ஒற்றைப்பத்தி எது தன்மானம்?

2 Min Read

கேள்வி: தமிழர்களுக்குத் தன்மானம் வருவது எப்போது?

பதில்: ஹிந்தித் திணிப்பு, டில்லி ஆதிக்கம் என்று அச்சமூட்டும் திராவிட மாயையில் இருந்து விடுபடும்போது, தமிழர்களுக்குத் தன்மானம் வரும்.

– ‘துக்ளக்’, 13.5.2026, பக்கம் 10

பதிலடி: அதாவது, ஹிந்தி (சமஸ்கிருதத்தின் குட்டி) திணிப்பு என்ற பார்ப்பனக் கலாச்சாரப் படையெடுப்புக்கு அடிமைப்பட்டுக் கிடப்பது; டில்லி ஆதிக்கம் என்ற வடவர்களுக்கு அடிபணிந்து, சூத்திரர்களாக, பஞ்சமர்களாகக் கிடந்து உழல வேண்டும் – அதுதான் பார்ப்பனர்களின் புத்தியில் தமிழர்களுக்கான தன்மானம் – ‘துக்ளக்’கின் பூணூல் புத்தி புரிகிறதா?

இவர்கள் பூணூல் தரித்திருக்கிறார்களே – அந்த அடையாளத்துக்கு அர்த்தம் என்ன?

நாங்கள் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவர்கள் – துவி ஜாதியினர் – அதாவது இரு பிறப்பாளர்கள்; நீங்கள் எல்லாம் சூத்திரர்கள் – அதாவது விபச்சாரி மக்கள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் – உங்களுக்குத் தன்மானம் இருக்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம் என்கிறார் ‘துக்ளக்’ குருமூர்த்தி அய்யர்வாள்!

‘‘பார்ப்பனக் கடப்பாறையைக் கொண்டு திராவிடத்தை ஒழிக்கப் போகிறோம்’’ என்று சில ‘சூத்திரர்கள்’ சொல்லிக் கொண்டு அலையவில்லையா? இத்தகையவர்கள் இருக்கும்வரை ‘துக்ளக்’ குருமூர்த்திகள் இதையும் எழுதுவார்கள்; இதற்கு மேலும் எழுதுவார்கள்.

‘ஏன், உங்களில் சிலர் பூணூல் அணிகிறார்களே, பிராமணர்கள் மட்டும்தான் பூணூல் அணிகிறார்களா?’ என்று சில ஏதும் புரியாத விபீடணர்கள் நமக்குப் பதில் கூறுவதாக நினைத்துக்கொண்டு உளறித் தொலைப்பது உண்டு.

ஹிந்துத்துவாவின்படி –

பார்ப்பனர்களின் மத சாஸ்திரப்படி, அப்படிப் பூணூல் அணியப் பார்ப்பனரல்லாதாருக்கு உரிமை கிடையாது என்பது தெரியுமா?

மனுதர்ம சாஸ்திரம் என்ன கூறுகிறது?

‘‘பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், ஷத்திரியனுக்கு வில்லில் நாணையொத்த முறுவற்புல்லினாலும், வைசியனுக்கு ஷணப்பன் நாரினாலும் மேடு பள்ளமில்லாமல் மெல்லியதாகப் பின்னி மூன்று வடமாக மேலரைஞாண் (பூணூல்) கட்ட வேண்டியது’’ என்று மனுதர்மம் சொல்லுகிறதே (அத்தியாயம் 2; சுலோகம் 42).

இதில் சூத்திரர்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கிறதா?

அதுமட்டுமல்ல – ‘‘சூத்திரன், பிராமணன் ஜாதிக்குறியை – பூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும்.’’

(மனுதர்மம்,
அத்தியாயம் 9; சுலோகம் 224).

இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும்?

1938 இல் ஆச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது, ‘‘சூத்திரர்களில் ஒரு பிரிவினர் ஆச்சாரி என்று பெயருடன் இணைக்கக் கூடாது; மாறாக, ஆசாரி என்றே போட்டுக் கொள்ளவேண்டும்’’ என்று ஆணை பிறப்பிக்கவில்லையா?

‘சூத்திரன் என்றால், ஆத்திரம் கொள்!’ என்ற பழைய முழக்கங்கள் மீண்டும் ஒலிக்கவேண்டுமா? தன்மானம் தமிழர்களுக்கு உண்டு என்பதற்கு அதுதான் அடையாளம்!

 – மயிலாடன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *