மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் பகுதியில் உள்ள ஜே.எச். கல்லூரியில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது மயங்கி விழுந்த 17வயது பி.எஸ்.சி. மாணவி பிரதீக்ஷா வர்மா என்பவர் கடந்த செப்டம்பர் 25அன்று உயிரிழந்தார். ஊர்வலத்தில் ஒலித்த அதிகப்படியான டிஜே (டிஸ்க் ஜாக்கி) இசை தான் அவரது உடல்நிலையைப் பாதித்துவிட்டது என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அவருக்குச் சிறுவயதிலிருந்தே இதயக் கோளாறு இருந்ததாகவும், இந்த அதிகப்படியான ஒலிதான் அவரது உயிரைக் குடித்துள்ளது என்பதும் தெரிய வந்தது.
படிப்பிற்காக பெதுலில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பிரதீக்ஷா விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் பங்கேற்கவும், பிள்ளையார் சிலையைத் ’தரிசிக்கவும்’ ஜே.எச். கல்லூரிக்குச் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், அவருடன் வந்தவர்கள் அவரை ஓரமாக அழைத்துச் சென்றனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்ெகனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அதேபோல், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்ராம்பூரில் உள்ள டிவைன் பப்ளிக் பள்ளியில், அதிக சத்தத்துடன் கூடிய டிஜே இசையுடன் கூடிய மத ஊர்வலம் ஒன்று பள்ளியின் வெளியே சென்று கொண்டிருந்தபோது, வகுப்பறைக்குள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார். செப்டம்பர் 21 அன்று காலை சுமார் 11 மணியளவில், சோனு திவாரி (எ) ஜீத்து என்பவரின் மகள் பள்ளியின் முதல் தளத்தில் வகுப்பில் இருந்தபோது இந்த நிகழ்வு நிகழ்ந்தது. பள்ளியில் பதிவான மூன்று நிமிடங்கள் இரண்டு வினாடிகள் கொண்ட சிசிடிவி காட்சி ஒன்று வெளியானது. பள்ளி நிர்வாகத்தின் தகவலின்படி, வெளியே சென்ற ஊர்வலத்தின் அதிகப்படியான இசையைக் கேட்டு குழந்தைகள் எதிர்வினையாற்றுவதை அந்தக் காட்சிகள் காட்டுகின்றன. சில மாணவர்கள் ஜன்னல், கதவை நோக்கிச் சென்ற நிலையில், அந்தச் சிறுமிக்கு ஏதோ சிரமம் ஏற்படுவதை அக்காட்சியில் காண முடிகிறது.
அந்தச் சிறுமிக்கு மூன்று முறை உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாகவும், மூன்றாவது முறை ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகு அவரது நிலைமை மிக மோசமடைந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதிக டெசிபல் கொண்ட டிஜே இசை மற்றும் கடுமையான அதிர்வுகள் காரணமாக ஏற்பட்ட இதயப் பாதிப்பே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தாமாக முன்வந்து சுயொமோட்டோ வழக்காக, இதனை விசாரணைக்கு எடுத்துள்ளதுடன், ஒலிபெருக்கிகள், பிற ஒலி அமைப்புகள் தொடர்பான விதிகளை அமல்படுத்துவதற்கு யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. அதிக ஒலி கொண்ட ‘டிஜே’ இசை ஒலிபரப்பப்பட்டதே அச்சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணம் என்று குற்றம் சாட்டி பள்ளி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், டிஜே உரிமையாளரும், அதை இயக்கியவரும் கைது செய்யப்பட்டனர்; அத்துடன் உள்ளூர் காவல் நிலையப் பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இந்த டிஜே வைக்க விரும்பிய ஊர்வல ஒருங்கிணைப்பாளர்கள் என்ன ஆயினர்?
அதிக இரைச்சலை ஏற்படுத்தும் இந்தப் ‘புதிய டிஜே கலாச்சாரம்’, எல்லா ஊர்களின் திருவிழாக்களிலும் இப்போது இடம்பெறுகிறது. பார்க்கவே மிரள வைக்கும் ஒரு பெரிய டிரக் போன்ற வாகனத்தில் சுற்றிலும், மிக அதிக இரைச்சலை எழுப்பும் ஒலிபெருக்கிக் கருவிகள் வைக்கப்பட்டு, இதயத்தை எகிறச் செய்யும் இசை ஒலிபரப்பப்படுகிறது. இது அந்த ஊர்வலத்தில் பங்கேற்போரின் மனநிலையைப் பித்துப் பிடிக்கச் செய்யும். அதிக உற்சாகத்துடன் ஆடவும், அதீத தைரியத்தைத் தந்து, இரைச்சலையும், கூச்சலையும் ஊக்குவித்து, சுற்றி இருப்போரிடம் வம்பிழுக்கத் தூண்டும்.
பிள்ளையார் ஊர்வலங்கள், கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலங்கள், புதிதாக பல இடங்களில் தொடங்கியுள்ள ராம நவமி ஊர்வலங்களில் இந்த இரைச்சல் மிகு வாகனங்கள் செல்லுமிடமெல்லாம் கடுமையான ஒலிமாசு ஏற்படுத்தியபடி செல்கின்றன. ஒரு பெரிய இசைநிகழ்ச்சியில் அதை எதிர்பார்த்து, அதற்குத் தயாரானவர்கள் மட்டுமே செல்வார்கள். ஆனால், இந்த ஊர்வலம், குழந்தைகள், முதியவர்கள், இதய நோயுள்ளவர்கள் என்று எல்லோரும் வாழும் மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிகளைக் கடந்து செல்கிறது. இந்த இரைச்சல் தாங்காமல் அவர்கள் படும் அவதிகள் சொல்லி மாளாது. இந்த ஆண்டு பதிவாகியுள்ள இது போன்ற சில மரணங்களைத் தவிர, பதிவாகாத ஏராளமான மரணங்களுக்கும் இந்த மனிதத் தன்மையற்ற மதவெறியூட்டும் ஊர்வலங்களின் கூச்சலும், இரைச்சலும் தானே காரணம்? திருவிழாக்கள், மதச் சம்பந்தமான நிகழ்ச்சிகள் என்றால், காவல்துறை, நகர நிர்வாகம், மின் துறை போன்றோர் சலுகை காட்டுவதும், கண்டுகொள்ளாமல் விடுவதும் தொடர்கிறது. அரசியல் கட்சிகளுக்கும், சமூக இயக்கங்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் என்ன விதிமுறையோ, அது தானே மத விழாக்களுக்கும் இருக்க வேண்டும். போதுமான வசதிகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறை இல்லையெனில் அனுமதி மறுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு தானே? அது மத விழாக்களில் மட்டும், குறிப்பாக இந்து மத விழாக்களில் மட்டும் அதிகாரத்தைச் சுருட்டிக் கொள்வது ஏன்?
மேற்சொன்ன அரசு இயந்திரங்கள் சரியான கட்டுப்பாட்டைப் பின்பற்றினால், இத்தகைய இளந்தளிர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்குமா? இருப்பதிலேயே ஒழுங்கு முறையற்ற கூட்டம் மதவெறி பிடித்த இந்த வன்முறைக் கூட்டம் தான்! அதிக கட்டுப்பாடுகள் விதித்து, கவனமாகக் கையாளப்பட வேண்டியது அவசியம்! சமூக விரோதிகள் பலர் மறைந்து உலவும் இடமாக அது இருப்பதும் காவல்துறைக்கு நன்கு தெரியும். மத விழாக்களில் பிரச்சினை செய்யக் கூடாது என்று அவர்களின் தனிப்பட்ட மத நம்பிக்கையைப் பொதுக் கடமையில் கொண்டு வந்து குழப்பிக் கொள்ளக் கூடாது.
காற்று மாசு (பட்டாசுகள்), நீர் மாசு (கெமிக்கல் கலந்த சிலைகள் கரைப்பு), ஒலி மாசு (அதீத ஒலி உண்டாக்கும் இரைச்சல்) என சுற்றுச்சுழலை முற்றிலும் அழிப்பது மட்டுமல்ல, இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான ‘அறிவு மாசு’ ஏற்படுத்தி மனிதத் தன்மையை இழப்பதற்குக் காரணமாக இருப்பது மதமே என்பதை அரசும், அரசு அலுவலர்களும், பொது மக்களும் உணர வேண்டும்.
