சிக்மகளூரு, அக்.5 கருநாடக மாநில வாக்காளர் பட்டியலில் சிறுபான்மையின வாக்காளர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்க முயற்சி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு கள், அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது
நடந்தது என்ன?
கருநாடகாவின் சிக்மகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து 243 பேரின் பெயர்களை நீக்கக் கோரி செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ‘படிவம்-7’ மூலம் ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பாஜக தாலுகா தலைவர் எச்.கே.தினேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த மனுக்களை அளித்தனர். ஆனால், நீக்கப்பட வேண்டியவர்களாகப் பட்டியலில் குறிவைக்கப்பட்டு 243 பேரும் முசுலிம் மற்றும் கிருத்துவச் சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் அப்பகுதியின் வாக்குச்சாவடி நிலை அதிகாரி வசீர் கான் மற்றும் அவரது குடும்த்தினரின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததும் அம்பல மானது.
தேர்தல் ஆணையத்தின் ‘படிவம்-7’ நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தி, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்கு உரிமையைப் பறிக்க பாஜக முயல்வ தாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டது. காங்கிரசின் தீவிரப் போராட்டங்கள் மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து, பாஜக தலைவர் எச்.கே.தினேஷ் அக்டோபர் 1 அன்று தேர்தல் அதிகாரிக ளுக்குக் கடிதம் ஒன்றை அளித்தார்.
அதில், சந்தேகத்தின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட படிவம்-7 ஆட்சேபனைகளைத் திரும்பப் பெறுவதாகவும், அதன் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:
தவறுதலாக அல்லது திட்டமிட்டு நீக்கப்பட்ட தகுதியான வாக்காளர்களின் பெயர்களை உடனடியாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள்: இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட தகுதியான சிறுபான்மையின வாக்காளர்களைச் சேர்க்க சிறப்பு முகாம்களை நடத்துமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் போராட்டங்களை அரசியல் நோக்கம் கொண்டவை என விமர்சித்து வந்த பாஜகவுக்கு, இந்த ‘படிவம்-7′ மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிகழ்வும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளையில், ஜனநாயக உரிமைகளைக் காக்கப் போராடிய காங்கிரசுக்குக் கிடைத்த வெற்றியாக இந்நிகழ்வு அம்மாநில அரசி யலில் பார்க்கப்படுகிறது.
