மதுராந்தகத்தில் ஆளுங்கட்சியின் அலங்கோலத்தைச் சுட்டிக்காட்டி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார் கழகத் தலைவர்!

6 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

‘ஜனநாயகம்’ என்பது சினிமா தலைப்பு அல்ல!
மின்சாரத் துறையா? மின்வெட்டுத் துறையா?
தமிழ்நாட்டில் ஒரே நாளில் எட்டுக் கொலைகள்!
இதுதான் மாற்றமா? இல்லை, ஏமாற்றமா?

திராவிடர் கழகம்

மதுராந்தகம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் இ. பரந்தாமனை ஆதரித்துத் திரண்டிருந்த மக்களிடையே தமிழர் தலைவர் தேர்தல் பிரச்சாரம்

மதுராந்தகம், அக்.2 மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மாற்றம் என்ற பெயரில் ஏமாற்றத்தைத் தந்து, தடுமாறிக்கொண்டிருக்கும் த.வெ.க. ஆட்சியை அம்பலப்படுத்தி மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, ‘‘‘ஜனநாயகம்’ என்பது சினிமா தலைப்பு அல்ல! மின்சாரத் துறையா? மின்வெட்டுத் துறையா? ஒரே நாளில் எட்டுக் கொலைகளா? இதுதான் மாற்றமா? இல்லை, ஏமாற்றமா?” என்று இன்றைய ஆட்சியின் அலங்கோலத்தைச் சுட்டிக்காட்டி, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தார்.

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் தி.மு.க. வழக்குரைஞர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து, தி.மு.க. தேர்தல் பணிக்குழு சார்பில், நேற்று (1.10.2026) மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, வையாவூர் ஊராட்சி, மூசிவாக்கம் பேட்டையில் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேனாள் அமைச்சர்கள்

நிகழ்ச்சியில், மேனாள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையேற்று உரையாற்றினார். தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.எச்.சத்தியசாய் அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். மேனாள் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிகழ்ச்சியை நெறிப்படுத்தி உரையாற்றினார். சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன், மருத்துவர் நா.எழிலன், சைதை சாதிக், வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், ஜோசப் சாமுவேல் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், உரத்தநாடு இரா.குணசேகரன், மேனாள் தி.மு.க. அமைச்சர் இராஜேந்திரன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் அ.வெ.முரளி ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டு, நிகழ்ச்சி செம்மையாக நடைபெற ஒத்துழைத்தனர்.

கழகத் தலைவர் வருகை தந்ததும் தி.க., தி.மு.க. தோழர்கள், கழகத் தலைவரை மிகுந்த உற்சாகத்துடன், கொள்கை முழக்கங்களுடன் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். நிறைவாக 7.40 மணிக்கு கழகத் தலைவர் உரையாற்றினார்.

கழகத் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தமது உரையை, “ஜனநாயகத்தில் ஒரு நல்ல பண்பு இருக்கின்றது. அதாவது, நமது வேட்பாளர்கள் செல்லும்போது மக்கள் வரவேற்கின்றனர்.

த.வெ.க.வேட்பாளர்கள் செல்லும் போது, எதிர்வினையாற்றி கேள்விகள் கேட்கின்றனர்” என்று எடுத்த எடுப்பிலேயே ஆளுங்கட்சியின் யோக்கியதையை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, “மாற்றம் மாற்றம் என்று சொன்னார்கள். வந்து எதை மாற்றியிருக்கிறார்கள்?” என்றொரு கேள்வி கேட்டு, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் பெயரை மாற்றிருக்கிறார்கள். பெயரை மாற்றினால், கலைஞர் பெயர் மறைந்துவிடுமா? ‘செம்மொழித் தமிழ்’ என்ற பெயர் இருக்கின்ற வரையிலும், கலைஞரின் பெயர் வரலாற்றில் நிலைத்து இருக்கும்” என்று சொன்னதும், பெருமக்கள் மேடையும், பொதுமக்கள் மேடையும் கைதட்டல்களால் அதிர்ந்தது.

‘ஆளுங்கட்சிக்கு லாலி பாடுவதற்காக நாங்கள் வரவில்லை’ – அண்ணா!

அத்துடன் விடவில்லை கழகத் தலைவர், “த.வெ.க. வேட்பாளர்களை எதிர்த்துப் பெண்கள் கேள்விகள் கேட்கின்றனர். எங்கிருந்து வந்தது இந்தத் தெளிவு? கலைஞர் கொடுத்த வண்ணத் தொலைக்காட்சியைப் பார்த்துப் பெற்ற அரசியல் விழிப்புணர்ச்சியால் வந்தது!” என்றதும், கைதட்டல்கள் அதிரடியாகத் தொடர்ந்தன. மேலும் அவர், ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அம்சத்தைச் சுட்டிக்காட்டினார். அதாவது, “எதிர்க்கட்சி என்றால் கேள்விகள் கேட்க வேண்டும். ஆளுங்கட்சி என்றால் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்” என்று சொல்லிவிட்டு, பேரறிஞர் அண்ணா, ‘ஆளுங்கட்சிக்கு லாலி பாடுவதற்காக நாங்கள் வரவில்லை” என்று சொன்னதையும் நினைவூட்டி, “இன்றைக்கு அப்படியா இருக்கின்றது? திசை திருப்பல்கள்தானே நடக்கின்றது. அந்தத் திசைத் திருப்பல்களை எதிர்கொள்ளத்தான் வழக்குரைஞர் பரந்தாமனை சட்டமன்றத்துக்கு நீங்கள் அனுப்ப வேண்டும்” என்றதும், மறுபடியும் கைதட்டல்கள் பலமாக எழுந்து அடங்கின.

“திருத்துகிற இடத்தில் நாங்கள் இருக்கிறோம். திருந்துகிற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்!”

அடுத்துப் பேசிய அவர், “இது அண்ணாவைத் தந்த செங்கல்பட்டு மாவட்டம்! இது விவசாயிகள் அதிகம் இருக்கும் மாவட்டம்! கலைஞர் ஆட்சியில் ரூ. 7,000 கோடி விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தார்! இன்றைக்கு விவசாயிகள் திருவோடு வைத்துக்கொண்டு போராடுகிறார்கள். இதுதான் மாற்றமா? இது மாற்றம் இல்லை! ஏமாற்றம்! தடுமாற்றம்!” என்று கடுமையாக விமர்சித்தார். இன்னும் ஒருபடி மேலே சென்று, “திருத்துகிற இடத்தில் நாங்கள் இருக்கிறோம். திருந்துகிற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, ‘தினத்தந்தி’ நாளிதழை எடுத்து மக்களுக்குக் காட்டியபடி பேசினார். அதாவது, “இது ஆளுங்கட்சியின் கெசட் மாதிரி” என்று தொடர்ந்து கூறி முடிப்பதற்குள் மேடையிலும், மக்கள்மத்தியிலும் பலத்த சிரிப்பு எழுந்தது. ஆசிரியர் தொடந்தார். ‘‘இதில், ஒரே நாளில் எட்டுக்கொலைகள் நடந்துள்ளதையும், மாவட்ட வாரியாக நடக்கும் கொலைகளைப் பற்றியும் பட்டியல் இட்டிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பட்டியலையும் படித்துக்காட்டினார். ‘‘இதுதான் மாற்றமா?” என்று கேட்டுவிட்டுத் தொடர்ந்தார்.

“இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?”

‘‘எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதைச் சுட்டிக்காட்ட ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியின் பெண் வழக்குரைஞரிடம், ஆளுங்கட்சியினரே 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதையும், அதை நீதிமன்றமே குட்டியும், சுட்டியும் காட்டியுள்ளதையும் எடுத்துக்காட்டி, “இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?” என்று அதிரடியாகக் கேட்டார். தொடர்ந்து, “தமிழ்நாடு மறுபடியும் சரியான பாதைக்கு திரும்ப வேண்டும் என்றால்…? இந்த இடைத்தேர்தலை நம்மீது திணித்தவர்களுக்குச் சரியான தண்டனை தரவேண்டும் என்றால்? ஜனநாயக முறைப்படி த.வெ.க. வேட்பாளரைத் தோற்கடியுங்கள். ஆற்றல் வாய்ந்த வழக்குரைஞர் பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்து, தனது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக, தி.மு.க.வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் தனக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தி.மு.க.மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணித் துணை அமைப்பாளர் இ.தினேஷ் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

கழகத் தலைவர் தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு, நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சற்றுத் தாமதமாக வரநேர்ந்ததற்கு வருந்துகிறேன் என்று காத்திருந்த பொதுமக்களிடம் தெரிவித்து தனது உரையைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கேற்றோர்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகப் பொறுப் பாளர்கள் மற்றும் தோழர்கள், மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன், மாவட்டக் காப்பளர்கள் சி.பக்தவச்சலம், மா.சமத்துவமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் அ.பா.கருணாகரன், பூ.சுந்தரம், மாவட்ட மகளிரணித் தலைவர் சா.நூர்ஜஹான், செயலாளர் க.சவுந்தரி, மாவட்டத் துணைத் தலைவர் நெல்லை சாலமன், மாவட்டத் துணைச் செயலாளர் ப.முருகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண்குமார், மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.வசந்தன், செயலாளர் செ.வினோத்குமார், செங்கல்பட்டு நகரத் தலைவர் பொன்.ராஜேந்திரன், நகரச் செயலாளர் தனசேகர், மறைமலைநகர் நகரத் தலைவர் ம.வெங்கடேசன், செயலாளர் செ.முடியரசு, மதுராந்தகம் நகரத் தலைவர் பொன்.மாறன்,  ஏ. செல்வம், சி.தீனதயாளன், மு.பிச்சைமுத்து, அறிவுச்சுடர், யாக்கோபு, குழல் லோ. குமரன், கல்பாக்கம்.விஜயகுமார் திருக்கழுக்குன்றம் சண்முகம்,  தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், நகரச் செயலாளர் சு.மோகன்ராசு, தொழிலாளரணி குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன், கூடுவாஞ்சேரி இராசு, மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த கிராம பொதுமக்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தோழர்கள், பொறுப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறக்கச் செய்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *