திருமணச் சட்டங்களில் காலத்திற்கேற்ற திருத்தங்கள் தேவை

4 Min Read

சடங்குகள் இல்லாத இந்து திருமணம் செல்லாதாம். இந்துத் திருமணச் சட்டத்தின்படி, வெறும் பதிவோ அல்லது கொண்டாட்டங்களோ மட்டும் ஒரு திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கி விடாது என்றும், வழக்கமான சடங்குகள் முறைப்படி நடந்தால் மட்டுமே அந்தத் திருமணம் சட்டப்படி செல்லும் என்றும் குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த கவுஷால் சோனார் என்பவருக்கும், குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது.  ஆனால், தங்களுக்குள் இந்து முறைப்படியான எந்தவொரு சடங்கும் நடைபெறவில்லை என்றும், தாங்கள் கணவன்-மனைவியாக வாழவில்லை என்றும் கூறி, தங்களது திருமணப் பதிவை செல்லாது என அறிவிக்கக் கோரி மணமகன் கவுஷால் சோனார் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.  கடந்த ஆண்டு இந்த மனுவைக் குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் இலேஷ் வோரா, ஆர்.டி.வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சில முக்கியக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

‘இந்து திருமணச் சட்டம்’ பிரிவு 7-இன் படி, மணமகனும் மணமகளும் ‘புனித’மான அக்னிக்கு முன்பாக கூட்டாக ஏழு அடிகள் எடுத்து வைக்கும் ‘சப்தபதி’ போன்ற பாரம்பரியச் சடங்குகளே ஒரு திருமணத்திற்கு ஆன்மிக, சமூக மற்றும் சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்குகின்றன. திருமணச் சடங்குகள் என்பவை ஒரு தனிநபரின் ‘ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி’, மாற்றியமைப்பதாக நம்பப்படுகிறது. எனவே, பாரம்பரியச் சடங்குகளுக்குத்தான் முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

திருமணம் என்பது வெறும் பாடல், நடனம் மற்றும் விருந்து கொண்டாடும் நிகழ்வு அல்ல. சடங்குகள் ஏதுமின்றி செய்யப்படும் வெறும் திருமணப் பதிவு மட்டும் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் ஏற்புடையதாகாது. பாரம்பரிய சடங்குகள் எதுவும் நடைபெறாததால், இந்த திருமணத்தை செல்லாது என அறிவித்து குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்து திருமணச் சட்டப்படி இத்தகைய தீர்ப்புகள் பல சமயங்களில் வருகின்றன. மேலோட்டமாக 1955-ஆம் ஆண்டின் சட்டப்படி மட்டும் பார்த்தால், சப்தபதி எனப்படும் நெருப்பைச் சுற்றி மணமகனும், மணமகளும் ஏழு அடிகள் எடுத்து வைத்துச் சுற்றிவரும் சடங்கு முக்கியமானது என்று தீர்ப்பு எழுதிவிடலாம். ஆனால், ‘லிவ்-இன்’ என்றழைக்கப்படும் திருமணம் இன்றி இணைந்து வாழ்தல் என்பதிலேயே சில சட்டரீதியான உரிமைகளை வழங்கி இந்திய உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன.

வாழ்வாதார உதவி அல்லது பராமரிப்புக்கான உரிமை தொடர்பான ‘குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973’-இன் பிரிவு 125 (1) (a)-இல் உள்ள அதே விதிகள் இத்தகைய உறவுமுறைக்கும் பொருந்தும். இப்பிரிவு மனைவி, குழந்தை அல்லது பெற்றோருக்குப் பண ரீதியான உதவி வழங்குவது தொடர்பான பராமரிப்பு உரிமையைக் கையாள்கிறது. புதிய ‘பாரதிய நியாய சன்ஹிதா’வின் 144-ஆம் பிரிவும் இப் பிரச்சினையை இதே வழியிலேயே கையாள்கிறது என்னும் போது, திருமணம் நடந்து, வாழ்க்கையைத் தொடங்கியவர்கள், அதன் பின்னர் பிரிய நேர்ந்தால், அதனை விவாகரத்து வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டுமே ஒழிய, அத் திருமணமே நடைபெறவில்லை என்று சொல்வது நடைமுறைக்கு உகந்ததா? ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தால், அதனைத் திருமணம் என்று கருதவியலாவிட்டாலும், அதற்குரிய அடிப்படை உரிமைகளை, குழந்தைகளுக்கான வாரிசு உரிமை உள்பட வழங்குவதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வாய்ப்பு வழங்குகின்றன.

தற்போது எடுக்கப்படவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, நீடித்த உறவுகளைத் திருமணத்தில் இருப்பதாகவே குறித்துக் கொள்ளலாம் என்று வழிகாட்டல் வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். (என்றாலும் இது சட்டரீதியான உரிமைகளைத் தராது.)

‘லிவ்-இன்’ உறவுகள் இந்தியாவில் பரவலாகத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணத்திற்கு முன் இணைந்து வாழ்ந்து, அதன் அடிப்படையில் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமைந்து, அப்படியான சூழலைப் பலரும் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட பிறகும், இந்தியாவில் இவற்றை நெறிப்படுத்தவோ, அல்லது இதில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவோ முறையான சட்டங்கள் இல்லை என்பது போதாமையே! உறவுகளில் எழுந்துள்ள புதிய நிலைகளை, மாற்றங்களைக் கவனித்து அவற்றிற்கேற்ப சட்ட வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இணைந்து வாழ்தலின்போது ஏற்படும், குடும்ப வன்முறை, வருமானம் – நிதிப் பகிர்வில் எழும் சிக்கல்கள், இருவரின் உழைப்பில் வாங்கப்படும் சொத்துகளைப் பிரிப்பதற்கான வழிமுறை என்பனவற்றை வைத்துப் பார்த்தால் ஒரு குடும்பம் அல்லது இணைந்து வாழ்தல் என்பது சட்டரீதியான ஒப்பந்தம் போன்றதே என்று புரியும். அதனால் தான் தந்தை பெரியார், பொதுவாகத் ‘‘திருமணம் பற்றிக் கூறும்போது, திருமணம் என்பது வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் தங்களுக்குள் செய்துகொள்ளும் ஒப்பந்த வினையே ஆகும்’’ என்றார். அதன் அடிப்படையிலேயே ‘வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா’ என்று அப்போது பெயரிட்டார்கள்.

மாறும் சூழல்களுக்கேற்ப மனிதர்களை ஒழுங்குபடுத்த வசதியாக, இயற்றப்படவும், மாற்றப்படவும் வேண்டியவையே சட்டங்கள். 70 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்ட திருமணச் சட்டங்களில், ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திணிக்கப்பட்ட அடிமைத்தனத்தையும், மூடநம்பிக்கைகளையும் வைத்துக் கொண்டு அவற்றை இன்றைய நாளிலும் கடைப்பிடிக்காவிட்டால் அது திருமணமே அல்ல’ என்று பேசிக் கொண்டிருப்பது பிற்போக்குத்தனமே ஆகும்.

சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை இந்திய அளவிலானதாகவும், அனைத்து மதத்தினரும் – மதச்சார்பற்றோரும் பின்பற்றத்தக்கதாக இயற்றுதலும், புதிய உறவுநிலைகளை ஒழுங்குபடுத்த உரிய வழிகாட்டல்களை, சட்டங்களை உருவாக்குதலும் அவசியமானதாகும். இதுவரை தாமதமாகிவிட்டாலும், இனி தாமதிக்கப்படக் கூடாது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *