சென்னை, செப். 16- சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தை கைவிடக் கோரி, பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் 56 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற அவசர கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (15.9.2026) நடைபெற்றது. கூட்டத்தில், அரசாணையை திரும்பப் பெறாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்துவது, அதற்கு முன்னோட்டமாக வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த செப். 8ஆம் தேதி வெளியிட்ட அரசாணை அடிப்படையில், சென்னை மயிலாப்பூர் வட்டம், பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதற்காக பட்டினப்பாக்கம் பகுதியில் பல்வேறு நிலங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனால், மீனவ கிராமங்களான முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம், முள்ளி மாநகர், நம்பிக்கை நகர் உள்ளிட்ட மீனவப் பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்பு மற்றும் நில உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. மேலும், மீன்பிடித்தல், படகுகளை நிறுத்துதல், மீன்பிடி வலைகளை பின்னுதல் மற்றும் உலர்த்துதல், மீன்களை உலர்த்தி விற்பனை செய்தல் உள்ளிட்ட தங்களது பாரம்பரிய கடலோரத் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர்களின் நில உரிமைகள் தொடர்பாக 1957ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை ஆகியவற்றை சுட்டிக்காட்டி, தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் அவசர கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (15.9.2026) நடைபெற்றது.
எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் கோவளம் வரையிலான 56 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். புதிய தலைமைச் செயலகத் திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி, அப்பகுதியில் ஏற்கெனவே நிலவி வரும் போக்குவரத்து நெரிசலும் மேலும் அதிகரிக்கும். பட்டினப்பாக்கம் பகுதியில் பிரதான சாலை மற்றும் இணைப்புச் சாலை என குறைந்த எண்ணிக்கையிலான சாலைகளே உள்ள நிலையில், தலைமைச் செயலகம் போன்ற மிகப்பெரிய அரசு வளாகம் அமைந்தால் அன்றாடம் வாகனப் போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால், புதிய தலைமைச் செயலகத் திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் தேவையான அனுமதிகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதி தொடர் பான அங்கீகரிக்கப்பட்ட கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரை படங்கள் மற்றும் நிலத்தின் கடலோர ஒழுங்குமுறை மண்டல வகைப்பாடு ஆகியவை முக்கியமானதாக இருக்கும். இதனால், நில ஒதுக்கீடு மற்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை நடைமுறைகள் குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, முதற்கட்டமாக பட்டினப்பாக்கத்தை சுற்றியுள்ள 9 மீனவ கிராமங்களில் உள்ள வீடுகளில் இன்று கருப்புக்கொடி ஏற்றி, அரசின் முடிவுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அரசின் நடவடிக்கையை பொறுத்து அடுத்தகட்ட தொடர்போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை கைவிடாவிட்டால் கடலில் இறங்கி போராட்டம், மீன்பிடி நிறுத்தம், கருப்புக்கொடி போராட்டம், உண்ணாநிலை, சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தன்னெழுச்சி போராட்டமாக மாறும். பரந்தூர் விவசாயிகளைப் போல கடலை நம்பி வாழும் மீனவர்களையும் ‘கடல் விவசாயிகள்’ என்றே பார்க்க வேண்டும். எனவே, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை மாற்று இடத்துக்கு மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
