சென்னை, செப்.10 தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுப் பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
சட்டமன்றத்தில் நடந்த சில சர்ச்சைகள் பொதுமக்களிடையே கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், “விஜய் கையை வைத்துத் தாடையைக் காட்டியது சரிதான். மிசா காலத்தில் காவலாளிகள் தாக்கியதால் எனது தாடை உடைந்தது; அந்தத் தழும்பு இன்றளவும் என்னிடம் உள்ளது. மிசா சிறையில் பல கொடுமைகள் நடந்துள்ளன. யார் கொச்சைப் படுத்தினாலும் வரலாற்றை மாற்றிவிட முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், அரசியலுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கூறிய பொய்க் குற்றச்சாட்டுகளையே ஜோசப் விஜயும் கூறிவருவதாகவும், சந்தேகம் இருந்தால் சட்டமன்ற நூலகத்திற்குச் சென்று முதலமைச்சர் தெரிந்துகொள்ளலாம் என்றும், அவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அரசியல் பழிவாங்குதலுக்காகவே அமலாக்கத்துறை வழக்குகள் போடப் படுவதாக சுட்டிக்காட்டிய அவர், தவெக ஆட்சியில் கொலை மற்றும் பாலியல் குற்றங்களால் சட்டம் ––-ஒழுங்கு படுகுழியில் வீழ்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
“தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு என்று ஒரு மாண்பு உள்ளது. ஆனால், முதலமைச்சர் விஜய் அதை ஒரு ‘ரீல்ஸ் மன்றமாக’ மாற்றிவிட்டார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக விவாதம் செய்யுங்கள்; தேவையற்ற சர்ச்சைகளைப் பேச வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாகத் தனது வீட்டிற்கு வந்தபோது, தேர்தல் பிரச்சாரத்தில் அதிகமாக விமர்சித்ததற்காக விஜய் ‘சாரி’ (Sorry) கேட்டதை நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின், “யாரைப் பற்றிப் பேசினாலும் கண்ணியத்தோடு பேசுங்கள் என விஜய்க்கு அறிவுறுத் தினேன். முதலமைச்சருக்கு உரிய கண்ணியத்துடன் வார்த்தைகளும் உடல்மொழிகளும் இருக்க வேண்டும். நாம் மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். ‘உண்மை ஊரைத் தாண்டு வதற்குள் பொய் உலகையே சுற்றிவிடும்’ என்ற பழமொழிதான் இங்கு நடக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அரசின் செயல்பாடு களை விமர்சித்த அவர் ‘‘பரந்தூர் திட்டத்தை ரத்து செய்ததன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை 15 ஆண்டுகள் பின்னோக்கி ஜோசப் விஜய் கொண்டு சென்றுவிட்டார்.
மாற்றம் வேண்டும் என வாக்களித்த மக்கள், இது சரியான மாற்றமா என்று சிந்திக்க வேண்டும். விவசாயிகளுக்குப் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவில்லை. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ‘தகுதி உள்ள வர்களுக்கு 3 சிலிண்டர்’ என அந்தர் பல்டி அடித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 தருவதாகக் கூறிவிட்டு, இன்னும் நாங்கள் கொடுத்த ரூ.1,000 தொகையையே வழங்கி வருகிறார்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும்’’ எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், “அவர்கள் தாத்தாவுக்காக சண்டை செஞ்சோம், அவங்க அப்பாவுக்காக சண்டை செஞ்சோம், இப்போ அவங் களுக்காகவே சண்டை செய்வோம்” என்று திமுக தொண்டர்களுக்கு உற் சாகமூட்டும் வகையில் தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
