சென்னை, அக்.4 பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதை காரணம் காட்டி நாடு முழுவதும் தனியார் எண்ணெய் விற்பனை நிறுவனமான நயாரா எனெர்ஜி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கிறது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.3 என விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
யார் இந்த நயாரா எனெர்ஜி?
நயாரா எனெர்ஜி என்பது மும்பையை சேர்ந்த தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமாகும். இந்நிறுவனம் முதலில் இந்தியாவின் பிரபல Essar Oil நிறுவனமாக தொடங்கப்பட்டது. இது கடந்த 2017ஆம் ஆண்டு கடுமையான கடன் நெருக்கடி காரணமாக Essar Oil ரஷ்ய பெட்ரோலிய நிறுவனத்திற்கும், வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கும் நிறுவனத்தை விற்றுவிட்டது. இது குஜராத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை சொந்தமாக வைத்திருக்கிறது.
அவ்வப்போது சில நேரங்களில் அய்ஒசிஎஸ்., பிபிசிஎல்., எச்பிசிஎல் போன்ற நிறுவனங்களை விட விலை குறைவாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்து வந்தாலும், ஈரான் போர் காரணமாக பெட்ரோல் விலையை ஏற்றி ஷாக் கொடுத்தது. தற்போது மீண்டும் விலையை ஏற்றியிருக்கிறது. அதன்படி நயாரா பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77க்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 7,108 நயாரா பெட்ரோல் பங்குகளில் இந்த விலையில்தான் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, மேற்கண்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 1,04,137 பங்குகளில் நேற்றைய விலையில்தான் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணிக்கையில் நயாரா நிறுவனம் குறைவாக இருப்பதால், இந்த விலை உயர்வு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும்.. நயாராவை காரணம் காட்டி நாளைக்கே அய்ஒசிஎஸ், பிபிசிஎல், எச்பிசிஎல் போன்ற நிறுவனங்கள் விலையை ஏற்றினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் எச்சரித்துள்ளனர்.
