கொழும்பு, செப்.19 ‘‘எங்கள் காணிகள் எமக்கு வேண்டும்…. காணிகளை விடுவிக்கும் வரை ஓயமாட்டோம்… போராடுவோம், போராடுவோம் உயிருள்ளவரை போராடுவோம்…”
இவ்வாறான முழக்கங்கள் கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் வடக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் வாரந்தோறும் கேட்கும் வழக்கமாகி உள்ளன.
யாழ்ப்பாணத்தின் முக்கிய கடற்கரைச் சாலையான பொன்னாலை – பருத்தித் துறை வீதியிலுள்ள மயிலிட்டி, பலாலி ஆகிய பகுதிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களால் பரபரப்பாக மாறியுள்ளன. தற்போது பலாலியின் அயல் கிராமமான வயாவிளான் பகுதி மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
போராட்டங்களின் பின்புலம் என்ன?
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. போர் முடிவுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் இடம் பெயர்ந்திருந்த தமிழ் மக்கள் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். பல கட்டங்களாக ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த பொது மக்களின் காணிகள் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தச் செயற்பாடு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்குப் பகுதியில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமது வீடுகளையும், விவசாய நிலங்களையும், பொது இடங்களையும் அணுக முடியாத நிலையில் உள்ளனர். இந்த நீண்டகாலப் பிரச்சினை தற்போது மீண்டும் தீவிரமான மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
1990இல் தொடங்கிய இடப்பெயர்வு
வலிகாமம் வடக்கின் பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் 1990ஆம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களால் தமது வீடுகளையும் காணிகளையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்தப் பகுதியே முதன் முதலில் இடப்பெயர்வை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. மக்கள் வெளியேறிய பின்னர் இந்தப் பகுதிகள் ராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வளையமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அவர்களின் வீடுகள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், கோயில்கள் மற்றும் பிற சொத்துகள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னரும், பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி இந்தப் பகுதிகளில் அநேகமானவை தொடர்ந்து பொது மக்கள் அணுக முடியாதவையாகவே இருந்தன.
கடந்த 2018 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சுமார் 900 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாக அப்போதிருந்த அரசுகளால் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 2025 மே மாதம் யாழ்ப்பாணத்தில் 40.70 ஏக்கர் காணிகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன. இதில் தற்போது மக்கள் போராடும் வயாவிளான் பகுதிக்கு உரிய 20 ஏக்கர் நிலமும் அடங்கும். அத்துடன் யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் 35 ஆண்டுகளாக ராணுவத் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த வயாவிளான் தொடக்கம் பலாலி வரையான பகுதி மக்கள் பாவனைக்காக 2025 ஏப்ரலில் திறந்துவிடப்பட்டது.
வலிகாமம் வடக்கில் மட்டும் இன்னும் விடுவிக்கப்படாத சுமார் 2,500 ஏக்கர் காணிகளுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் வெளிநாடுகளிலும் சிதறுண்டு வாழ்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு நினைவுகளும் கனவுகளும் ஆசைகளும் கதைகளும் இருக்கின்றன.
சொந்த வீடின்றி
‘‘கடந்த 36 ஆண்டுகளாக, இருப்பதற்குச் சொந்த வீடின்றி இன்று வரை அகதிகளாகவே ஊர் ஊராக அலைந்து தற்காலிக இடங்களில் வாழ்கிறோம். இடப்பெயர்வுக்குப் பிறகு பிறந்த எமது பிள்ளைகளுக்கு எமது காணிகள் தெரியாது. நாம் உயிருடன் இருக்கும்போது அவற்றை விடுவித்தாலேயே எமது பிள்ளைகளுக்கு காணிகளை அடையாளம் காட்டிவிட்டுச் செல்ல முடியும்,” என்கிறார் மயிலிட்டி போராட்டக் களத்தில் இருந்த அன்ரன் பிரேமலதா.
அத்துடன், “எமக்கு நிலம் மட்டுமல்ல, கோயிலும் சுடுகாடும் முக்கியம். எமது இறப்புக்குப் பிறகு சொந்தக் கிராமத்திலேயே இறுதி மரியாதை செய்யப்பட வேண்டுமென விரும்புகிறோம்” என்றார் அவர். பலாலியை பூர்வீகமாகக் கொண்ட செல்வராஜா சுதாகர், தனது 9ஆவது வயதில் பூர்வீக நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தபோது, தனது நினைவுகளில் தேங்கியுள்ள எண்ணங்கள் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.
சொந்த வீடு காணியுடன், விவசாயம், கடை வியாபாரம் என வசதியான மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகவும், தற்போது கடந்த 36 ஆண்டுகளாக அகதிகள் என்ற அடைமொழியுடன், வீடற்றவர்களாக இருப்பதாகவும், இடப் பெயர்வால் சொந்த நிலம் வீடற்ற தனது உறவினர்கள் நண்பர்கள் பலர், இதனாலேயே இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
