திராவிடர் வரலாற்று மய்யம் சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

 புராணங்கள் – இதிகாசங்கள் எல்லாம் வரலாறு அல்ல!

நடந்ததை நடந்தபடியே சொல்லுவதுதான் வரலாறு – அதில் ஒப்பனைகள் கூடாது!

சென்னை, ஆக.9  ஓர் இனம், ஒரு மொழி, ஒரு தத்துவம் இவையெல்லாம் இருக்கின்ற நாட்டில், நடந்ததை, நடந்தபடியே சொல்லுவதுதான் வரலாறு. அதில் ஒப்பனை கள் இருக்கக் கூடாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 4.8.2023 காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், ‘‘இந்திய வர லாற்றின்மீதான திரிபுவாதத் தாக்குதல்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது தொடக்கவுரையின் நேற்றையத் தொடர்ச்சி  வருமாறு:

உண்மையை நாங்கள் மட்டும் பேசுவதோடு, மற்றவர்களும் பேசவேண்டும்!

‘உண்மை’ பத்திரிகையின் ஆசிரியராக இருப்பது மட்டுமல்ல, உண்மையை நாங்கள் மட்டும் பேசுவதோடு, மற்றவர்களும் பேசவேண்டும்; வரலாற்று ஆசிரியர் களும் பேசவேண்டும். ஆனால், அதற்கு இப்பொழுது சோதனை ஏற்பட்டு இருக்கிறது என்கிற காலகட்டத்தில், நீங்கள் எல்லாம் ஆய்வு செய்ய வந்திருப்பதை நான் மிகவும் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.

இங்கு அதிக அளவில் வந்துள்ள பேராசிரியர்கள், கற்றறிந்த பெருமக்களாகிய நீங்கள் இதற்கு ஆழமாக உதவி செய்யவேண்டும்.

போர்க் காலத்தில் முதல் களப் பலியாவது உண்மைகள்தான்!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

In war, truth is the first casualty- போர்க் காலத்தில் முதல் களப் பலியாவது உண்மைகள்தான்.

ஆனால், இப்பொழுது நம்முடைய நாட்டில், போர்க் களங்களில் – விசித்திரமான ஒரு கருத்துப் போர்க் களம் இது – இதில் அன்றாடம் களப் பலியாவது உண்மைதான்.

அதைத்தான் பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது சொன்னார்கள்.

தத்துவம் என்பது வேறு; 

மதம் என்பது வேறு!

இன்று திரிபுவாதங்கள் எப்படி இருக்கின்றன என்று சொன்னால், தத்துவம் என்ற இடத்தில், மதம் அங்கே உள்ளே புகுத்தப்படுகிறது. தத்துவம் என்பது வேறு; மதம் என்பது வேறு.

ஆனால், தத்துவம் என்பதையே மதம் என்ற அளவிற்குக் கொண்டு போகிறார்கள். அடிப்படையிலேயே இந்தத் திரிபுவாதம்.

அதேபோல, கற்பனைகள் – புராணக் கற்பனை கள்; இதிகாசக் கற்பனைகள். கற்பனை வளம் – படைப்பாற்றலையொட்டித்தான் வந்தவையாகும்.

அறிவியலையும் இன்றைக்கு மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஆனால், அந்த புராணங்களைத்தான், இதிகாசங் களைத்தான் வரலாறாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

புராணங்கள்,இதிகாசங்கள் எல்லாம் வரலாறு என்று சொல்லி, பாட புத்தகங்களிலேயே மாற்றி அமைக்கப்படக் கூடிய ஒரு சூழல். அதேபோல அறிவியலையும் இன்றைக்கு மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவியலில், விஞ்ஞானத்தில் மிகப்பெரிய ஆபத்து என்ன நடந்துகொண்டிருக்கிறது? நண்பர்களே, அறி வியல் என்பது வேறு – போலி விஞ்ஞானம் என்பது வேறு.

இரண்டு ஜோதிடர்களும் 

ஒரே மாதிரி சொல்லமாட்டார்கள்!

அறிவியலில் மிக முக்கியமாக சுட்டிக் காட்டப்படவேண்டிய ஒரு செய்தி என்னவென் றால், ஜோதிடம் என்பது – அது அஸ்ட்ராலஜி. அதற்கு அடிப்படை அறிவியல் கிடையாது. இரண்டு ஜோதிடர்களும் ஒரே மாதிரி சொல்ல மாட்டார்கள். ஆனால், அறிவியலில், இரண்டு பேரின் முடிவும் ஒரே மாதிரித்தான் இருக்கும்.

அறிவியல் என்று சொல்லும்பொழுது அஸ்ட் ரானமி; போலி விஞ்ஞானம் என்பது அஸ்ட்ராலஜி.

ஆகவே, இரண்டையும் ஒன்று என்று சொல்ல முடியாது.

ஆனால், இன்றைக்கு என்ன செய்துகொண்டிருக் கிறார்கள் என்றால், போலி விஞ்ஞானத்தையெல்லாம் அறிவியலாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில நாள்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வெளி வந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்; பிள்ளையாரைப் பற்றி, ஒரு கருத்தை சொன்னார் சபாநாயகர், கேரளாவில்.

யானை கழுத்தை வெட்டி, பிள்ளையாருக்கு வைத்து விட்டார்கள் என்பார்கள். பிள்ளையாருக்கு இதுபோன்று மூன்று, நான்கு கதைகள் உள்ளன.

அந்தக் கதைகளை வைத்துக்கொண்டு நம் நாட்டில், பிளாஸ்டிக் சர்ஜரி என்பது நீண்ட காலத்திற்கு முன்பே பரமசிவனுக்குத் தெரிந்திருக்கிறது என்கிறார்கள். 

விஞ்ஞானிகள் மாநாட்டில் 

பிரதமர் மோடியின் விசித்திரமான உரை!

பரமசிவன், பிள்ளையின் கழுத்தை வெட்டிய தால், பார்வதி கோபித்துக் கொண்டார்; உடனே யானையின் கழுத்தை வெட்டி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இந்தப் பிள்ளைக்கு வைத்தார்கள் என்று விஞ்ஞானிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்த நம்முடைய நாட்டுப் பிரதமர் அந்த மாநாட்டில் பேசியிருக்கிறார்.

நோபல் பரிசு பெற்றவரின் அறிவிப்பு!

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், நோபல் பரிசு பெற்ற வருமான வெங்கட்ட நாராயணன் என்பவர், ‘‘இனிமேல் விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்பதாக இல்லை” என்று சொன்னார். இன்று வரையிலும் அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நான் இங்கு சொல்வதெல்லாம் நிதர்சனமான உண்மை. கற்பனையாக இதை நான் சொல்லவில்லை.

ஆகவே, வரலாறு ஒரு பகுதி; அவர்களுடைய திரிபுவாதத்தைச் சொல்வதென்றால், ஒரு கருத்தரங்கம் அல்ல; ஆயிரம் கருத்தரங்கங்கள் நடத்த வேண்டி இருக்கும்.

இப்படிப்பட்ட நேரத்தில்தான், நீங்களெல்லாம் திரிபுவாதத்தைப்பற்றி ஆய்வு செய்யவிருக்கிறீர்கள்.

இங்கே அழகாக சொன்னார் பேராசிரியர் கருணா னந்தம் அவர்கள்.

சர்.ஜான் மார்ஷல் நூற்றாண்டு!

சிந்துவெளி நாகரிகத்தினுடைய சிறப்பு என்னவென் பதைப்பற்றியெல்லாம் சர்.ஜான் மார்ஷல் அவர்கள் – அவருடைய நூற்றாண்டு அடுத்த ஆண்டு வரப் போகிறது; அதை மிகச் சிறப்பாகக் கொண்டாட விருக்கின்றோம் நாம்.

திராவிட நாகரிகம் என்பதைக் கண்டுபிடித்து சிந்து வெளி, மொகஞ்சதரா, ஹரப்பா என்று வந்தவுடன், அந்த ஆய்வு முடிவுகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தின.

மொகஞ்சதரா நாகரிகம் – திராவிட நாகரிகம் – சிந்துவெளி நாகரிகத்தில் முக்கியமானது காளை. அதை என்ன செய்தார்கள்  தெரியுமா?

காளையை குதிரையாக மாற்றினர்!

ஒன்றிய மனிதவளத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி என்ன செய்தார் என்றால், அமெரிக்காவில் உள்ள சிலரைப் பிடித்து, அதற்காக தனி பிலிம் தயாரித்து, குதிரை என்பது ஆரியர்கள் காலத்தில் வந்தது என்ற சூழல், வரலாற்று ஆசிரியர்கள் இதை எழுதியிருந்தாலும், அதில் இருந்தது காளையல்ல; அதற்குப் பதில் குதிரை என்று ஆட்களைச் சொல்லி எழுத வைத்தனர். ‘பிரண்ட் லைன்’ பத்திரிகையில் அதைப்பற்றி மிகப்பெரிய ஆய்வுகள் செய்து, எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதினோம்.

சிந்துவெளி நாகரிகத்தையே தலைகீழாக மாற்றி னார்கள்.

இப்போதுகூட என்ன சொல்லுகிறார்கள்? திராவிடம், திராவிடர்கள் என்பன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதில் அரசியல் இருக்கக் கூடாது.

நடந்ததை, நடந்தபடியே சொல்லுவதுதான் வரலாறு

ஓர் இனம், ஒரு மொழி, ஒரு தத்துவம் இவையெல்லாம் இருக்கின்ற நாட்டில். நடந்ததை நடந்தபடியே சொல்லுவதுதான் வரலாறு. அதில் ஒப்பனைகள் இருக்கக் கூடாது.

தந்தை பெரியார் அவர்களிடம் ஒருவர் ஆத்திரத் தோடு ஒரு கேள்வி கேட்டார், ‘‘நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே?’ என்று.

‘‘இல்லை, அதனால் இல்லை என்று சொல்கிறேன். இருந்தால் என்னிடம் வந்து சொல்லியிருப்பாரே?” என்றார் தந்தை பெரியார்.

இருக்கு என்று சொல்லிவிட்டுப் போகிறேன்!

இன்னொருவர் ஒரு கேள்வி கேட்டார், ‘‘ஒருவேளை கடவுள் திடீரென்று உங்கள் முன் வந்துவிட்டால், என்ன செய்வீர்கள்?” என்று.

‘‘இருக்கு என்று சொல்லிவிட்டுப் போகிறேன். இவ் வளவு நாள் வரவில்லையே, இதுநாள் வரை உங் களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். இப்போதுதான் வந்திருக்கிறீர்கள்; இதுவரை உங்களை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று சொல்வேன் என்று பளிச்சென்று பதில் சொன்னார் தந்தை பெரியார்.

ஆகவேதான், உண்மை என்பது, அது சான்றாவணம். அந்த சான்றுகளை வைத்துக்கொண்டு நாம் பேசுகிறோம்.

ஆனால், அவர்கள் அந்த சான்றுகளை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; திரிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். 

உரிய நேரத்தில், அருமையானவர்கள், தகுதியானவர்கள் வந்திருக்கிறீர்கள்!

அதை வரலாற்றுப் பேராசிரியர்களாக, வரலாற்று மாணவர்களாக இருக்கக்கூடிய நாம் அத்துணை பேரும் அதன் உண்மைத்தன்மையைச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆய்வரங்கம் – உரிய நேரத்தில், அருமையானவர்கள், தகுதியானவர்கள் வந்திருக்கிறீர்கள். இவ்வளவு பேர் இங்கே திரளுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதை ஒரு எளிய முயற்சியாகத் தொடங்கினோம். அய்யா ரஷீத்கான் போன்றவர்கள்; மற்றவர்களுடைய உற்சாகம்தான் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

ஆரியர் – திராவிடர் பற்றி வெள்ளைக்காரர் கால்டு வெல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்; அதுமாதிரி யெல்லாம் நம்மில் பேதம் கிடையாது. நாம் எல்லோரும் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள்.

ஆனால், உள்ளபடியே மக்களுக்குத் தத்துவத்தைச் சொன்ன இயக்கம் திராவிடம்.

‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்”

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

என்று மனிதத்தைச் சொன்னது திராவிடம்தான்.

மனிதனை மய்யப்படுத்தித்தான் 

அதன் தத்துவம்!

தந்தை பெரியாருடைய பார்வையில் பார்த்தீர்க ளேயானால், திராவிடர் கழகம், திராவிடர் அமைப்பு என்றெல்லாம் சொல்லுவது ஒருபக்கம் இருந்தாலும், அதனுடைய தத்துவத்தைச் சொல்லும்பொழுது மனி தனை மய்யப்படுத்தித்தான் அதன் தத்துவம் உள்ளது.

‘‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு”

எந்த மனிதன்?

அது அமெரிக்க மனிதனாக இருந்தாலும் பொருந்தும்; தமிழ்நாட்டு மனிதனுக்கும் பொருந்தும்; இலங்கையில் இருக்கும் மனிதனுக்கும் பொருந்தும். உலகத்தில் இருக்கக்கூடிய மனிதத்தை மதிக்கக்கூடிய மனிதர்கள் யாரோ, அத்துணை பேருக்கும் அது பொருந்தும்.

வெள்ளைக்காரர்கள்தான் ஆரியர் – திராவிடர் என்று பிரித்தார்கள் என்று சொல்வதில் உண்மை இருக்கிறதா?

‘‘அசல் மனுதர்மம்‘’

இதோ என் கையில் இருப்பது மனுதர்மம் புத்தகம். இதை நாங்கள் அச்சிட்டுப் பல பதிப்புகள் வெளி வந்திருக்கின்றன. அதற்குத் தலைப்பு என்னவென்றால், ‘‘அசல் மனுதர்மம்” என்பதுதான்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த எழுத்து முதற்கொண்டு, அப்படியே அதை போட்டோ காப்பி எடுத்து அச்சிட்டு வருகிறோம். 

காரணம் என்னவென்றால், நாங்கள் இதை மாற்றி விட்டோம் என்று சொல்லக்கூடாது என்பதினால்தான்.

1919 ஆம் ஆண்டு வெளிவந்த மனுதர்ம புத்தகத்தில் இருக்கிறபடியே அச்சிட்டு வருகிறோம்.

, ‘திராவிடம்’ என்ற சொல், எப்பொழுது, யாரால் உருவாக்கப்பட்டது என்றால், கால்டுவெல் அவர்களால் அல்ல; ஏற்கெனவே இருந்ததைத்தான் அவர் சுட்டிக் காட்டினார்.

இதோ என் கையில் இருப்பது அசல் மனுதர்மம்; 10 ஆவது அத்தியாயம்; 43 ஆவது சுலோகம்.

‘‘பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உப நயனம் முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள்..”

அடுத்ததாக,

10 ஆவது அத்தியாயம்;  44 ஆவது சுலோகத்தில்,

“பவுண்டரம், அவுண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள்.”

திராவிடம் வேறு; பாரதம் வேறு என்று நான் சொல்லவில்லை.

மனுதர்மத்துக்காரர்களைத்தான் 

குற்றவாளி கூண்டில் ஏற்றவேண்டும்

பிரிவினைவாதம் என்று யாராவது சொன்னால், எங்களைக் கொண்டுபோய் குற்றவாளியாகக் கூண்டில் ஏற்ற முடியாது. மனுதர்மத்துக்காரர் களைத்தான் குற்றவாளி கூண்டில் ஏற்றவேண்டும்.

இதில் மட்டுமல்ல, பாகவத புராணத்திலும் அதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். புராணம் என்பது வரலாறு அல்ல. இன்றைக்கு அதை வரலாறு என்று அவர்கள் சொல்கிறார்கள். அந்த வரலாற்றுப்படி பார்த்தால், திராவிடத் தேசங்கள், திராவிட தெய்வ தேசங்கள், திராவிட சிசு என்பதெல்லாம் திராவிடம் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் இருக்கிறது.

(தொடரும்)

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *