விருதை வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுரை!

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

முத்தமிழறிஞர் கலைஞரின் ‘‘இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்’’ புத்தக அறிமுக விழா
எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்களுக்குத்
“திராவிட வரலாறு – பண்பாட்டு ஆய்வறிஞர் விருது!”

சென்னை, செப் 22. திராவிட இயக்கச் சிந்தனையாளரும், நாடறிந்த எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு அவர்களுக்கு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “திராவிட வரலாறு – பண்பாட்டு ஆய்வறிஞர் விருது” வழங்கி, “திருநாவுக்கரசர், ‘நடமாடும் திராவிட இயக்க ஆவணம்!’ என்று பாராட்டி, அதற்கான காரணங்களையும் சுட்டிக் காட்டி, உரையாற்றினார்.

திராவிடர் கழகம் – புதுமை இலக்கியத் தென்றல் இரண்டு அமைப்புகளும் இணைந்து, முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய “இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்!” நூல் அறிமுக விழாவையும், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவையும் இணைத்து, 21.09.2026  அன்று, மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பலத்த மழை காரணமாக சற்று தாமதமாக  7:30 மணிக்கு தொடங்கியது. நிகழ்வில், ‘புதுமை இலக்கிய தென்றல்’ அமைப்பின் தலைவர் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், விருது பெறும் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்களைப் பற்றிய ஆழமான அறிமுக உரையை வழங்கினார். தி.மு.க. மாநில மருத்துவரணிச் செயலாளர் மருத்துவர் நா.எழிலன் நூலை பெற்றுக்கொண்டு, அந்நூலை ஆழமாக அறிமுகம் செய்து உரையாற்றினார். திராவிடர் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிச் சிறப்பித்தார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடன் நலநிதி இயக்குனர் சீதாராமன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய  இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, முனைவர் த.கு.திவாகரன், கவிஞர் கண்மதியன், வா.மு.சே. திருவள்ளுவர், முனைவர் அதிரடி க.அன்பழகன், வெற்றிச்செல்வி, புலவர் வெற்றி யழகன், ஊடகவியலாளர்கள் தேரடி இந்திரகுமார், சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஏற்று சிறப்பித்திருந்த திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மேடையில் வீற்றிருந்த பெருமக்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, முத்தமிழறிஞரின் “இனமான காத்த ஏந்தல் தந்தை பெரியார்” நூலை, ஒன்றிய அரசின் மேனாள்  அமைச்சரும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான, திருமிகு ஜெகத்ரட்சகன் அவர்கள் வெளியிட, தி.மு.க. மருத்துவர் அணியின் மாநிலச் செய லாளர் – மருத்துவர் நா.எழிலன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, தோழர்கள் மற்றும் பார்வையாளர்கள் உரிய தொகை கொடுத்து மேடையில் அப்புத்தகத்தை பெற்றுக் கொண் டனர். அடுத்து, விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  விருது பெறும் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு பற்றிய அறிமுகக் குறிப்பை, திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன்  வாசித்தார். அதைத் தொடர்ந்து, கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், க.திருநாவுக்கரசு அவர்களுக்கு, பலத்த கைதட்டல்களுக்கிடையே, “திராவிட வரலாறு – பண்பாட்டு ஆய்வறிஞர் விருது” நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார். நூலை வெளியிட்டுச் சிறப்பித்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜெகத்ரட்சகன் அவர்கள், நூலாசிரியர், விடுதலை ஆசிரியர் மற்றும் திராவிட இயக்கம், அதன் தலைவர்கள், அவர்கள் செய்திருக்கும் சாதனைகள் ஆகியவை பற்றி கவித்துவ நடையில் உரையாற்றினார். நிறைவாக, நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றும், விருது வழங்கியும், சிறப்பித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவர் தமது உரையில், ‘தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்கள் இலக்கியவாதிகள் அல்லர்’ என்று தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்துப் பேசினார். விருது பெற்றிருக்கும் திராவிட இயக்க சிந்தனையாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு அவர்களை, “புரட்சி எழுத் தாளர்” என்றும், “85 வயது நிறைந்த இளைஞர்” என்றும், “தான் கைக்கொண்டு இருக்கும் சுயமரியாதைக்காக, எவருக்கும் எதற்கும் சமரசம் செய்து கொள்ளாதவர்” என்றும் பாராட்டினார். முத்தமிழறிஞர் கலைஞரின் “இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்” புத்தகத்தை வெளியிட்டு பேசிய, திருமிகு ஜெகத்ரட்சகன் அவர்களை, “கல்வித் தொண்டு; தமிழ்த்தொண்டு; திராவிடத் தொண்டு செய்யக் கூடியவர்” என்றும் பாராட்டிப் பேசினார்.

ஞான ராஜசேகரன் அய்ஏஎஸ்  இயக்கி, நாத்திக நன்னெறிச் செம்மல் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த, “பெரியார்” திரைப்படம், சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. விருதை வழங்கியவர் அன்றைய ஒன்றிய அரசின் இணை அமைச்சராக இருந்த திருமிகு ஜெகத்ரட்சகன் எம்.பி. அவர்கள் தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் கலைஞர் எழுதியுள்ள  நூலை வெளியிடுவதற்கு அவரை அழைத்தோம்” என்றும் குறிப்பிட்டார். மீண்டும், விருது பெற்ற திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்களை பற்றி குறிப்பிடும்போது, “நடமாடும் திராவிட இயக்க ஆவணம்” என்றும், “எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் தனது கடமையைச் செய்யக்கூடியவர்” என்றும், பாராட்டி உரையை நிறைவு செய்தார். இறுதியாக தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில், சிற்றரசு திருநாவுக்கரசு, தளபதி பாண்டியன், அதிரடி அன்பழகன், தாம்பரம் நாத்திகன், மோகன்ராஜ், க.குணசேகரன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே.பாண்டு, ஜெயராமன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன்,  துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன்,பொறியாளர் தகு. திவாகரன், கவிஞர் கண்மதியன்,  இளவழகன், வை.கலையரசன்,கவி.முத்தழகன், அரும்பாக்கம் தாமோதரன், தங்கமணி – தனலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் வருகை தந்து நிகழ்ச் சியை கண்டும் கேட்டும் பயன் பெற்றனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்திருந் தாலும், திட்டமிட்டபடி நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *