ஆசிரியர் விடையளிக்கிறார்

இணையவழி கையெழுத்து இயக்கம்

கேள்வி 1: திராவிடர் கழகத்தின் மூத்த தோழர் அ.அருள்மொழி, இளைய தலைமுறைத் தோழர் சே.மெ.மதிவதனி போன்றவர்களின் அறிவார்ந்த கொள்கை விளக்கப் பேச்சுகள், தொலைக்காட்சி விவாதங்களை நீங்கள் பார்க்கின்றபோது உங்கள் மனநிலை உணர்வது என்ன?

– மு.அய்யூப்கான், கும்பகோணம்

பதில் 1: விழுதுகளின் ஆற்றலைக் கண்டு வேர்கள் பூரிப்பது, ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’ என்ற குறளின் சுட்டல் – இவையே எமது பெருமிதத்திற்கானவை!

  • • • •

கேள்வி 2: வாங்கிய கடனுக்கென்று (ரூ.20,000) காஞ்சிபுரம் அருகே இருளர் இனப் பெண்மணி மகப்பேறு மருத்துவம் மேற்கொள்வதைத் தடுத்ததால் மகவுடன் உயிரிழந்துள்ளாரே – கொடூரமான அந்தக் கயமைத்தனம் கொண்டவனுக்கு என்ன தண்டனைக் கொடுத்தால் அது உச்சபட்சமாக அமையும்?

– எம்.சுரேசு, பெரம்பலூர்

பதில் 2: சட்டவரம்பின்படி முடிவு செய்ய வேண்டிய முழுப் பொறுப்பு நீதிமன்றத்திற்குரியது! அதை நாம் கூறுதல் ‘அதிகப் பிரசங்கித்தனம்’; தண்டனைக் கடுமையாக இருந்தால் மற்றொருவர் இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் துணிவதைத் தடுக்கும்.

  • • • •

கேள்வி 3: சமூகநீதி பற்றிய வரலாறுகளை, கருத்துகளை மாணவர்களிடம் நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?

– பி.முத்துக்குமாரபதி, தஞ்சாவூர்

பதில் 3: தமிழ்நாடு அரசின் பாடத் திட்டங்களிலும், பல்கலைக் கழகங்களின் பாடத் திட்டங்கள் ஆனாலும் ‘சமூகநீதி’ என்ற பழைய உண்மை வரலாற்றையும் பாடமாக்கி விளக்கிட வேண்டும்.

அது ஒருவகை நீதியின் வெளிப்பாடே தவிர, Compensatory justice – முந்தைய கொடுமைகளைக் களைந்து, சமணியம் ஏற்படுத்திடச் செய்யும் ஒரு முக்கிய ஏற்பாடு என்பதை விளக்கிட வேண்டும். ‘அனைவர்க்கும் அனைத்தும்’ என்ற அதன் கருத்தை விளக்குவது முக்கியம்!

  • • • •

கேள்வி 4: கிளாஸ் என்பது ஜாதியல்ல – வகுப்பு என்று திரிபுவாதம் செய்து பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்கான இடஒதுக்கீட்டில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்து இதுபோன்று குளறுபடிகளைச் செய்து வருகின்றதே?

– கி.செல்வி, கொளத்தூர்

பதில் 4: தந்தை பெரியார் அறிவுச் சிந்தனை ஆக்கத்தோடு, சென்னை அய்க்கோர்ட்டில் – அவமதிப்பு வழக்கில் தந்ததுதான் நினைவுக்கு வருகிறது. “பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைக் கடிக்காது; அட்டையிடம் ரத்த தானத்தை எதிர்ப் பார்க்கலாமா?”

  • • • •

கேள்வி 5: பெரியார், வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவரா?

– முனைவர் மூ.தவமூர்த்தி, தஞ்சை

பதில் 5: தனது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பல வள்ளலாரின் இறுதிக்கால கருத்துரைக் கொள்கைகளோடு எப்படி ஏற்றனவாயுள்ளன என்பதை சுமார் 80 ஆண்டு களுக்கு முன்பே திரட்டி (ஆறாம் திருமுறை) ஒரு சிறு வெளியீடாக்கிப் பரப்பினார் தந்தை பெரியார்!

‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’, ‘கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக’, ‘வேதம் (ஆகமம்) முதலான பொய்யடா’ என்ற வள்ளலாரை மக்கள் மன்றத்திற்கு முன் எடுத்துக் காட்டி சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்துள்ளார் தந்தை பெரியார்!

  • • • •

கேள்வி 6: சென்னை, அதன் சார்ந்த மாவட்டங்களில் இல்லாது – தொல்லியல் பழங்காலப் பொருள்கள், வரலாற்றுச் சுவடுகள் தென்மாவட்டங்கள்  மற்றும் சில மாவட்டங்களில் மட்டுமே கிடைப்பது ஏன்?

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– மு.சிவாஜி, சென்னை-12

பதில் 6: இப்பகுதியில் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட வில்லை; தொல்லியல் துறை குறிப்பிட்ட இடங்களில் கிடைத்தவற்றையே அதிக கவனஞ்செலுத்தியிருக்கிறது – ஆராய்ந்தால் தக்க பதில் கிடைக்கக் கூடும்! மற்றபடி வல்லுநர்களை நாம் இதுபற்றிக் கலந்து ஆலோசிக்க முன்வரவேண்டும்.

  • • • •

கேள்வி 7: “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என்று த.வெ.க. கூட்டணிக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதே – இது சரியா?

– ந.மணிமொழி, பூம்புகார்

பதில் 7: பெயர் இருக்கட்டும்; அந்த லட்சியங்களில் செயல் எப்படி என்பதை வைத்தே இதற்குப் பதில் வருங்காலத்தில் கிடைக்க வேண்டும்.

  • • • •

கேள்வி 8: அ.தி.மு.க. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் சில நாள்களிலேயே பதவி விலகினர். தற்போது மீண்டும் அவரவர் தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்களா?

– இரா.புதுமைப்பித்தன், சென்னை-27

பதில் 8: திணிக்கப்படும் இந்த இடைத்தேர்தலுக்கு யார் காரணம் என்பதையும், அதற்கு மக்கள் வரிப்பணம் விரயம், பொறுப்பை மறந்த இவர்களது எல்லையற்ற பதவி வெறி – இவற்றின் விளைவாகியே இத் தேர்தல் வருவதை மக்களுக்கு விளக்கி அறிவு கொளுத்த வேண்டும்!

  • • • •

கேள்வி 9: மீனவ கிராமங்களின் எதிர்ப்பையும் மீறிப் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவது பற்றித் தங்கள் கருத்து…?

– ஓவியன், அரும்பாக்கம்

பதில் 9: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததற்கு ஆளும் கட்சி சொன்ன காரணத்தையே அவர்கள் இதிலும் யோசிக்க வேண்டாமா? மீனவர்களின் எதிர்ப்பு மற்றும் பள்ளிகள் பாதிப்பு, ஜனநெருக்கடி எல்லாவற்றையும் தாண்டி, ‘சூப்பர் எல் நினோ’ அச்சம் இருக்கையில், கடற்கரை ஓரம் (ஜோசியத்தால் வந்த விளைவு என்று பல செய்திகள் வரும் நிலை ஒருபுறம்) – அது எதிர்காலத்தில் பெரிய ஆபத்தாகவும் கூட முடியும் வாய்ப்பு உள்ளதையும் அலட்சியப்படுத்தாமல் மறுசிந்தனை – மறுபரிசீலனைகளை ஏற்படுத்திட வேண்டும் – அவசரக் கோலம் அள்ளித் தெளித்த அவலமாகி விடக் கூடாதே!

  • • • •

கேள்வி 10: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சட்டமன்ற செயல்பாடுகள், அவரின்  பேச்சுகள் பற்றி…?

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– மு.அய்யூப்கான், மேலக்காவேரி

பதில் 10: சிறப்பாகவும் பொறுப் பாகவும் உள்ளார். மேலும் மெருகேற்றப்படுவதும் அவரது எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *