மதவாதமும், இனப்பாகுபாடும்

இணையவழி கையெழுத்து இயக்கம்

மூத்த வழக்குரைஞரும், அரசியல் அரங்கில் பிரபலமான எழுத்தாளருமான ஏ.ஜி.நூராணி நினைவு நிகழ்வு அண்மையில் தலைநகர் டில்லியில் நடைபெற்றது. அதில் பேசிய மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகளை 2019-ஆம் ஆண்டு ஏ.ஜி. நூராணி எழுதிய ‘தி ஆர்.எஸ்.எஸ்: ஏ மெனஸ் டூ இந்தியா’  புத்தகத்தின் முகவுரையில் இரண்டே வரிகளில் எழுதியுள்ளார். அது தற்கால இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் உணர்வுகளையும் மனநிலையையும் மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படி என்ன சொன்னார் நேரு? அன்றைய வெளியுறவுச் செயலாளராக இருந்த ஒய்.டி. குண்டேவியா பதிவு செய்த அந்த உரையில், “இந்தியாவிற்கு வரவிருக்கும் உண்மையான ஆபத்து சோசலிசவாதிகளாலோ, கம்யூனிஸ்டுகளாலோ ஏற்படப் போவதில்லை; மாறாக வலதுசாரி ஹிந்து மதவாதமே இந்தியாவிற்குப் பேராபத்தாகும்” என்று நேரு திட்டவட்டமாகக் கூறியிருந்திருக்கிறார். இதைத் தான் இப்போது எடுத்துக் காட்டியுள்ளார் இந்தியக் குடியரசின் மேனாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி!

உலகெங்கும் ஆட்சியாளர்கள் ‘கம்யூனிச பூதம்’ என்று அச்சத்தை ஊட்டிக் கொண்டிருந்த காலத்தில், இந்தியாவில் மதவாதம் தான் ஆபத்து என்று நேரு அடையாளம் கண்டிருக்கிறாரென்றால், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து, எல்லாவற்றுக்கும் ஏன் நேருவைக் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியாவின் சிறப்பு என்பது, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று அந்தக் காலத்து அரசுகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பிரச்சாரம் செய்துகொண்டே இருப்பார்கள். அதை இப்போதெல்லாம் அதிகம் கேட்டிருக்க முடியாது. பன்மைத்துவம் என்பதையே ‘தேச விரோதம்’ என்பதுபோல பா.ஜ.க. கட்டமைக்க விரும்புகிறது. எல்லாவற்றுக்கும் ஒற்றை அடையாளத்தை, ஒற்றைத் தன்மையைக் கொடுப்பதே ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம்! இதை நோக்கி இந்தியாவைக் கொண்டு செல்வதற்கான வழிமுறையாக இன ஒடுக்குதல் பல வகைகளில் நடைபெற்றுவருகிறது.

இந்தச் சூழலை அண்மையில் (கடந்த ஆகஸ்ட் 25 அன்று) வெளியாகியுள்ள அய்க்கிய நாடுகள் அவையின் இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழுவின் இந்தியா குறித்து அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2007-க்குப் பிறகு இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான அய்.நா. குழு (CERD) நடத்திய முதல் ஆய்வில், சிறுபான்மை இன மற்றும் இன-மதக் குழுக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் குடியுரிமை பெறாதவர்கள் மீது பல ஆண்டுகளாக அரசு அமைப்புகள், உடல் ரீதியாகவும், பிற வகையிலும் வன்முறைகளைக் கையாள்வது குறித்த புகார்கள் குறித்து “கடுமையான கவலையை” வெளிப்படுத்தியுள்ளது. 1968 இல் ‘அனைத்து வகையான இனப் பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான பன்னாட்டு உடன்படிக்கையை’ ஏற்றுக்கொண்ட இந்தியா, இத்தகைய வன்முறைப் புகார்கள் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள், நடவடிக்கைகள் குறித்த விரிவான, அண்மைக் காலத்துத் தகவல்களை வழங்கவில்லை என்பதையும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கழிவுநீர் பாதைகளை மனிதர்களே சுத்தம் செய்வதைத் தடை செய்யும் சட்டம் இருந்தும் அச்செயல் தொடர்தல், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, அவர்களின் மோசமான வாழ்க்கைச் சூழல் மற்றும் அவர்களைத் திரளாகத் திருப்பி அனுப்புதல், தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) மூலம் பெருமளவிலான மக்கள் குடியுரிமை இழப்பு; வாக்காளர் பட்டியலின் சிறப்புத் திருத்தங்களின்போது பெருமளவிலான பெயர்கள் நீக்கப்படுதல்,  சமூக அமைப்புகளின் பணிகளை முடக்க எஃப்.சி.ஆர்.ஏ., யு.ஏ.பி.ஏ., மற்றும் பி.எம்..எல்.ஏ. போன்ற சட்டக் கருவிகளை அரசு பயன்படுத்துதல், இனவெறி சார்ந்த வெறுப்புப் பேச்சைக் குற்றமாக ‘பாரதிய நியாய சன்ஹிதா’ வெளிப்படையாக வரையறுக்காதது, ‘வனப் பாதுகாப்புத் திருத்தச் சட்டம்’ மூலம் “தேசியப் பாதுகாப்பு” சார்ந்த திட்டங்களுக்குக் கலந்தாலோசனை அடிப்படையிலான முடிவெடுக்கும் நடைமுறையிலிருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளை இந்த அறிக்கை கவனப்படுத்தியுள்ளது.

(இந்த இனப் பாகுபாடுகளில் ஒன்றாக ஜாதியைச் சேர்ப்பதற்கு இந்திய அரசு மறுப்பது தனி விவகாரமாகும்) இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் ஜாதி, மத ரீதியாகத் தொடர்ந்து பாகுபாடுகளை வளர்த்துக் கொண்டிருப்பதும் அண்மைக்காலத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மதவாதமும், இனப்பாகுபாடுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை. ஒன்றுக்கு மற்றொன்று காரணமானவை.

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் பல்வேறு வகையான பாகுபாடுகளை இயல்பானதாக மாற்ற நினைக்கும் பா.ஜ.க., அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல், சட்ட  ரீதியான எதிர்ப்பைத் தொடர்வதும், பன்முகத் தளங்களில் செயல்படும் இயக்கங்கள் இதில் கவனம் செலுத்துவதும் முக்கியம் ஆகும்.

இந்தியாவைக் காப்பதென்பது அதன் மக்களைக் காப்பதுதானே!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *