தஞ்சாவூர், செப். 23– தென் கொரியாவில் உள்ள கார் உதிரிப்பாகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட மனிதவடிவிலான ரோபோ மோதி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்துள்ள கண்ணுகுடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சுதர்சன் (33). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தென் கொரியாவில் உள்ள சியோரா நகரில் இயங்கி வரும் கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், 19.9.2026 அன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தொழிற்சாலையில் ஏஅய் மூலம் இயங்கும் மனித ரோபோ ஒன்று கட்டளை எல்லைக்குள் இருந்த சுதர்சனின் மார்புப் பகுதியை பலமாக தாக்கியது. இதனால் மார்புப் பகுதி முழுமையாக நசுங்கி இதயத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்
இக்கோர நிகழ்வு குறித்துத் தகவலறிந்த தென் கொரியத் தமிழ் சங்கத்தினர், சுதர்சனின் உடலைக் கைப்பற்றி அவரது சொந்த ஊரான ஒரத்தநாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
உயிரிழந்த சுதர்சனுக்குக் கடந்த வாரம் தான் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், வாலிபர் வெளிநாட்டில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிகழ்வு அவரது குடும்பத்தினரிடையேயும், கிராம மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘எல்நினோ’ பாதிப்பு: அறிவியல் ரீதியான முன் நடவடிக்கை தேவை!
தமிழ்நாடு அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
சென்னை, செப். 23- ‘எல்நினோ’ எனும் காலநிலை மாற்ற நிகழ்வால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, அறிவியல் அடிப்படையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நிபுணர் குழு அமைத்தது.
இந்தக் குழு தனது முதல்கட்ட பரிந்துரைகளை தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது. அதில் ‘எல்நினோவை வறட்சியுடன் மட்டும் தொடர்புபடுத்தாமல், கனமழை, வெள்ளம், புயல் மற்றும் கடும் வெப்பம் உட்பட பல்வேறு பேரிடர்களை கருத்தில் கொண்டு தயார்நிலை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழைக்கு முன் ஆறுகள், கால்வாய்கள், குளங்களை தூர்வார வேண்டும். நிவாரண மய்யங்களை அமைத்து, அவசரகால தொடர்பு, எச்சரிக்கை தகவல்களை காட்சிப்படுத்த வேண்டும்’ உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
