திருவாரூர் மாவட்டம் திராவிட மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 28 மாலை 3 மணி அளவில் பெரியார் பட ஊர்வலமும் மாலை 6 மணி அளவில் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
மாலை 3 மணி அளவில் திருவாரூர் கீழ வீதியில் பெரியார் பட ஊர்வலம் டிஜிட்டல் திரையில் தந்தை பெரியாரின் படங்கள் பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஊர்வல வண்டியில் அமைக்கப்பட்டது.
திராவிட மாணவர் கழகம் திருவாரூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற பெரியார் பட ஊர்வலத்திற்கு திராவிட மாணவர்களாக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக இளைஞரணி மாநிலச் செயலாளர் நாத்திக பொன்முடி கழகக் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
தாரை தப்பட்டை முழங்க மாணவர்கள் நிறைந்த பேரணி கீழ வீதியில் இருந்து தொடங்கி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பங்கேற்ற மாணவர்களின் ஒலி முழக்கத்துடன் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ. மதிவதனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் சிலையை கடந்து பெரியார் பட ஊர்வலம் திருவாரூர் மார்க்கெட் வீதி வழியாக கடந்து திருவாரூர் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தது.
திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் வே.அறி வழகன் தலைமையில் திருவாரூர் மாவட்ட கழகத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண் காந்தி, மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ, மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் வீ. மோகன், மாவட்டக் காப்பாளர் வீர கோவிந்தராசு, பகுத்தறிவாளர் கழக திருவாரூர் மாவட்டத் தலைவர் அரங்க ஈவேரா உள்ளிட்டோர் முன்னிலையில் அனைவரையும் வரவேற்று திராவிட மாணவர் கழக திருவாரூர் மாவட்டச் செயலாளர் அ.அறிவுச்சுடர் வரவேற் புரை ஆற்றினார்.
பெரியாரைப் பிடிக்காதது ஏன்?
மாணவர் கழகம் சார்பில் பா. இதழ் மொழி தொடக்க உரையாற்றினார். தமதுரையில்,
பெரியார் தொண்டர்கள் எப்போதும் மகிழ்ச்சி
பெரியார் தொண்டர்கள் பேச மாட்டார்கள் மறைச்சி
பெரியார் தொண்டர்களை பேச முடியாது குறைச்சி
பெரியார் தான் எங்கள் உயிர் மூச்சு…
ஊமையாய் இருந்த மக்களுக்கு உரிமைகளை பெற வைத்தவர் பெரியார்….
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொள் என்றவர் பெரியார்…
பெண்களுக்கான சம உரிமை கொடுத்தவர் பெரியார்….
ஜாதியை ஒழிக்க நினைத்தவர் பெரியார்….
தீண்டாமை ஒழிக்க வேண்டும் என்றவர் பெரியார்
படிக்கச் சொன்னவர் பெரியார்…
பகுத்தறிவைப் புகுத்தியவர் பெரியார்…
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்….
பெண்களுக்கான சொத்து உரிமை கொடுத்தவர் பெரியார்….
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் இருப்பதற்கு காரணம் பெரியார்….
தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் தமிழருக்கும் உழைத்தவர் பெரியார்….
பெரியார் மட்டும் இல்லாவிட்டால் காலில் பட்ட கல்லு கூட கடவுளாய் இருந்திருக்கும்….
எங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்,
உணர்விலும் பெரியார், உள்ளத்திலும் பெரியார், சிந்த னையிலும் பெரியார், செயலிலும் பெரியார், உறுதியிலும் பெரியார் மொத்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியார் அவர்கள்.
பெரியாரை நிறையப் பேருக்கு பிடிக்காதுன்னு சொல்லுவாங்க அதுக்கு காரணம் என்னவென்றால் –
அவாள் மட்டுமே நுழைய வேண்டும் என்றிருந்த கோவில் கருவறைக்குள் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி ஆதிக்குடிகளை உட்புகுர வைத்ததால் பெரியாரைப் பிடிக்காது….
திருமண வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் புரியாத மந்திரங்களோ, ஜாதியோ மதமோ, தேவையில்லை புரிதலும் காதலும் தான் தேவை என பகுத்தறிவு பேசியதால் பெரியாரைப் பிடிக்காது….
பெண் என்றாலே புனிதம் என்ற போலி பிம்பத்தின் பின்னால் இருக்கும் ஆணாதிக்கம் என்னும் பலூனில் சுயமரியாதை என்னும் ஊசியை இறக்கியதால் பெரியாரைப் பிடிக்காது…..
மூத்திரச் சட்டியுடன் இருந்த போதும் மூலை முடுக் கெல்லாம் சென்று சுயமரியாதை, பெண்ணுரிமை, இந்தி எதிர்ப்பு, ஜாதி மறுப்பு பற்றி பேசி பகுத்தறிவுச் சாட்டைக் கொண்டு விளாசியதால் பெரியாரைப் பிடிக்காது…

பெரியாரால் தான் அனைவருக்கும் உரிமை…
பெரியாரைப் பற்றி பேசுவது தான் நமது கடமை…
பெரியார் தான் எங்களின் பெருமை…
என தொடக்க உரையாற்றினார்.
பெரியார் சொன்னது என்ன?
திருவாரூர் நகர மாணவர் கழகப் பொறுப்பாளர்
சி.செ.கண்மணி,
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.திராவிடர் கழகத்தில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முதன்முதலாக திராவிட மாணவர் கழகம் எடுத்து நடத்துவதில் மகிழ்ச்சிகொள்கிறேன்.இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஜாதி வெறி, மத வெறி, மொழி வெறி, மூடநம்பிக்கை, பெண்ணடிமை போன்றவற்றால் பாதிக்கப்படாமல் பகுத்தறிவோடும், சுயமரியாதையோடும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு வழி சொன்ன தலைவர் தான் தந்தை பெரியார் அவர்கள்.
ஆம் தோழர்களே. நாம் தற்போது தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

மிக வியப்பானது ஒரு செய்தி என்னவென்றால், தந்தை பெரியார் அவர்களின் கொள்கையின் தேவையானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் வருகிறது. ஒரு தனி மனிதனுக்கோ, ஒரு நாட்டுக்கோ, ஒரு இனத்துக்கோ எதிரிகளால் துன்பம் வரும்போது அதை வென்றெடுக்கவும், சூழ்ச்சிகள் வரும்போது அதை உடைத்தெறியவும் நம் கையில் உள்ள ஒரே ஆயுதம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை தான்.
நாம் மக்கள் பணிக்கு தந்தை பெரியார் அவர்களின் கொள்கையின் வழியில் எந்த ஜாதி என்று பார்க்காமல், எந்த மதம் என்று பார்க்காமல், ஆனா பெண்ணா என்ற வேறுபாடு பார்க்காமல் அஞ்சாமல் ஒன்றிணைந்து எதிர்ப்பதால் தான் இன்று நம்மால் வெற்றியை காண முடிகிறது. இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொல்கிறார்.
எனது கொள்கையானது வெற்றி பெறுவதற்கு கால தாமதம் ஆகுமே தவிர வெற்றி பெற்றே தீரும் என்று.
தந்தை பெரியார் அவர்கள் மற்றொன்றும் சொல்கிறார்.
இந்தப் பகுத்தறிவுக்கு மாபெரும் தடையாக இருப்பது superstition என்று சொல்லக்கூடிய இந்த மூடநம்பிக்கை தான். இந்த மூடநம்பிக்கைகள் நம் அன்றாட வாழ்வி லிருந்து விலக வேண்டும் எனில், scientific temper என்று சொல்லக்கூடிய இந்த அறிவியல் மனப்பான்மை நம்மில் பெருக வேண்டும்.
இதை நான் மட்டும் சொல்லவில்லை, our constitution of India ,இந்திய அரசியலமைப்புச் சட்டமும் சொல்கிறது,Article 51A(h) says that, To develop the scientific temper, humanism, and the spirit of inquiry and reform. அதாவது, அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம் மற்றும் எதையும் ஆராய்ந்து பின் ஏற்றுக்கொள்வது இவை மூன்றும் இந்திய நாட்டில் வசிக்கும் அனைத்துக் குடிமக்களின் தலையாய கடமையாகும்.
இதற்கு எடுத்துக்காட்டாக, ஜாதி உருவானதாகச் சொல்லப்பட்ட இந்த கட்டுக்கதையைச் சொல்லலாம். இப்போது மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் துல்லியமாகப் படிக்கிறார்கள். ஒரு தாயின் கருவறையில் கரு எப்படி உருவாகிறது, பின்னர் மூன்று மாதத்தில் எவ்வளவு வளர்ச்சி அடைகிறது, அய்ந்து மாதத்தில் எவ்வளவு வளர்ச்சி அடைகிறது என்று மிகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் அறிவியல் சான்றோடும் படிக்கிறார்கள். அப்படி இருந்தும்,
பிரம்மன் என்று ஒருவர் இருந்தார். அவரது நெற்றியில் சில பேர் பிறந்தனர். அவரது தோளில் சில பேர் பிறந்தனர். அவரது தொடை மற்றும் பாதத்தில் சிலர் பிறந்தனர் என்று சொல்லி, அந்தப் பிறப்பின் மூலம் ஜாதி என்று ஒரு கட்டமைப்பை, ஒரு போலியான கட்டமைப்பை எடுத்துரைக்கின்றனர். அந்த கதையை நம்புகின்றனர்.
எந்த மனிதனும் நெற்றியிலோ அல்லது மற்ற உறுப்புகளிலோ பிறக்க முடியாது. தாயின் கருவறையில் மட்டுமே பிறக்க முடியும்.
நல்ல நேரம், கெட்ட நேரம் என்று சொல்லி, வாழ்க் கையில் பல மணி நேரத்தை வீணடித்து வருகின்றனர்.
மாதத்தில் ஏதேனும் ஒரு பெயரைச் சொல்லி, ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி ஒரு ‘பண்டிகை’ வந்துவிடுகிறது. அப்பண்டிகையின் மூலம் நிறைய பொருளாதார வீண் செலவுகள். இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொல்கிறார், படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று.
எனவே தோழர்களே, தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வில் நான் சொல்வது என்னவென்றால், படித்தவர்களாகிய நாம் பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியை கேட்டு, அதற்கு சரியான விடை கிடைத்த பிறகே அதை நம்பவும், செயல்படுத்தவும் வேண்டும் என எடுத்துக் கூறினார்.
ஸநாதனம்
திராவிடர் கழக திருவாரூர் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் செ.இரவிக்குமார்,
தந்தை பெரியார் அவர்களை வெறும் கடவுள் மறுப்பாளராகவும், பார்ப்பன எதிர்பாளராகவும் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு நிலை இங்கே அறிந்தோ அறியாமலோ ஏற்பட்டிருக்கிறது. அப்படி ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கடவுள் மறுப்பும், பார்ப்பன வெறுப்பும் மட்டுமே பெரியாரியமா என்றால் இல்லை.
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என ஏன் சொன்னார், பார்ப்பன ஆதிக்கத்தை ஏன் எதிர்த்தார், என்பதற்குப் பின்னால் இந்த சமூக கட்டமைப்புக்கு அடிப்படை காரணமாக இருக்கிற கருத்தியல் அல்லது கோட்பாடு முக்கியமானதாகும்.
தந்தை பெரியாரை கோட்பாடு பின்னணியில் இருந்து பார்ப்பவர்களால் மட்டும்தான் அவரின் பங்களிப்பை பற்றியும் தேவையைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும்.
இந்த சமூகம் சில்லு சில்லாக சிதறடிக்கப்பட்டு இருக்கிறது, குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் ஆதிக்கம் செய்கிறார்கள், பெரும்பான்மையான மக்கள் அடிமைப் பட்டு அடிமை நிலையில் உழலுகிறார்கள் என்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு தீர்வு சொன்னவர் தந்தை பெரியார். அதன் அடிப்படையில் தான் தந்தை பெரியார் தனது வாழ்நாளில் அதற்கு தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்படைத்துக் கொண்டார்.
மனுதர்மம் என்கிற ஸநாதனம் என்கிற அரசியலை அவர் புரிந்து கொண்டார்.
இதுதான் மிக மிக நுட்பமான ஒன்று இவற்றை புரிந்து கொள்ளாமல் தந்தை பெரியாரை நாம் புரிந்து கொள்ள முடியாது. என ஸநாதானம் குறித்து உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக திருவாரூர் மாவட்டத் தலைவர் வே.அறிவழகன் தந்தை பெரியாரின் பிறந்த நாளை 148 ஆம் பிறந்த நாளை கொண்டாடி வருவது குறித்தும் திராவிட மாணவர் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வுகள் குறித்தும் இந்நிகழ்விற்காக அயராது உழைத்த மாணவர் கழகத் தோழர்களைப் பாராட்டியும் தலைமை உரையாற்றினார்.
பொதுக் கூட்டத்திற்கு முன்னிலை ஏற்ற மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, மாவட்டக் செயலாளர் கோ.பிளாட்டோ, மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் வீ.மோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரங்க ஈவேரா, கழக சொற்பொழிவாளர் கோ.செந்தமிழ் செல்வி, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா செந்தூரப்பாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் திருவாரூர் மாவட்டத்தில் திராவிட மாணவர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பட ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முழு ஆதரவளித்து ஒத்துழைப்பு நல்கிய மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் மாணவர் கழகத் தோழர்களுக்கும் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை செய்ய பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு தொடர்ந்து நல்க வேண்டும் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி நாள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு முன்னாள் அமைச்சர் உ..மதிவாணன் பொதுக்கூட்ட மேடையில் பரிசுகளை வழங்கி பாராட்டுரை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர் விவரம்
சமூக நீதி நாள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம்.
(பள்ளி மாணவர்கள்.)
முதல் பரிசு ரஞ்சித் அரிஸ்டோ .ரா. ஒன்பதாம் வகுப்பு, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி திருவாரூர்.
க.கோகுலசிறீ எட்டாம் வகுப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னவேங்கா வயல் காரைக்குடி.
கோ.மகாபாரணி. ஏழாம் வகுப்பு வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி திருவாரூர்.
எஸ்.நூர்ஜஹான். பன்னிரண்டாம் வகுப்பு, ஜி ஆர் எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருவாரூர்.
(கல்லூரி மாணவர்கள்)
முதல் பரிசு. த.பிரின்ஸி. இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு, திருவிக அரசு கலைக் கல்லூரி திருவாரூர்.
இரண்டாம் பரிசு. ஆ.அபிஷேக் அருள் டேனியல். கணினி பயன்பாடுகள் மூன்றாம் ஆண்டு, அரசினர் கலைக்கல்லூரி கும்பகோணம்.
மூன்றாம் பரிசு. யாஸ்மின் பேகம்.ந. பிபிஏ, மூன்றாம் ஆண்டு, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் திருச்சி.
திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ. மதிவதனி “அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் திருவாரூர் மாவட்டம் என்பதை இம்முறையும் திராவிட மாணவர் கழகம் முழுப் பொறுப்பேற்று பட ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்றும் மாணவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் மாணவர் கழகப் பொறுப்பாளர்களே தலைமை ஏற்றும் உரையாற்றியும் உள்ளனர் எனவும் இதுவே கழகத்திற்கும் சமுதாயத்திற்கும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவான சூழலை இந்த திருவாரூர் மாவட்டம் உருவாக்கி உள்ளது என பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் இறுதியாக திருவாரூர் ஒன்றிய மாணவர் கழக சுப.ரக்ஷிதா கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். மேற்கண்ட நிகழ்வுகளை திராவிட மாணவ கழக மாநில துணைச் செயலாளர் தேவ நர்மதா தொகுத்து வழங்கினார்.
