மூத்த பெரியார் பெருந்தொண்டர்களுக்குத் தமிழர் தலைவர் செய்த வரலாற்றுச் சிறப்பு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

இரா. முல்லைக்கோ பெங்களூரு

கட்டுரை

‘‘தென்றல் தருவது நறுமண வாடை

நற்பண்பு தருவது நாடக மேடை’’

எனும்படி தலையாயப் பண்புகளையும், உயர் சிந்தனைகளையும் தாங்கி ‘குத்தூசி நாடக மன்றம்’ எனும் நாடக அமைப்பினை உருவாக்கி, எழுச்சிப் பாவலர் பாலசுந்தரம் அவர்களை 1950ஆம் ஆண்டு அழைத்து அவ் அமைப்பினை உருவாக்கினார் நாடக ரத்னா வீ.மு. வேலு அவர்கள். அதன் வழியே கழகத்தின் இளைஞர்களை ஒருங்கிணைந்து ‘ஏழையின் கண்ணீர்’ என்ற சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்ட நாடகம் தொடங்கி ‘குருதிக் கொடை’  எனும் நாடகம் வரை 86 நாடகங்களை எழுதி, தானும் நடித்து, அரங்கேற்றி சிறப்பினைப் பெற்றுள்ளார் அய்யா வேலு அவர்கள். சமூகச் சீர்திருத்த நாடகத்தினை பெங்களூரில் நடத்திக் கொண்டிருந்த வேளையில் காவல்துறையினர் அவரையும், நாடக நடிகர்களையும், அவரின் உற்றத் தோழர் அங்கமுத்துவையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் விசாரணை நடத்தியதில் எவ்விதமான குற்றமுமில்லை எனக் கூறி விடுதலை செய்வித்தனர். இதுவே குத்தூசி நாடக மன்றத்திற்கு கிடைத்த முதல் நற்சான்றாய்க் கருதி செயல்பட முற்பட்டனர். நாடகம் இயற்றி மேடையேற்றுவது என்பது வேலு அவர்களுக்கு கைவந்தக் கலையாக அமைந்திருந்தது.

‘‘எங்கள் திராவிடப் பொன்னாடே

கலை வழும் தென்னாடே’’

என்ற பாடல் வரிகளுக்கு இலக்கணமாக எழுப்போடும், துடிப்போடும் ஆண்டிற்கு இரண்டு நாடகங்களை பெங்களூர் இரவீந்திர கலாச் சேத்திராவிலும், தமிழ்நாடு, புதுச்சேரியிலும் நாடகங்களை நடத்தியுள்ளார் வேலு அவர்கள்.

காட்சிக்கு எளிமையான தோற்றம் கொண்ட வேலு அவர்களை அறிவாசான் அறிவுலக மேதை தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு சீர்திருத்தக் கருத்துகளே அவர் எழுச்சி நடைபோடுவதற்குப் பெரும் துணை புரிந்தன வென்றே கூறலாம்.

வீ.மு. வேலு அவர்கள் 17.9.1920 அறிவாசான் பெரியார் பிறந்த நாளிலேயே பிறந்தது மிகச் சிறப்பாகும். முருகேசன் – சிச்சுலம்மாள் இணையரின் இரண்டாம் மகனாய் வேலு பிறந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகிலுள்ள அவலூர்பேட்டையே இவரது பிறந்த ஊராகும். சேலம் நெசவாளர்கள் உறவு நிறைந்த பகுதி என்பதால் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை உறவு நிறைந்து,  திருமண உறவு கொள்வனை, குடுப்பனை நிறைந்திருந்த ஊர்.  இளமையிலேயே பெரியாரின் கொள்கை ஈர்ப்பும், பிடிப்பும் நிறைந்த வேலு அவரது இனிய குரல் வளத்தால்பொதுக் கூட்ட மேடைகளிலும், பள்ளி நிகழ்வுகளிலும் பாடல்கள் பாடுவதில் சிறந்து விளங்கினார்.

அதுவே பின்னாளில் துணைப் புரிந்தது. 86 நாடங்களை இயற்றி மேடையேற்றம் காணவும்,  தந்தை பெரியார் கொள்கைகள்  நாடக வடிவம் பெற்றிடவும் துளியேனும் பின்வாங்காமல் செயல்பட்டார் வேலு அவர்கள்.

‘‘கலை வழியே

பகுத்தறிவை

காலமெல்லாம்

சொன்னவர்தான்

வேங்கை எனும்

வேலு அவர்கள்’’

கொள்கைநெறியோடு 107 அகவையிலும் சிறந்து விளங்கும் நாடக ரத்னாவாம், பெரியார் தொண்டறச் செம்மலை நெஞ்சில் நிலை நிறுத்திய தகைசால் தமிழர் ஆசிரியர் அய்யா அவர்கள் சென்னையில் எழுச்சி மிகு பெரியார் திடலில் செம்மாந்த நான்கு அடுக்கு மாளிகையின் ஒருபகுதிக்கு வேலுவின் பெயர் சூட்டிய பெருமை வேறு யாருக்குத்தான் வரும்.

திடலில் திரும்பும் திசைதோறும் கழகத்திற்கு உழைத்த மூத்த பெரியார் பெரும் தொண்டர்களுக்கு மூடி சூட்டு விழா கண்டவர்தான் நமது தலைவரின் அரிய செயல் – வேறு எந்தத் தலைவருக்கும் எட்டாத இமயச் சிந்தனை.

‘‘தேய்தல் வளர்தல் திங்கள் வழக்கம்

தேயாப் புகழ் செயல் எங்கள் வழக்கம்’’ என்கிற புரட்சிக் கவிஞரின் வைர வரிகள் தாங்கிய ஆசிரியர் அய்யாவின் பண்பாட்டின் மகிழ்ச்சியுறச் செய்யும் செயல்.

‘‘பெரியார் உலகமயம்

உலகம் பெரியார் மயம்.’’

என்று பெரும் புகழை உலகில் ஒவ்வொரு நாட்டிலும் நிலைத்த பெரியார் அவர்களின் புகழ் மணக்கப் பரப்புரை செய்திடும் வேளையில், இயக்கத்தின்  ஆல மரங்களுக்கு நீர் ஊற்றிடும் பணியைச் செய்யும்  அய்யா ஆசிரியர்  மறைவெய்திய துரை. சக்ரவர்த்தி, மறைந்த பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை, ஆளுமை மிக்க வேழம் ஆளவந்தார் போன்ற கண்மணிகளுக்கு பெரியார் திடல் மணக்க கட்டடங்களுக்கு பெயர் சூட்டி மகிழும் தன்மைதான் தலைவரின் மாட்சிமைக்குரிய சிறப்பு.

வாழும் பெரியார் பெருந்தொண்டர்கள் பொத்தனூர் க.சண்முகம், வீ.மு. வேலு ஆகிோரின் பெயர்களைச் சூட்டியுள்ளது மேலும் சிறப்பு ஆகும்.

நாத்திக பூமியாம் கருநாடக மாநிலத்தில் புத்தர் புகழ் பரப்பும் ஸ்பூர்த்தி தம்மா பேரமைப்பு   புத்தருக்கு அறிவை பூக்க வைத்த ‘போதி விருச்சா’ எனும் தேசிய அளவிலான உயரிய பெரும் விருதினைப் பெற்ற வணக்கத்திற்கும், மாண்புக்குரிய தலைவரின் சிந்தனை ஒட்டத்தினை என்னவென்று புகழ்ந்து மகிழ்வது.

பத்து வயதுப் பாலகனாய் மேடையேறி கொள்கை முழக்கமிட்ட தலைவர், தொண்டரை அடையாளம் கண்டு தூய மனதோடு பாராட்டுவதோடு நில்லாது, நிலைத்து செம்மாந்து காட்சியளிக்கும் மாளிகைகளுக்கு பெரியாரின் தொண்டர்களுக்கு மணி முடியாய் மகுடம் சூட்டுவதை ஒவ்வொரு தொண்டரும் எண்ணி மகிழ்வோம்.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குத் தமிழர் தலைவர் செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு.

‘‘பாடும்போது பாட்டு அழகு

ஆடும்போது மயில் அழகு

கூவும்போது குயில் அழகு

உதிக்கும் போது பரிதி அழகு

மறையும்போது இரவு அழகு

பெரியார் பெரும் தொண்டனுக்கு

தலைவர் செய்தது பேரழகு

பூமிப் பந்து என்ன விலை!

புகழைத் தந்து வாங்கும் விலை!’’

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *