அம்மன் சிலையின் வியர்வையா? ஆசாமிகளின் சிறுநீரா?

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஓர் இயற்கைப் பேரிடர் வந்துவிட்டால் போதும், அதை வைத்துக் கொண்டு மூடநம்பிக்கைகளைப் பரப்பவும், பயத்தைக் கிளப்பி பக்தியைப் பெருக்கவும் ஜோதிடம், பரிகாரம், பூஜை, புனஸ்காரம் என்று காசு பறிக்கவும் ஒரு பெருங்கூட்டம் கிளம்பிவிடும். யார் வீட்டில் இறப்பு என்றாலும், கொண்டாட்டம் என்னவோ ஆண்டுக்காண்டு அதைக் காட்டி பணம் பறிக்கும் பார்ப்பனர்களுக்குத் தானே!

எந்த இயற்கைப் பேரிடரையும் முன் கூட்டியே கணித்து எந்த ஜோதிடரும் சொன்னதில்லை! குத்துமதிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் “ ஆங்கில வருட ராசி பலன்கள்” சொல்லும்போது, புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் வரும் என்று சொல்லி வைப்பார்கள். அதில், 2005-க்குப் பிறகு சுனாமி என்ற வார்த்தை சேர்ந்து கொண்டது. 2020-க்குப் பிறகு தொற்று நோய்களையும் சேர்த்துக் கொண்டார்கள். அதற்கு முன் ஏன் அந்த வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தவில்லை? ஏனெனில் அதற்கு முன் அந்த வார்த்தைகள் அவர்களுக்குத் தெரியாது. தெரிந்தால் தானே, ஜோதிடத்தில் இருப்பதாக அடித்து விடுவதற்கு?

எப்படி கடவுள் உற்பத்தி செய்யப்பட்ட காலத்தில் இருந்த ஆயுதங்களான வில், அம்பு, கத்தி, சூலாயுதங்கள் மட்டும் புராணங்களில், இதிகாசங்களில் இருந்தனவோ? எப்படி பழைய கடவுள் அவதாரங்கள் எதிலும் ஏகே 47, பீரங்கி, கம்ப்யூட்டர், செல்போன் எல்லாம் இல்லையோ? அப்படித் தான் இந்தக் கதையும்! இனி, கடவுள்களை உற்பத்தி செய்யும்போது இவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்வார்கள். பிள்ளையார் ஊர்வலங்களில் ஆண்டுக்காண்டு கிரிக்கெட் மட்டை, கம்ப்யூட்டர், செல்போன், ஸ்மார்ட் போன் எல்லாம் கைகளில் கொடுக்கப்படுகிறதோ, அப்படி புதிய ஓவியங்கள், சிலைகளில் இவையெல்லாம் சேரும்! இந்த லட்சணத்தில் தான் இவர்கள் முக்காலமும் உணர்ந்த கடவுள்களாம்!

பொத்தாம்பொதுவாக நல்லது நடக்கும்; பிரச்சினை வரும்; பணச்சிக்கல் வரும்; மலச் சிக்கல் வரும் என்ற வகையில் ஜோதிடர்கள் அடித்துவிடுவதை வைத்துக் கொண்டு, உலகின் எந்தப் பகுதியில் எது நடந்தாலும், அதைத் தாங்கள் சொன்னதோடு பொருத்திக் கொண்டு பிழைப்பை ஓட்டுகிறார்கள். எந்த நாளில், எந்த நேரத்தில், எந்த ஊரில், என்ன பேரிடர் வரும் என்று சொல்வதற்கு இவர்களுக்கோ, இவர்களின் ஜோதிடத்திற்கோ சக்தி உண்டா? ஜோதிடம் என்பது கணிதம் என்றும், அறிவியல் என்றும் அளந்துகொட்டும் இந்த மோசடிக் கூட்டத்தினர், துல்லியமாகச் சொல்லவேண்டாமா? நல்ல நேரம், கெட்ட நேரம், பிறந்த நேரம், ருதுவான நேரம், கிரகங்களைக் கணக்கிட்டு, செட்ஸ், கால்குலஸ் எல்லாம் போட்டு கணிப்பதாக ஜோடனை காட்டுவார்களே! என்றைக்காவது இயற்கைப் பேரிடர்களைக் கணித்திருக்கிறார்களா? இதில் ஒரே பாடலை வைத்துக் கொண்டு, ஓராயிரம் முறை நாஸ்டர்டாம்சை இழுத்திருப்பார்கள்; புதிதாக பாபா வங்கா என்று பார்வையற்ற ஒருவரின் படத்தை வைத்துக் கொண்டு ஊடகங்கள் பிழைப்பை ஓட்டின.

இப்படித்தான் அண்மையில்,  நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தின் போதும் கதை கட்டத் தொடங்கினார்கள்.   நேபாளத்தின் பஞ்ச்கல் பகுதியில், பலஞ்சோக் பகவதி அம்மன் கோவில் இருக்கிறதாம்! கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி மாலை நேரத்தில் பூஜைகள் நடந்தபோது, பகவதி அம்மன் சிலையில் வியர்வைத் துளிகள் போன்ற ஈரப்பதம் இருந்ததைப் பக்தர்கள் கவனித்தார்களாம். பொதுவாக இந்த அம்மன் சிலைக்கு வியர்த்தால், ஏதோ ஒரு பெரிய இயற்கை பேரிடரோ, நெருக்கடியோ ஏற்படப்போகிறது என்பது உள்ளூர் மக்களின் நீண்டகால நம்பிக்கையாம்! இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கத் தெய்வத்திடம் மன்னிப்பு கோரும் வகையில் கோவிலில் உடனடியாகப் பூஜை நடத்தியுள்ளனர். சிலைக்கு வியர்த்ததாகக் கூறப்பட்ட நிகழ்வு நடந்து, சரியாக நான்கு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நேபாளத்தில் பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாம்! சரி, பரிகாரப் பூஜைகள் செய்தார்களே அதற்குப் பலன் என்ன கிடைத்தது? யோசிக்க வேண்டாமா?

கல்லுப் பிள்ளையார் பால் குடித்தது போன்ற கதை தான், கல்லுச் சிலைக்கு வியர்த்ததும்! பூரி ஜெகன்னாதர் சிலைக்கு, மருத்துவரை அழைத்து வந்து, ஸ்டெதாஸ்கோப் வைத்து உடல்நிலை சரியில்லையா என்று பரிசோதிக்கும் ‘அறிவுஜீவிகள்’ கொண்ட நாடு அல்லவா இது!

உண்மையில் கதை வேறாக இருக்கிறது! அம்மனின் வியர்வையல்ல; எவரெஸ்டில் பனிப்பாறைகள் உருக மனிதச் சிறுநீரும் ஒரு காரணம் என நேபாள, அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

‘ரீஜனல் என்விரான்மெண்டல் சேஞ்ச்’ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வு, மலையேற்ற வீரர்களும், சுற்றுலாவாக மலையேறுபவர்களும் சங்கமிக்கும் எவரெஸ்ட் அடிவார முகாமில் நடைபெறும் மனித நடவடிக்கைகள் ‘கும்பு’ பனிப்பாறை உருகுவதற்குப் பங்களிக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது.

நேபாளத்தின் நில மேலாண்மை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த நில அளவை அதிகாரி ஒருவரை உள்ளடக்கிய பன்னாட்டுக் குழுவொன்று  மேற்கொண்ட ஆய்வில் 2023-ஆம் ஆண்டின் வசந்த கால மலையேற்றப் பருவத்தின்போது,  முகாமில் நடைபெறும் நடவடிக்கைகளின் மூலம் வெளியாகும்  வெப்பத்தையும்  ஆய்வு செய்துள்ளனர். இதில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG), மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் பயன்பாடும் அடங்கும். மேலும் மனிதச் சிறுநீர் வெளியேற்றத்தால் உருவாகும் வெப்பம், உலகளாவிய பருவநிலை மாற்றம் ஆகிய மூன்று முக்கியக் காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆம்,  சிறிய அளவில் அல்ல; மலையேற்ற வீரர்களும், வழிகாட்டிகளும் தங்கும் இந்த முகாமில் நாளொன்றுக்குச் சராசரியாக 6000 லிட்டர் சிறுநீரைப் பனியில் கழிக்கின்றனராம். இதனால், ஒரு பருவகாலத்தில் மட்டுமே, தோராயமாக 154 டன் பனிப் பாறைகள் உருகுவது கண்டறியப்பட்டுள்ளது.

அறிவியல் சொல்வதை ஏற்பதா? இந்த அறிவிலிகள் சொல்வதை ஏற்பதா? பனிப்பாறைகள் உருகி பேரிடர் ஏற்படுவதற்குக் காரணம் அம்மனின் வியர்வையா? ஆசாமிகளின் சிறுநீரா? கொஞ்சமே கொஞ்சம் சூழலியல் அறிவு இருந்தாலும் தெளிவு பிறக்கும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *