(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

7 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கடவுள் சக்தியைப் பக்தர்கள் நம்புகிறார்களா?

மின்சாரம்

 

சபரிமலை அய்யப்பன் கோயிலில் வரவிருக்கும் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு  வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் திருவிதாங்கூர் தேவசம் வாரியத் தலைவர் ஜெயகுமார், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் மாரடைப்பு அல்லது இயற்கை மரணம் எய்தும் பக்தர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் தொகையாக வழங்கப்படும் என்றும், இதற்காக எல்.அய்.சி. நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

“சாமி சரணம்” என்று கூறி, பல நாட்கள் கடும் விரதமிருந்து, பட்டினியைக் கூடப் பொருட்படுத்தாமல், வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அய்யப்பனைக் காணப் பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். ஆனால் கோவில் நிர்வாகம் கடவுளின் அருளையும், பக்தர்களின் நம்பிக்கையையும் விட காப்பீட்டு நிறுவனங்களையே அதிகம் நம்பத் தொடங்கியுள்ளது.

பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் மரணமடைந்தால் மட்டுமே ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்கப்படும் எனக் கூறுவது எந்த வகையில் சரி? பாத யாத்திரையாகப் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து வரும் வழியிலோ, அல்லது சபரிமலைக்கு வரும் மற்ற பகுதிகளிலோ மாரடைப்பு ஏற்பட்டால் அந்த பக்தர்களின் உயிருக்கு மதிப்பில்லையா?

2010 ஆம் ஆண்டிலிருந்து ஊடகத்தில் வந்த செய்திகளின் படி சபரிமலைக்குச் செல்வோர் ஒவ்வொரு ஆண்டும் மாரடைப்பு, விபத்து, இதர காரணங்களால் 30 முதல் 35 பேர் மரணிக்கின்றனர்.

சபரிமலைக்கு வரும் ஒவ்வொருவரும் அய்யப்பனின் அருள் தேடி ஒரு நம்பிக்கையில் வருகிறார்கள். எல்லை வகுத்து, ஒரு குறிப்பிட்ட பாதையில் மரணித்தால் மட்டுமே நிவாரணம் அல்லது இன்சூரன்ஸ் என்று பிரித்துப் பார்ப்பது பக்தர்களின் உயிரை மலிவாக மதிப்பிடும் செயலாகும்.

நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு வருபவர்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் உறுதி செய்வதை விட்டுவிட்டு, குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் காப்பீடு என அறிவிப்பது கோவில் நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

இதைப் பற்றியெல்லாம் கோயில் சாமிக்குக் கோபம் வராதா?

சபரிமலைக்கு வரும் அனைத்து அய்யப்ப பக்தர்களின் பாதுகாப்புக்கும், அவர்களின் உயிருக்கும் முழுமையான, பாகுபாடற்ற பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுதான் தேவஸ்தானத்தின் பணியாக இருக்கவேண்டுமே தவிர நிவாரணத்திற்கு எல்லை குறிப்பது சரியல்ல என்று பக்தர்கள் குமுறுகிறார்கள்.

மின்சாரம்

* * * * *

ஏழுமலையான் சக்தி
‘கோவிந்தா! கோவிந்தா தானா?’

அதேபோல ‘தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம்!’ என்று பஜனை பாடுகிறார்களே! அங்கு என்ன வாழ்கிறது?

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பையும், நிதி உதவியையும் கருத்தில் கொண்டு புதிய காப்பீட்டுத் திட்டத்தை  அறிவித்துள்ளது.  அண்மையில் திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் நடைபெற்ற அறங்காவலர் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அங்கு எதிர்பாராத விதமாக இயற்கையான முறையில் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

இந்தியாவில் உள்ள ஆன்மீக ஸ்தலங்களில் இத்தகைய திட்டம் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.  திருமலையில் விபத்து காரணமாக பக்தர்கள் உயிரிழக்க நேரிட்டால் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை, இதுவரை இருந்த ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. (நாள் தோறும் உண்டியல் வசூலே கோடிக்கணக்கான ரூபாய் ஆயிற்றே!) இந்தக் காப்பீட்டிற்கான பிரீமியம்  முழுவதையும் தேவஸ்தான நிர்வாகமே ஏற்கும். பக்தர்களிடம் இருந்து தனியாக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது.  இத்திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்த நிர்வாகம் சுமார் ரூ.3 கோடியை நிதியாக ஒதுக்கியுள்ளது.

* * * * *

வைஷ்ணவா தேவியும் அம்போதானா?

இதே போல் ஜம்மூகாஷ்மீர் அரசு வைஷ்ணவா தேவி கோவிலுக்கும் அமர்நாத் பனிக்குகைக்குப் பயணிப்பவர்கள் இறந்தால் காப்பீடு அறிவித்துள்ளது.

அதே போல் உத்தராகண்ட் அரசு அங்குள்ள மலைப்பகுதி கோவில்களான கேதார்நாத் உள்ளிட்ட 4 பெரிய கோவிலுக்குச் சென்று இறப்பவர்களுக்கு காப்பீடு அறிவித்துள்ளது. என்னே, ஈடில்லாத சக்தி – பக்தி?

மின்சாரம்

* * * * *

மதுரை மீனாட்சியம்மன்
கதையைக் கேளீர்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மொத்தமாக ரூ.5 கோடியில் விபத்து குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலின் குட முழுக்கு விழா செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறவுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழாநிகழ்வு நடைபெறுவதால், விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம்.

இதையொட்டி கோயில் மேல்தளம், பொற்றாம ரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உபயதாரர்களுக்கு 4,000 அனுமதி சீட்டுகளும், முக்கியதாரர்கள் (வி.அய்.பிக்கள்) மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில் 5,000 அனுமதி சீட்டுகளும் வழங்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கியூஆர் கோடு வசதியுடன் கூடிய ‘ஹாலோ கிராம்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஏழு வண்ணங்களிலான சிறப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

விழாவில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப் படுத்தும் வகையில், கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான விபத்துக் குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மதுரை மீனாட்சி பற்றிக் கொட்டி அளக்கப் படும் அருளும், ஆற்றலும் அடேயப்பா சொல்லி மாளாது!

மதுரை மீனாட்சி சக்தி பற்றிப் புராணங்கள் கூறுவது என்ன?

அடேயப்பா, எத்தனை அளப்புகள்!

“புராணங்கள் மற்றும் சாக்த மரபுகளில் மறை மீனாட்சி (அல்லது ‘மறைந்திருந்த மீனாட்சி / ரகசிய மீனாட்சி’) என்பது சிறீ வித்யா உபாசனை மற்றும் சாக்த தத்துவத்தின் ஆழமான ஆன்மீக வடிவமாக விவரிக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மனின் அருள் மற்றும் சக்தியின் ரகசியத் தன்மையை இது உணர்த்துகிறது.

  1. சிறீ வித்யா மற்றும் ராஜமாதங்கி தத்துவம்

*   மாதங்கி தேவியின் வடிவம்: சாக்த புராணங்களின்படி (குறிப்பாக லலிதோபாக்யானம் மற்றும் பிரம்மவாண்ட புராணம்), மதுரை மீனாட்சி அம்மன் என்பவள் தச மகா வித்யாக்களில் ஒன்றான சிறீ ராஜமாதங்கி (மாதங்கி) தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறாள்.

*   மறை சக்தி (Inner Potency): லலிதா திரிபுரசுந்தரியின் முதன்மை அமைச்சராகவும், வாக்கு மற்றும் கலைகளின் அதிபதியாகவும் மாதங்கி செயல்படுகிறாள். வெளிப்படையான வழிபாட்டிற்கு அப்பாற்பட்டு, மூல மந்திர உபாசனை மூலம் மட்டுமே உணரப்படும் உள்-சக்தியாக இருப்பதால் இவள் ‘மறை சக்தி’ அல்லது ‘ரகசிய மாதா’ என்று அழைக்கப்படுகிறாள்.

மின்சாரம்

  1. யோக மற்றும் தந்திர தத்துவத்தில் மறை மீனாட்சி

*   விசுத்தி மற்றும் அனாஹத சக்கரம்: தந்திர சாஸ்திரங்களின்படி, மீனாட்சி தேவி மனித உடலின் தொண்டைப் பகுதியில் உள்ள விசுத்தி சக்கரம் மற்றும் இதயத்தில் உள்ள அனாஹத சக்கரத்தின் ரகசிய ஆற்றலாகக் குடியிருக்கிறாள்.

*   மீன் கண் குறியீடு (மீனாட்சி): மீன் எவ்வாறு தன் முட்டைகளை இமைகொட்டாமல் பார்த்து தன் பார்வையாலேயே குஞ்சு பொரிக்கிறதோ, அதேபோல தேவி தன் அருள் பார்வையாலேயே பக்தர்களின் ஞானத்தை விழிப்படையச் செய்கிறாள். இந்த அருளாட்சி வெளியில் தெரியாமல் அகத்தில் நடப்பதால் இது மறை மீனாட்சி தத்துவம் எனப்படுகிறது.

  1. திருவிளையாடற் புராணக் குறிப்புகள்

*   மறைந்திருந்த அவதாரம்: கடம்பவனத்தில் சுயம்புவாக வெளிப்படுவதற்கு முன், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான பராசக்தி தன் முழு ஆற்றலையும் மறைத்து, மலையத்வஜ பாண்டியன் மற்றும் காஞ்சனமாலை தம்பதியரின் மகளாக தாடகைப் பிராட்டியாகப் பிறந்து வளர்ந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

*   சிவாம்சமும் சக்தியம்சமும்: தேவி தாடகையாக பூவுலகில் ஆட்சி செய்தபோது அவளது அசுர ஆற்றல் மறைக்கப்பட்டு, சுந்தரேஸ்வரரை மணந்த பின்னரே அவளது முழுமையான பரம்பொருள் வடிவம் உலகிற்குத் தெரியவந்தது.

  1. அக மற்றும் புற வழிபாடு

*   புற வழிபாடு: கோவிலில் நாம் காணும் பச்சை நிற மேனி, கிளி ஏந்திய கரம் கொண்ட மீனாட்சி வடிவம்.

*   அக வழிபாடு (மறை மீனாட்சி): மனதிற்குள் சிறீ வித்யா உபாசனை மூலம் தியானிக்கும் போது, தேவி எண்ணங்களுக்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்ட “சிந்தாமணி க்ருஹ” சக்தியாக வீற்றிருக்கிறாள்.

சுருக்கமாகக் கூறின், புராணங்களின்படி மறை மீனாட்சி என்பது வெளிப்படையான உருவ வழிபாட்டைக் கடந்து, ஆன்மாவின் உள்ளே அருள் புரியும் பராசக்தியின் சூட்சும (ரகசிய) வடிவத்தைக் குறிப்பதாகும்.”

உண்மையிலேயே கடவுள் சக்தி மீது நம்பிக்கை இருந்தால் கடவுளை நம்பி வரும் பக்தர்களைக் காப்பாற்றி – ‘இன்சூரன்ஸ்’ காப்பீட்டுத் தொகைகளை வழங்கிட தேவஸ்தானங்கள் வரிந்து முட்டிக் கொண்டு நிற்குமா?

இந்தக் கடவுள்கள் சக்தியின் மீது நம்பிக்கை இல்லாமல் தானே.  கோயில் நிர்வாகிகள் இந்த ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.

கடவுள் சக்தியைக் கேலி செய்யும் இவர்களை நாத்திகர்கள் என்று ஆத்திக – ஆன்மிக சிகாமணிகள் கூறப்போகிறார்களா?

இல்லாத கடவுளை முதலீடாக்கிக் கொள்ளை அடிக்கும் இவர்களை நம்பும் பக்தர்களை நினைத்தால் பரிதாபமாகத் தானிருக்கிறது.

செய்வது எல்லாம் கடவுள் சக்தி மீது நம்பிக்கை இல்லாமல் தான்! செய்யாமல் இருந்தாலோ பொருளும், பொழுதும் வீணாகாமல் மிச்சப்படுமே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *