டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* திராவிட இயக்கத்தின் சாதனை – இருமொழிக் கொள்கை: மு.க.ஸ்டாலின்: தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளித்தது திராவிட இயக்கத்தின் முக்கிய சாதனை என திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அண்ணா தலைமையில் 1967இல் தொடங்கிய இருமொழிக் கொள்கை, தமிழ்நாட்டின் தனித்துவமான மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தை பாதுகாத்துள்ளதாக அவர் கூறினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஹல்த்வானி ‘தூய்மைப்படுத்தல்’ விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. எம்.பி.க்கள் மனு: ஹல்த்வானியில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எதிராக நடைபெற்ற ‘தூய்மைப்படுத்தல்’ சம்பவம் சமத்துவம், கண்ணியம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு போன்ற அரசியலமைப்பு மதிப்புகளுக்கு நேரடி தாக்குதல் என காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. எம்.பி.க்கள் தெரிவித்தனர். இவ்விவகாரம் குறித்து குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தி இந்து:
* சிவில் சர்வீஸ் தேர்வர்கள் சேவை ஒதுக்கீடு, பயிற்சி குறித்து ஒன்றிய அரசின் முடிவுக்காக காத்திருப்பு: 2025 சிவில் சர்வீஸ் தேர்வில் யு.பி.எஸ்.சி. பரிந்துரைத்த 958 தேர்வர்களின் சேவை ஒதுக்கீடும், அடிப்படைப் பயிற்சி தொடங்கும் தேதியும் தற்போது முடிவின்றி உள்ளன. மார்ச் 11ஆம் தேதி ரோஹித் நாதன் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் சேவை ஒதுக்கீடு செய்ய அனுமதி கோரி ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியதே தாமதத்திற்கு காரணம்.
டெக்கான் ஹெரால்டு:
* மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து காங்கிரஸ் கேள்வி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை ஏன் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது; தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற உள்துறை அமைச்சர் முயன்று வருகிறாரா என்றும் கேட்டது. நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு 25 நாட்கள் கடந்தும், கூட்டத்தொடர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட வில்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வரலாற்றுத் தேவை: ஓம் பிர்லா; பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு மீண்டும் முயற்சி செய்யலாம் என்ற நிலையில், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவது “வரலாற்றுத் தேவை” என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் தலைமையில் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
– குடந்தை கருணா
