‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு – ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

இன்றைக்கு நாங்கள் இருக்கிறோம்; நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம்!
நேற்று கலைஞர் இருந்தார்; ஆனால், இன்றைக்கு அவர் உடலால் இல்லை, உணர்வால் இருக்கிறார்!
தந்தை பெரியார் இன்றைக்கு உருவமாக இல்லை; உணர்வாக நிறைந்திருக்கிறார்!
திராவிடம் வெல்லும், அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்!

ராஜபாளையம், செப்.9   இன்றைக்கு நாங்கள் இருக்கி றோம்; நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம். நேற்று கலைஞர் இருந்தார்; ஆனால், இன்றைக்கு அவர் உடலால் இல்லை, உணர்வால் இருக்கிறார். தந்தை பெரியார் இன்றைக்கு உருவமாக இல்லை; உணர்வாக நிறைந்திருக்கிறார். எனவே திராவிடம் வெல்லும், அதை வரலாறு என்றைக்கும் சொல்லும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

Contents
இன்றைக்கு நாங்கள் இருக்கிறோம்; நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம்! நேற்று கலைஞர் இருந்தார்; ஆனால், இன்றைக்கு அவர் உடலால் இல்லை, உணர்வால் இருக்கிறார்! தந்தை பெரியார் இன்றைக்கு உருவமாக இல்லை; உணர்வாக நிறைந்திருக்கிறார்! திராவிடம் வெல்லும், அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்!ராஜபாளையத்தில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு!’’கலைஞர் நேரில் வந்து விவரங்களைக் கேட்டறிந்தார்!நீங்கள் சொல்வதை மீறமாட்டேன் என்றேன் கலைஞரிடம்!மறக்க முடியாத ஊர் மம்சாபுரம்!எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; வாழ்ந்த போது அவன் எதை சாதித்தான் என்பதுதான் மிக முக்கியம்!நீட் தேர்வின் கொடுமையால், 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழப்பு!பெரியார் கடவுளை எதிர்க்க வேண்டிய அவசியம் வந்தது ஏன்?பெரியார் உலகத்திற்கு 100 மூட்டை சிமெண்ட்டைக் கொடுத்தார்கள்!‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்’’நீதிக்கட்சி, திராவிட இயக்கம் வரவில்லை என்றால்…‘‘நீட் தேர்வை எதிர்த்துத் தீர்மானம் போடுவார்கள்; ஆனால், நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் பிரச்சாரத்திற்குத் தடை போடுவார்கள்!’’‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’தொகுதி மறுவரையறை என்றொரு தந்திரங்களை உண்டாக்குகிறார்கள்!எல்லா வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வா?‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட ஒரு பச்சை மோசடி!’மாணவர்களை திசை திருப்பலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்!உரிமைகளுக்காகப் போராடக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம்!பெரியாருடைய கொள்கை வேகத்தை யாராலும் தடுக்க முடியாதுதிராவிடம் வெல்லும், அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்!

ராஜபாளையத்தில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு!’’

்கடந்த 20.08.2026 அன்று மாலை 5.30 மணிக்கு, விருதுநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’ ராஜபாளையம் மதுரை ராஜா கடை தெருவில், ஏ.எஸ்.ஆர்.தங்கராசா அவர்களின் நினைவாக மேடை அமைக்கப்பட்டு நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

7.9.2026 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:

அன்றைக்கு மாலையில் பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது. அந்தக் கூட்டத்தைத் தள்ளி வைக்கலாம் என்று தோழர்கள் சொன்னார்கள். வேண்டாம் என்று சொல்லி, அந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிவிட்டு, சென்னைக்குப் பயணமானேன்.

கலைஞர் நேரில் வந்து விவரங்களைக் கேட்டறிந்தார்!

சென்னைக்குச் சென்றவுடனே, அடுத்த நாள், என் மூக்கினுடைய வலி  அதிகமாயிற்று. கலைஞர் அவர்கள் பதறிப் போய், எனது வீட்டிற்கு வந்தார்.  அன்றைக்கு மாலை வளவனூரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே எதிர்ப்பு நிறைய இருந்தது. அங்கே நான் செல்லவேண்டும் என்று சொன்னேன். அப்பொழுது காது, மூக்கு, தொண்டை நிபுணரான பிரபல டாக்டர் காமேசுவரன் அவர்கள் வந்தார். இன்றைய ‘விடுதலை’யில் அவர் என்னைப் பரிசோதித்தபோது எடுத்த நிழற்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருந்த நேரத்தில், கலைஞர் வந்தார், எங்கள் வீட்டுக்கு. எப்படி இது நடந்தது? என்று கேட்டார். அந்த விவரங்களையெல்லாம் சொன்னவுடன், ‘‘நீங்கள் அடுத்த கூட்டத்துக்குப் போகக்கூடாது’’ என்றார்.

‘‘இல்லீங்க, கூட்டத்தை ஒத்தி வைக்க முடியாதுங்க; எதிர்ப்பு இருக்கிற ஊர் வளவனூர். ‘பிராமணர் சங்கம்’ தீர்மானம் போட்டிருக்கிறார்கள். நான் போகாமல் இருக்க முடியாது’’ என்றேன்.

அப்பொழுது  டாக்டர் சொன்னார், ‘‘உடனே மருத்துவ மனையில் இவரை அட்மிட் செய்யவேண்டும். அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும். அப்படி செய்தால்தான், பின்னாளில் பிரச்சினை இருக்காது. மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருக்கும். மூக்குப் பகுதி அடிபட்டு இருக்கிறது’’ என்று கடுமையாகச் சொன்னார்.

எனக்கும், கலைஞருக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

‘‘கூட்டத்தை எப்படி ஒத்தி வைக்க முடியும்?’’ என்று கேட்டேன்.

எங்கள் வீட்டில் உள்ள குடும்பத்தார் எல்லாம் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.

நான், புறப்படத் தயாரானேன்.

நீங்கள் சொல்வதை மீறமாட்டேன் என்றேன் கலைஞரிடம்!

கலைஞர், என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘நான் சொல்வதை நீங்கள் கேட்கவில்லை என்றால், இனிமேல் உங்களுக்கும், எனக்கும் நட்பே இருக்காது’’ என்று  கடுமையாகச் சொன்னார்.

‘‘இல்லை, இல்லை, உங்கள் நட்பு எனக்கு மிகவும் முக்கியம். இதற்கு மேல் நான், நீங்கள் சொல்வதை மீறமாட்டேன்’’ என்றேன்.

மறக்க முடியாத ஊர் மம்சாபுரம்!

கலைஞர் அவர்களே,  என்னுடன் சுபேதா மருத்துவ மனைக்கு வந்தார். நான் அங்கே அட்மிட் ஆகி, மறுநாள் எனக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தேன். இன்றைக்குக் கூட என் மூக்கைப் பார்த்தீர்களேயானால், எல்லாருக்கும் நீளமாக இருக்கும்; ஒரே மாதிரி இருக்கும். எனக்கு அறுவைச் சிகிச்சை செய்ததினால், கொஞ்சம் கோணலாக இருக்கும். மூச்சு விடுவதில் சில நேரங்களில் திணறல் இருக்கும். ஏற்கெனவே ‘மிசா’வில் அடிபட்டு, இடதுபக்கம் கன்னத்தில் லத்தி சார்ஜ் செய்து, அது சிக்கலான ஒரு நிலை. அதைத் தாண்டி அடுத்த குவாலிபிகேஷன் இது. அடுத்த தகுதி – பொதுவாழ்க்கைத் தகுதிக்கான பரிசு. இதையெல்லாம் தாண்டி வந்ததுதான் எனது பொதுவாழ்க்கை. இது மறக்க முடியாத ஊர்.

எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; வாழ்ந்த போது அவன் எதை சாதித்தான் என்பதுதான் மிக முக்கியம்!

நான் வேடிக்கையாக சொல்லுவேன்; 44 ஆவது ஆண்டு என்று சொன்னார்கள். 44 ஆவது திவசமா? என்று நான் கேட்டேன். இதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படமாட்டோம். வீட்டை விட்டுப் புறப்படும் போதே, எங்கள் கணக்கை எழுதிவிட்டுத்தான் வருவோம்; திரும்பிப் போவ தைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அப்புறம்தான் வரவு வைக்க வேண்டும். அவ்வ ளவுதானே தவிர, செலவு கணக்கில் வந்துவிடும். ஏனென்றால், மனிதன் கொள்கைக்காக வாழ வேண்டும். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; வாழ்ந்த போது அவன் எதை சாதித்தான் என்பதுதான் மிக முக்கியமான ஒன்றாகும்.

அப்படிப்பட்ட ஒரு கொள்கை உணர்வை எனக்குத் தந்தது அறிவாசான் தந்தை பெரியார். எனக்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்களுக்கு மானத்தையும், அறிவையும் உண்டாக்கி இருக்கிறார். அந்த மானமும், அறிவும் உண்டானதால்தான், இன்றைக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு.  நீட் தேர்வை மறுபடியும், மறுபடியும் திணிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே. அதே மாதிரி இந்த இயக்கம் சந்தித்த எதிர்நீச்சல்களை, எதிர்ப்பைச் சொல்ல வேண்டும் என்றாலே, ஏதாவது முட்டுக்கட்டை போடலாமா என்று நினைக்கிறார்கள். திருநெல்வேலியில், நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு முதலில் அனுமதி இல்லை என்று காவல்துறையினர் மறுத்தார்கள்.  நீதிமன்றத்திற்குப் போன பிற்பாடு, அதற்கு அனுமதி கிடைத்தது.

நீட் தேர்வின் கொடுமையால், 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழப்பு!

நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? திராவிடர் கழகத்துக்காரர்களால் ஏதாவது,  எங்கேயாவது ஒரு வம்பு தும்பு உண்டா? பொதுச் சொத்துக்கு நாசம் உண்டா? பொது அமைதிக்கு எங்களால் ஏதாவது பங்கம் ஏற்பட்டதுண்டா? நீட்தேர்வினால், எத்தனை பிள்ளைகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  100 பேருக்கு மேலே உயிரிழப்பு ஆகியுள்ளது. அனிதாவில் தொடங்கி, எங்கள் பிள்ளைகளுடைய உயிர்கள் போயிருக்கின்றன. எதிர்காலத்திலே டாக்டர் ஆக வேண்டும் என்று நினைப்பது என்ன தேசிய குற்றமா? ஆனால், இன்றைய ஆட்சியிலே, காவி ஆட்சியிலே,  ஆர்எஸ்எஸ் ஆட்சியிலே என்ன காரணம்? ஒரே ஒரு காரணம் தான் தோழர்களே, இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், மனுதர்மம். அந்த மனுதர்மம்தான் இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணம்.  சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது. இதுதானே அவர்களுடைய கொள்கை. அதை எதிர்த்துத்தானே இந்த இயக்கம் போராடி வருகிறது. பெரியார் பிறந்திருக்காவிட்டால்… இத்தனைப் பேர் படித்திருக்க முடியுமா? என்னைப் பற்றி இங்கே சொன்னார்கள்; நான் மட்டுமல்ல, எத்தனையோ தோழர்கள் இங்கே இருக்கிறார்கள்; வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள், டாக்டர்கள் இருக்கிறார்கள். இவை யெல்லாம் எப்படி முடிந்தது?

பெரியார் கடவுளை எதிர்க்க வேண்டிய
அவசியம் வந்தது ஏன்?

ஒரு காலத்தில் நமக்கு வாய்ப்பு இல்லை என்று  சொல்லக்கூடிய கட்டம் இருந்தது. நாமெல்லாம் படிக்கக் கூடாது. ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும்,  கல்வியைக் கொடுக்கலாகாது’ என்றார்கள். ‘இதை நாங்கள் சொல்லவில்லை; கடவுளே அப்படி பண்ணிட்டார்’ என்று சொன்னார்கள். அதனால்தான், பெரியார் கடவுளை எதிர்க்க வேண்டிய அவசியம் வந்தது.  எங்களுக்கு ஒன்றும் கடவுள் மேல் கோபம் இல்லை. இருக்கிறவன் மேல் கோபம் வரலாம்;  இல்லாதவனிடம் எங்களுக்கு என்ன கோபம்?

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இதை நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். தோழர்களுக்குச் சொல்கிறேன். இந்து முன்னணி, அது, இது என்று சொல்லிக்கொண்டு மிரட்டலாம் என்று நினைக்கிறார்கள் பாருங்கள்; அரைவேக்காட்டுத்தனம் வேண்டாம்; பல அரைவேக்காடுகள் எல்லாம்  இன்றைக்கு வெளியே போய்விட்டார்கள். இந்தக் கட்சி எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறது. விபூதி வீரமுத்துகளிலிருந்து  அரைவேக்காடு அண்ணாமலை வரையில் அத்தனை பேரையும் சந்தித்திருக்கிறோம். ஆனால், அத்தனையிலும் எதிர்நீச்சல்தான்.

பெரியார் உலகத்திற்கு 100 மூட்டை சிமெண்ட்டைக் கொடுத்தார்கள்!

நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ‘‘93 வயதில், இவ்வளவு பெரிய எதிர்ப்பைத் தாண்டி வந்திருக்கிறார்; அதனால், 93 மூட்டை சிமெண்ட்டை பெரியார் உலகத்திற்குக் கொடுக்கிறோம்’’ என்று சொல்லிக் கொடுத்தார்கள்.  உடனே, இன்னொரு தோழர் சொன்னார், ‘‘100 வயதுவரை அவர் இருக்க வேண்டும் என்பதற்காக நான் ஏழு மூட்டை சிமெண்ட் மூட்டைக்கான பணத்தைக் கொடுக்கிறேன்’’ என்று சொல்லி, 100 மூட்டை சிமெண்ட்டைக் கொடுத்தார்கள்.

எத்தனை ஆண்டுகள் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல.  100 ஆண்டுகளாக இருந்தாலும் எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும், வாய்ப்புகள் என்ன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அது மாதிரி இன்றைக்கு 35 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. காரணம், ஒவ்வொருத்தரும் உணருகிறார்கள். இந்த இயக்கம் இல்லை என்றால், பாதுகாப்பு இல்லை என்று.

‘‘கருப்புச் சட்டைக்காரன்
காவலுக்குக் கெட்டிக்காரன்’’

எப்படி ஒரு ஊருக்குக் காவல் நிலையம் முக்கியமோ, எப்படி நமக்கெல்லாம் காவல் துறை நம்மைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி தீ அணைப்பு நிலையம், தீ அணைப்பது எப்படி முக்கியமோ, மருத்துவமனை எப்படி முக்கியமோ, அதுபோல திராவிடர் கழகம் இருக்கிறதே, அது  மூட நம்பிக்கை நோயையும், ஜாதி நோயையும் போக்குகின்ற மருத்துவமனையாகும். அதே மாதிரி, எங்கேயாவது ஜாதிக் கலவரமா? ஆணவக் கொலையா? அதைக் கண்டிக்கக்கூடிய, எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு காவல் துறை. ‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.’’ எங்களை எதிர்க்கிறவர்களுக்கும் சேர்த்துதான்.

பிஜேபிகாரர்கள் அல்லது ஆர்எஸ்எஸ்சில் தெரிந்தோ தெரியாமலோ சேர்ந்திருக்கிற தமிழர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வேலை செய்கிறோம். எங்கள் கட்சிக்காரர்களுக்காக அல்ல.

நீதிக்கட்சி, திராவிட இயக்கம்
வரவில்லை என்றால்…

பெரியார் அய்யா பிறந்திருக்கவில்லை என்றால், ஒடுக்கப்பட்ட சமுதாயம், பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம்  டாக்டர்களாகி இருக்க முடியாது. இன்றைக்கு ஏராளமான டாக்டர்கள் இருக்கிறார்கள்.  திரும்புகிற பக்கம் எல்லாம், பெரிய பெரிய டாக்டர்கள் இருக்கிறார்கள். தொண்டை என்றால், அதற்குத் தனி; ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனித்தனி சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஸ்பெஷாலிட்டி இருக்கிறது; சூப்பர் ஸ்பெஷாலிட்டி எல்லாம் இருக்கிறது. எப்படி படிக்க முடிந்தது? நீதிக்கட்சி, திராவிட இயக்கம் வரவில்லை என்றால், இது முடியுமா? உதாரணத்திற்குச் சொல்கிறேன், சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், மருத்துவப் படிப்புக்கு மனு போட முடியும். இதை எதிர்த்துப் பெரியார் சொன்ன பிற்பாடுதான், பானகல் அரசர், நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் அந்த முறை ஒழிக்கப்பட்டது.  சமஸ்கிருதத்தை எல்லோரும் படிக்கக் கூடாது; பார்ப்பனர், உயர்ஜாதிக்காரர்கள் மட்டும்தான் படிக்க முடியும்.

அதற்கு அர்த்தம் என்ன? சமஸ்கிருதம் படிக்கிறவன் மட்டும்தான் மருத்துவப் படிப்புக்கு மனு போட முடியும்; சமஸ்கிருதத்தை எல்லோரும் படிக்கக்கூடாது, பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும் என்றால், பார்ப்பனர் மட்டும்தான் டாக்டர் ஆக வேண்டும் என்று அர்த்தம். இதை எதிர்த்து, பெரியார் குரல் கொடுத்து, நீதிக்கட்சி, திராவிட ஆட்சி அன்றைக்கு அதை ஒழித்தது. அதை மீண்டும் வேறு ரூபத்தில் கொண்டு வருவதற்காகத்தான் நீட் தேர்வு. அதை நன்றாக நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான், அதை எதிர்த்து நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். அந்த நீட் தேர்விலும் ஊழல். நம்மாள்கள் சிலர் இதுபற்றி புரியாமல், ‘சார் நீட் தேர்வு நல்லதுதானே’ என்கிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்குப் பாம்பும் தெரியாது, பழுதையும் தெரியாது. அதே மாதிரி, எது சுண்ணாம்பு? எது வெண்ணெய் என்றும் தெரியாது. இதையெல்லாம் சுகாதார ஆய்வாளர் மாதிரி சொல்லக்கூடியவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள்தான். ஆகவேதான், அந்த முறையில், நாம் சொன்னோம். அதனுடைய அடிப்படையை இன்றைக்கு நம்முடைய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்.

‘‘நீட் தேர்வை எதிர்த்துத் தீர்மானம் போடுவார்கள்; ஆனால், நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் பிரச்சாரத்திற்குத்
தடை போடுவார்கள்!’’

ஊழலை ஒழிப்பதற்காகத்தான் நீட் தேர்வு என்று சொன்னார்கள். பணக்காரர்களுக்குத்தான் கோச்சிங் சென்டர்; நம்முடைய பிள்ளைகளுக்குக் கிடையாது. அதே மாதிரி EWS. அதை எதிர்த்துத்தான் பிரச்சாரம்; இருசக்கர வாகனப் பிரச்சாரம். தமிழ்நாடு சட்டமன்றத்தில், ‘‘நீட் தேர்வை எதிர்த்துத் தீர்மானம் போடுவோம். ஆனால், நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் பிரச்சாரத்திற்குத் தடை’’ என்று சொன்னால், என்னய்யா அர்த்தம்? ஏன் இந்த இரட்டை வேடம்,  இரட்டைக் குரல் என்று நாங்கள் கேட்கவில்லை; உயர்நீதிமன்ற நீதிபதி கேட்டார். அதற்குப் பிறகுதான், எங்கள் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்தார்கள்.

நாங்கள் இருந்தாலும், இறந்தாலும் இந்தக் கொள்கையைச் சொல்லிச் சாவோமே தவிர, வேறொன்றும் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான், நாளைக்குத் தொடங்குகிறோம். 22 ஆம் தேதி தொடங்குகிறோம்.  ஆறு இடத்தில், தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரம் மக்கள் மத்தியில் நடைபெறவிருக்கிறது. இதை இப்பொழுது தொடங்கவில்லை – அ.தி.மு.க. ஆட்சியில் செய்திருக்கிறோம்; தி.மு.க. ஆட்சியில் செய்திருக்கிறோம். ஏனென்றால், மக்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்.

‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’

ஒரே ஒரு நிம்மதி என்னவென்று கேட்டால், முதலில், தமிழ்நாடுதான் இந்த ஆபத்தையெல்லாம் கண்டுபிடித்துச் சொல்லும். பெரியார் கண்ணாடியில்தான் இதுபோன்ற ஆபத்து முதலில் தெரியும். அதை உடனே அன்றைக்குச் சொன்னோம். ஆனால், மற்றவர்களுக்கு அன்றைக்குப் புரியவில்லை. இப்பொழுது நாடு முழுவதும் உள்ளவர்களுக்குப் புரிந்திருக்கிறது.  வடநாட்டிலேயும் புரிந்து கொண்டார்கள். அதே மாதிரிதான் மண்டல் கமிஷன்; அதே மாதிரிதான் இட ஒதுக்கீடு. ஆகவே, அத்தனையும் புரிந்த கார ணத்தினால், இன்றைக்கு மக்கள் அதை எதிர்க்கிறார்கள். ஆனால், விடாப்பிடியாக ஆர்எஸ்எஸ் அதை ஆத ரிக்கிறது. காரணம் என்ன? ‘‘எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியை கொடுக்கக் கூடாது.’’ நாங்கள் சொல்லவில்லை, இதோ ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’  புத்தகம். இந்தப் புத்தகத்தைப் பெரியாரா எழுதினார்? வீரமணியா எழுதினார்? இல்லை மக்களே, அக்னி கோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

நாங்கள் யாரையும் எதிரிகளாக நினைக்கவில்லை. எங்களை எதிர்க்கும் நண்பர்கள், அவர்கள் பிஜேபியில் இருந்தாலும் சரி, ஆர்எஸ்எஸ்சில், தவறிப் போய், பாதை தெரியாமல் போயிருந்தாலும் சரி, அந்த நண்பர்களுக்கும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லுகிறோம். இவர் என்ன சொல்லுகிறார்,

‘‘ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத் தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். நம்மூர் மழைச்சாலையைவிட மலைச்சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்குத் தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது. ‘‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்…’’ ஆப்கானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோ,து கூடவந்த பெண்கள் கம்மி. ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால் மனுஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தனர்.’’

இதுதாங்க வரலாறு. இதுதான் திருப்பம். இதுதான் நம்முடைய அடிமைத்தனத்துக்கு முதலில் சுழி போட்ட ஒன்று. பகுதி, இந்த மனுதர்மம். இதைச் சொல்லி விட்டுச் சொல்கிறார் மிக முக்கியமாக, ‘‘ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தார்கள்.

பிராமணன், சத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.

‘‘சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே! சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை…’’

தொகுதி மறுவரையறை என்றொரு தந்திரங்களை உண்டாக்குகிறார்கள்!

இதுதான் இன்றைக்கு நடக்கிறது.  இந்த மனு தர்மத்தை, அரசியலமைப்புச் சட்டம் ஆக்க வேண்டும் என்றுதான், அம்பேத்கர் போட்ட சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்திற்கு மனுதர்மம் வரவேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.  அடுத்து பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில், மிக முக்கியமாக அடுத்த திட்டம் அவர்களுக்கு என்னவென்றால், மூன்றில், இரண்டு பங்கு பெரும்பான்மை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காகத்தான், தொகுதி மறுவரையறை என்றொரு தந்திரங்களை உண்டாக்குகிறார்கள்.

அதற்கு யார் யார் தங்களுக்குக் கிடைப்பார்கள் என்று, ராமாயணத்தில் கூலிப் பட்டாளத்தைத் தேடிய மாதிரி, அனுமார்களைப் பயன்படுத்தி, சுக்ரீவர்களைப் பயன்படுத்தி, விபீஷணர்களைப் பயன்படுத்தி, எல்லோ ரையும் சேர்த்துக்கொண்டு, மறுபடியும் ராமாயணத்தை வேறு ரூபத்தில் உண்டாக்குகிறார்கள். அப்படி அவர்கள் கொண்டு வந்தால், எதிர்காலத்தில் என்னாகும்? நிச்சய மாக நமக்கு வாய்ப்பில்லை. அதனால்தான், விடாப்பிடி யாக இவ்வளவு சொன்ன பிறகும்கூட, இவ்வளவு ஊழல் நிறைந்திருக்கிறது; பலமுறை ஊழல் நடந்திருக்கிறது என்றாலும், நீட் தேர்வை விடமாட்டேன் என்று சொன்னால், டாக்டர்களாக நம்மாட்கள் ஆகக்கூடாது; நம்மாட்களுக்குப் படிப்பு வரக்கூடாது என்பதுதானே!

எல்லா வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வா?

நீட் தேர்வு மட்டுமல்ல நண்பர்களே, நீட் தேர்வை வைத்து, கடகடவென்று கதவைத் திறந்தார்கள். க்யூட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு, அய்ந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு,  எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு, பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு, பதினோறாம் வகுப்பில் பொதுத் தேர்வு, 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு. அப்படியென்றால், பள்ளிக்கூடம் எதற்கு? கோச்சிங் சென்டர் நடத்திடலாமே! இதை கேட்பதற்கு நாதியில்லையா?

‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட
ஒரு பச்சை மோசடி!’

ஆகவேதான் நண்பர்களே, இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை உண்டா? என்றால், கிடையாது. இந்தப் புத்தகம், ‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட ஒரு பச்சை மோசடி!’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்திலேயே இதற்கு இடம் கிடையாது. அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டுத்தான் இந்த நீட் தேர்வு முகமை இயங்குகின்றது.

இந்தியாவில், தனியாக தேர்வு நடத்துவதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஒன்றிய அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் அந்த அதிகாரத்தை வழங்கவில்லை. வழங்காத ஓர் அரசியலமைப்புச் சட்ட உரிமையை, இன்றைக்கு எடுத்துக்கொண்டு, இந்தியாவையே, இந்திய மாணவர்களுடைய எதிர்காலத்தையே குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறது, நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு. அதற்கு உச்சநீதிமன்றம் தெரிந்தோ, தெரியாமலோ புரிந்தோ, புரியாமலோ உயர்ஜாதி ஆதிக்கம் இருக்கின்ற காரணத்தினால், அவர்கள், நாங்களும் சேர்ந்து செய்வோம், சரிப்படுத்துவோம், சரிப்படுத்துவோம் என்கிறது.

அதிகாரம் இல்லாத இடத்தில், என்னய்யா, சரிப்படுத்து வோம் என்று சொல்வது.  அரசியலமைப்புச் சட்டத்தில், தேர்வு நடத்துகின்ற உரிமை, பல்கலைக்கழகங்களுக்கு மட்டும்தான் உண்டு. பல்கலை கழகங்களைத் தொடங்குகின்ற  உரிமை, மாநில அரசாங்கங்களுக்கு மட்டும்தான் உண்டு. நான் வழக்குரைஞன்.

வழக்குரைஞன் நான்; சட்டம் படித்தவர்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறீர்கள். சட்டத்தை மதிக்கவில்லை, மக்களை மதிக்கவில்லை, மக்களுடைய உணர்வுகளை மதிக்கவில்லை, மாணவர்களை மதிக்கவில்லை. அதனால்தான்,  ஒரு புதிய கட்சி உண்டாயிற்று. எப்படி உண்டாயிற்று? அதற்கு என்ன பெயர் வைத்திருக்கி றார்கள் தெரியுமா? கரப்பான்பூச்சி கட்சி. அந்தப் பெயரை யார் வைத்தது தெரியுமா? உச்சநீதிமன்றம் வைத்த பெயர்.

மாணவர்களை திசை திருப்பலாம் என்று
சிலர் நினைக்கிறார்கள்!

‘கரப்பான்பூச்சி மாதிரி’  என்று சொன்னவுடன், அதுதான் சரியென்று, மாணவர்கள் அந்தப் பெயரைப் பிடித்துக் கொண்டார்கள். மாணவர்கள் புத்திசாலிகள், அவர்களிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஆனால், அவர்களைத் திசை திருப்பலாம் என்று சிலர் நினைக்கி றார்கள்.

ஆகவே, நண்பர்களே! இதை எடுத்துச் சொல்வ தற்காகத்தான் இந்தப் பயணங்கள்; உங்களுக்காக, எங்களுக்காக அல்ல; உங்கள் சந்ததியை காப்பாற்று வதற்காக – நம்முடைய சந்ததியினர் டாக்டர் ஆக வேண்டாமா? இனிமேல் அது நடக்காது. பள்ளிக்கூடங் களையெல்லாம் மூட வேண்டியதுதான், வெறும் கோச்சிங் சென்டர்களை மட்டும் நடத்தவேண்டியதுதான். பன்னாட்டு முதலாளிகள் பெருகி வர வேண்டியதுதான். ஆகவே, ஒரு பக்கம் தனியார் மயம்; பொதுத்துறைகளை எல்லாம் குளறுபடி செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா இவர்கள்தான். இங்கே நம்மூர்க்காரர்கள் கிடையாது. நம் ஊர் வியாபாரிகள் எல்லாம் கிடையாது. நம் ஊர் கத்திரிக்காய்க்குக் கூட ‘பேட்டன்ட் யார் வாங்கவேண்டும்? இங்கே இருக்கிற மாம்பழமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும், எல்லாவற்றிற்கும் இன்றைக்கு எங்களுக்குப் ‘பேட்டன்ட்’ வர வேண்டும் என்று சொல்வார்கள்.

உரிமைகளுக்காகப் போராடக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம்!

எனவே, நண்பர்களே! இந்த உரிமைகளுக்காகப் போராடக்கூடிய ஓர் இயக்கம், இந்த இயக்கம். இளை ஞர்களே, இந்த இயக்கத்துக்கு வாருங்கள்! எங்கள் பின்னால் வந்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? பெருமை கிடைக்காது; ஆனால், மானம் கிடைக்கும், அறிவு கிடைக்கும், உரிமை கிடைக்கும். அதே நேரத்தில் உங்களுக்கு வேறு சிறப்புகள் இருக்காது. மானத்திற்காக நாம் என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்போம். அப்படி பாடுபட்டதினுடைய விளைவை உணர்ந்துதான், அன்றைக்கு விருதுநகரில் நான்கு லட்சம் ரூபாய்; இன்றைக்கு 35 லட்சம் ரூபாய். பெரியாருடைய உலகம் தயாராக வேண்டும் என்பதற்காக கொடுத்துள்ளார்கள்.

பெரியாருடைய கொள்கை வேகத்தை
யாராலும் தடுக்க முடியாது

எனவேதான், யார் தடுத்தாலும், எப்படி கடலலையை கன்னியூட் மன்னர்கள் தடுக்க முடியாதோ, அது போலத்தான், பெரியாருடைய கொள்கை வேகத்தை, நியாயம் இருக்கிற காரணத்தால், நீதி இருக்கிற காரணத்தால், தியாகம் இருக்கிற காரணத்தால் யாராலும் தடுக்க முடியாது. அதைத்தான் மக்களுக்குச் சொல்லிவிட்டுப் போகவே இந்தக் கூட்டம். சிறப்பாக நடத்திய தோழர்களுக்கும், சிறப்பாக இறுதிவரை இருந்து கேட்ட நண்பர்களுக்கும் நன்றி!

திராவிடம் வெல்லும்,
அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்!

அத்தனை மம்சாபுரங்களையும் தாண்டி, மீண்டும் இன்றைக்கு இங்கே வந்து, எப்படி இத்தனை ஆண்டு களுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேனோ, அவை போல எத்தனை நடந்தாலும், இந்த இயக்கம் வாழும். இன்றைக்கு நாங்கள் இருக்கிறோம்; நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம். நேற்று கலைஞர் இருந்தார்; ஆனால், இன்றைக்கு அவர் உடலால் இல்லை, உணர்வால் இருக்கிறார். தந்தை பெரியார் இன்றைக்கு உருவமாக இல்லை; உணர்வாக நிறைந்திருக்கிறார். எனவே திராவிடம் வெல்லும், அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *