வித்தைகளால் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியுமா?

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவில், ராஜஸ்தானில் பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது; அபார வெற்றி பெற்றுள்ளது’ என பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.விற்குப் பெரும்  அடி கிடைத்திருப்பதும், வெற்றி பெற்றதாகச் சொல்லப்படும் இடங்களிலும் வழக்கமான பா.ஜ.க.வின் தேர்தல் சித்து விளை யாட்டுகள் பின்னணியில் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

தேர்தல் நடைபெற்ற 10 மாநகராட்சிகள், 51 நகராட்சிகள், 248 நகர பஞ்சாயத்துகள் ஆக மொத்தம் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 148 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 104 அமைப்புகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 10 உள்ளாட்சி அமைப்புகள் தொங்கு நிலையில் உள்ளன. சிபிஎம், ஆம்ஆத்மி மற்றும் சுயேச்சைகள் 47 அமைப்புகளில் பெரும்பான்மை பெற்றுள்ளன.

மாநகராட்சி முடிவுகளில் ஜெய்ப்பூர், உதய்பூர், கோட்டா, பில்வாரா உள்ளிட்ட 4 மாநகராட்சிகளில் மட்டுமே பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. பிகானேர், அஜ்மீர், பாலி ஆகிய 3 மாநகராட்சிகளில் காங்கிரஸ் அதிக வார்டுகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஜோத்பூரில் பா.ஜ.க. – காங்கிரஸ் (44-44) சமநிலையில் உள்ளன.

மொத்தமுள்ள 309 உள்ளாட்சி அமைப்புகளில், அம் மாநிலத்தை ஆளும் பாஜக 35.18 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 34.24 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. இரு கட்சிகளுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 0.94 சதவீத வாக்குகள் மட்டுமே ஆகும்.

இந்த 0.94 சதவீதவாக்குகள் (99,615 வாக்குகள்) வித்தியாசத்தில் பாஜக 4,179 வார்டுகளை வென்றுள்ளது. காங்கிரஸ் 3,613 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. 27.38 சதவீத வாக்குகளைப் பெற்று சுயேச்சை வேட்பாளர்களும் (2,273 வார்டுகள்) குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக, பா.ஜ.க. முதலமைச்சர் பஜன் லால் ஷர்மாவின் சொந்த நகரமான பரத்பூரில் ஓர் அசாதாரணமான முடிவு வெளியானது: மொத்தம் உள்ள 65 வார்டுகளில் சுயேச்சைகள் 36-இல் வெற்றி பெற்றனர்; அதே சமயம் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன.

ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தாலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவு அக்கட்சிக்குக் கிடைத்த  பலத்த அடியே ஆகும். எதிர்பார்த்த அளவில் மாநகராட்சி, நகராட்சிகளை பா.ஜ.க.வால் கைப்பற்ற முடியவில்லை. இதனால் காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, குதிரை பேரம் மூலம் மாநகராட்சி, நகராட்சிகளில்  அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த சிறிய வெற்றிகளின் பின்னணியிலும் பா.ஜ.க.வின் தொகுதி மறுவரைக் கணக்குகள் இருப்பதைக் காங்கிரஸ் கட்சி வெளிக் கொண்டுவந்துள்ளது. மறுவரையறை செயல்முறை நியாயமற்ற முறையில் இருந்ததாகவும், அதனால் காங்கிரஸ் சுமார் 1,500 வார்டுகளை இழந்ததாகவும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் டோடாஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க.வின் ஒட்டுமொத்த வாக்கு சதவீத முன்னிலை ஒரு சதவீதப் புள்ளிக்கும் குறைவாகவே இருந்ததாகவும், எனவே பாஜகவின் அதிகப்படியான வார்டு வெற்றிகளுக்குத் தொகுதிகள் அமைக்கப்பட்ட விதமும் ஒரு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, காங்கிரசுக்குச் செல்வாக்குள்ள வாக்குகள் சில தொகுதிகளுக்குள் முடக்கப்பட்டும், பா.ஜ.க.வின் வாக்குகள் பரவலாகப் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் வார்டுகளைத் திட்டமிட்டும் பிரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டுகிறார். எடுத்துக் காட்டாக, ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் கோட்டா ஆகிய இடங்களில், பாஜகவை விட காங்கிரஸே ஒட்டுமொத்தமாகச் சற்று அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது (காங்கிரஸ்: 10,34,999; பாஜக: 10,19,160). ஆனால் வார்டுகளைப் பொறுத்தவரை, காங்கிரஸ் 140 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக 180 இடங்களில் வெற்றி பெற்றது.  பா.ஜ.க.வும் – அம்மாநிலத் தேர்தல் ஆணையமும் இணைந்து இச் செயலில் இறங்கியிருந்தால் மட்டுமே, இத்தகைய தொகுதி பிரிப்புகளைக் கச்சிதமாக மேற்கொள்ள முடியும். தொகுதி மறுவரையறையும், ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்குகளின் செறிவாகவோ, பரவலாகவோ இருப்பதும் மொத்த வாக்கு எண்ணிக்கைக்கும், இடங்களின் வெற்றி எண்ணிக்கைக்கும் பெருத்த மாறுபாட்டையும், எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கும் ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டாக விளக்குகின்றன.

தொகுதிகள் மறுவரையறை, வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கைகள், சிறப்புத் திருத்தங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்று அந்தந்த சூழ்நிலைகளுக்குத் தகுந்த விதம்விதமான வித்தைகள், ஜாலங்கள், வளைப்புகள், திரிப்புகள் மூலமே பா.ஜ.க. அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையே இந்தத்  தேர்தலும் காட்டுகிறது. அதையும் தாண்டி, ஓட்டுக் கணக்குகள் மாறிப்போனால், வெற்றி பெற்றவர்களையே மொத்தமாக வளைத்தல், கட்சிகளைக் களைத்தல், புதிதாக உருவாக்குதல், பழைய கட்சியை விலைக்கு வாங்கி புதிய தலைவர்களை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தின் சந்து பொந்துகளில் புகுந்து வெளிவந்து கொண்டிருக்கிறது பா.ஜ.க! வாக்குகளையும், தேர்தலையும் புள்ளியியல் கணக்கீடு களால் வகுத்துப் பகுத்து, அந்தவெற்றிகளைப் பெறுவதற்கான வெவ்வேறு உத்திகளை அரசு ரீதியாகத் தயார் செய்து வைப்பதே பா.ஜ.க.வின் வெற்றி உத்தி.

இவை எல்லாவற்றுக்கும் மத்தியில், ராஜஸ்தானில் பா.ஜ.க.வின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்திருப்பதை இந்த முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தனை வித்தைகள் இல்லாவிட்டால் பா.ஜ.க.வால் வெற்றிகளைத் தக்க வைக்க முடியாது என்பதை, தொடர்ந்து நடந்து வரும் பல்வேறு தேர்தல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையம் சரிவர இயங்கினால், பா.ஜ.க., விரைவில் மூட்டை கட்ட வேண்டிவரும். எல்லா நேரங்களிலும் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது அல்லவா?

“கயிறு எவ்வளவுதான் சுருண்டாலும், அதற்கு ஒரு முடிவு உண்டு” என்றொரு ரஷ்யப் பழமொழி உண்டு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *