தனிமைப்படும் இந்தியா ஒருமித்த உலக ஆதரவை இழந்த வெளியுறவுக் கொள்கை ஒரு பார்வை!-பாணன்

8 Min Read

காஷ்மீரில் பகல்காம் என்ற இடத்தில் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொலை செய்து ஓராண்டு ஆகிவிட்டது.

மிகவும் கொடூரமான இந்த மனிதப் படுகொலையை வார்த்தைகளால் எழுத முடியாது. இதை உண்மையில் உலக நாடுகள் கண்டித்திருக்க வேண்டும்.

இதற்கு இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்? இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் இந்தியாவில் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை உலக நாடுகளுக்கு சான்றுகளோடு சுட்டிக்காட்டி பாகிஸ்தானைத் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டே வந்தனர்.

சீனா, பாகிஸ்தானின் நட்பு நாடு வரிசையில் இருந்தாலும் நேரடியாக பாகிஸ்தானை ஆதரிக்க இயலாத சூழலை இந்தியா உருவாக்கி சீனாவுக்கும் நெருக்கடியைத் தந்தது.

ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நமது வெளியுறவுக்கொள்கை அவர்களின் சொற்ப குஜராத்தி நண்பர்களுக்கான நலனுக்கு என்று மட்டுமே மாறிவிட்டது. தனது நண்பர்களின் நலனுக்காக இந்திய வெளியுறவுக் கொள்கையை உலக நாடுகளிலேயே மோசமான ஒரு கொள்கையாக மாற்றியது.

இதன் பாதிப்பு இந்தியாவை உலக அரங்கில் தனித்து விடப்பட்ட ஒன்றாக மாற்றிவிட்டது.  இந்தியாவின் நட்பு நாடுகள் ஒவ்வொன்றாக இந்தியாவை சந்தேக நாடுகள் பட்டியலில் வைப்பது இதுவே முதல் முறை, இதுவரை உலக நாடுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நடுநிலை நட்பு நாடுகள் என்ற பட்டியலில் இடம்பிடிக்கக் காத்திருந்த நிலை போய், இந்திய நட்பு நாடுகள் பட்டியலில் இடம் பெற்றால் பதற்றமடையும் நாடுகளில் தற்போது சிறிய நாடுகள் கூட சேர்ந்துவிட்டன என்று ‘புளூம்பெர்க்’ என்ற இதழ் வெளியிடும் அளவிற்கு இந்திய வெளியுறவுக்கொள்கை நகைப்பிற்கிடமான ஒன்றாக மாறிவிட்டது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அருகில் உள்ள சில நாடுகள் ஊக்கம் அளிக்கின்றன என்று கண்கூடாகத் தெரிந்த பிறகும் உலக நாடுகளில் அதனைக் கொண்டு செல்ல முயலவில்லை, காரணம் அந்த நாடுகளில் தனது நண்பர்களின் பெரிய அளவு முதலீடுகள் உள்ளன. அழுத்தமாக கண்டனம் கூடத் தெரிவிக்க முடியவில்லை. உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயன்றாலோ நண்பர்களின் முதலீடுகளில் ஏதாவது பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற ஆதங்கத்தில் மவுனம் சாதிக்கிறது மோடி அரசு.

இந்த நிலையில் ‘புல்காம் தாக்குதல், உரி தாக்குதல், பதான் கோட் தாக்குதல் மற்றும் பகல்காம் தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களை தேர்தல் இலாபத்திற்காக மட்டுமே இந்தியா பயன்படுத்திக்கொண்டது’ என்று நாளேடுகளே தலையங்கம் எழுதும் அளவிற்கு மோசமான நடவடிக்கையாக அமைந்தது.

பகல்காம் படுகொலையும்,
அம்பலமாகும் அரசியல் நாடகங்களும்!

இந்தியாவில் நடந்த மிகவும் மோசமான தாக்குதல் என்று பட்டியலிட்டால் அது கடந்த ஆண்டு 22.04.2025 அன்று நடந்த பகல்காம் தாக்குதல்தான். பயங்கரவாதிகள் வருவார்கள், கண்மூடித்தனமாக தாக்கிவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் இம்முறை நிதானமாக ஒவ்வொருவராக தேடிச்சென்று கொலை செய்துள்ளார்கள்.

பாதுகாப்பு மிகுந்த எல்லையில் இருந்து நீண்ட தூரம் உள்ள மிகவும் பிரபலமான பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

இது தொடர்பாக உளவுத்துறையும் இவ்வாறு ஒரு தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்று  இரண்டு முறை எச்சரிக்கை அளித்த பிறகும் பாதுகாப்பு அமைப்புகள் மவுனம் சாதித்ததும் பெரும் அய்யத்தைக் கிளப்பி உள்ளது.

ஆனால் இந்த தாக்குதலுக்குப் பிறகான நடவடிக்கைகள் இந்தியாவை தலைமை ஏற்றுச்செல்லும் மோடி அரசின் படுதோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டின.  இதிலும் அரசியல் இலாபம் பார்க்க ‘ஆபரேசன் செந்தூர்’ என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

பாகிஸ்தான் – இந்தியா போர் துவங்கியது முதல் இந்தியாவின் கை ஓங்கிய நிலையில் இருந்தபோது திடீரென நமக்குத் தொடர்பே இல்லாத டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை முதல் முதலாக வெளியிடுகிறார். இது இந்திய பாதுகாப்புத்துறைக்கு மிகவும் பின்னடைவாக இன்றளவும் கருத்தப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் இதுவரை 95 முறை “நான் தான் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்” என்று கூறிக்கொண்டே இருக்கிறார். அதுவும் வர்த்தகம் என்ற துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி இந்தியாவை மிரட்டிப் பணிய வைத்தேன் என்றும் கூறி வருகிறார். ஒர் ஆண்டு ஆனபிறகும் இதுகுறித்து மோடி அரசு மறுப்புத் தெரிவிக்கவில்லை.

அதே போல் பாகிஸ்தான் தாக்குதலில் எத்தனை இந்திய விமானங்கள் தாக்கி அழிக்கப் பட்டன என்பதையும் இந்திய மக்களிடம் மறைத்து வருகின்றனர்.

இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்று இந்திய – பாகிஸ்தான் போரின் போது இந்திய விமானங்கள் தாக்கப்பட்டன என்று கூறுகிறார்கள். டிரம்பும் இந்திய விமானங்கள் அழிக்கப்பட்டன. அதற்கான அறிக்கையை எங்களிடம் வழங்கினார்கள் என்று கூறுகிறார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

ஆனால் ஒன்றிய மோடி அரசு வாயைத்திறக்காமல் ‘ஆபரேசன் சிந்தூர்’ (குங்கும நடவடிக்கை) மூலம் தேர்தல் லாபம் பார்க்கவே காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறது. ஒராண்டாகியும் பகல்காம் தாக்குதலில் இறந்த பொதுமக்கள் மற்றும் வீரர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பது மிகவும் வேதனையான உண்மை. ஆனால், இதை வைத்து கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அறுவடை செய்தார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் விமர்சனம், கேள்விக்குறியாகும் இந்தியாவின் பன்னாட்டு மதிப்பு!

உலக நாடுகளே ‘போர்க்குற்றவாளி’ என்று அறிவித்த இஸ்ரேல் பிரதமரோடு நட்புப் பாராட்டியது மட்டுமல்லாமல், மோடி, அந்த நாட்டிற்குச் சென்று ‘இஸ்ரேல் எங்களின் தந்தை நாடு’ என்று பேசிவிட்டு வந்துள்ளார். அவர்களோ மோடிக்காகவே பிரத்யேகமான விருது ஒன்றை வழங்கி அவர் மீது போலிப் பாசவலை வீசியுள்ளனர்.

மோடி இஸ்ரேல் சென்றுவந்த முதல் நாளே இஸ்ரேல் – ஈரான் மீதான தாக்குதலைத் துவங்கி விட்டது.

ஈரான் இந்தியாவின் வரலாற்று ரீதியான நட்பு நாடு. இருப்பினும் இந்தியா – ஈரான் மீதான தாக்குதலில் மவுனம் சாதித்து தனது சியோனிசப் பாசத்தைக் காட்டியது.

இதன் விளைவாக உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பு குறைந்துபோனது.

அதுமட்டுமா? டிரம்ப் ஒவ்வொரு நாளும் இந்தியாவை மிகவும் மோசமான முறையில் பேசி ‘நையாண்டி’ செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற நபர்களை இந்தியாவிற்கு அனுப்பும் போது பெண்கள் குழந்தைகள் என அனைவரது கைகால்களில் சங்கிலியைப் பூட்டி ராணுவ விமானத்தில் இந்தியா கொண்டு வந்தனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. சிறிய நாடுகள் இதே போன்று தமது குடிமக்களை அவமானப்படுத்துவதை எதிர்த்து கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல், தங்களின் விமானங்களை அனுப்பித் தம் நாட்டு மக்களை கண்ணியத்தோடு அழைத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப். பகிர்ந்த ஒரு பதிவு இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுரை, ஞாயிறு மலர்

டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளமான ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், அமெரிக்க அரசியல் வர்ணனையாளர் மைக்கேல் சாவேஜ் என்பவரின் போட்காஸ்ட்  லிங்க் ஒன்றை பகிர்வு செய்திருந்தார். அந்தப் பதிவில் இடம்பெற்ற முக்கியக் குற்றச்சாட்டுகள்:

நரகக் குழிகள்:  அமெரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமைச் சட்டங்கள் குறித்துப் பேசும்போது, இந்தியா  நாடு “நரகக் குழி” (Hellholes) என்று வர்ணித்திருந்தார்.

குடியேற்ற முறைகேடு: பல நாடுகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் ஒன்பதாவது மாதத்தில் சுற்றுலா விசாவில் அமெரிக்காவிற்கு வந்து குழந்தையைப் பெற்றெடுத்து, அதன் மூலம் ‘பிறப்புரிமை குடியுரிமை’ பெற்று, ஒட்டுமொத்த குடும்பத்தையும் அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதாகத் தரக்குறைவான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

லேப்டாப் கேங்ஸ்டர்கள்: தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பணமோசடி, போலி விசா மற்றும் பாஸ்போர்ட் தயாரித்தல் போன்ற இணையவழிச் சூதாட்டங்களில் ஈடுபடுவதாகக் கூறிக்கொண்டு இந்தியர்களைக் குறிக்க “லேப்டாப் கேங்ஸ்டர்கள்” என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். இந்திய அய்.டி. துறையின் வளர்ச்சியால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதாகக் கருதும் கோபத்தையே டிரம்ப் இவ்வாறான விமர்சனங்கள் மூலம் பிரதிபலிக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனம்!

இந்த விவகாரம் இந்தியாவில் கசிந்தவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் மவுனத்தைக் குறிவைத்து எதிர்க்கட்சிகள் கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளன.

மஹுவா மொய்த்ராவின் கேள்வி

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் (X) தளத்தில் பிரதமரை மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்: “வணக்கம் நரேந்திர மோடி அவர்களே, உங்கள் ‘நண்பர்’ டிரம்ப் இந்தியாவை ‘நரகக் குழி’ என்றும், இந்தியர்களை ‘லேப்டாப் வைத்திருக்கும் கேங்ஸ்டர்கள்’ என்றும் அழைத்திருக்கிறார். இதற்கு நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கப் போகிறீர்களா? அல்லது உங்கள் அடுத்தத் தேர்தல் பேரணிக்குச் சிரித்துக்கொண்டே செல்லப் போகிறீர்களா?” என வினவியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் விமர்சனம்!

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது ஒவ்வொரு இந்தியரின் சுயமரியாதையையும் காயப்படுத்தும் செயல்” என்று கூறியுள்ளது. “டிரம்ப் முன்னால் மோடி எதையும் பேசமாட்டார் என்பதே கடந்த கால வரலாறு. மோடி ஒரு பலவீனமானப் பிரதமர், அதன் விளைவை நாடே அனுபவிக்கிறது” என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஒன்றிய அரசின் மழுப்பலான பதில்!

பன்னாட்டளவில் இவ்வளவு பெரிய சர்ச்சை வெடித்துள்ள நிலையிலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், “நாங்கள் சில செய்திகளைப் பார்த்தோம். அவ்வளவுதான், இப்போதைக்கு இதை இத்துடன் விட்டுவிடுகிறேன்,” என்று மிகவும் சுருக்கமாகப் பதிலளித்தார். இது அரசின் பலவீனத்தையே காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் களம் மற்றும் அதன் தாக்கம்!

தற்போது மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், இந்த விவகாரம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தேர்தல் அட்டவணை: மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23இல் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் 29இல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

‘விஸ்வகுரு’ (உலகத் தலைவர்) என்ற பிம்பத்துடன் தேர்தலை அணுகிய பிரதமர் மோடிக்கு, தனது நெருங்கிய நண்பராகக் கருதப்படும் டிரம்ப் மூலமே இத்தகைய அவமரியாதை ஏற்பட்டுள்ளது எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய ஆயுதமாகக் கிடைத்துள்ளது. பன்னாட்டு அரங்கில் இந்தியாவின் பிம்பம் மற்றும் பிரதமரின் ராஜதந்திர உறவுகள் குறித்து எழுப்பப்பட்டுள்ள இந்தக் கேள்விகள், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உள்ளத்திலும் ஆணியாக குத்திக் கொண்டு இருக்கும் போது மோடி மேற்குவங்கத் தேர்தலில் மக்களைக் கவர அவர்களின் பிரபல உணவான மசாலாப்பொரி (ஜால்முரி) 10 ரூபாய்க்கு கடைக்காரரிடம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே மேற்கு வங்க முதலமைச்சரை கேலிசெய்து கொண்டு இருக்கிறார். பகல்காம் தாக்குதலின் ஓராண்டு துக்கம் அனுசரித்துக்கொண்டு இருக்கும் போது மோடி – அமித்ஷா மேற்குவங்கத் தேர்தலில் நடித்து வந்த நாடகம் எடுபடுமா?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *