இவர் அறிவியல் ஆச்சரியம்! மனித வியப்பு!

9 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

வழக்குரைஞர் சே. மெ. மதிவதனி

திராவிடர் கழகம்

கொரோனா ஊரடங்கின் போது ஊரெல்லாம் அடங்கி இருந்த நேரத்தில், கொள்கைக்கு ஓய்வில்லை என்ற வகையில் காணொலி வாயிலாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடர் சொற்பொழிவாற்றினார். அத்தொடர் சொற்பொழிவு ‘ஒப்பற்ற தலைமை’ என்ற நூலாக வெளியானது. இளைய தலைமுறையினர் நம் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வியலையும், அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தையும் விளக்கக்கூடிய உரையினை ஆசிரியர் அவர்கள் நமக்கு அளித்தார். எத்தனை முறை அந்த நூலினை வாசித்தாலும் முதல் முறை வாசிப்பதை போன்ற வியப்பைத் தரும். காரணம், தந்தை பெரியாரின் அணுகுமுறைகளையும் அவர் அனுபவித்த துன்பங்களையும் வாசிக்கும் நேரத்தில், அவை அனைத்தையும் தாண்டி, அனைத்தையும் தாங்கி தமிழ்ச் சமூகத்திற்கு மான வாழ்வை பெற்றுத்தர அவர் ஆற்றிய பெரும் பணியை அப்படியே உணர்வாக நமக்கு கடத்தி இருப்பார் ஆசிரியர் அவர்கள். இளைஞர்களிடையில் பேசுகிறபோது உணர்ச்சி என்பது பகுத்தறிவு உணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பார். பெரும்பாலும் தமிழ் சமூகம் உணர்ச்சியின் அடிப்படையில் கட்டப்பட்டது, உணர்ச்சிக்கு கட்டுப்பட்டது; ஆனால், ஆசிரியர் அவர்கள் நமக்கு எழுகின்ற உணர்ச்சிகூட பகுத்தறிவின் பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது மட்டுமின்றி, அதனை தன் வாழ்வியலாக வரித்துக் கொண்டவர். அந்த வகையில் தந்தை பெரியாரின் வாழ்க்கையை அறிவு உணர்ச்சியுடன், பகுத்தறிவு உணர்ச்சியுடன் அணுகுவதற்கான வாய்ப்பை அந்த உரையில் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் அவர்கள் தனது 22 வயதில் எழுதிய கட்டுரை ஒன்று இடம் பெற்றிருக்கும்.

22 வயதில் ஒரு இளைஞர் பிரபல பிரெஞ்சு எழுத்தாளரின் கட்டுரையை வாசித்து, அதனை, தான் ஏற்றுக் கொண்ட தலைவருடன் ஒப்பிட்டு எழுதுவது சாதாரண காரியம் அல்ல. காரணம் எவ்வித சமூக ஊடக வளர்ச்சியோ, தொழில்நுட்ப வளர்ச்சியோ இல்லாத நேரத்தில் புத்தகங்களை மட்டும் வாசித்து, நூலகங்கள் பல சென்று அதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு அதனை மேற்கோள்களாக காட்டி, தான் ஏற்றுக்கொண்ட தலைவர் தந்தை பெரியாருடன் அதனை ஒப்பிட்டுப் பார்க்கும் ஆற்றல் வியப்புக்குரியது. ஆந்துரு மராய் (Andre Mourois) அவர்கள் எழுதிய கட்டுரையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியாரோடு ஒப்பிட்டு, தந்தை பெரியாருக்கு பொருந்திப் போகும் வகையிலே அக்கட்டுரையை அமைத்திருப்பார். இன்று அதை வாசிக்கும் நம்மை போன்ற இளைஞர்களுக்கு, ஆசிரியர் வடித்த தலைவருக்கான இலக்கணங்கள் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அப்படியே பொருந்தி இருப்பதை காணலாம். இதோ ஆசிரியரின் வாழ்வின் ஒரு நாளுக்குள் பயணப்பட்டு அதனை உணர்ந்து கொள்வோம்! வாருங்கள்!

கழகத் தலைவருடன் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து பரப்புரைப் பயணம் செல்லும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். 28ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில் நிகழ்ச்சியினை முடித்துவிட்டு, இரவு ரயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டு அதிகாலை திருச்சி வந்து இறங்கினார். திருச்சியில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டார். திருச்சியில் இருந்து நேராக தாராபுரம் செல்ல வாய்ப்பு இருந்தும், கழகத்தின் மூத்த முன்னோடி பெரியார் பெருந்தொண்டர், 103 வயது இளைஞர் அய்யா பொத்தனூர் க.சண்முகம் அவர்களை சந்தித்து செல்வதற்காகக் கரூர் வழியாக தாராபுரம் செல்வதாகத் திட்டமிட்டார். அதன்படி சாலை வழியாக பயணத்தை மேற்கொண்டு தாராபுரத்தை வந்தடைந்தார். இரவு ரயில் பயணம், காலையில் தொடங்கி ஏறக்குறைய 5 மணி நேரம் சாலை மார்க்கமாக பயணம், ஆனாலும் வந்து இறங்கியதும் தலைவரை காண காத்திருந்த தோழர்களை முகம் மலர்ச்சியுடன், சிறிதும் சோர்வின்றி கண்டு மகிழ்ந்தார். மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேர ஓய்வுக்குக் கூட நேரமின்றி மாலை பிரச்சாரத்திற்கு செல்வதற்குத் தயாரானார். சரியான நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க வேண்டும், தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சொன்ன நேரத்திற்கு பிரச்சார இடத்திற்கு மேனாள் அமைச்சர்களுடன் வந்தடைந்தார் தலைவர் அவர்கள்.

பிரச்சார வாகனம் கூட்டத்தின் உள்ளே வருகிறது. திரண்டிருந்த மக்கள் கூட்டம் தலைவர் எங்கிருந்து பேசுவார் என்று ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், வந்திருந்த மக்களுக்கு அவரின் வயது 93 என்று நன்றாக தெரியும். மேடை இல்லை; பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்று பேசும் வயதும் இல்லை; என்ற ஆச்சரியத்துடன் நின்றிருந்தனர். தலைவர் அவர்கள் வந்த வாகனத்தின் கதவுகள் திறந்ததும், கீழே நின்றிருந்த திராவிட முன்னேற்ற கழக தோழர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், மூத்த நிர்வாகிகள் அளித்த மரியாதையை, வரவேற்பை ஏற்றுக்கொண்டு பிரச்சார வாகனத்தின் மேல் ஏறி உரையாற்ற ஆயத்தமானார். கூட்டத்தில் கைத்தட்டல்.

ஏறக்குறைய 40 நிமிடங்கள் உரையாற்றினார். அவரது உரையில் இடைத்தேர்தல் எப்படி திணிக்கப்பட்டது? மாற்றம் என்று பேசியவர்கள் எத்தகைய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார்கள், குதிரை பேரம் எப்படி நடந்து இருக்கிறது, முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படும் த.வெ.க அரசின் போக்கு, மக்கள் நலனுக்கு எதிரான செயல்பாடுகள், மின்வெட்டு, சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாத தன்மை என்று அடுக்கிக் கொண்டே சென்றார். ஆசிரியர் என்றாலே ஆதாரம் தானே! தேர்தல் பிரச்சாரத்திலும் ஒரு கையில் அத்தனை குறிப்புகளை வைத்துக்கொண்டு, மறுக்கையில் மைக்கை பிடித்து இருந்தார். தொடர்ந்து பேசக் கூடியவர்களுக்கு நன்றாகத் தெரியும், பேச்சாளர்கள் கையில் 40 நிமிடம் மைக்கை பிடித்துக் கொண்டே பேசுவதென்பது எத்தகைய சிரமம் என்பது. ஆசிரியரின் கைகளை உற்று நோக்கியவர்களுக்கு தெரியும், எலும்பு மீது தோல் போர்த்தப்பட்டது போல் இருக்கும். ஆனால் அவர் மைக்கை பிடித்து இருந்த தோற்றமும், குறிப்புகளை அடுக்கிக்கொண்டே இருந்த விதமும், கூட்டத்திலிருந்த யார் ஒருவரையும் ஆச்சரியப்படுத்தாமல் இல்லை. அவரின் உடல்நிலை, அவர் மேற்கொள்ளும் சிகிச்சை, இவ்வளவு தூரம் பயணிக்கக் கூடாது என்ற மருத்துவர் அறிவுரை, அவரின் உடல் ‘எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை’ என்று கேட்பதற்காகவே ஏற்படுத்தும் சிக்கல்கள், அனைத்தையும் தாண்டி அவரின் பயணமும் பேச்சும் எதைக் குறிக்கிறது என்றால், அவரே எழுதுகிறார் வாசியுங்கள். “சிறந்த உடல் நலமும், நிறைந்த தைரியமும், தலைவருக்கு மிக மிகத் தேவை. நல்ல உடல் நிலை விரும்பத்தக்கது மாத்திரம் அல்ல, தேவையானதும்கூட. பெரியார் அவர்கள் 77ஆவது வயதிலும், 27 வயது இளைஞனைப் போல் ஏறு நடை போடுவதன் ரகசியம் இதுதானே! அய்யா அவர்கட்குள்ள அஞ்சாமை வேறு எவரிடத்தும் காணாத ஏற்புடைப் பண்பாகும். எதிர்நீச்சலில் சளைக்காமல் நீந்தி, வெற்றிக்கரை சேரும் விவேகி; மலைக் குலைந்தாலும் மனங் குலையா மாவீரரல்லவா நம் திராவிடத் தந்தை! தன்னுடைய லட்சியங்கள், உழைப்பு இவைகளில் மட்டுமே நம்பிக்கை வைத்து, வருவோரைப் பற்றியும், போவோரைப்பற்றியும், கவலைப்படாமல் இயந்திர உழைப்புடன் இருக்கும் தலைவர் தென்னாட்டிலேயே யார்? பெரியாரைத் தவிர்த்து!” என்று 22 வயதில் அவர் தீட்டிய கட்டுரையை இன்று அவருக்கே மீண்டும் பொருத்தி, அதில் இறுதி வரிகள் இன்றைய தலைமுறைக்கு எங்கள் தலைவர் ஆசிரியர் இன்றி வேறு யார்? என்கிறோம்.

காரணம், மேற்சொன்னவற்றில் மூன்று செய்திகள் ஆழமானவை. ஒன்று 77 வயதில் 27 வயதுபோல் தந்தை பெரியார் பயணித்தார் என்பது. இதனை வாசிக்கின்ற நேரத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பயணத்தை 93 வயதில் 23 வயது இளைஞரை போல் பயணிக்கிறார் என்று ஒற்றை வரியில் நாம் சொல்லி முடிக்கிறோம். ஆனால், அவருடன் பயணித்துப் பார்த்தால் 23 வயது இளைஞரால் கூட பயணிக்க முடியாத பயணங்களாக இருக்கிறது. காரணம், அவரின் மாறாத சுறுசுறுப்பு, நினைவாற்றல், சொற்களில் தெறிக்கும் கொள்கை அனல், எழுத்துகளில் பூத்துக் குலுங்கும் நூறாண்டு கால வரலாறு, நடையில் பொருந்திப் போகும் கொள்கை வேகம் என்று அவரின் பயணங்கள் தனியாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒரு வரலாற்று நூலகம்;

இரண்டு, தன்னுடைய லட்சியங்களில் உழைப்பில் மட்டும் நம்பிக்கை வைத்து பயணித்தார் தந்தை பெரியார் என்பது, ஆம் அதே வழியில் ஆசிரியர் அவர்கள் இன்றைய அரசியல் சூழலில் அவர் எடுக்கும் எந்த நிலைப்பாடாக இருந்தாலும், அது கொள்கை லட்சியத்தின் பாற்பட்டதாக, இறுதி வெற்றி கொள்கைக்கானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காக யார் ஒருவரையும் எதிர்பார்க்காமல் அவரின் உழைப்பை மட்டுமே நம்பி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்;

மூன்று, வருவோரைப்பற்றியும் போவோரைப்பற்றியும் கவலைப்படாமல் இயந்திர உழைப்புடன் இருக்கும் தலைவர் என்று ஆசிரியர் அய்யாவை கண்டு வியந்து எழுதியதற்கு சற்றும் மாறுபாடு இன்றி, இவர் வருவார், அவர் வருவார் என்ற எதிர்பார்ப்பும், இவர் வரவில்லை, அவர் வரவில்லை என்ற எவ்வித ஏமாற்றமும் இன்றி இயந்திரத்தின் வேகத்துடன் போட்டியிட்டு தொடர் பயணங்களை மேற்கொள்கிறார் ஆசிரியர் அவர்கள்.

அரசியல் சூழலை பொருத்திப் பார்த்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் விலகிச் சென்ற நேரத்திலும், இந்த இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தான் ஆதரிக்கிறோம் என்று துணிச்சலுடன் வெளிப்படுத்தி, அதற்கான காரணங்களை அடுக்கடுக்காக சுட்டிக்காட்டி, ஆதாரங்களை மேற்கோளிட்டு, பிரச்சாரத்திற்கும் பயணித்து, ஆளும் கட்சியின் முகத்திரையை தோலுரித்த ஆசிரியரின் பணி இந்த தலைமுறைக்கான கொள்கைப் பாடம்.

மூலனூரில் முதல் கூட்டம் முடித்து, இரண்டாவது கூட்டத்திற்கு தாராபுரம் பயணப்பட்டார். இரண்டாவது இடத்தில் மக்கள் வெள்ளம்; வந்திருந்த மகளிர் ஆசிரியரின் உரை கேட்டு ஆரவாரம் ஆனார்கள். தேர்தல் பிரச்சாரங்களைக் கூட கொள்கை உரையாடலாக மாற்றும் ஆற்றல் ஆசிரியருக்கு மட்டுமே உரியது. தனது சகோதர, சகோதரிகளுடன் உரையாடும் எண்ணத்தில் கேள்விகளை கேட்கிறார், மக்களிடத்திலிருந்து பதில் வருகிறது, அவர்களின் பதிலை வாங்கி, அதிலிருந்து தொடர்ந்து பேச தொடங்குகிறார். ஏறக்குறைய இரண்டாவது இடத்திலும் 40 நிமிட உரை. ஆசிரியரின் பேச்சைக் கேட்ட மக்களுக்கு, நமக்காகத் தானே இவர் உழைக்கிறார் என்ற உணர்வு வெளிப்பட்டது. தேர்தலை சந்திக்காத ஓர் இயக்கம், தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சிக்காக உழைக்கிறது என்றால், இன்றைய அரசியல் சூழலில் இவர்கள் சொல்வதுதான் நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நன்மையாக அமையும் என்பதை மக்கள் உணர்ந்ததைக் கண்கூடாக பார்த்தோம். ஆசிரியரின் உரையை கேட்டும், அவர் பிரச்சார வாகனத்தின் மேல் ஏறி நின்றதை பார்த்தும் ‘இவருக்கு இவ்வளவு வயசா?’ என்று ஆச்சரியப்படாதவர்கள் அங்கு யார் ஒருவரும் இல்லை!

மக்கள் கூட்டத்தில் கீழே இருந்து ஆசிரியரின் உரை கேட்கும் மகிழ்ச்சியிலும், இன்றைய ஆட்சியின் அவலத்தை பார்த்தும், அதனை வெளிப்படுத்தும் வகையில் ஆசிரியர் கேட்ட ஒரு கேள்விக்கு சைகை மொழியில் கூட்டத்திலிருந்து ஒருவர் பதில் தருகிறார். உடனே இத்தகைய செயல்பாடுகள் நமக்கு ஏற்புடையது அல்ல என்பதை நவ நாகரீகத்துடன் புரிய வைத்து, உரையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். ஓர் அய்ந்து நிமிடங்களில் ஒரு கொள்கைப் பாடம்; இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்று உணர்த்துதல்; எந்நிலையானாலும் தன்னிலை மாறாமல் இருக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துதல்; எதிரியாக இருந்தாலும் நாம் நாகரிகத்துடன் தான் அவர்களை அணுக வேண்டும் என்ற புரிதலை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துதல் என்று ஆச்சரியத்தின் முழு உருவமாக ஆசிரியர்தான் தென்பட்டார். எத்தகைய நாகரிகத்தின் வடிவம் ஆசிரியர் அவர்கள்!

இரண்டாவது கூட்டம் முடிந்து திருப்பூருக்கு பயணப்பட்டார். திருப்பூரிலிருந்து இரவு 11:35 மணிக்கு ரயில். திருப்பூருக்கு வந்து திமுக கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த தலைவர் அவர்கள், கிடைத்த நேரத்தை தோழர்களுடன் செலவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு கூடியிருந்த அவர்களை தனித்தனியாக சந்தித்து உரையாடினார். அடுத்த கூட்டத்திற்கான ஆலோசனைகளையும் தோழர்கள் பெற்றுக் கொண்டனர். தன்னுடன் பயணித்தவர்களை அழைத்து தனித்தனியாக பாராட்டினார். ரயில் நிலையத்திற்கு பயணப்பட்டார். 11:35க்கு வர வேண்டிய ரயில், 20 நிமிடங்கள் தாமதமானது. ரயில் நிலையத்திற்கு வாகனம் வந்ததும் வாகனத்திலிருந்து ஆசிரியர் இறங்கும் முன்பே தோழர்கள் சூழ்ந்து கொண்டனர். இயக்கத் தோழர்கள் மட்டும் இன்றி பொதுவான இளைஞர்களும் தலைவரை சந்திக்க வந்திருந்தனர். எல்லோரும் தனித்தனியாக ஆசிரியருடன் ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ரயில் நிலையத்திற்குள் வழக்கமான வேகம் குறையாத நடையுடன் நடந்து வந்தார். நடைமேடையில் அமர்ந்து, அங்கும் தன்னை சந்திக்க வந்திருந்த தோழர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்று மகிழ்ந்தார். ரயில் வந்ததும், காலையில் திருச்சி ரயில் நிலையத்தில் 5 மணிக்கு இறங்கிய போது இருந்த அதே சுறுசுறுப்பு சற்றும் குறையாமல், எவ்வித களைப்பையும் வெளிப்படுத்தாமல், சோர்வையும் தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் ரயிலின் உள்ளே ஏறி நின்று, தோழர்களுக்கு வணக்கம் செலுத்தி சென்னைக்குப் புறப்பட்டார்.

ஒரு நாள் முழுவதும் பயணித்தும், 93 வயதில், அடுத்த நாள் காலை வழக்கம்போல் பெரியார் திடலில் தனது பணிகளை தொடர வந்த ஆசிரியர் அவர்களை கண்டதும் தோன்றியது ஒன்று தான். ஆம்! இவர் அறிவியல் ஆச்சரியம்! மனித வியப்பு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *