தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சமூகச் சீர்திருத்ததிற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், ஜாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் இன்று (17.9.2026) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அவரது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தன்னுடைய ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது. பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.
பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்குப் ‘புரட்சி வணக்கம்!’ தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம்!
Leave a Comment
