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வழக்குரைஞர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, வையாவூர் ஊராட்சி, மூசிவாக்கம் பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது தேர்தல் பரப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி
மேட்டூர் அணை திறக்கப்பட்டுவிடும்
‘திராவிட மாடல்’ ஆட்சியில் இயற்கைக் கூட ஒத்து ழைத்தது; வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி என்றால், அதற்குள் மேட்டூர் அணை திறக்கப்பட்டுவிடும். ஆனால், தற்போது குறித்த காலத்தில் அணையைத் திறக்க முடியவில்லை. மேலணைப் பகுதிகளில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கருநாடகா அணைகள் மூழ்காமல் இருக்க வேறு வழியின்றித் தண்ணீர் திறந்துவிடும்போதுதான் நமக்குத் தண்ணீர் வருகிறது என்பதே உண்மை நிலை. இத்தகையப் பிரச்சினைகள் விவசாயிகளுக்குத் தெளிவாகவே தெரியும்.
தஞ்சாவூர் மண்டல விவசாயிகளுக்கு இதைப் பற்றித் நன்றாகத் தெரியும். அங்கு இரு முக்கிய சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்!
ஒன்று, குறுவை சாகுபடி; இரண்டு சம்பா சாகுபடி. இவற்றின் வேறுபாடுகள் கூட முழுமையாகப் புரி யாமல் சிலர் பேசுகிறார்கள். அதனால், விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்.
தற்போது உள்ள நீரைக் கொண்டு ஒரு போகச் சாகுபடியைக் (குறுவை) கூடச் செய்ய முடியாது என்ற நெருக்கடி வந்துவிட்டது. ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீரும் கூடக் கடைமடைப் பகுதி களுக்குப் போய் சேரவில்லை. எனவே, ‘‘அடுத்த போகம் (சம்பா) பாதிப்படையாதவாறு நீரைக் கேட்டுப் பெற்றுத் தாருங்கள்’’ என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிகளுக்கு இடையே, தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி ‘‘அனைத்துக் கடன்களையும் ரத்து செய்வோம்’’ என்று உறுதியளித்ததை செய்யவில்லை என்று விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.
அடுத்தபடியாக என்ன மாற்றம்னு தெரியுங்களா? இன்னொரு மாற்றத்தை நீங்க நன்றாகச் சிந்திச்சுப் பார்க்க வேண்டும். ஓட்டு போடுவதற்குமுன்பு, வாக்களிக்கும் மய்யத்திற்குள் சென்று நிற்கும்போது, அங்கே யார் யார் பெயர் இருக்கிறது என்று கவனமாகப் பாருங்கள். அதோடு, இந்தத் தேர்தல் ஏன் நம்மீது திணிக்கப்பட்ட தேர்தலாக வந்தது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
இப்போது மின்சார அமைச்சர் இல்லை;
‘மின்வெட்டு அமைச்சர்!’
எல்லாவற்றையும் விட முக்கியம் மாற்றம் தான். மறுபடியும் சுற்றிச் சுற்றி நாம் அந்த மாற்றத்துக்கே வருகிறோம். இதுவரைக்கும் இருந்த நம்முடைய எல்லா அமைச்சரவையிலும் ‘மின்சார அமைச்சர்’ என்று ஒருவர் இருப்பார். ஆனால், இப்பொழுது இருக்கிற அமைச்சரவையில் அவர் மின்சார அமைச்சர் இல்லை; ‘மின்வெட்டு அமைச்சர்!’
இப்பொழுது அவருக்கு என்ன வேலை என்றால், மின்வெட்டு – அதைப்பற்றிக் கேட்டால், பதில் சொல்லாமல். ‘சொல்வெட்டு’ தான் தருவாரே தவிர, வேறு ஒன்றுமே கிடையாது.
மிசா காலத்தில் நடந்த சம்பவங்களுக்குச் சாட்சியாக நாங்கள் எல்லாம்
இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்!
‘‘மின்சார அமைச்சர், ‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதைப் போல’ உண்மையை மறைத்துப் பேசுகிறார். அவர் சொல்வது போல் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிசாவிலே சிறை செல்லவில்லையா? மிசா காலத்தில் நடந்த சம்பவங்களுக்குச் சாட்சியாக நாங்கள் எல்லாம் இன்னும் உயிரோடுதானே இருக்கிறோம்! அதுதானே மிக முக்கியம்? வரலாற்றை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் திரித்துச் சொல்லலாம்; ஆனால், ஸ்டாலின் அவர்கள் மிசாவிலேயே சிறை செல்லவில்லை என்று சொன்னால் அது நியாயமாகுமா?
இன்னொன்றும் சொல்கிறேன்; மு.க.ஸ்டாலின் அவர்களின் தியாகத்திற்கும், எங்கள் திராவிட இயக்கத்தின் தியாகத்திற்கும் எந்தக் கொம்பனும் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவரவரின் வரலாறுதான் பேசும். நாங்கள் எப்போ தாவது, ‘மிசாவில் சிறைக்குச் சென்றோம்; எங்க ளுக்குத் ‘தியாகி’ பட்டம் கொடுங்கள், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள்’ என்று கேட்டி ருக்கிறோமா?
வேறொரு கட்சியைச் சேர்ந்த, சிறைக்குச் சென்ற சிலர் மட்டுமே ‘எங்களுக்குத் தியாகி பட்டம் கொடுங்கள்’ என்று கேட்டார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சிலர், பட்டம் (Degree) வாங்கியதைப் போலத் தங்கள் பெயருக்கு முன்னால் ‘மிசா… மிசா…’ என்று போட்டுக்கொண்டார்கள். ஆனால், நாங்கள் இதைப் பற்றியெல்லாம் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.
‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கின் விலையைச் சொன்ன கதை!’
சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, நம்முடைய எ.வ.வேலு அவர்கள் பேசும்போது, தேவையில்லாமல் இதைப் பற்றி ஏன் பேச வேண்டும்? என்று கேட்டபொழுது, அதற்கு அவர்கள் கொடுத்த பதில் என்ன தெரியுமா? தாய்மார்களான உங்களுக்கு நன்றாகவே தெரியும்—அது ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கின் விலையைச் சொன்ன கதை’யாக இருந்தது.

சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்வதுதான் அவர்க ளுடைய அரசியல்; அது மக்களைத் திசைதிருப்புகின்ற அரசியல். நீங்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும், எந்தக் குற்றச்சாட்டையும் ஆதாரப்பூர்வமாக முன்வைத்தாலும், அதற்கு அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். அதிலும் உடனடியாகப் பதில் சொல்ல மாட்டார்; தயாரித்துக்கொண்டுதான் வர வேண்டும். தயாரித்து வருவதைக்கூடத் தவறு என்று சொல்லவில்லை; ஆனால், அதே நேரத்தில் அது பொறுப்புள்ள பதிலாக இருக்க வேண்டாமா?
‘மின்வெட்டே கிடையாதாம்; தி.மு.க.வினர்தான் ஃபியூஸைப் பிடுங்கிவிட்டார்களாம்!’
இஸ்மாயில் கமிஷன் என்று ஒன்று இருந்ததாகச் சொன்னார்கள். நல்லவேளை, ‘மு.க.ஸ்டாலின்’ என்ற ஒருவரே இல்லை என்று சொல்லாமல் விட்டார்களே! அப்படி ஒருவரே இல்லை என்று சொன்னால் நிலைமை என்னாவது? ஆகவே, பச்சையான உண்மைக்கு மாறான செய்திகளை எடுத்துச் சொல்வது மட்டும் அல்லாமல், அந்த மின்சாரத்துறை அமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா? ‘மின்வெட்டே கிடையாது, அதெல்லாம் ஒன்றும் இல்லை; தி.மு.க-வினர்தான் ஃபியூஸைப் பிடுங்கிவிட்டார்கள்’ என்று சொல்கிறார். இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் பேசினால் அது சரியான பதிலாகுமா?
நாங்கள் மட்டும் இதைக் கேட்கவில்லை; எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் மட்டும் கேட்கவில்லை. இந்தக் கூட்டணியில் இடம்பெற்று, இதன் மூலம் வெற்றிபெற்றுப் போன சில கட்சி நண்பர்கள், இப்போது பல காரணங்களைச் சொல்லி அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை. அந்த நண்பர்களையாவது கேட்டுப் பாருங்கள்; உண்மை என்னவென்று அவர்களிடம் கேட்டால் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
அதற்கு அடுத்தபடியாக ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் எங்கெங்கே போவோம்? நீதிமன்றத்திற்குச் சென்று நீதி கேட்போம்; அதுதான் ஜனநாயகப் பாதை.
நீதிபதி, அமைச்சர் பங்கேற்ற விழாவில்
மின்சாரம் தடை!
ஒரு விழாவில், மூத்த நீதிபதி அமர்ந்திருக்கிறார். அதே விழாவில், மின்சாரத்துறை அமைச்சரும் பங்கேற்கிறார். இதெல்லாம் கற்பனை அல்ல; நான்கு நாட்களுக்கு முன்னால் நீங்களெல்லாம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
‘உண்மை ஒருநாள் வெளியாகும்;
அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்!’
அவ்விழாவின்போது மின்சாரம் தடைபட்டது. அதுமட்டுமல்ல நண்பர்களே, மின்வெட்டின் கார ணத்தினால் இரவு முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்களால் தூங்க முடியவில்லை; வீட்டை விட்டு வெளியே வரவும் முடியவில்லை. சூழ்நிலை இப்படி இருக்கும்போது, அந்த நீதிபதியின் முன்னிலையிலேயே ‘இப்போது மின்வெட்டு இருக்கிறது’ என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டு பேசவேண்டிய நிலை ஏற்பட்டதைப் பாருங்கள்! ஏனெனில், ‘உண்மை ஒருநாள் வெளியாகும்; அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்!’ அதுதான் மிக முக்கியம்.
அப்படிப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டு வருவதற்காகத்தான் இவர் சட்டமன்றத்திற்குச் செல்லவேண்டும். எதிர்க்கட்சி வரிசையில் இப்ப டிப்பட்ட அனுபவம் வாய்ந்தவர் அமர வேண்டும் என்பதற்காகத்தான் தோழர்களே இதை வலியுறுத்து கிறோம்.
அதுமட்டுமல்ல, இன்னும் ஒரு செய்தி சொல்கிறேன். ‘‘சட்டம்-ஒழுங்கு எங்கே?’’ என்று கேள்வி கேட்டால், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் என்ன பேசுகிறார்?
அதேபோல், நமது முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது எப்படிப் பேசினார்?
‘‘சீப் மினிஸ்டர்’’ சார்! என்று பேசினார். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
இன்றைய ஜனநாயகத்தில் பண்பாடு இல்லையே!
நாங்களெல்லாம் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்துவிட்டோம். நான் முதலாவது தேர்தலுக்கு முந்தைய காலத்திலிருந்தே அரசியலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ முதலமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல, அந்தப் பதவிக்குத்தான் மரியாதை கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, இப்போது மேயராகப் பிரியா அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘‘வணக்கத்திற்குரிய மேயர்’’ என்று சொல்கிறோமே, அது அந்தப் பத விக்குக் கொடுக்கும் மரியாதை. முதலமைச்சரின் அந்தஸ்தும் அத்தகையதே. முதலமைச்சர்கள் வருவார்கள், போவார்கள்; அதுதான் அரசியல் வரலாறு. ஆனால், அந்தப் பதவிக்குரிய மரியா தையைக் கொடுத்தால்தான், அதன் மாண்பு நிலைக்கும். அதைக்கூடச் செய்ய முடியாத அளவுக்கு, இன்றைய ஜனநாயகத்தில் பண்பாடு இல்லையே!
சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சர் அவர்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை. எப்படிச் சொல்வார்? நாள் ஒன்றுக்கு எட்டுக் கொலைகள் நடக்கின்றன. ‘‘இதுதான் மாற்றம்; என்ன மாற்றம்’’ என்று பார்த்தீர்களா?
‘‘தமிழகத்தில் ஒரே நாளில்
எட்டுக் கொலைகள்!’’
பொதுவாக எங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு; எதையும் ஆதாரத்தோடுதான் பேசுவோம். இதோ, ஆளுங்கட்சியின் கெசட் போன்றது இது. (‘தினமலர்’ நாளிதழைக் காட்டுகிறார்). இது கடந்த 30 ஆம் தேதி வெளியான பத்திரிகை. இன்றைக்கு ஒன்றாம் தேதி. ‘பழிவாங்கும் உணர்ச்சி, பணப் பிரச்சினை, மதுப்பழக்கம், இடத்தகராறு’ எனப் பல காரணங்களை மேலே தலைப்பாகக் கொடுத்திருந்தாலும், ‘‘தமிழகத்தில் ஒரே நாளில் எட்டுக் கொலைகள்!’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
எட்டுக் கொலைகள் என்பது மட்டுமல்ல, அந்த நாளிதழில் மாவட்டம் வாரியாக நடைபெற்ற கொலைகளின் புள்ளிவிவரத்தையும் மிகத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள். இதுதான் இந்த ஆட்சியின் சாதனையா? இதைப் பார்த்துமா மீண்டும் இந்த ஆட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? மக்கள் எதைப் பற்றியும் யோசிக்க மாட்டார்கள் என்று எவ்வளவு அலட்சியமாக நினைக்கிறார்கள்!
‘மாற்றம்’ என்ற ஒரே வார்த்தையை நம்பி, மக்கள் இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்தார்கள்!
உடனே, ‘‘ஏன், அவர்களின் ஆட்சியில் இதுபோல நடக்கவில்லையா?’’ என்று கேட்கிறார்கள். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் பழைய ஆட்சியைக் காரணம் காட்டுவது சரியாகுமா? அதனால்தான், ஆளுங்கட்சியை, மக்கள் எதிர்க்கட்சியாக மாற்றி, புதிய ஆட்சிக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். எனவே, ‘‘அவர் ஆட்சியில் அப்படி நடந்தது; இவர் ஆட்சியில் இப்படி நடக்கிறது’’ என்று காரணம் சொல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பழைய தவறு தொடரக் கூடாது என்பதற்காகத்தான், ‘மாற்றம்’ என்ற ஒரே வார்த்தையை நம்பி, மக்கள் இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்தார்கள்.
நீங்கள் சொன்ன மாற்றத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாவட்ட வாரியாக நடக்கும் கொலைகளின் எண்ணிக்கையைப் பற்றி இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள். சென்னையில் இன்றைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு பொறுப்பாளரையே தெருவில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் சிறிதாவது கவலைப்பட்டிருக்கிறார்களா? பொறுப்பேற்று இதைப் பற்றி ஏதாவது கூறியிருக்கிறார்களா?
ஆட்சியை நோக்கிக் கேள்வி கேட்பதுதானே எதிர்க்கட்சியின் கடமை?
சிவகங்கைக்கு அருகில் உள்ள ஊரில், காவல்துறை யினர் ஒருவரைத் தாக்கியதால் காவல் நிலைய மரணம் ஏற்பட்டது. ‘முன்பு எப்படி இருந்தது?’ என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால், இப்போது எத்தனை காவல் மரணங்கள் நடக்கின்றன? ஆட்சியை நோக்கிக் கேள்வி கேட்பதுதானே எதிர்க்கட்சியின் கடமை? அதற்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஜனநாயகத்தில் அரசுக்கு இருக்க வேண்டாமா?
மாவட்டம் வாரியாக
கொலை நடந்த பட்டியல்!
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த ஆண்டில் மட்டும் மாவட்ட வாரியாக நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கையை இங்கே பட்டியலிடுகிறார்கள்: சென்னை – 64, திருவள்ளூர் – 8, செங்கல்பட்டு – 9, காஞ்சிபுரம் – 16, நாமக்கல்… என்று இப்படி அடுக்கிச் சொல்லிக்கொண்டே போகலாம். சரி, நாம் அடுத்த விசயத்திற்குச் செல்வோம்.
ஓராண்டு அவகாசம் கேட்டார்கள்; சரி, அய்ந்து மாதங்கள் ஆகியிருக்கிறது. அதில் பாதியை விலக்கிவிட வேண்டுமா? அவர்கள் தவறாகச் செயல்பட்டார்கள் என்று குற்றம் சாட்டித்தானே நீங்கள் அதிகாரத்திற்கு வந்தீர்கள்? எனவே, இதை நியாயமாகக் கேட்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது அல்லவா? யாராக இருந்தாலும், ஜனநாயகத்தில் கேள்விகள் கேட்கக்கூடிய அந்த வாய்ப்பு என்பது மிக மிக முக்கியமானது.
ஜனநாயக முறைப்படியும், அரசியலமைப்புச் சட்டப்படியும் ஆட்சி நடத்திய பெருமை
திராவிட முன்னேற்றக் கழகத்தையே சேரும்!
ஒரு செய்தியைத் தாய்மார்களுக்குக் கூற விரும்புகிறேன். அது என்னவென்றால், இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றியதாகும். இதுவரை இருந்த அரசாங்கங்களில் அமைச்சர்களாகப் பணியாற்றியவர்கள் ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றால், அமைச்சரவையில் விவாதிப்பார்கள்; அதுமட்டுமன்றி, அதிகாரிகளின் கருத்துகள், இயக்கத்தைச் சேர்ந்த பொதுமக்களின் கருத்துகள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, முழுமையான ஜனநாயக முறைப்படியும் அரசியலமைப்புச் சட்டப்படியும் ஆட்சி நடத்திய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்தையே சேரும்.
அதனால்தான், உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரும் தற்போதைய மாற்றத்தைப் பார்த்து, ‘அய்யோ! ஆட்சி மாற்றம் இப்படி ஆகிவிட்டதே! தமிழ்நாட்டின் நிலைமை இப்படி இருக்கலாமா?’ என்று வருத்தத்துடன் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் தெளிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: இந்த ஆட்சி மாற்றம் என்பது, அவர்கள் எவ்வித முன்னேற்றத்தையும் அடைய முடியாமல், மீண்டும் மீண்டும் தவறுகளையே செய்து கொண்டிருக்கும் நிலையைத்தான் உருவாக்கியிருக்கிறது.
மக்களுக்கு விளக்கிச் சொல்வதுதான்
எங்களுடைய பணி!
யாரை சட்டமன்றத்திற்கு அனுப்பினால் நாடு உருப்படும், யாரை அனுப்பினால் சமூக முன்னேற்றம் ஏற்படும் என்பதை மக்களுக்கு விளக்கிச் சொல்வதுதான் எங்களுடைய பணியாகும்; நாங்கள் சட்டமன்றத்திற்குள் போகமாட்டோம்.
போட்ட உத்தரவை ஆறு மணி நேரத்தில் மாற்றுவதுதான் மாற்றம்!
ஆகவே, அப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு நீங்கள் ஒன்றை நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். நண்பர்களே, இந்த மாற்றத்தி னுடைய தன்மை என்னவென்றால் –ஆட்களை மாற்றுவதுதான் மாற்றம்; அதிகாரிகளை மாற்று வதுதான் மாற்றம். இவை எல்லாவற்றையும் விட, போட்ட உத்தரவை ஆறு மணி நேரத்தில் மாற்றுவதுதான் மாற்றம். அதனால்தான் அந்தக்கட்சிக்குப் பெயர் ‘வெற்றி, வெற்றி’ என்று வைத்திருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் போர்க்களத்தில் இருக்கும்போது, ‘வெற்றிகரமான வாபஸ்’ (வெற்றிகரமான பின்வாங்கல்) என்று போர்ச் செய்திகள் வரும். வாபஸ் வாங்குவது எப்படி வெற்றிகரமானதாகும்? அதேபோல் இப்பொழுது போட்ட உத்தரவையெல்லாம் ‘டக் டக் டக்கென்று’ மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆட்சியா? காட்சியா?
ஒருபக்கத்தில், இடதுசாரி நண்பர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால், தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல, அவர்களுடைய ஆதரவையும் பெற்றுக்கொண்டு, அந்தக் கட்சியில் யார் யார் இருக்கிறார்கள் என்ற பட்டியலை எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ‘‘யார் இந்த நடவடிக்கை எடுக்கச் சொன்னது?’’ என்று கேட்டால், ‘‘எங்களுக்குத் தெரியாது’’ என்கிறார்கள். அரசுக்குத் தெரியாமலேயே ஒரு அதிகாரி உத்தரவு போடுகிறார் என்றால், இது ஆட்சியா? காட்சியா? என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு இங்கே ஒரு மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது; அதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல, இன்னும் தெளிவான ஒரே ஒரு முக்கியச் செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்வதானால் நிறையச் சொல்லலாம். ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் எவ்வாறு அரசு உடமைகளையெல்லாம் தனியாருக்கு மாற்றுகிறார்களோ, அதேபோல இவர்களும் எல்லா வற்றையும் தனியார்மயமாக்குகிறார்கள். கல்வியில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழ்நாட்டிற்கு, இப்போது அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
‘‘இதுதான் நீங்கள் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?’’
நண்பர்களே! நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், மிகப்பெரிய அளவில் வன்கொடுமைகளும் ஊழலும் நடக்கிறது. ‘‘நாங்கள் ஊழலை ஒழித்துவிட்டோம்; இப்போது ஊழலே இல்லை; இங்கே இரட்டை ஆட்சியோ, அதிகார மய்யங்களோ இல்லை’’ என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி, நான்கு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள், ஆதாரத்தோடு சொல்கிறோம்; கன்னியாகுமரியில் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த ஒரு பெண், அரசு வழக்குரைஞர் பணிக்கு மனுப் போடுகிறார். அப்போது த.வெ.க.வில் பொறுப்பாளராக இருக்கும் ஒருவர், அதற்கு 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார். இந்தப் பிரச்சனை நீதிமன்றத்திற்குச் சென்றது. ‘‘இதுதான் நீங்கள் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?’’ என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இடைத்தேர்தலை மக்கள் மீது திணித்தவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்!
எனவே நண்பர்களே, இதுவரை நீதிமன்றம் உங்க ளுடைய தவறான முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிமன்றமும், மக்கள் மன்றமும் உண்மையை உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டன. ஆகவே, இந்த நாடு மீண்டும் சிறந்த இடத்திற்கு வர வேண்டுமானால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். தாய்மார்களே, பெரியோர்களே! உங்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், தண்டனை கொடுக்க வேண்டும்! யாருக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் தெரியுமா? இந்த இடைத்தேர்தலை மக்கள் மீது திணித்தவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.
அய்ந்தே மாதத்தில்
20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறீர்கள்!
அதுமட்டுமல்ல நண்பர்களே, ‘‘திமுக ஆட்சியில் கஜானா காலி; நாங்கள் கடன் வாங்கித்தான் ஆட்சி நடத்த வேண்டியிருக்கிறது’’ என்று சொன்னீர்களே, இந்த அய்ந்து மாதங்களுக்குள் நீங்கள் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்று தயவுசெய்து நினைத்துப் பாருங்கள். ஆதாரம் இருந்தால் மறுத்துப் பேசுங்கள்; அய்ந்தே மாதத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறீர்கள்; இதை நாங்கள் ஆதாரத்தோடு சொல்கிறோம்!
ஒரு பக்கத்தில் கஜானா காலி என்று சொல்லிக் கொண்டு, மறுபக்கத்தில் முதலமைச்சர் அறையை 4 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம், பட்டினப்பாக்கத்தில் ரூ.1200 கோடியில் புதிய சட்டமன்றம் கட்டப்படும் என்று சொல்கிறார்கள். அதுவும் கடற்கரைக்கு முன்பாக சட்டமன்றம் என்றால், இது என்ன கொடுமை? ஜனநாயகத்தில அதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக ஆட்டம் போட்டால். அந்த அதிகாரம் நீடிக்காது, நிலைக்காது.
மக்கள்தான் மறுபடியும்
மாற்றத்துக்கு வருவார்கள்!
மக்கள் உங்களை விரும்பினார்களோ, நம்பினார்களோ, அதே மக்கள்தான் மறுபடியும் மாற்றத்துக்கு வருவார்கள். எனவே, மாற்றம் இப்போதும் நடக்கும், அப்போது மட்டுமல்ல; அது காலத்தினுடைய கட்டாயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சுதந்திரம் வந்ததிலிருந்து எத்தனையோ முதல மைச்சர்கள் வந்திருக்கிறார்கள்; ஓமந்தூரார் முதலமைச்சர், பிறகு ராஜகோபாலாச்சாரியார் முதலமைச்சர், அதற்கு அடுத்தது காமராசர் முதலமைச்சர். இப்படி வரிசையாக வந்தால், நேற்றைய வரைக்கும் எந்த முதலமைச்சராவது அறையை மாற்றியிருக்கிறார்களா? என்று தயவுசெய்து நினைத்துப் பார்க்கவேண்டும்.
எல்லாவற்றிற்கும் ஜோதிடர் சொல்வதைத்தான் கேட்பார்களா?
ஜோதிடர் சொன்னார், அதனால்தான், அறையை மாற்றுகிறோம்; எல்லாவற்றிற்கும் ஜோதிடர் சொல்வதைத்தான் கேட்பார்களா?
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராஜர் அவர்கள் செய்தியாளர்களின் சந்திப்பின்போது ஒருமுறை சொன்னார், ‘‘வடநாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தேன். அங்கே காங்கிரஸ்காரர்கள் நடவடிக்கைகளையும் பார்த்தேன்; தமிழ்நாட்டில் இருக்கிறவர்களின் நடவடிக்கைகளையும் பார்த்தேன். மற்ற மாநிலங்களுக்கு ஆயிரம் பெரியார் தேவை. காரணம், சட்டை அணிவதில், எந்தக் கலரில் அணிவது என்று ஜோதிடரைக் கேட்டுத்தான் அணிகிறார்கள்’’ என்றார்.
ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்…
ஆகவே நண்பர்களே, மாற்றம் என்பது ஏமாற்றம், தடுமாற்றம், உருமாற்றம். ஆகவே, நீங்கள் இதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். மீண்டும் மீண்டும் தண்டனை கொடுக்க வேண்டும். யாருக்கு? கட்சி மாறி, மறுபடியும் அதே தொகுதியில், அய்ந்து மாதம் கழித்து இடைத்தேர்தலை வரவழைத்தவர்களுக்கு. தண்டனை என்றால் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அவரை எங்கே அனுப்பக் கூடாதோ, அங்கே அனுப்பக்கூடாது. சட்டமன்றத்துக்கு அனுப்பக்கூடாது. தனிப்பட்ட முறையிலே அவர்கள் மீது நமக்கு ஒன்றும் கோபம் இல்லை. ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் இதைத் தெளிவாக செய்ய வேண்டிய அவசியம் நம்முடைய முக்கிய கடமையாகும்.
பாசிசத்தை, பாயாசத்தில் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
நேற்று முன்தினம்கூட தாராபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் சொன்னேன், பாசிசமா, பாயாசமா? என்று. இப்பொழுது பாசிசத்தை, பாயாசத்தில் ஊற்றிக் கொடுத்துக் கொண்டி ருக்கிறார்கள்.
எனவேதான், இந்த அய்ந்து மாதங்களிலேயே அதை சரிப்படுத்த வேண்டுமானால், நீங்கள் வேறொன்னும் செய்ய வேண்டாம்; மறுபடியும் இதே தொகுதியில் நிறுத்தி இருக்கிறார் பாருங்கள், இங்கே நிறைய வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். Abettor என்ற ஒரு வார்த்தை இருக்கிறது; அந்தக் குற்றத்தைச் செய்வதற்குத் தூண்டினார்கள் பாருங்கள், அவர்களும் தண்டனைக்குரியவர்கள்.
உங்கள் வீட்டில் விளக்கு எரியும்,
நாட்டில் விளக்கு எரியும்!
அப்படிப்பட்ட முதலமைச்சர் அவர்கள் சொல்லு கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்குத் தெளிவான பதில் சொல்ல வேண்டும்; வேறொன்றும் செய்ய வேண்டாம். ஒரு விரலில் நீங்கள் சொல்லலாம். அந்த ஒரு விரலில் அழுத்த வேண்டிய பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடிக்குள்ளே போங்க, அதில், இ.பரந்தாமன் என்ற பெயர் எங்கே இருக்கிறது என்று பாருங்கள்; அதில், தாய்மார்களே, பெரியோர்களே விரல் வைத்து அழுத்துங்கள்; பச்சை விளக்கு எரி கிறதா என்று பாருங்கள். சீக்கிரம் அந்த விரலை எடுத்துவிடாதீர்கள். பச்சை விளக்கு எரிகிற வரையில் அழுத்திக் கொண்டிருங்கள். பிறகு, அங்கே மட்டும் விளக்கு எரியாது, உங்கள் வீட்டில் விளக்கு எரியும், நாட்டில் விளக்கு எரியும்.
மதுராந்தகத்திலே மிகப்பெரிய ஒரு புதிய திருப்பத்தை உருவாக்குங்கள்!
இப்பொழுது வந்திருக்கிறது இருட்டு; இருட்டு என்பதை அவர்களே ஒப்புக்கொண்டார்கள். ஏனென்று கேட்டால், அதுதானே மின்வெட்டு என்பது. இருட்டுப் போய் வெளிச்சம் வர வேண்டுமானால், உதய சூரியன் வந்தால்தான் விடியும். எனவே தான், உதய சூரியனுக்கு ஆதரவு கொடுங்கள்; அதன் மூலமாக மதுராந்தகத்திலே மிகப்பெரிய ஒரு புதிய திருப்பத்தை உருவாக்குங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன். ஏற்பாடு செய்த அத்துணை தோழர்களுக்கும் நன்றி!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரையாற்றினார்.
