பெண்களும், ஜாதியும்!

8 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ந.தேன்மொழி, குடியேற்றம்

ஆண்டாண்டுக் காலமாக நம் நாட்டில் ஜாதிய அமைப்பு நிலவி வருகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வுகளில் மிக முக்கியமானது என்னவென்றால், அது எவ்வாறு தலைமுறை தலைமுறையாகத் தகவமைத்துக் கொண்டு தொடர்கிறது என்ற கேள்வி ஆகும். சட்டங்கள், நவீனக் கல்வி, நகரமயமாக்கல் போன்ற பல்வேறு காரணங்களினால் ஜாதியின் வெளிப்புறக் கட்டமைப்பு மாறியிருப்பது போல ஒரு தோற்றம் இருந்தாலும், மனிதர்களின் உளவியலிலும் குடும்ப அமைப்பிலும் சமூகத்திலும் அது இன்னும் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அப்படியென்றால், தலைமுறை தலைமுறையாகச் ஜாதி கடத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இதற்கான பெரும்பான்மைப் பொறுப்பு யாரிடம் உள்ளது என்று ஆராயும்போது, சமூகவியலாளர்களும் சிந்தனையாளர்களும் சுட்டிக்காட்டும் அதிர்ச்சியான, அதே சமயம் கசப்பான உண்மை என்னவென்றால், ஜாதியமைப்பின் காவலர்களாகவும் ஜாதியைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தக் கூடியவர்களாகவும் பெண்களே இருப்பதுதான். மேலோட்டமாகப் பார்க்கும்போது தந்தைவழிச் சமூகத்தில் பெண்கள் அடக்கப்பட்டவர்களாகவும், முடிவெடுக்கும் அதிகாரம் அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், ஜாதியின் அடிப்படைத் தூண்களான தூய்மை – அசுத்தம் என்ற கோட்பாடு, உணவுப் பழக்கவழக்கங்கள், திருமண எல்லை மற்றும் சடங்குகள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் முதன்மைப் பொறுப்பு பெண்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஆண்கள் அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஜாதியைத் தங்களின் கருவிகளாகப் பயன்படுத்தினாலும், ஒரு குழந்தையின் மனதில் “நம் மக்கள் யார்? மற்றவர் யார்?” என்ற ஜாதி உணர்வை அன்றாட வாழ்க்கையின் வழியாக விதைப்பது குடும்பமும், அதனுள் இயங்கும் பெண்களுமே ஆவர். ஜாதியைக் கடத்தும் கடத்திகளாகப் பெண்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும், அவர்கள் ஏன் ஜாதியைக் காப்பாற்றுகிறார்கள் என்பதையும் நாம் அறிய வேண்டும். பெரியாரின் பகுத்தறிவுப் பார்வையில், ஜாதி என்பது வெறும் பாகுபாடு மட்டுமன்று; அது பெண்ணின் உரிமையையும் அவர்களுடைய திருமண உரிமையையும் கட்டுப்படுத்துவதன் மூலம் மறைமுகமாகக் கடத்தப்படும் ஓர் அமைப்பாகும்.

எனவேதான் பெரியார், “பெண் விடுதலை இல்லாமல் ஜாதி ஒழிப்பு சாத்தியமில்லை” என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.

ஜாதிக் கட்டுப்பாடு என்பது பெண்களை அடிமைப் படுத்துவதன் மூலமே நிலைநிறுத்தப்படுகிறது. பெண்கள் தங்கள் விருப்பப்படி துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றால் ஜாதி தானாகவே ஒழிந்துவிடும். இந்தியச் சமூகத்தில் ஜாதி என்பது வெறும் பிறப்பின் அடையாளம் அன்று; அது திருமணம், குடும்பம், சொத்து, பாலியல் கட்டுப்பாடு, சமூக மரியாதை என மனித வாழ்வின் எல்லா இயங்கல்களிலும் பின்னிப் பிணைந்து நிற்கிறது. ஒரு பெண் தன் ஜாதிக்கு வெளியே திருமணம் செய்துகொண்டால், அந்தத் திருமணம் தனிப்பட்ட இருவரின் முடிவு மட்டுமல்ல; அது ஜாதி எல்லையைத் தாண்டும் செயலாகப் பார்க்கப்படுகிறது.

அதனால்தான் பெண்ணின் காதல் யாரிடம் இருக்க வேண்டும், யாரோடு திருமணம் நடக்க வேண்டும் என்பதைக் குடும்பமும், சமூகமும் முடிவு செய்கின்றன. இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமெனில், வேறு ஜாதியைச் சார்ந்தவரின் குழந்தையைப் பெண் கருவறையில் சுமக்கக் கூடாது என்கிற ஆதிக்கம் வெளிப்படுகிறது. ஜாதியை உடைப்பதற்கான உண்மையான தீர்வு ஜாதி மறுப்புத் திருமணமே என்கிறார் டாக்டர் அம்பேத்கர். 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை, விதவை மறுமணம், தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை போன்ற பெண்ணியத் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

பெரியார் ஆதரித்த சுயமரியாதைத் திருமணம் மிகப்பரந்த பொருளைக் கொண்டது. பெண்ணின் திருமணத்தைக் குடும்பம் தீர்மானிக்கக் கூடாது, அவளே தீர்மானிக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனை ஜாதியின் அடித்தளத்தையே கேள்விக்கு உட்படுத்தியது. ஆனால் இன்றளவும் பெண்களில் பலரும் ஜாதியின் காவலர்களாக ஏன் இருக்கிறார்கள் என்பதைப் பேச வேண்டிய அவசியம் உள்ளது. பெண்கள் நிச்சயம் ஜாதி வெறியர்கள் இல்லை; அதேசமயம் ஜாதியை உடைப்பவர்களாகவும் இல்லை. காலம் காலமாய் குடும்பத்தின் கவுரவம் என்ற கருத்து பெரும்பாலும் பெண்ணின் திருமணம், காதல், தேர்வு ஆகியவற்றோடு இணைக்கப்படுகிறது. இதனால் ஒரு பெண் வேறு ஜாதியைச் சேர்ந்தவரைத் தேர்ந்தெடுத்தால், அது அவளுடைய தனிப்பட்ட விருப்பமாகப் பார்க்கப்படாமல் குடும்பத்தின் அவமானமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் பெண்ணே தன்னைத் தன் ஜாதிக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறாள்; அதையே தன் மகளுக்கும் கற்றுத் தருகிறாள்.

“நம்ப ஜாதிக்குள்ள தான் திருமணம்”, “அந்த வீட்டில் சாப்பிடாதே”, “அவர்களோடு நெருக்கமாகப் பழகாதே”, “அவர்களை நம்ப வீட்டிற்குள் அழைத்து வராதே”, “நம்ப குடும்ப மரியாதை உன் கையில் இருக்கிறது”, “நம்ப குடும்ப மானத்தைக் காப்பாற்று” – இவையெல்லாம் ஜாதியின் அடித்தளமாய் ஒரு தாய் மகளுக்குச் சொல்லும் வார்த்தைகளே. அன்பின் அக்கறை என்ற பெயரால் தலைமுறைகளுக்குக் கடத்தப்படும் ஜாதி கட்டுப்பாடுகள் இவை. அதனால்தான் ஜாதி நீடிப்பதில் குடும்பமும் பெண்களும் முக்கிய இடத்தில் இருக்கின்றனர். ஒரு பெண் காதலிப்பதை முதலில் கண்டுபிடிப்பது பல நேரங்களில் குடும்பத்தில் உள்ள பெண்களே. அவள் யாருடன் பேசுகிறாள்? யாருக்குத் தொலைபேசி செய்கிறாள்? யாரைச் சந்திக்கிறாள்? எங்கே செல்கிறாள்? என்று கண்காணிக்கும் பொறுப்பு பெண்களுக்கே வழங்கப்படுகிறது. ஆணாதிக்கம் பெண்களை ஒடுக்குகிறது; ஆனால் அதே ஆணாதிக்கம் பெண்களில் சிலரை அதன் காவலர்களாக மாற்றம் செய்கிறது. ஜாதி எல்லைகளைப் பாதுகாப்பதில் பெண்களின் மீதான கட்டுப்பாடு என்பது முக்கியப் பங்காக இருக்கிறது; அந்தப் பங்காற்றுபவர்கள் பெரும்பாலும் பெண்களே.

எங்கள் குடும்பத்தில் பெண்களுக்கே முடிவு செய்யும் அதிகாரம் என்று கூட சில குடும்பங்கள் பெருமையாகச் சொல்லலாம். ஆனால் அந்த அதிகாரம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? மகள் யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்வதற்கா? அல்லது யாரைத் திருமணம் செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதற்காகவா? ஒரு பெண் தன் மகளைப் பார்த்து “உன் வாழ்க்கையை நீ தேர்ந்தெடு” என்று சொல்வதற்கும் “உன் ஜாதிக்குள் உனக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடு” என்று சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. முதலாவது தனிநபர் சுதந்திரம்; இது புரட்சியாளர்கள் எதிர்பார்த்த சுதந்திரம். இரண்டாவது ஜாதி எல்லைக்குள் வழங்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம். கட்டுப்பாடு என்று வரும்போதே அங்கே சுதந்திரம் கிடையாது.

ஒரு பெண் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டால் குடும்ப கவுரவம் போயிடுச்சு என்று பெண்ணே நினைப்பதுதான் வியப்பு. ஆனால் ஜாதி மறுப்பு திருமணம் என்பது அகமணத்தை உடைக்கிறது; குடும்பம் நிர்ணயித்த திருமணத் தேர்வை மறுக்கிறது; நம்மவர் – பிறர் என்ற எல்லையைத் தாண்டுகிறது; அடுத்த தலைமுறையை ஜாதிய எல்லைக்கு வெளியே உருவாக்குகிறது; சொத்து மற்றும் வாரிசு பற்றிய பாரம்பரியக் கணக்குகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இத்தனையும் நடந்துவிடக் கூடாது என்பதில் ஆணாதிக்க சமூகம் மிக எச்சரிக்கையாக இருக்கிறது. பெண்ணுக்கு எந்தவித உரிமையும் தந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இச்சமூகம், ஜாதியைக் காப்பதில் மட்டும் முழு உரிமையையும் பெண்ணுக்கு வழங்கி இருக்கிறது. இந்த அடிப்படை உண்மையை உணராத பெண்கள் தங்களுடைய குடும்ப கவுரவம் தங்கள் கையில் இருப்பதாக எண்ணி ஜாதியைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

இங்கே இன்றைய சூழலில் பெண்கள் ஜாதியைக் காப்பாற்றும் காவலர்களாகச் செயல்படினும், நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ‘குடும்ப கவுரவம் என்றால் அது பெண்ணின் உடல்/மானம்’ என்று யார் கற்றுத் தந்தார்கள்? ஜாதிக்கு வெளியே திருமணம் செய்தால் குடும்பம் அழிந்துவிடும் என்ற பயத்தை உருவாக்கியவர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கான பதில் பெண்களிடம் இல்லை; அது ஆணாதிக்க அமைப்பில், அதிகாரத்தில், ஜாதிய அமைப்பில், சொத்து மற்றும் வாரிசு அமைப்பில், சமூக மரியாதை என்ற கருத்தில் ஆழமாகப் பரவி இருக்கிறது. அம்பேத்கர் ஜாதியின் அடிப்படையை அகமணத்தில் கண்டார். பெரியார் திருமணம் மற்றும் குடும்பத்தின் மீது ஜாதி செலுத்தும் அதிகாரத்தைக் கேள்வி கேட்டார். ஜாதி ஒழியவேண்டுமெனில் திருமணத் தேர்வின் மீது ஜாதிக்கு இருக்கும் அதிகாரம் ஒழிய வேண்டும்.

ஜாதிய அமைப்பு பெண்ணிடம் எதிர்பார்ப்பது இரண்டு விசயங்களை: ஒன்று அவள் குடும்ப மரியாதையைப் பாதுகாக்க வேண்டும்; இரண்டாவது அடுத்த தலைமுறைக்கு அதே ஜாதியை அவள் கடத்த வேண்டும். எனவே, இங்கே பெண்கள் ஜாதியைக் கடத்தும் கருவிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. ஜாதியைக் காப்பாற்றுவது பெரும்பாலும் பெண்களே என்று சொல்வது ஒரு பாதி உண்மை மட்டுமே. அப்படியெனில் மீதி பாதி உண்மை என்ன? பெண்கள் ஏன் ஜாதியைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்கள்? ஏனென்றால் ஜாதி பெண்களுக்கு ஒரு பொறுப்பைத் தருகிறது; ஆணாதிக்கம் அதைக் குடும்ப மரியாதை என்று பெயரிடுகிறது; குடும்பம் அதைப் பண்பாடு என்று கற்பிக்கிறது; திருமணம் அதை நடைமுறைப்படுத்துகிறது. எனவே பெண்களே அதை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்கள்.

ஆனால் அதை மாற்றுவதற்கான சக்தியும் திறனும் பெண்களிடமே இருக்கிறது. ஒரு தாய் தனது மகளிடம் “உன் ஜாதியைப் பார்த்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்காதே, உன்னை மனிதராக மதிக்கும் மனிதரைத் தேர்ந்தெடு” என்று சொல்லும் அந்தக் கணத்தில் ஒரு குடும்ப ஜாதி அமைப்பிலும் ஒரு பிளவு ஏற்படும். பெண்கள் போலிக் கவுரவத்திற்காகச் ஜாதியைக் காப்பாற்ற நிற்காமல், ஜாதியைக் கடத்த முனையாமல் இருக்க வேண்டும். தங்களைச் ஜாதியின் காவலர்களாக மாற்றிய சமூக அமைப்பைத் தகர்க்கக் கூடியவர்களாகப் பெண்கள் மாறுவதே ஜாதி ஒழிப்பின் முதல்படியாக இருக்கும்.

பெண்ணின் உடலைக் குடும்பத்தின் சொத்தாகக் கருதும் மனநிலை மாற வேண்டும். பெண்ணின் திருமணத்தைக் குடும்பத்தின் முடிவாகக் கருதும் மனநிலை மாற வேண்டும். காதலை ஜாதியின் எல்லைக்குள் அடைக்கும் மனநிலை மாற வேண்டும். சொத்தையும் வாரிசையும் ஜாதியின் தொடர்ச்சியோடு இணைக்கும் மனநிலை மாற வேண்டும். அப்போதுதான் ஜாதி ஒழிப்பும் பெண்ணிய விடுதலையும் ஒன்றை ஒன்று வலுப்படுத்தும். பெண்கள் ஜாதியைப் பாதுகாக்கின்றார்கள் என்பதை விட, அவர்கள் ஜாதியைக் கடத்துகின்றார்கள் என்பதை விட, நாம் கவனிக்க வேண்டியது: பெண்களின் சுதந்திரத்தைப் பறித்து அவர்களையே ஜாதியின் காவலர்களாக நிறுத்திய அதிகார அமைப்பைப் பெண்கள் எதிர்க்க வேண்டும்.

ஏனெனில் பெண்களை விடுதலை செய்யாமல் ஜாதியை ஒழிக்க முடியாது; ஜாதியை ஒழிக்காமல் பெண்கள் விடுதலை என்பது சாத்தியமில்லை. பல பேர் இருக்கும் குடும்பத்தில் ஒரு பெண் சுயமரியாதையை வென்று காட்டிவிட்டால், அந்தக் குடும்பம் சிறந்து விளங்கும். பெண்ணின் சுயமரியாதை வெல்லும் இடத்தில்தான் ஜாதியின் சுவர் இடிந்து விழும். ஜாதியின் சுவர் இடிந்து விழும் இடத்தில்தான் மனித சமத்துவம் பிறக்கும். மனித சமத்துவம் பிறக்கப் பெண்கள் அதிகாரத்திற்கு உட்படாமல் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *