இந்தியக் குடியுரிமை அட்டை வழங்கக் கோரி வழக்கு! ஒன்றிய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, செப். 13- இந்தியர்களுக்கு குடியுரிமை அட்டை வழங்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த முத்துராமன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பல்வேறு நாடுகளிலும் குடிமக்களுக்கு குடியுரிமை அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலும் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் தனி அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

இந்தியர்களுக்கு தனியான குடியுரிமை அட்டை இல்லாததால் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.

ஆதார் தகவலின் அடிப்படையில் குடியுரிமைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன்,
ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.5-க்கு தள்ளிவைத்தது.

கிராமசபையில் நிறைவேறும் தீர்மானங்களைத் தெரிந்து கொள்ள

புதிய செயலி!

சென்னை, செப். 13- கிராமசபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை அறிந்துகொள்ள புதிய செயலியை ஊரக வளர்ச்சித் துறை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 12,571 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளின் கணக்கு வழக்குகள், முக்கிய தேவைகள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானம் நிறைவேற்ற ஆண்டுதோறும் 6 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டம் ஊராட்சித் தலைவரால் கூட்டப்படும். அப்போது, கிராமத்தின் தேவைகள் மற்றும் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த திட்ட அறிக்கையை, அரசு அதிகாரி முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம், கிராம சபைக் கூட்டங்களுக்கு உள்ளது. இந்நிலையில் கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக கிராமசபை செயலியை ஊரக வளர்ச்சித்துறை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறும்போது, “கிராமசபை நடவடிக்கைகளை இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அறிந்து கொண்டால் உள்ளாட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க முடியும். இதற்காக கிராமசபையின் நிகழ்ச்சி நிரல், நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உள்ளிட்ட தகவல்களை கிராம மக்கள் அறியும் விதமாக, புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அக்.2ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், இந்த செயலி மூலமாக வருங்காலத்தில் ஊராட்சி அமைப்புகளில் நடைபெறும் ஒப்பந்தங்கள், திட்டப்பணிகள் உள்பட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும்” என்றனர்.

திடக்கழிவு மேலாண்மையைத் திறம்படக் கையாளும் வகையில்

தூய்மை இயக்கத்துடன் ஊரக வளர்ச்சித் துறை இணைப்பு நடவடிக்கை!

சென்னை, செப். 13- தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் ‘க்ளீன்’ தமிழ்நாடு நிறுவனம், தூய்மை இயக்கம் ஆகியவை சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையில் இருந்து ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை: தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மையை உறுதி செய்வதற்காக, 2013ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ரூ.10 கோடி தொடக்க நிதியுடன் ‘க்ளீன்’ தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

அதன்பின் திடக்கழிவு மேலாண்மைக்காக ‘தூய்மை இயக்கம்’ என்ற மாநில அளவிலான புதிய இயக்கம் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. அதனுடன் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கிய சிடிசிஎல் நிறுவனமும் இணைக்கப்பட்டது. இதற்காக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக 3 ஆண்டுகளுக்கான முன்னோடித் திட்டமாக கும்பகோணம் மாநகராட்சியில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.4.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2026-2029ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கு சென்னை மாநகராட்சி மண்டலம் 9, ராமேசுவரம் நகராட்சி, கருங்குழி பேரூராட்சி மற்றும் திருத்தணி வட்டாரப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ.12.53 கோடிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

தற்போது சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘க்ளீன்’ தமிழ்நாடு கம்பெனி லிமிடெட், தூய்மை இயக்கம் ஆகியவை ஒட்டுமொத்தமாக ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றி ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *