பெல்லாரி, அக். 5 கருநாடக மாநிலம் பெல்லாரி நகர் சட்டமன்றத் தொகுதி யில், வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக ‘படிவம்-7’-அய் தவறாகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இப்புகாரின் அடிப்படையில், பாஜக பிரமுகரும் பெல்லாரி மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான டி.சீனிவாஸ் மோத்கூர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
ஆட்சேபனைகள்
பெல்லாரி நகர் தொகுதியின் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 7,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் “இல்லை அல்லது வேறு இடத்திற்கு குடி பெயர்ந்துவிட்டனர்” எனக் கூறி, பாஜக-வைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர் டி.சீனிவாஸ் மோத்கூர் ஆட்சேபனை தெரிவித்தார். நீக்கக் கோரப்பட்ட பெரும்பான்மையான பெயர்கள், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவை என்பதால், அவர்களைத் திட்டமிட்டுப் பட்டியலிலிருந்து நீக்க முயல்வதாகக் காங்கிரஸ் கட்சியின் சாவடி முகவர் கவுதம் எஸ்.புரூஸ்பேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சட்டப்பிரிவு
பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, பாரதிய நியாய சங்கிதா சட்டம் 2023 (BNS) பிரிவு 353 இன் கீழ் மோத்கூர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருநாடகாவில் படிவம்-7 தவறாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பாகப் பதிவு செய்யப்படும் ஆறாவது வழக்கு இதுவாகும். முன்னதாகப் பதிவான அய்ந்து வழக்குகளில், பெலகாவியில் இரண்டு மற்றும் மைசூரில் ஒன்று உட்பட மூன்று வழக்குகளில் பாஜக உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21 அன்று வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பங்களை ஏற்க மறுப்ப தாகக் கூறி, எஞ்சிய படிவம்-7 விண்ணப்பங்களை நேரடியாகத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மோத்கூர் சமர்ப்பிக்க முயன்றார். வாக்காளர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகக் கூறும் இவரது கூற்றுக்கு ஆதரவான ஆவணங்கள் எவையும் இல்லை எனக் கூறி தேர்தல் அதிகாரிகள் அதனை நிராகரித்தனர். மேலும், ஒரு சாவடி முகவர் ஒருநாளைக்கு 10 விண்ணப்பங்களுக்கு மேல் பி.எல்.ஓக்களிடம் வழங்க முடியாது என்றும், 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்க ளாக இருந்தால் அதிகாரிகள் நேரில் சரிபார்க்க வேண்டும் என்றும் தேர்தல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
செப்டம்பர் 22 அன்று முறை யான ஆவணங்கள் மற்றும் சரி பார்ப்பு இன்றி, 7,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிப்பதாகக் கூறி மோத்கூர் மீண்டும் ஒரு கடிதத்தை எழுதினார். இதனையும் தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி, வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவிலான பெயர்களை நீக்க முயன்றதாக எழுந்துள்ள இந்த விவ காரம் பெல்லாரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
