‘‘உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோயிலிலும், பக்தர்களின் நன்கொடைகளைப் பெறும் நடைமுறையில் மாற்றங்கள் செய்ய, கோயிலை நிர்வகிக்கும் கிருஷ்ண தன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களின் தூய்மையை உறுதி செய்ய, கணினிமயமாக்கப்பட்ட பரிசோதனை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த இயந்திரம் 20 வகையான உலோகங்களின் தன்மையைப் பரிசோதிக்கும் திறன் கொண்டது. வரும் 11 ஆம் தேதி நவராத்திரி பண்டிகை தொடங்கும் நாளில் இந்த இயந்திரம் பயன்பாட்டிற்கு வர உள்ளது.’’
- ‘‘அயோத்தி ராமன் கோயிலில், நன்கொடை திருட்டு நடந்ததை அடுத்து, அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் பின்புலத்தையும் 100 சதவிகிதம் சரி பார்க்க, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.’’
இந்த இரண்டு செய்திகளும் ‘விடுதலை’ வெளியிட்டவையல்ல. கடவுள் நம்பிக்கையையும், ஆன்மிகத்தையும் காப்பாற்றுவதற்கே ‘அவதாரம்’ எடுத்ததுபோல, நாள்தோறும் தனது கற்பனைப் பலத்தைப் பயன்படுத்தி வெளியிட்டுவரும் ‘தினமலர்’தான் வெளியிட்டுள்ளது (3.10.2026, பக்கம் 10).
கடவுள் சக்தி மீது அபார சக்தி வைத்து, காலத்தையும், கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தையும் கொட்டி அழும் பக்தர்கள்தான் இந்த செய்திகளில் உள்ள உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.
சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள், அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று அணுவைப் பிளந்து அற்புதங்களை வண்டி வண்டியாகக் கொட்டுகிறார்களே, அவை எல்லாம் சுத்த வெத்து வேட்டு, அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, பார்ப்பன திருட்டு என்பதைப் பக்த கோடிகள் இவற்றின்மூலம் அறிந்து கொள்ளவேண்டாமா?
கோயில் உடைமைகள், நகைகள், பணத் திருட்டுகளை நவீன கருவிகள்மூலம்தான் கண்டுபிடிக்க வேண்டி உள்ளது என்பது இதன்மூலம் தெரியவில்லையா?
கடவுள்களுக்குச் சக்தியிருந்தால், கோயில் சொத்துகளைத் திருட முடியுமா? மனிதன் கண்டுபிடித்த கருவிகள்தான் கடவுளைக் காப்பாற்ற வேண்டியுள்ளது.
கோயில் பூனைகளாக பக்தர்கள், அட்சகர்கள், கோயில் பணியாளர்கள் உருவத்தில் நடமாடுகிறார்கள் என்பது இவற்றின்மூலம் விளங்கவில்லையா?
கோயில் நகைகள், பணத்தை மட்டுமல்ல – கோயில் கருவறையில் குந்த வைக்கப்பட்டுள்ள அய்ம்பொன் சாமி சிலைகளையே ‘அபேஸ்’ செய்கிறார்களே, இதற்கு மேலும் கடவுள் நம்பிக்கையா?
– மயிலாடன்
