மதுரை, செப். 22- தமிழ் நாட்டில் கள் இறக்கவும், விற்கவும் அனுமதி அளிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ‘கள்’ விற்பனை முறைப்படுத்தப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழ்நாட்டிலும் ‘கள்’ இறக்கவும், விற்பனை செய்யவும் அரசு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அரசு தாக்கல் செய்த
பிரமாணப் பத்திரம்
பிரமாணப் பத்திரம்
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசார ணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை செயலர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
‘கள்’ தடை உறுதி: தமிழ்நாட்டில் ‘கள்’ இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து 2007, டிசம்பர் 19 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ஏற்கெனவே நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தடையை நீக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை.
மாற்று அனுமதிகள்
தமிழ்நாட்டில் ‘கள்’ளுக்கு அனுமதி கிடையாது என்றாலும், புளிக்காத நீரா மற்றும் பதநீர் தயாரிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
பனை மரங்கள் பாதுகாப்பு
பனை மரங்களை அரசு பராமரிப்ப தில்லை என்ற மனுதாரரின் குற்றச்சாட்டு தவறானது. கடலோர மாவட்டங்களில் ‘மீன் முள் முறை’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 120 ஹெக்டேர் பரப்பளவில் பனைக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பனை மரங்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதால் அவை அழிய வாய்ப்பில்லை.
எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை மற்றொரு தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
