‘‘சில புரட்டர்கள் வருவார்கள் என்று தெரிந்தே முன்கூட்டியே செய்த அருமையான முயற்சி!’’

5 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

‘MISA MARK’ ஆவணப்படம் – ‘மிசா வடுக்கள்’ நூல்:
நேற்றைக்கு முளைத்த காளான்களுக்கு இது தெரியாது!

நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

ஆசிரியர் உரை

சென்னை, செப். 26 ‘‘மிசா’வில் நாங்கள் பெற்றது வடுக்கள் அல்ல; வலிகள். இன்றைக்கும் அது நீடிக்கிறது’’ என்றும், ‘‘திராவிடர் கழகத்துக்காரர்கள் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார்கள்’’ என்றும், ‘‘சூரியன் நிரந்தரம்! கிரகணம் தற்காலிகம்’’ என்றும், ‘‘தியாகத்தால் புடம் போடப்பட்டது திராவிடர் இயக்கம்’’ என்றும், திராவிடர் இயக்கத்தில் ஆவணப்படுத்தாத ஆவ ணங்கள் ஆயிரம். அதில் மிசா ஒரு சிறு துளிதான்” என்றும், ‘மிசா வடுக்கள்’ நூல் மற்றும் ‘மிசா மார்க்’ ஆவணப்படம் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நேற்றைக்கு பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான்களுக்கு நடத்திய வரலாற்றுப் பாடம்.

நிகழ்வில் திருச்சி சிவா எம்.பி., தோழர் பாலகிருஷ்ணன், தோழர் தியாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரை யாற்றினார்.

ஆதவன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், வடபழனியில் உள்ள பிரசாத் கலர் லேப்பின், சிறு திரையரங்கில் நேற்று (25.09.2026) மாலை 6 மணிக்கு, ‘மிசா’ மார்க்’ ஆவணப்படம் மற்றும், ‘மிசா வடுக்கள்’ நூல் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

‘‘மிசா வடுக்கள்”
நூல் வெளியீடு

நிகழ்வில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘மிசா வடுக்கள்” நூலை வெளியிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் மாநிலச் செயலாளர்  பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஆவணப்படத்தின் இயக்குநர் மற்றும் தொகுப்பு நூலின் ஆசிரியர் சிறீதரன் அனைவரையும் நெகிழ்வு ரையுடன் வரவேற்று சிறப்பித்தார்.

தொடர்ந்து, தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, பலத்த கைதட்டல்களுக்கிடையே பொன்னாடை போர்த்தியும், சந்தன மாலை அணிவித்தும், நினைவுச்சின்னம் வழங்கியும் சிறப்பித்தார். தொடர்ந்து, பூச்சி முருகன் அவர்களால், மேடையில் வீற்றிருந்த ஆளுமைகளுக்கும் அதே மரியாதை செய்யப்பட்டது.

பங்கேற்றோர்

நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், தி.மு.க.செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான திருச்சி சிவா ஆகியோர் உரையாற்றினர். தோழர் கிரிஜா நிகழ்ச்சியை தொகுத்து நெறிப்படுத்தினார். திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோ.மா.இராமச்சந்திரன், ஓவியர் டிராட்ஸ்க்கி மருது, மேனாள் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதன், பொறியாளர் த.கு.திவாகரன், இரா.கிரிராஜன் எம்.பி., முனைவர் அதிரடி க.அன்பழகன், கவிஞர் முத்து வாவாசி, வழக்குரைஞர் செ.துரைசாமி, ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம் உள்ளிட் டோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்த னர். தோழர் பால கிருஷ்ணன் அவர்க ளுக்கு அடுத்து, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தமது உரையை, மிசா கொடுமைகள் பற்றி வெளியிடப்பட்ட, ‘மிசா மார்க்’ ஆவ ணப்படத்தைக் குறிப்பிட்டு, “சில புரட்டர்கள் வருவார்கள் என்று தெரிந்தே முன்கூட்டியே செய்த அருமையான முயற்சி” என்று எழுச்சியுடனும், பலமான கைதட்டல்களுடனும் தொடங்கினார். தொடர்ந்து, ஆவணப்படத்தின் இயக்குநர் சிறீதரன் அவர்களைப் பாராட்டுகையில், “இயக்குநர் சிறீதரன் பாரம்பரியமான சுயமரியாதைக் குடும்பத்தைச் சார்ந்தவர்” என்றார். மேடையில் வீற்றிருந்த சிறீதரன் அந்த அங்கீகாரத்தில் நெகிழ்ந்து ஆசிரியருக்கு வணக்கம் வைத்தார். மேலும் பேசிய ஆசிரியர் அவர்கள், “திராவிடர் இயக்கம் என்பது தியாகத்தால் புடம் போடப்பட்டது. அதை ஒருபோதும் நாங்கள் விலை பேசியதில்லை. தம்பட்டம் அடித்துக்கொண்டதும் இல்லை” என்பதை தன்னடக்கத்துடன் சொல்லி, இன்றைக்கு தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சிலரைச் சரியாகப் படம் பிடித்துக்காட்டினார். திராவிடர் இயக்கத்தின் தியாகம் எப்படிப்பட்டது என்பதை, 1938 ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில், ‘தாளமுத்து’, ‘நடராசன்’ முதல், 1957 இல் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி. அடுத்தது 1976 மிசா காலத்தில், என்று வரிசையாக அடுக்கிக்காட்டி, “ஆவணப்படுத்தப்படாத ஆவணங்கள் திராவிடர் இயக்கத்திற்கு ஆயிரம் உண்டு. அதில் ’மிசா’ ஒரு சிறு துளி” என்று சுட்டிக்காட்டி, கடல் போல் இருக்கும் திராவிடர் இயக்கத்தின் ஆவணங்களை சொல்லாமல் சொல்லி வியக்க வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்றைக்கு சிலர் இமயமலையையே இல்லை என்று சொல்கிறார்கள்? தாஜ்மகாலைக் கட்டவே இல்லை என்றும் கூறுகிறார்கள்?” என்று வஞ்சப்புகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களை எள்ளி நகையாடிவிட்டு, ‘‘திராவிடர் கழகத்துக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அது பல பேருக்குப் பிடிக்காத பழக்கம். அதுதான் உண்மையைச் சொல்வது! ஆதாரங்கள் இல்லாமல் பேச மறுப்பது” என்று திராவிடர் இயக்கத்தின் வியக்க வைக்கும், அரிய உண்மையை எடுத்துக்காட்டி வியக்க வைத்தார். மேலும் அவர், ‘மிசா வடுக்கள்’ என்பதை சுட்டிக்காட்டி, “எங்களுக்கு ஏற்பட்டவை வடுக்கள் அல்ல, வலிகள்” என்றார். அதை விவரிப்பதற்காக, ‘‘ஆற்காடு வீராசாமியைப் போல, என்னைப்போல உள்ளவர்கள் இன்றைக்கும், அன்றைக்கு நடந்த தாக்கு தல்களால் வலிகளை அனுபவித்து வரு கிறோம்” என்று மிசா கொடுமைகளால் ஏற்பட்டது தழும்புகள் அல்ல, புத்தம் புதிதாகத் தொடரும் வலிகள் என்ற அதிர்ச்சியூட்டும், இதுவரை வெளிவராத செய்தியை போட்டுடைத்தார். அதற்கேற்ப அவர், ‘உண்மை ஒருநாள் வெளியாகும். அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்’  என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகளை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து, “வரலாற்றில் ஸ்டாலின் என்றைக்கும் ஸ்டாலினாகவே திகழ்வார். உண்மை உண்மைகளாகவே இருக்கும். ஒப்பனைகள் ஒருநாள் கலைந்துபோகும்” என்றும், “நேற்றைக்கு பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான்களுக்கு இது தெரியாது” என்றும், புரட்டர்களைச் சாடினார். மிசாவில் சிறைப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் அரிபட், விடுதலை என்.எஸ்.சம்பந்தம், சி.சிட்டிபாபு, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மிசாவில் சந்தித்த கொடுமைகளைப்பற்றி நினைவுகூர்ந்து பேசினார். தொடர்ந்து, மிசா காலக் கொடுமைகள் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் அவர்களுக்கு கழகத் தலைவர் நன்றி சொல்லத் தவறவில்லை. நிறைவாக, ”சூரியன் நிரந்தரம்! கிரகணம் தற்காலிகம்!” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையில் தமது உரையை நிறைவு செய்து, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

அடுத்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிறைவாக, ஆவணப்படத்தில் நடித்த தி.மு.க. தோழர்களுக்கு, ஆவணப்படத்தின் இயக்குநர் சிறீதரன் ஒருங்கிணைப்பில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நினைவுப் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, மகேஷ், அரும்பாக்கம் சா.தாமோதரன், தென்சென்னை பகுத்தறிவாளர் கழகத் தோழர் மு.இரா.மாணிக்கம், அருள், திராவிட மாணவர் கழகத் தோழர் நிலவன், பிரசாந்த், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை மற்றும் இயக்கத் தோழர்கள், ஏராளமான ஊடகவியலாளர்கள், அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள், திரைக் கலைஞர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறையும் வண்ணம் இறுதி வரையிலும் காத்திருந்து, பேசப்பட்ட உரைகளை கேட்டுக் கலைந்து சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *