சமத்துவ, சமுதாயம் அமைய மானம் – அவமானம் பற்றி கவலைப்படாத பெரியார்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

கட்டுரை

தவத்திரு
குன்றக்குடி அடிகளார்

எனக்கும் தலைவர் பெரியாரவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதென்றால் அது எதனடிப்படையில் என்பதை உணரவேண்டும். ஒரு இசைக் கச்சேரி நடந்து கொண்டிருக்கிறதென்றால் அதில் வாய்ப் பாட்டுக்காரர். மிருதங்கம் வாசிப்பவர் வீணை வாசிப்பவர் முதலானோர் இருப்பார்கள். வாய்ப் பாட்டுக்காரர் பாடுகிற பாட்டிற்கேற்ப மற்றவர்களின் சுதி அமைந்திருக்கவேண்டும். வாய்ப் பாட்டுக்காரர் என்ன பாடுகின்றாரோ அதைப் பற்றி கவலை கொள்ளாமல் அந்தப் பாட்டின் சுதியும் –  ராகமும் மாறாமல் வாசித்தால்தான் கச்சேரி இனிமையுடையதாக இருக்கும். சுதியும் – ராகமும் மாறினால் கச்சேரி இனிமையுடையதாக அமையாது. அது போன்று இன நலம் காக்கப்படவேண்டுமென்கின்ற பாட்டுக் கச்சேரியில் நானும் தலைவர் பெரியார் அவர்களும் சுதியும் – ராகமும் போல் இணைந்திருக்கின்றோம்.

பொதுவாக பெரியாரவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டு வருகின்றார்கள். புறநானூறு காலம் முதல் ஜாதியை ஒழிக்க வேண்டு மென்று பாடிவந்தார்களே ஒழிய, அதனை ஒழிக்க எவராலும் முடியவில்லை. பாடியதோடு சரி. அதனை ஒழிக்க வேண்டுமென்று எவரும் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. வளரும் மரத்தில் புல்லுருவிகளைப் போன்று நமது சமுதாயத்தில் விழுந்துவிட்ட புல்லுருவிகள் ஜாதியென்ற பாகுபாட்டை ஏற்படுத்தி மக்கள் சமுதாயம் ஒன்று சேரமுடியாமல் பிரிவுபடுத்திவிட்டனர்.

கலியபெருமாள் கோயில் அறங்காவலர் அவர்கள் என்னைச் சந்தித்து உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவரிடம் அந்தக் கிராம மக்கள் படிப்பில் எப்படியுள்ளார்கள்? என்று கேட்டேன். மிகப் பிற்பட்ட நிலையிலிருப்பதாகச் சொன்னார்கள். நான் உடனே இவ்வளவு பிற்பட்ட நிலையில் மக்களிருக்கின்றார்கள் என்றால் அந்தக் கோயில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேட்டேன். கோயில்கள் வந்தது குடிகளை வாழ்விக்கவேயாகும். அந்தக் கோயில் அங்குள்ள குடிகளை வாழ்விக்கவில்லையென்றால் அந்தக் கோயில் இருந்து பயன் என்ன? என்று கேட்டேன்.

கோயில்கள் முற்காலத்தில் மக்கள் சிறந்த ஞானமும் அறிவும் பெறப் பயன்பட்டு வந்தன. இன்று அவை சிலர் வாழ்விற்கு பயன்படக்கூடியவனாக மாறிவிட்டன.

தமிழன் – கடவுள் முன் சமத்துவமாகக் கருதப்பட வில்லை என்றால் வேறு எங்கு அவன் சமத்துவத்தைக் காண முடியும்? தந்தை பெரியாரவர்கள் ஜாதி ஒழிய வேண்டுமென்பதில் மிகத் தீவிரமான கருத்தைக் கொண்டு மிகக் கடுமையாகப் போராடிக் கொண்டு வருகின்றார்கள். ஜாதிகளை ஒழிக்க வேண்டுமென்பதில் எங்களிருவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. அணுகுகின்ற முறையில்தான் வேறுபாடு உண்டு. மனிதன் எந்த உரிமையை இழந்தாலும் இழக்கலாமே ஒழிய, தன் சிந்தனையை இழக்க யாரும் சம்மதிக்கக்கூடாது.

இன்னும் சில நாட்களில் ஆயுதபூசை என்பதாக ஒரு விழா வர இருக்கின்றது. இதற்கும் தமிழனுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது உயர்ந்த ஜாதியார் என்பவர்கள் ஏடுகளை அடுக்கிப் பூசை செய்தார்கள். அங்கு வேலை செய்த தமிழன், தானும் அதுபோல் பூசை செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டான். அதற்கு உயர்ந்த ஜாதிக்காரன் இவன் ஏடுகளைத் தொட்டால் எங்கு படித்துவிடுவானோ என்று கருதி எங்களுக்கு ஆயுதம் ஏடுகள்; நாங்கள் அவற்றை வைத்துப் பூசை செய்கிறோம்; நீ உங்களுடைய ஆயுதங்களை வைத்துப் பூசை செய்” என்று சொன்னான். அதன்பின்தான் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்யும் பழக்கம் நம் மக்களிடம் ஏற்பட்டது.

வரலாற்றில் பார்த்தால் ஏகலைவன் கதை உங்களுக்குத் தெரியும். மேல் சாதிக்காரன் தனக்குக் கீழ்ப்பட்ட ஜாதிக்காரனுக்கு கலைகளைக் நேராகப் பயிலாமல் அவரது உருவத்தை வைத்து வில் வித்தையைக் கற்றுக் கொடுக்கக் கூடாது. மேல் ஜாதிக்காரனான துரோணாச்சாரியிடம் கற்றுக்கொண்ட ஏகலைவன் அக்கலையினைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக துரோணாச்சாரி அவன் கட்டைவிரலைக் குருதட்சணையாகப் பெற்றார். இதிலுள்ள ஜாதிக் கொடுமையினைச் சொல்லாமல் ஏகலைவனின் குரு பக்தியினைப் பற்றித்தான் பெருமையாகச் சொன்னார்களே ஒழிய. அதில் மறைந்துள்ள ஜாதி உணர்வைச் சொல்லவில்லை.

தலைவர் பெரியாரவர்கள் சமத்துவமான சமுதாயம் அமையவேண்டுமென 50 ஆண்டுகளாக எதிர்ப்புகளைப் பற்றி மானாவமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தொண்டாற்றிக் கொண்டு வருகிறார்கள். என்றாலும் இன்னும் சமத்துவச் சமுதாயம் அமையவில்லை. தமிழனின் செந்நீராலும் செங்குருதியாலும் தான் இக்கோயில்கள் உருவாயின. கோயில்களைக் கட்டி முடித்ததும் இவன் வெளியே நிற்க வேண்டியதாயிற்று. கோயில் கட்டுவதற்குச் சிறிதும் பாடுபடாதவன் உள்ளே செல்லும்படியான நிலை ஏற்பட்டுள்ளது.

இது தமிழனின் ஏமாளித்தனத்தாலே யேயாகும். தமிழன் தொட்டால் -பூசித்தால் – தமிழில் பூசித்தால் – கடவுள் சக்தி குறைந்துவிடும் என்றால் கடவுளுடைய சக்தியைவிட தமிழனின் ஆதிதிராவிடனின் சக்தி அதிகம் என்றுதானே பொருள்.

தலைவர் பெரியாரவர்களுக்கு வயது வளரக் காரணம் தமிழர்கள் பெருமையோடிருக்கிறார்கள். அய்யா அவர்கள் சோர்வாக இருக்கும்போது ஒரு தமிழரின் பெயரைச் சொல்லி அவருக்கு உத்யோக உயர்வு கிடைத்தது என்று சொன்னால் உடனே எழுந்து உட்கார்ந்துகொண்டு, “அப்படியா? எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது இப்போதாவது கிடைத்ததே என்று பெருமகிழ்ச்சியடைவார்கள். அவருக்கிருந்த சோர்வு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

சாதாரணத் தமிழ் மகன் நாடாளும் மகனாக வாழ வேண்டும் தாழ்ந்துகிடக்கும் சமுதாயம் முற்போக்கடைய வேண்டுமென்பதே அவர்கள் குறிக்கோளாகும்.

நமது சமுதாய எதிரிகள் 3 பேராக இருந்தாலும் மூளை வலுவுள்ளவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் 97 பேர்கள் என்றாலும் தந்தை பெரியார் தலைமுறைக்கு முன்பிருந்தே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.

தமிழனுக்குள்ள ஈன உணர்ச்சி தனக்குக் கீழ் ஒரு ஜாதிக்காரன் இருக்கின்றான் என்பதிலிருந்ததே ஒழிய, தனக்கு மேல் ஒரு ஜாதிக்காரனிருக்கின்றான்; அவனுக்குக் கீழ் நாமிருக்கின்றோம் என்கின்ற எண்ணமில்லை. தனக்குக் கீழ் உள்ளவனைவிட தான் உயர்ந்தவனாக இருக்கிறோம் என்கின்ற திருப்தியடைகின்றான்.

நாம் தமிழர்கள் என்கின்ற உணர்ச்சியோடு இனஉணர்ச்சியோடு வீட்டிலும் வீதியிலும் தீண்டத்தகாது இருந்த தமிழர்களை சமத்துவம் உள்ளவர்களாக்கியது பெரியாரவர்களே யாவார்கள் என்பதோடு, சமயத்துறையில் கூட தமிழனுக்கு உரிமை கிடைக்க வழி வகுத்தவராவார்கள். அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழவேண்டும்.

(24.09.1971 அன்று அரியலூர் வாலாஜா நகரத்தில் நடைபெற்ற பெரியார் சிலை திறப்பு விழாவில் குன்றக்குடி அடிகளார் ஆற்றிய உரை
– ”விடுதலை , 23.11.1971)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *