தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சமூகநீதி முழக்கம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

 நீதிக்கட்சி, திராவிட இயக்கம் போராடிப் பெற்றுத் தந்ததுதான் இட ஒதுக்கீடு!
இதனை ஒழிக்கப் பல்வேறு சூழ்ச்சிகளை அவ்வப்போது செய்து வருகிறார்கள் பார்ப்பனர்களும் – ஆர்.எஸ்.எஸ். கூட்டமும்!
 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற பெயரால், ‘பேக்வேர்டு கிளாஸ்’ என்பதில் உள்ள கிளாஸ் என்பது ஜாதியல்ல – வகுப்பு என்று திரிபுவாதம் செய்கின்றனர்!
 இதுவரை பேக்வேர்டு கிளாஸ் என்ற பட்டியலில், ஜாதியைத் தானே அளவுகோலாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது!

சமூகநீதியை ஒழிக்கும் இந்த சூழ்ச்சித் திட்டத்தை எதிர்த்து
செப்.11 அன்று தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

கட்சிகளைக் கடந்து ஒடுக்கப்பட்டோரே பங்கேற்பீர்!

சென்னை, செப்.8  சமூகநீதியைப் புதைக்க சூழ்ச்சி செய்யும் ஒன்றிய பி.ஜே.பி.யை எதிர்த்து, வரும் 11 ஆம் தேதி, தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! ஒடுக்கப்பட்டோரே, அணி திரள்வீர்! என்று அறைகூவல் விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்..

Contents
 நீதிக்கட்சி, திராவிட இயக்கம் போராடிப் பெற்றுத் தந்ததுதான் இட ஒதுக்கீடு! இதனை ஒழிக்கப் பல்வேறு சூழ்ச்சிகளை அவ்வப்போது செய்து வருகிறார்கள் பார்ப்பனர்களும் – ஆர்.எஸ்.எஸ். கூட்டமும்!  ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற பெயரால், ‘பேக்வேர்டு கிளாஸ்’ என்பதில் உள்ள கிளாஸ் என்பது ஜாதியல்ல – வகுப்பு என்று திரிபுவாதம் செய்கின்றனர்!  இதுவரை பேக்வேர்டு கிளாஸ் என்ற பட்டியலில், ஜாதியைத் தானே அளவுகோலாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது!சமூகநீதியை ஒழிக்கும் இந்த சூழ்ச்சித் திட்டத்தை எதிர்த்து செப்.11 அன்று தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!கட்சிகளைக் கடந்து ஒடுக்கப்பட்டோரே பங்கேற்பீர்!‘‘மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி? சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் வெற்றிக்குச் சான்று!’’  நூல் வெளியீட்டு விழா!தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரைஒவ்வொரு  மாநாடும், அகில இந்தியா முழுவதுமே நடத்தப்பட்டிருக்கிறது!வடநாட்டுத் தலைவர்களுடைய பங்களிப்பு என்பது அளப்பரியது!ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு சாயம் பூசுவார்கள் பார்ப்பனர்கள்!சமூகநீதி வரலாற்றில், ஒரு விசித்திரமான உண்மை! நீதிக் கட்சி உண்டாக்கிய ‘முதல் கம்யூனல் ஜி.ஓ.’நம்முடைய திராவிட இயக்கத்தின் நாணயமிக்க, அரசியல் நாணயமிக்க வரலாறு!முதன் முதலில் உணர்ந்தவர்கள் தென்னாட்டினர்தான்!தமிழ்நாடு, நீதிக்கட்சி ஆகியவைதான் வழிகாட்டியது!ஒத்துழைத்த தோழர்களுக்கு என்னுடைய நன்றி!சென்னை பெரியார் திடலில்தான் நடைபெற்றது!ராம்விலாஸ் பஸ்வானுக்கு தெளிவை உண்டாக்கியது பெரியார் திடல்!கட்சி செல்வாக்குப் போய்விடுமே என்று பயந்துபோய் உயர்ஜாதிக்காரர்களாக இருக்கக்கூடிய பா.ஜ.க., மற்றவர்கள் ஒப்புக்கொண்டனர்!ஜாதிவாரியாகக் கணக்கெடுப்போம் என்று பிஜேபியே ஒப்புக்கொண்டது, எப்பொழுது?21 ஆண்டுகளுக்கு மேலாக ஒத்தி வைக்கப்பட்டது!ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது எதற்காக?தந்தை பெரியாரின் விளக்கம்!மாறவே முடியாத, மாற்றப்படவே முடியாதது ஜாதிதான்!இன்றைய ‘விடுதலை’யில் வெளிவந்த செய்தி!இமாச்சல் பிரதேசத்தில் உள்ள அய்.அய்.டி.யில்…பொருளாதார அளவுகோல், ஆளுக்கு ஆள் மாறும்!மிகச் சாமர்த்தியமாக வகுப்பு வேறு; ஜாதி வேறு என்கிறார்கள்!திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும்தான்!மிகப்பெரிய அளவிற்கு நாம் போராட வேண்டிய அவசியம் இன்றைக்கு வந்திருக்கிறது!சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் விளக்கம்!இந்திரா சகானி வழக்கில் தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது!மாநில அரசு எடுத்தால், நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்கின்றனர் நீதிபதிகள்!நமக்குக்  கிடைத்திருக்கின்ற வாய்ப்புகளைப் பறிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன!புதிய ஜாதிகள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது!ெசப்.11  இல் திராவிடர் கழகம் முதல் போராட்டம் – முதல் முழக்கத்தைக் கொடுக்கவிருக்கிறது!தமிழ்நாடு அரசு உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்!ஓபிசி என்பது, ஜாதி அடிப்படைதான்!

‘‘மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி?
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் வெற்றிக்குச் சான்று!’’  நூல் வெளியீட்டு விழா!

நேற்று (7.9.2026) மாலை 6.30 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி? சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் வெற்றிக்குச் சான்று!’’  நூல் வெளியீட்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு::

தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

‘‘மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி? சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் வெற்றிக்குச் சான்று!’’   என்ற புத்தகத்தின் அறிமுக விழா சிறப்பு வாய்ந்ததாகும்.  இந்தப் புத்தகத்தின்  வெளியீட்டு விழா என்பது முத லிலே அறிவிக்கப்பட்டு, அன்றைக்கு என்னுடைய உடல்நிலை, தொண்டை ஒத்துழைக்காத காரணத்தால், தள்ளி வைக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட இந்த  விழா சிறப்பாக இன்றைக்கு (7.9.2026) நடை பெறுகிறது. இவ்விழாவிற்குத் தலைமை ஏற்றிருக்கக் கூடிய நம்முடைய கழகத் துணைத்தலைவர்  மானமிகு கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களே, இந்நூலை வெளியிட்டு சிறப்பான முறையிலே ஓர் ஆய்வுரையை இங்கு நிகழ்த்தி இருக்கக்கூடிய நம்முடைய கொள்கைக் குடும்பத்திலே ஒருவரும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவருமான அன்பிற்குரிய பேராசிரியர் சுப.வீ. அவர்களே, நூலினைப் பெற்றுக்கொள்ளும் திராவிடர் கழக  வெளியுறவுச் செயலாளரும், வங்கி கள் துறையிலே ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மிகப்பெரிய அளவுக்கு அகில இந்திய அளவிலே சிறப்பாக தொண்டு புரிந்து வரக்கூடியவருமான அருமை தோழர் கோ.கருணாநிதி அவர்களே,

இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய கழகப் பொரு ளாளர் தோழர் வீ.குமரேசன் அவர்களே, நன்றி உரை கூற இருக்கக்கூடிய வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களே, மற்றும் சிறப்பாக இங்கே குழுமி உள்ள கழக முக்கியப் பொறுப்பாளர்களே, கழகக் கொள்கை குடும்பத்தினர்களே, புத்தகங்களை வாங்கி ஆதரவு தந்த வாசகப் பெருமக்களே, தாய்மார்களே, பெரி யோர்களே, நண்பர்களே, ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூல் வெளியீட்டு விழாவிற்காகத் தன்னுடைய  உடல்நிலையைக் கருதாது நம்முடைய கவிஞர் போன்றவர்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி.

ஒவ்வொரு  மாநாடும், அகில இந்தியா முழுவதுமே நடத்தப்பட்டிருக்கிறது!

இந்நூல், 380 பக்கங்களை கொண்டிருக்கிறது. 380 பக்கங்கள் என்று சொன்னாலும், இதன் உள்ளே இருக்கின்ற கருத்துகளை எல்லாம் கணக்குப் போட்டால்,  500 பக்கங்களாக வந்திருக்கும். அந்தளவிற்குத் தகவல்களைத் தொகுத்திருக்கிறோம். இந்த நூலினுடைய தனிச் சிறப்பு என்னவென்றால், மண்டல் கமிஷன் மாதிரி ஒரு கமிஷனை அமைக்கவேண்டும் என்று சொல்லி, முதலாவது காகாகலேல்கர் கமிஷன் வெளிச்சத்துக்கே வராது, இருட்டிலே வைக்கப்பட்ட ஒன்றாக, அது ஒன்றுமே இல்லாமல் தூசித் தட்டி,  அலமாரிக்குள்ளே பூட்டி வைக்கப்பட்டது போல இருந்தாலும், அதே நிலை எங்கள் கமிஷனுக்கும்  வரக்கூடாது என்று பி.பி.மண்டல் அவர்கள் சொன்னார். அந்த நிலையில் ஒரு பத்தாண்டுக் காலம் தொடர்ந்து ஆட்சிகள் மாறி இருக்கின்றன; காட்சிகள் மாறி இருக்கின்றன. சூழ்ச்சிகள் வேகமாக நிறைவேற்றப்பட்டன. எல்லாம் இருந்தாலும் கூட, அவற்றை எல்லாம் தாண்டி,  மண்டல் கமிஷன் அறிக்கையில், 27 சதவீதம் என்பதை முதற்கண் வேலைவாய்ப்பிலே வழங்க வேண்டும் என்று போட்டு, அதற்கு நீதிமன்றங்கள் தடைகள், நீதிமன்றத்தினுடைய ஒத்துழையாமை, பிறகு பல்வேறு நீதிமன்றப் படையெடுப்புகளால்  காலதாமதம் ஆனது. முதலில், வெளியிட்டு, அமல்படுத்த வேண்டும் என்று மாநாடு போட்டோம். எல்லோரும் என்ன செய்வார்கள் என்றால், அமல்படுத்துங்கள் என்று மாநாடு போடுவார்கள். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில், தேவ்ராஜ் அர்ஸ் அவர்கள் பங்கேற்றார்.  மாநாடுகள், அகில இந்தியா முழுவதுமே நடத்தப்பட்டிருக்கின்றன. அப்படி நடத்தப்பட்ட  மாநாடுகளின் விவரங்களைப்பற்றி தேதி வாரியாக இந்த நூலில் பதிவிட்டிருக்கிறோம்.

வடநாட்டுத் தலைவர்களுடைய
பங்களிப்பு என்பது அளப்பரியது!

மண்டல் அறிக்கையை வெளியிட்டு, அமல்படுத்துமாறு கேட்கிற ‘டிமாண்ட் மாநாடு’ அகில இந்திய அளவில்;  பத்து ஆண்டுகள் தாமதமானது. அதற்குப் பிறகு வழக்குகள்  நடந்து  சில ஆண்டுகள் ஓடின. சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமராக வந்தார். அவர் காங்கிரசில் இருந்தபோது, மண்டல் கமிஷனை எதிர்த்தவர். ஒரு நல்ல வாய்ப்பாக,  அப்படிப்பட்டவருக்கு நல்ல புரிந்துணர்வை உண்டாக்கினோம். இதில் வடநாட்டுத் தலைவர்களுடைய பங்களிப்பு என்பது அளப்பரியது. அதற்காக  அவர்களை என்றென்றைக்கும் பாராட்ட, நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒவ்வொரு இடத்திலும்,
ஒவ்வொரு சாயம் பூசுவார்கள் பார்ப்பனர்கள்!

குறிப்பாக நம்முடைய நண்பர்கள், வடக்கே இருந்த ஹிந்தி பகுதியில் இருக்கக்கூடியவர்கள். நம்மைப் பார்த்த உடனே, திராவிடர்  கழகத் தோழர்கள்  முயற்சி எடுத்த உடனே, பார்ப்பனர்கள் கெட்டிக்காரத்தனமாக, நமக்கு ஒவ்வொரு இடத்திலும்,  ஒவ்வொரு சாயம் பூசுவார்கள். ‘‘இவர்கள் எல்லாம் ஹிந்தி எதிர்ப்பாளர்கள்;  தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள்’’ என்றார்கள். இன்னொரு இடத்திற்குப் போனால், ‘‘இவர்கள் எல்லாம் கடவுள் ஒழிப்பாளர்கள்; இங்கே ஏன் வருகிறார்கள்?’’ என்றெல்லாம் சொன்னார்கள்.

அதெல்லாம் ஒரு பக்கத்தில் நிறுத்தி வைத்து விட்டு, சமூக நீதியை சொல்லி எல்லாரையும் ஒன்றுதிரட்டக்கூடிய அளவில் செய்தபோது, சந்திரஜித் யாதவ் போன்றவர்கள், அதேபோல பிரம் பிரகாஷ்; டில்லி சட்டமன்றத்தில்  அமைச்சராக இருந்தவர். நேருவுக்கு அவர்  நடைபயிற்சியில் ‘வாக்கிங் மேட்’ – டில்லியினுடைய பாதிச் சொத்து அவருடையது என்று சொல்வார்கள். அவ்வளவு பெரிய வசதியானவர் அவர்.  அதுபோலவே மிகப்பெரிய அளவிற்கு பீகாரை சார்ந்த நம்முடைய கர்ப்பூரி தாக்கூர் அவர்கள்.  டி.பி.யாதவ் அவர்கள். அவர் கல்வி அமைச்சராக இருந்தவர்.

அதுபோல பல பேர் வந்தார்கள். அவற்றிற்குப் பல வகையான அவதூறுகளை உண்டாக்கினார்கள் பார்ப்ப னர்கள்.  யாதவர்கள் எல்லாம் சேர்ந்து செய்கிறார்கள் என்றனர் பார்ப்பனர்கள் எதில் நுழையலாம் என்று பார்ப்பார்கள். மண்டல் யாதவ் பிரிவைச் சேர்ந்தவர். ஆகவே,  யாதவர்கள் எல்லாம் இதைச் செய்திருக்கிறார்கள் என்றனர்.  யாதவர்களுக்காக மட்டுமா இது?

ஆசிரியர் உரை

சமூகநீதி வரலாற்றில்,
ஒரு விசித்திரமான உண்மை!

ஆகவே, இப்படி எல்லாம் சொன்ன நேரத்தில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த அமைப்பும் சேராத முன்பே முன்னேறிய ஜாதிக்காரர் மண்டி ராஜா என்று சொல்லக்கூடிய விஸ்வநாத் பிரதாப் சிங் தான் – முத்தையா முதலியார் அவர்கள் மாதிரி வந்தார்.  சமூகநீதி வரலாற்றில், இது ஒரு விசித்திரமான உண்மை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காரர் இதைக் கொடுக்கவில்லை. அதற்காகப் பாடுபட்டாலும், அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதை நடைமுறைப்படுத்தி யதில், முத்தையா முதலியார், முன்னேறிய ஜாதி; வி.பி.சிங் முன்னேறிய ஜாதி. அவர்களைப் பயன்படுத்தி இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்திருக்கிறது. இதுதான் ஒரு பெரிய அதிசயம்.

 நீதிக் கட்சி உண்டாக்கிய
‘முதல் கம்யூனல் ஜி.ஓ.’

கம்யூனல் ஜிஓ என்ற வகுப்புவாரி உரிமையை, 1920 இல் பனகால் அரசர், நீதிக் கட்சி உண்டாக்கிய ‘முதல் கம்யூனல் ஜி.ஓ.’ இந்தப் புத்தகத்தில், அதற்குரிய புள்ளிவிரங்கள் எல்லாம் இருக்கிறது. தேதிவாரியாக, அரசு ஆணை எண் உள்பட. இந்தப் புத்தகம் ஓர் ஆவணப் புத்தகம்.

1920 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த உடனே. பனகால் அரசர் அந்த முயற்சியை எடுக்கிறார். நீதிக்கட்சி, திராவிட இயக்கம். இதை உச்சநீதிமன்றத்தில், மகாராட்டிரத்தைச் சார்ந்த பி.பி.சாவந்த் என்று சொல்லக்கூடிய நீதிபதி,  இதைப் பதிவு செய்திருக்கிறார். இட ஒதுக்கீடே முதலில் அவ்வளவு சீக்கிரம் வரவில்லை என்று.  மண்டல் கமிஷன் தீர்ப்பிலேயே மிகத் தெளி வாக, ஒன்பது நீதிபதிகள் தீர்ப்பில் வெளியே வந்திருக்கிறது.

நம்முடைய திராவிட இயக்கத்தின் நாணயமிக்க, அரசியல் நாணயமிக்க வரலாறு!

ஆகவே, 1920 ஆம் ஆண்டிலிருந்து முயற்சி செய்தால், அதிகார வர்க்கத்தினர், வெள்ளைக்காரர்க ளையே தங்கள் வசப்படுத்திக் கொண்டு, அதை நடை முறைப்படுத்தாமல் ஆக்கி, கடைசியில் நீதிக்கட்சிக்குப் போதிய பலம் இல்லை என்று சொன்ன உடனே, இனிமேல் நாங்கள்  அதில் இருக்க விரும்பவில்லை. அதுதான் அரசியல் நேர்மை; தன் கட்சிக்குப் போதிய பலம் இல்லை என்றவுடனே, அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், நாங்கள் ஆட்சி செய்ய விரும்பவில்லை. நாங்கள் வேண்டுமானால், சுேயச்சையாக வெற்றி பெற்ற சுப்பராயனுக்கு ஆதரவு கொடுப்போமே தவிர, நாங்கள் முதலமைச்சராகி,  யாரை வேண்டுமானாலும் மேய்த்துக் கொண்டிருப்போம் என்பது இல்லை. நம்முடைய திராவிட இயக்கத்தின் நாணயமிக்க, அரசியல் நாணயமிக்க வரலாறு இது. அப்படிப்பட்ட வரலாற்றில்,  முத்தைய முதலியார் அவர்கள், அந்த அமைச்சரவையில்,  அமைச்சராக ஆனார்.  அந்த வரலாறுகளைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

1928 ஆம் ஆண்டு மூன்றாவது கம்யூனல் ஜி.ஓ. வந்த உடனேதான் செய்ய முடிந்தது.  அது இதே மாதிரி ஒரு பகுதிக்கு தான் முதலில் ஆரம்பித்தார். இது எப்படி வேலைவாய்ப்பிற்கோ அதே மாதிரி.

முதன் முதலில் உணர்ந்தவர்கள் தென்னாட்டினர்தான்!

எனவே, பத்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் ‘ஒரு டெக்கேடு’ என்று சொல்லுவார்கள். அது வரைக்கும் போராட்டம் நடத்தினோம். அதே மாதிரிதான், மண்டல் கமிஷனுக்கு பெரிய அளவு 10 ஆண்டுகள்; எங்கே பார்த்தாலும் மாநாடுகள் நடத்தினோம்.  46 மாநாடுகள், 16 போராட்டங்கள்; உத்தரப்பிரதேசம், பீகார், டில்லி போன்ற மாநில வடநாட்டுத் தலைவர்கள் எல்லாம் மிகப்பெரிய அளவுக்கு நமக்கு ஆதரவு கொடுத்த காரணத்தால்தான்,  ஹிந்திப் பகுதிகள் உள்பட உணர வைத்திருக்கிறோம். ஏனென்றால், இதனை முதன் முதலில் உணர்ந்தவர்கள் தென்னாட்டினர்தான்.

தென்னாட்டில், முதன்முதலில், மகாராட்டி ரத்தில், கோல்காப்பூரில், சத்திரபதி  சாகு மகாராஜ்  அவர்கள், 1902 இல், 50 சதவிகித இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று  உத்தரவு போட்டவர் அவர்தான்.  அதே மாதிரி மில்லர் கமிட்டி என்று சொல்வல்,  மைசூர் தனி ராஜ்ஜியம், அதில் சிறப்பாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு, நீதிக்கட்சி ஆகியவைதான் வழிகாட்டியது!

எனவே, தென்னாடு, அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, நீதிக்கட்சி ஆகியவைதான் வழிகாட்டியது. இந்த வரலாறே தெரியாது பெரும்பாலோருக்கு! அந்த வர லாற்றை எல்லாம் சொல்லிக் கொடுக்கிற மாதிரி இந்த நூல்கள் இருக்கின்றன.

ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஒரு பத்தாண்டு காலம். ஆனால், அதைப்பற்றி விளக்கம் வந்த பிற்பாடு, நடைமுறையில் கொண்டு வரக்கூடிய அளவிற்கு, ஒரு டாக்குமென்டேஷன் ஆவணம் வேண்டும். அதற்காகத்தான் இந்தப் புத்தகம். இந்தப் புத்தகம் தயாராவதற்கே,  தோழர்களே நீ்ங்களெல்லாம் வியப்படைவீர்கள்; ஒன்றரை ஆண்டிலிருந்து, இரண்டு ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. அதற்கு என்ன காரணம் என்றால், தரவுகளும், தகவல்களும் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. வி.பி.சிங்கைப் பற்றி ஒரு தவறான படத்தை வரைய வேண்டும், அரசியலில். அவர் ஏதோ ஒரு ஜாதி வெறியர் மாதிரி காட்டி, தொடர்ந்து பார்ப்பனர்கள், ஊடகத்தவர்கள் தொடர்ந்து எழுதி, அவருக்கு என்னமோ புரியாத மாதிரியும், தெரியாத மாதிரியும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினர். வெற்றி அடையக்கூடிய காலகட்டம் வந்த உடனே, அவர் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் கடைசி நேரத்தில், இதை செய்தார் என்றார்கள். ஆனால், அந்தப் பலூன், ரொம்ப சீக்கிரம் வெடித்துப் போயிற்று. பதவியை காப்பாற்றவில்லை, அவர் இதைக் கொண்டுவந்ததினால்தான், பதவியே போயிற்று. அப்பொழுது, பெருமையாகச் சொன்ன ஒரே ஒரு பிரதமர்தான் இந்தியாவில், ‘‘நான் எத்தனை முறை வேண்டுமானாலும், சமூக நீதிக்காக இந்தப் பிரதமர் பதவியை துறக்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று சொல்லி, ‘‘மண்டலா, கமண்டலா?’’ என்று கேட்டார், அதுதான் மிக முக்கியம்.

ஒத்துழைத்த தோழர்களுக்கு
என்னுடைய நன்றி!

இந்த வரலாறுகளை எல்லாம் மிக முக்கியமாக நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். ‘‘பப்ளிக் மெமரிஸ் வெரி ஷார்ட்’’ – பொதுமக்களுக்கு மறதி அதிகம். நேற்று என்ன சாப்பிட்டோம் என்று கேட்டுப் பாருங்கள்; நம்ம ஆட்களுக்கு என்ன சாப்பிட்டோம் என்று தெரியாது.  யோசனை செய்துகொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்த ஆவணம் என்பது மிக முக்கியமானது. எனவே, இதை சிறப்பாகத் தயாரிப்பதற்கு ஒத்துழைத்த தோழர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

சென்னை பெரியார் திடலில்தான் நடைபெற்றது!

ஏன் ஒன்றரை ஆண்டுகள் ஆனது என்று சொன்னால், தரவுகளைத் தேடிப் போகும்போது, புது தரவு, வேறொரு இடத்தில்.  அதுவும் எப்படி இருக்கும். ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நாத்திகர்களையே இப்பொழுது  ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள் பாருங்கள், பெரிய அளவுக்கு. அதே மாதிரி நாத்திகர்கள் யார் என்றால், யார் தாக்கியிருக்கார்களோ, அவர்கள் பேர்தான் வரும்.  பெரிய அளவிற்கு.  யார் அவரைப் பற்றி தவறாக சொல்றாங்களோ, அதை நினைத்துக் கொண்டுதான் – சார்வாகர்கள்;  சார்வாகன் என்று சொன்னால், அந்த சார்வாகனைப்பற்றி எப்படித் தெரிந்துகொள்கிறோம் என்றால், எதிரி திட்டறான் பாருங்கள், அதிலிருந்துதான் தெரிந்து கொள்கிறோம். பல விஷயங்கள், அவ்வளவு மறைத்துவிட்டார்கள். மண்டல் குழு செயல்பாட்டுக்கு மூல காரணமாக இருந்தவர் யார் என்று சொன்னால், என்றென்றைக்கும் நம்முடைய நன்றிக்குரியவர் எப்படி வி.பி.சிங்கோ, அதேபோல நன்றிக்குரியவர்கள் யார் என்று சொன்னால், நம்முடைய ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் ஆவார்.  இத்தனைக்கும் அவர் பேக்வர்ட் கம்யூனிட்டி இல்லை, அவர் எஸ்சி. ஆனால், அந்த வித்தியாசமுமே பார்க்காமல், நம்முடைய அமைப்பில் அவர் வந்த உடனே, மிகப்பெரிய அளவுக்கு சந்திரஜித் யாதவ் போன்றவர்கள் வந்தார்கள். இங்கேதான்  பெரிய இணைப்பு ஏற்பட்டது. இதே நூலகத்தில்தான், நாம் மாநாடு போட்ட நேரத்தில், ‘‘நேஷனல் யூனியன் ஆஃப் பேக்வர்ட் கிளாசஸ்’’ என்று  பிரம் பிரகாஷ் தலைமையிலே கூட்டம் நடந்தது. அதற்கு, அகில இந்தியாவில் இருந்து வந்தார்கள். அப்பொழுது  முதல் முதலில் ஒரு ஆலோசனை சொன்னோம்.  வெறும் பேக்வர்ட் கிளாஸ் மட்டும் இருக்கக்கூடாது; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தையெல்லாம்  சேர்க்க வேண்டும் என்றோம்.  ஆகவே ‘‘நேஷனல் யூனியன் ஆஃப் பேக்வர்ட் கிளாசஸ் அண்ட் ஷெட்டியூல் காஸ்ட்  ஷெட்டியூல் டிரைப் அண்ட் மைனாரிட்டிஸ்’’ என்று சேர்த்து போடுங்கள் என்றோம்.

ராம்விலாஸ் பஸ்வானுக்கு
தெளிவை உண்டாக்கியது பெரியார் திடல்!

அந்தக் கருத்தில், எல்லோரும் ஒன்றாக வந்தனர். வி.பி.சிங் காங்கிரசில் இருந்த போது எதிர்த்தவர். அவருக்குத் தெளிவுபடுத்தும் வகையில், அவருக்குப் பாடம் எடுத்தது யார்? என்று சொன்னால், ராம்விலாஸ் பஸ்வான். ராம்விலாஸ் பஸ்வானுக்கு இவ்வளவு தெளிவு உண்டாக்கியது யார் என்று சொன்னால், பெரியார் திடல்! அதனால், அவர் மிகப் பெரிய அளவுக்கு ஒரு தீவிரமான உணர்வு படைத்து, சமூக நீதியைப் பற்றி நாடாளுமன்றத்தில் முதன் முதலில் மண்டல் கமிஷனைப் பற்றி இனிஷியேட் செய்தவர்;  இரவு 12 மணி வரையில், இந்திராகாந்தி அம்மையார்  பிரதமராக இருந்தபோது, நடந்தது. ‘‘ரிசர்வேஷன் இஸ் நான் நெகோஷியபில்’’ என்ற  ஒரு தீர்மானத்தை இரவு 12 மணிக்கு  நிறைவேற்றினார்கள். இந்த வரலாறு எல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாது, பதிவு செய்யவேண்டும். அதுதான் மிக முக்கியம். அப்படி வந்ததுதான் 27 சதவிகிதம். ஆனால், அந்த 27 சதவிகிதம் இன்றைக்கு இருக்கிறதா? பெற்றது கைமண் அளவு; பெறாதது உலகளவு. அதுமட்டுமல்ல, பெற்றதும் நிலைத்திருக்கிறதா, என்றால் இல்லை. அதைக் கொஞ்சம் கொஞ்சமா எடுத்துக்கொண்டு, அதற்கு முதல் வழியை எப்படி பார்ப்பனர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்றால், இதுதான் ஆரிய தந்திரம், ஆரிய சூழ்ச்சி. அதைத்தான் விளக்க வேண்டும். அது என்னவென்றால்,  பொருளாதார அடிப்படை என்பது.

ஆசிரியர் உரை

கட்சி செல்வாக்குப் போய்விடுமே என்று பயந்துபோய் உயர்ஜாதிக்காரர்களாக இருக்கக்கூடிய
பா.ஜ.க., மற்றவர்கள் ஒப்புக்கொண்டனர்!

பிறவியினால் தான் ஜாதி; அந்த ஜாதியின் அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டோம். ‘‘ரிசர்வேஷன் நத்திங் பட் காம்பன்சேட்டரி ஜஸ்டிஸ்.’’ காலங்காலமாக ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு, மறுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு வாய்ப்பு மீண்டும் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பு.  இது ஒன்றும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சம வாய்ப்பு கிட்டும்வரை தொடரவேண்டும். இப்பொழுது ஒரு பெரிய வாய்ப்பு– வயது தக்க உள்ளவர்களுக்கு வாக்குரிமை வந்தாயிற்று.  வாக்குரிமை வந்ததினால், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் அவர்கள் ஓரளவுக்கு வந்தாயிற்று. அவர்களுக்குச் சொல்லி, அவர்களை கிளர்ச்சி செய்யக்கூடிய அளவுக்கு வந்ததினால் பயந்து போய், கட்சி செல்வாக்குப் போய்விடுமே என்று உயர்ஜாதிக்காரர்களாக இருக்கக்கூடிய பா.ஜ.க. மற்றவர்கள் தோற்றத்திற்கு இதை ஆதரிப்பதுபோன்று காட்டிக்கொண்டு, உள்ளுக்குள்ளே வழக்கமாக என்ன வேலை செய்வார்களோ, அதை செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கும்  அந்த ஜாதியை ஆணி அடிக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறார்கள்; அதில், அண்மையில் வந்திருக்கிற ஒரு செய்தி.

ஜாதிவாரியாகக் கணக்கெடுப்போம் என்று பிஜேபியே ஒப்புக்கொண்டது, எப்பொழுது?

அடுத்த செய்தி என்னவென்று சொன்னால் நண்பர்களே, ஒன்றே ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  இப்பொழுது திடீரென்று ஒரு கரடி விட்டுப் பார்க்கிறார்கள். அது என்னவென்றால், ஜாதிவாரியாகக் கணக்கெடுப்போம் – சென்சஸ்சில் என்று பிஜேபியே ஒப்புக்கொண்டது. எப்பொழுது?  பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக. அதை மோடி சொன்னார். அதுமட்டுமல்ல, முதலில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை யார் யார் கேட்டார்களோ, காங்கி ரஸ்கார்கள் உள்பட, ராகுல் காந்தி உள்பட, வடநாட்டில்,  கேட்டார்கள். நாமெல்லாம் கேட்டால், அதற்கு என்ன பெயர் வைத்தார்கள் தெரியுமா? மோடியும், அமித்ஷாவும் – ‘அர்பன் நக்சல்கள்’ என்று.

இப்பொழுது இன்னொரு வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள், ‘‘இன்டலெக்சுவல் நக்சல்கள்’’ என்று.

21 ஆண்டுகளுக்கு மேலாக
ஒத்தி வைக்கப்பட்டது!

ஆகவே, அவர்கள் சொன்னார்கள், உடனே வர வேற்று, அங்கே என்னன்னமோ செய்து வெற்றி பெற்றார்கள். அந்தத் தேர்தலையே ஒரு மாதிரி ஆக்கினார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக புற்றுக்குள்  பாம்பு போகும் அடிபட்டவுடன்; மறுபடியும் நேரம் பார்த்து, வெளியே வரும். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால்,  சில நாள்களாக இந்தியா முழுவதும் குழப்பம் இருக்கக் கூடிய அளவிற்கு, 21 ஆண்டுகளுக்கு மேலாக ஒத்தி வைக்கப்பட்டது. காரணம் முதலில் சொன்னது கோவிட், அதெல்லாம் போய் நீண்ட நாள்கள் ஆயிற்று. அதற்கப்புறமும் அது மிகப்பெரிய அளவுக்கு ஏற்கெனவே பார்த்தீர்கள் என்றால், அதிகார வர்க்கம் என்பது நிலையானது.  இந்திரன் மாறுவான்; இந்திராணி மாறுவதில்லை என்று புராணக் கதையில் சொல்வதுபோன்று.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது எதற்காக?

இப்பொழுது அதற்குப் பதிலாக எஸ்.சி., எஸ்.டி.க்கு இருக்கலாம் என்கின்றன. நம்ம இரண்டு பேருக்குள்ளே சண்டையை உண்டாக்குகிறான்.  இன்னொரு பக்கம் அவர்களைப் பார்த்து, கிரீமிலேயர் என்று அதையும் கொண்டு வருவோம் என்று சொல்லிக்கொண்டு, அவர்களுக்கு ஒரு அடி; அதே நேரத்தில் இவர்களைப் பார்த்தவுடனே,  ‘‘ஓகோ,  ஓபிசி என்பதைப் போட மாட்டோம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு. அப்படி என்றால், என்ன? ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது எதற்காக? ஏன் ஜாதிவாரிக் கணக்கு? இதில், இன்னொரு விசித்திரம், யாரெல்லாம் ஜாதி ஒழிய வேண்டும் என்று போராடுகிறோமோ, நாம்தான் ஜாதிவாரிக் கணக்கைக் கேட்கிறோம். யாரெல்லாம் ஜாதி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ, அவர்கள்தான் ஜாதி ஒழிப்புப் போராளிகள் போன்று, பேசுகின்றனர்.  ஜாதிவாரியா, ஜாதிவாரியா? என்று கேட்கிறார்கள். இதைப் புரிந்து கொள்வதற்கே, பெரியார் கண்ணாடி தேவை. இதைப் புரிந்துகொள்வதற்கே ஒரு தெளிவும், துணிவும் வரவேண்டும்.

தந்தை பெரியாரின் விளக்கம்!

அய்யா பெரியார் ஒரே வார்த்தையில்  விளக்கம் சொல்லுவார், ‘‘சிறைச்சாலைக்குள்ளே போனவன், எந்தக் கதவு வழியாகப் போனானோ, அந்தக் கதவு வழியாக வந்தால்தான், அதற்கு விடுதலை என்று பெயர்’’ என்று. அதான் சமத்துவம்; ஜன்னல் வழியாக வந்தால், ஆளைத் தேடுவார்கள். குறுக்கு வழியில் நீங்கள் வந்தீர்கள் என்றால், பின்வழியில் தப்பிப் போனால், அவனைப் பிடித்துக் கொண்டு வருவார்கள். ஆகவேதான், சென்ற வழியிலேயே வெளியே வரவேண்டும்.

இரண்டாவது, ஏன் ஜாதி ஒழிப்பாளர்கள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல்கிறோம். ஆன்டிபயாடிகில், விஷத்தைச் சேர்ப்பதுபோன்று. அந்த விஷம் கிருமியைக் கொல்வதற்காக.

மாறவே முடியாத,
மாற்றப்படவே முடியாதது ஜாதிதான்!

அடுத்தது, பொருளாதார அடிப்படைக் கூடாது  என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரும்போது, மதம் மாறலாம் இந்து மதத் தத்துவப்படி, இந்த நாட்டில் மதம் மாறலாம்; கட்சி மாறலாம், தமிழ்நாட்டுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இப்பொழுது, நல்ல உதாரணம். கட்சி மாறலாம், எது வேண்டுமாலும் மாறலாம். ஆனால், ஜாதி மாற முடியுமா? இந்து மதத் தத்துவப்படி என்றால், மாறவே முடியாத, மாற்றப்படவே முடியாதது ஜாதிதான். இதை அம்பேத்கரும் சொன்னார்; தந்தை பெரியாரும் சொன்னார். எதார்த்தமும் அதுதான்.

இன்றைய ‘விடுதலை’யில் வெளிவந்த செய்தி!

இந்து மதம் என்று சொல்லக்கூடிய, உச்சநீதிமன்றத் தீர்ப்பிலேயே பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பில், இந்திராசகானி வழக்கில் இருக்கிறது. எல்லா நீதிபதிகளும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். முதலில் தொடங்கும்போதே அதைத்தான் எழுதுவார்கள்.  இந்து மதத்தினுடைய தத்துவப்படி பிறவி அடிப்படையில் தான் பேதம். பிறவி அடிப்படையில்தான், பண அடிப்படையில் அல்ல. ஜாதி அடிப்படையில் தானே பேதம்! இந்த ஜாதியில் பிறந்தால் உயர்ந்தவன். அதை மாற்றவே முடியாது. ஏற்படுத்தியது நானே என்று சொல்கிற கடவுளால் கூட மாற்ற முடியாது என்பதற்கு உதாரணம், அது என்னவோ அங்கே இருக்குங்க, கீதைக்கு அப்படி விளக்கங்க. கீதை இப்படி இல்லீங்க, குணகர்மப்படிதானுங்க என்று சொல்கிறான். இன்றைக்கும் பார்ப்பனர்கள், தங்களுடைய செல்வாக்கு உயருகிறது என்பதற்காக, என்ன நடக்கிறது என்பதை  இன்றைய ‘விடுதலை’யிலேயும் செய்தி வெளியிட்டு இருக்கிறோம்.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள
அய்.அய்.டி.யில்…

எதைச் சொன்னாலும் ஆதாரத்தோடு சொல்லுகிற இயக்கம்தான் நம்முடைய இயக்கம். ‘‘சூத்திரர்கள் பார்ப்பனர்களுக்குச் சேவை செய்ய வேண்டும்; அய்.அய்.டி.  மாண்டியில் வைக்கப்பட்டிருந்த பதாகையால் சர்ச்சை.’’ எவ்வளவு தைரியம் இருந்தால், அங்கே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறான். இமாச்சல் பிரதேசத்தில் உள்ள  அய்.அய்.டி.யில்,  வருணாசிரம தர்மம் மற்றும் ஜாதி படிநிலையை நியாயப்படுத்தும் வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டி ஒன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. செப்டம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது, நிறுவனத்தின் கூட்டரங்கிற்கு வெளியிலே ‘பகவத் கீதை’  காலத்தால் அழியாத ஞானம் என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தச் சுவரொட்டியில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பனர்கள், கடவுளின் செய்தியைப் பரப்புபவர்கள். சத்திரியர்கள், சமூகத்தையும், ஆன்மீகத்தையும் பாதுகாப்பவர்கள். வைசியர்கள், பொருளாதாரத்தை இயக்குபவர்கள் மற்றும் மற்றவர்களுக்கு உதவுபவர்கள். சூத்திரர்கள், பார்ப்பனர்களுக்குச் சேவை செய்ய வேண்டியவர்கள்.  இந்த நான்கு பிரிவுகளும், இயற்கையாகவும், அவரவர் பணிகளுக்கு ஏற்பவும் உருவாக்கப்பட்டவை என்றும், சமூக விதிமுறைகளை மீறி, ஒரு வருணத்தின் வேலையை, மற்றொருவர் செய்வது சமூகத்தில் குழப்பத்தையும், ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் என்றும் பகவத் கீதையின் ஸ்லோகத்தில் குறிப்பிட்டதில் எழுதப்பட்டிருக்கிறது.

அய்.அய்.டி.யில் படிக்கிற மிகப்பெரிய  அறிவு ஜீவிகள் தான் மேலே போகிறவர்கள். அப்படியென்றால், கீதையைப்பற்றி நாம் சொன்னது உண்மை என்றாகி விட்டது. அப்படிப்பட்ட ஒரு பேதத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலை இருப்பதினால்தான்,  ஜாதி மாற்றப்பட முடியாது. அவரே சொல்கிறார். ‘‘நானே நினைத்தாலும் அந்த வர்ண தர்மத்தை மாற்ற முடியாது’’ என்று.

அதனால்தான்,  ஜாதி மாற்றப்பட முடியாத ஒன்றைத்தானே அளவுகோலாக வைக்க வேண்டும். பொருளாதார அளவுகோல் வரும்போது, நாம் அந்த உதாரணத்தைச் சொன்னோம். ஏம்பா, துணி வாங்க வேண்டும் என்றால், அளக்கவேண்டும். அளப்பதற்கு அளவுகோல் ஒன்று மரத்தால் இருக்கவேண்டும் அல்லது இரும்பால் இருக்கவேண்டும். அப்படி இல்லாமல், ரப்பரில் பிடித்து அளந்தால், நாம் ஒப்புக் கொள்வோமா?

பொருளாதார அளவுகோல்,
ஆளுக்கு ஆள் மாறும்!

ஆகவே, பொருளாதார அளவுகோல், ஆளுக்கு ஆள் மாறும்.  கிரீமிலேயரே பார்த்தீர்கள் என்றால், எல்லோ ருக்கும் ஒரே மாதிரி கிடையாது. மிகப்பெரிய அளவுக்கு – EWS–க்கு இன்னொரு கிரீமிலேயர். ஆகவேதான், மாற்றத்துக்குரியது அல்ல; ஜாதி மாற்றப்பட முடியாது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதுதான், ‘‘சோசியலி’’ (Socially) என்றுவரக்கூடிய அந்த அடிப்படை. ஆகவே, அதனால்தான் தெளிவாக எடுத்துச் சொன்னோம், எனவே, எந்த வழியிலே போனோமோ, அந்த வழியில் வருவதுதான் சமூகநீதி.  இவ்வளவு ஆதாரங்கள் என்றவுடன், ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொள்வோம் என்றார்கள். யார்? பிஜேபி, ஆர்எஸ்எஸ். எங்கே? பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக.  இப்பொழுது நடைமுறைக்கு வந்த உடனே, ஜாதிவாரியாக ஒரு சிலவற்றைப் பிரித்துக் கொடுக்கிறான். ‘Divide and Rule’ என்பது அதுதான். இப்பொது சொல்லும்போது, என்ன அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், ஒரு தனிப் பிரிவாக உண்டாக்க வேண்டும். ஓபிசி என்று கிடையாது என்று ஆரம்பித்து,  தமிழ்நாட்டின் முந்தைய முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான நம்முடைய மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றை அழகாகச் சொல்லியிருக்கிறார், ‘‘12,000 கோடி ரூபாயைச் செலவு செய்கிறீர்கள்; அதை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்காகவா?’’ என்று கேட்டிருக்கிறார்.

மிகச் சாமர்த்தியமாக
வகுப்பு வேறு; ஜாதி வேறு என்கிறார்கள்!

ஒரு பக்கம் வரிப்பணம், குளறுபடி எல்லாம் மறுபக்கம்.  ஜாதிதான் அடிப்படையானது, ஜாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு அமைய வேண்டும் என்று சொன்னால், மிகச் சாமர்த்தியமாக அதற்குக் காரணம் சொல்கிறார்கள். என்ன காரணம் சொல்கிறார்கள்? ஒரு தந்திரமான காரணம். ‘கிளாஸ் வேறு; காஸ்ட் வேறு’ – வகுப்பு வேறு; ஜாதி வேறு என்கிறார்கள். எவ்வளவு பெரிய ஏமாற்று மோசடி பாருங்கள். இதெல்லாம் பார்ப்பன அதிகார வர்க்கத்தின் வேலை.

திராவிடர் கழகமும்,
திராவிட முன்னேற்ற கழகமும்தான்!

ஆர்எஸ்எஸ் நீண்ட நாள்களாக இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக அதை நம்பிக் கொண்டிருக்கக்கூடிய அரசியல் கட்சிகளும் இருக்கிறார்கள்.  இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையிலே, எம்ஜிஆர் அவர்களை ஏமாற்றிக் கொண்டுவரச் சொன்ன நேரத்திலே, அதைத் தொடர்ந்து எதிர்த்து, இந்தியாவிலே முதல் முதலாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது – திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும், சமூநீதி சேர்ந்த அமைப்பு களும்தான். ஆகவே, ஏன்  அதைச் செய்தோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வர்க்கமா, வருணமா? என்றெல்லாம்  வியாக்கியானம் செய்தார்கள். யார்? முற்போக்குப்பற்றி பேசியவர்களே கூட சொன்னார்கள். இந்த நாட்டைப் பொறுத்தவரையில், சந்தேகம் வேண்டாம். மனுதர்மத்தை எடுத்துப் பார்த்தால், வருணம்தான், வர்க்கத்தைத் தீர்மானம் செய்யும்.  அதை நன்றாகப்  புரிந்து கொள்ள வேண்டும்.

மிகப்பெரிய அளவிற்கு நாம் போராட வேண்டிய அவசியம் இன்றைக்கு வந்திருக்கிறது!

ஆகவேதான், இதையெலாம் வைத்து, இப்பொழுது குழப்பம் செய்வதற்காக, வகுப்புவாரி என்றால், ‘கிளாஸ்’  என்று சொல்லக்கூடிய அளவுக்கு வருகிறார்கள். முதலில் வகுப்புவாரி உரிமை தீர்மானம் என்று போட்டு, ஜாதியைத் தானோ  கொடுத்திருக்கிறோம். ஆதாரமே, கம்யூனல் ஜிஓ என்பதின் அடிப்படை என்ன? என்பதைப்பற்றி ஏராளமாகச் சொல்லலாம். ஆகவேதான், நமக்கு ஒரு பக்கத்தில் சொல்லிவிட்டு, இந்தக் கையாலே கொடுத்ததை, அந்தக் கையாலே எடுப்பதற்காக அவர்கள் இந்த முயற்சிகளைச் செய்கிறார்கள். இதை எதிர்த்து மிகப்பெரிய அளவிற்கு நாம் போராட வேண்டிய அவசியம் இன்றைக்கு வந்திருக்கிறது.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் விளக்கம்!

நிறைய ஜாதி வந்துவிடும் என்றால், நிறைய ஜாதி வர வேண்டிய அவசியமே இல்லை. மண்டல் பரிந்துரையை அமல்படுத்தும் போது கூட இப்படித்தான் சொன்னார்கள். ‘‘அய்யய்யோ நிறைய ஜாதி இருக்கிறதே, அதில் எதைப்  போடுவது?  என்று.  வி.பி.சிங் அதற்கு அழகான பதிலைச் சொன்னார். காரணம், நாம் அவருக்கு அதைத் தெளிவுப்படுத்தியதால், அதை அவர் புரிந்துகொண்டு சொன்னார். மாநிலப் பட்டியல் இருக்கிறது;  மாநிலங்களில் ஜாதிப் பட்டியல் இருக்கிறது. அவற்றைப் பாருங்கள். அதேமாதிரி, யூனியன் லிஸ்ட் என்று இருக்கிறது.  அதில், என்னென்ன ஜாதிகள் இருக்கு என்று பாருங்கள்.

இந்திரா சகானி வழக்கில் தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது!

ஒரே முதலியார், பல முதலியார் என்று சொல்லுவார்கள்.  ஒரே கவுண்டர், பல இடங்களில் பல கவுண்டர்கள் சொல்லுவார்கள்.  எதுவாக இருந்தாலும், எல்லாம் அந்த ஓபிசி பட்டியலில் இருக்கிறது. அதனால், ஓபிசி என்பது, ‘கலெக்சன் ஆஃப் காஸ்ட்’. அது மட்டுமல்ல, ஒன்றே ஒன்று சொல்லி முடிக்கிறேன். மண்டல் கமிஷன் வழக்கில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட இந்திரா சகானி வழக்கில் தெளிவாகவே ஒன்றை அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

அம்பேத்கர் அவர்கள் சொன்னதையே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

It is worthy of notice that the Parliament, which enacted the first Amendment to the Constitution, was in fact the very same Constituent Assembly which had framed the Constitution. The speech of Dr. Ambedkar on the occasion is again instructive.

Then with regard to article 16, clause (4), my submission is this that it is really impossible to make any reservation which would not result in excluding somebody who has a caste. I think it has to be borne in mind and it is one of the fundamental principles which I believe is stated in Mulla’s edition on the very first page that there is no Hindu who has not a caste. Every Hindu has a caste-he is either a Brahmin or a Mahratta or a Kundby or a Kumbhar or a carpenter. There is no Hindu-that is the fundamental proposition-who has not a caste. Consequently, if you make a reservation in favour of what are called backward classes which are nothing else but a collection of certain castes, those who are excluded are persons who belong to certain castes. Therefore, in the circum stances of this country, it is impossible to avoid reservation without excluding some people who have got a caste.’’

இதன் தமிழாக்கம் வருமாறு:

அரசியலமைப்பிற்கான முதல் திருத்தத்தை இயற்றிய நாடாளுமன்றம் என்பது, உண்மையில் அதே அரசியலமைப்பு நிர்ணய சபையே என்பது குறிப்பி டத்தக்கது. அந்தச் சூழலில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரை மீண்டும் ஒருமுறை கவனிக்கத்தக்கது. அவர் கூறியதாவது:-

‘‘அடுத்து, கூறு 16 (4) குறித்து நான் முன்வைக்கும் கருத்து இதுதான்: ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரை விலக்கி வைக்காத வகையில் இட ஒதுக்கீட்டை உருவாக்குவது என்பது உண்மையில் சாத்தியமற்றது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; ‘முல்லா’வின் (Mulla) நூலின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக நான் நம்பும் அடிப்படைத் தத்துவங்களில் இதுவும் ஒன்று: அதாவது, ஜாதி இல்லாத இந்து என்று எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் ஒரு ஜாதி உண்டு – அவர் பார்ப்பனராகவோ, மராத்தாவாகவோ, குன்பியாகவோ (Kundby), கும்பாராகவோ (Kumbhar) அல்லது தச்சரா கவோ இருக்கலாம். ஜாதி இல்லாத இந்து என்று யாரும் இல்லை – அதுவே அடிப்படை உண்மை. எனவே, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ என்று அழைக்கப்படு பவர்களுக்கு – இவர்கள் உண்மையில் சில ஜாதிகளின் தொகுப்பே ஆவர் – நீங்கள் இடஒதுக்கீடு அளித்தால், அதனால் விலக்கி வைக்கப்படுபவர்களும் ஏதோ ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆகையால், இந்நாட்டின் சூழலில், ஜாதி அடையாளத்தைக் கொண்ட சிலரை விலக்கி வைக்காமல் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது என்பது சாத்தியமற்றது.’’

மாநில அரசு எடுத்தால், நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்கின்றனர் நீதிபதிகள்!

எனவே. ‘‘பண்டல் ஆஃப் காஸ்ட்’’ ஜாதிகளுடைய தொகுப்புதான் வகுப்பு என்பது. வகுப்பு வேறு, ஜாதி வேறு அல்ல. வேண்டும் என்றே, ‘‘ஹேர் ஸ்பிளிட்டிங் ஆர்க்யூமெண்ட்’’  – மிகப்பெரிய அளவு இதே மாதிரிதான்,  நமக்குக் கொடுக்கப்பட்ட எல்லா இட ஒதுக்கீட்டையும் ஒதுக்குவது, சொல்வது. நீதிமன்றத்திற்குப் போன உடனே ஏன் நாம் இதை சேர்க்கிறோம். ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்லக்கூடிய நாம், ஏன் ஜாதியைப் போடுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி வந்தால்தான் முடியும். இட ஒதுக்கீடு கேட்கும்போது, அங்கே அமர்ந்திருக்கின்ற நீதிபதி என்ன சொல்கிறார், ‘‘வேர் இஸ் எ குவாண்டிபையபிள் டேட்டா’’ என்று பெரிய வார்த்தைகளை வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் ஸ்டாண்டர்ட் வார்த்தை – தகுதி திறமை மாதிரி. குவாண்டிபையபிள் டேட்டா – அதற்கு என்ன கணக்கு எடுத்திருக்கிறீர்களா? அதை யார் செய்யவேண்டும்? மாநில அரசு எடுத்தால், நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். அதற்கு உதாரணம் பீகார், அதற்கு உதாரணம் கருநாடகா. இங்கே இருக்கிற சில ஆட்கள்,  அரசியல் செய்வதற்காக, ஏன் அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்பார்கள்.  ரூபாய் செலவு செய்து, கணக்கெடுத்தால், கடைசியில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்றால், அதற்கு என்ன? அவர் ஒப்புக்கொள்ளப்பட்ட குவாண்டிபையபிள் டேட்டா? உச்சநீதிமன்றம்.

நமக்குக்  கிடைத்திருக்கின்ற வாய்ப்புகளைப் பறிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன!

எனவேதான், இன்றைக்கு நம்முடைய உரிமைகள் பறிபோவதற்கு, நாம் கஷ்டப்பட்டு நம்முடைய தலைவர்கள், வழிகாட்டிகள், வி.பி.சிங் போன்றவர்கள், முத்தையா முதலியார் போன்றவர்கள், நீதிக்கட்சி, பெரியார்,  காமராஜர்,  திராவிட இயக்கம் எல்லாம் பாடுபட்டு, வடநாட்டுத் தலைவர்கள், ஒடுக்கப்பட்டோர் எல்லோரும் பாடுபட்ட பிற்பாடு கூட, இன்றைக்கு நமக்குக்  கிடைத்திருக்கின்ற வாய்ப்புகளைப் பறிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. திட்டமிட்டு, அதுவும் சட்டபூர்வமாவே செய்வதுபோன்று. எல்லா இடத்திலேயும்.

புதிய ஜாதிகள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது!

எனவேதான் நண்பர்களே, இதை நன்றாகப் புரிய வைக்க வேண்டியது நம்முடைய கடமை. அதற்கா கத்தான், வருகின்ற 11 ஆம் தேதி அன்றைக்கு நாடு தழுவி அளவிலே, முதல் குரல் திராவிடர் கழகம் தான் கொடுக்கும் மிகப்பெரிய அளவிற்கு. ஆகவே,  இதில் ஒத்தக் கருத்து உள்ளவர்களை எல்லாம் அழைத்து, அதனைத் தயாரிக்க வேண்டும். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்று சொல்லிவிட்டு, ஜாதியை விடாதே என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஓபிசி என்பது இருக்கிறதே, அது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. பட்டியல் இருக்கிறது. மாநிலப் பட்டியல் இருக்கிறது, அதே மாதிரி ஒன்றிய பட்டியல் இருக்கிறது. அந்த பட்டியல் இருக்கிற ஜாதிகள், எதற்குக் கீழ் வரும் என்று பார்த்து, உடனே எழுத வேண்டியது. ஆகவே, புதிய ஜாதிகள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

ெசப்.11  இல் திராவிடர் கழகம் முதல் போராட்டம் – முதல் முழக்கத்தைக் கொடுக்கவிருக்கிறது!

எனவே, 11 ஆம் தேதி, தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களிலும் திராவிடர் கழகம் முதல் போராட்டம் – முதல் முழக்கத்தைக் கொடுக்கவிருக்கிறது.

சென்னையில், காலை 11 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும். அதற்கான அனுமதி கேட்டு கடிதத்தை, காவல் துறையிடம் கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாடு அரசு உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்!

இன்னொரு கருத்து, நம்முடைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் அவர்கள்,  தமிழ்நாட்டின் ஆட்சியாளரை நோக்கி, ஒன்றை வைத்திருக்கிறார்கள். அது ரொம்ப மிக முக்கியம். சட்டமன்றத்திலே ஒரு தீர்மானத்தையே கொண்டுவர வேண்டும்; இது மிக முக்கியமானது என்று சொல்கிறார். நாளைக்கு ஒரே நாள் தான் இருக்கிறது சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிவடைவதற்கு. ஆகவே என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியாது. ஆனால், இது மிக முக்கியமானது உள்ளபடியே, இதைப் பற்றி அக்கறை இருந்தால், சமூக நீதியை நாங்கள் செய்கிறோம்,  கொள்கை வழித் தலைவர்கள் இவர்கள் எல்லாம் என்றால், இந்த அரசாங்கம் உடனடியாக  தீர்மானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஓபிசி என்பது, ஜாதி அடிப்படைதான்!

எனவே, போராட்டத்திற்கு வாருங்கள். தொடர்ந்து வலியுறுத்துவோம். இது தமிழ்நாடு முழுக்க நடைபெற இருக்கிறது. நிச்சயமாக இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மண்டலுக்காக எப்படித் தொடர்ந்து போராடினோமோ, அதுபோல இந்த சென்சஸ் என்று சொல்லக்கூடிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஜாதி அடிப்படை என்பதை விடக்கூடாது; ஓபிசி என்பது, ஜாதி அடிப்படைதான். ஆகவே, வகுப்பு வேறு; ஜாதி வேறு அல்ல என்பதைத் தெளிவாக்கிக் கொண்டு, அதை எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *