ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே தங்களின் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது பா.ஜ.க. அரசு. இந்த 12 ஆண்டுகளில் படிப்படியாக, ராமன் கோயில் கட்டுதல், காஷ்மீருக்குத் சிறப்புத் தகுதி ரத்து போன்ற பல திட்டங்களை நிறைவேற்றிவிட்டது நரேந்திர மோடி தலைமையிலான அரசு. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் என்பதை அடைய, இன்னும் மிச்சமிருக்கும் திட்டங்களை நோக்கிக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாகத் தான், பாஜக-என்டிஏ கூட்டணியின் ஆட்சியிலுள்ள அனைத்து 21 மாநிலங் களிலும் 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே ‘பொது சிவில் சட்டம்’ (UCC) அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த செப்டம்பர் 13 அன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்குவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக (!) ‘முத்தலாக்’ முறை ஒழிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினாராம்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், ஏற்கெனவே இந்த வேலை தொடங்கப்பட்டுவிட்டது. உத்தரகாண்ட், குஜராத், அசாம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் பொது சிவில் சட்டச் சட்டத்தை நிறை வேற்றியுள்ளன. இவற்றில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டுமே தற்போது இந்தச் சட்டத் தொகுப்பு அமலில் உள்ளது. குஜராத்தில் கடந்த மார்ச்சிலும், அஸ்ஸாமிலும் மே மாதத்திலும், மத்தியப் பிரதேசத்தில் ஜூலையிலும் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இன்னும் அமல்படுத்தப்பட வில்லை.
திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், உயில், உயில் இல்லா நிலை, வாரிசுரிமை மற்றும் கூட்டுக் குடும்ப விவகாரங்கள் ஆகியவை அரசியலமைப்பின் ‘ஒத்திசைவுப் பட்டியலில்’ (Concurrent List) உள்ள 5-ஆவது பிரிவின் கீழ் வருகின்றன. இவை குறித்து நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்கள் ஆகிய இரண்டுக்கும் இது தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் உள்ளது. ஆனாலும், மாநில அரசுகள் மூலம் கொண்டுவருவதற்கு வேறு காரணங்கள் உள்ளன. ஒரே தேசிய சட்டத் தொகுப்பு, இந்தியாவில் உள்ள தனிநபர் சட்டங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில், குறிப்பாக பழங்குடியினர், வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் பெரும் வேறுபாடுகள் பிரச்சினையாக அமையும். சட்டரீதியாக அவற்றுக்கு உள்ள பாதுகாப்பை நீக்க முனைவது பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று கருதிய ஆர்.எஸ்.எஸ்., மாநில வாரியாக இவற்றைப் படிப்படியாக நடைமுறைப்படுத்த முனைகிறது.
பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் உள்ள ஒரு நாட்டில், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமானால், அது அனைவருக்கும் பொதுவான சில அம்சங்களுடன் இருக்க வேண்டும். பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை மறுக்காத சட்ட நடைமுறைகளுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இந்து மதத்தின், குறிப்பாக வைதீக மதத்தின் அடிப்படையில் அவற்றைக் கொண்டு வர முனைவதும், சில மதங்களின் மீது வெறுப்புக் கொண்டு அவர்களின் பழக்க வழக்கங்களைக் குறிவைப்பதுமே ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கமாக இருப்பதால், பொது சிவில் சட்டம் மதச்சார்பற்ற அனைவராலும் எதிர்க்கப்படுகிறது.
இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தினைக் கொண்டு வரமுடியாது. இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள நான்கு மாநிலச் சட்டங்களுமே, ஒத்த சிந்தனை கொண்டவை என்றாலும், ஒரே மாதிரியானவை அல்ல. இந்தச் சட்டங்களிலிருந்து பட்டியல் பழங்குடியினர் விலக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்டும் அரசியலமைப்பு வழக்காற்றுச் சட்ட விதிகளால் பாதுகாக்கப்படும் சில சமூகங்களுக்கு விலக்கு அளித்துள்ளது. மாநிலத்திற்கு மாநிலமே இவ்வளவு வேறுபடும் என்றால், முற்றிலும் வேறு பண்பாடு, பழக்கவழக்கங்கள் கொண்டுள்ளவர்களுக்கு எப்படி ஒரே சட்டத்தைக் கொண்டு வர முடியும்? இதைப் பெண்களுக்கான சமூகச் சீர்திருத்தமாக முன்வைத்து விளம்பரப்படுத்த விரும்புகிறது பா.ஜ.க! ஆனால், இது சிறுபான்மை மதங்களைக் குறிவைத்து அவர்களின் சிவில் சட்டங்களைக் காவு கொடுக்கும் முயற்சியே என்பதை அனைத்துக் கட்சிகளும் கண்டிக்கின்றன. பிற மதப் பெண்களைக் குறித்துக் கவலை கொண்டு முதலைக் கண்ணீர் வடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., இந்து மதத்தில் பெண்களுக்கு உள்ள கொடுமைகளை, அடிமைத்தனத்தைத் தடுக்க என்ன செய்துள்ளது?
தற்போது ஒன்றிய பா.ஜ.க.வை ஆதரிக்கும் பல கட்சிகளே இதில் பின்வாங்கும் என்பதால்தான், மாநிலங்கள் மூலமாக இதனைச் செயல்படுத்த பா.ஜ.க. முனைகிறதா என்றும் கேள்வி எழுகிறது. பொது சிவில் சட்டம் என்பது ஒன்றுபட்ட இந்தியா என்னும் பேச்சுக்கு ஆபத்தாகவே முடியும்.
