மூன்றாம் காலம்: 2020-கள்
– சம்பளப் பட்டியலின் ஏமாற்று வேலை
– சம்பளப் பட்டியலின் ஏமாற்று வேலை
தற்கால கார்ப்பரேட் யுகத்தில், கமல் ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் அதிகாரியாக உயர்ந்தான். பழைய காலத்து உடல் வன்முறை இப்போது டிஜிட்டல் கண்காணிப்பாகவும், பொருளாதார வன்முறையாகவும் மாறியது. அவளது அனைத்துச் செலவுகளும் கண்காணிக்கப்பட்டு, அவள் மனரீதியாகத் துன்புறுத்தப்பட்டாள். சிறீதேவி பராமரிப்புத் தொகை கோரி நவீன சட்டங்களின் கீழ் விண்ணப்பித்தபோது, கமல் நீதிமன்றத்தில் ஒரு சிக்கலான ஊதியப் பட்டியலைக் காட்டி ஏமாற்றினான்.
அவனது மொத்த வருமானம் மிக அதிகமாக இருந்தாலும், ஆடம்பரக் கார் இஎம்அய், அதிகப் படியான காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் பல்வேறு விருப்பச் சேமிப்புகளைக் காட்டி, தனது கையில் வரும் நிகரச் ஊதியம் மிகக் குறைவு என்று வாதிட்டான்.
“என் கையில் செலவிற்குப் பணமே இல்லை, நான் எப்படி வாழ்வூதியம் தர முடியும்?” என்று கமல் வாதிட்டான். ஆனால், தற்போதைய 2025-ஆம் ஆண்டின் கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் சட்டம் இந்த நிதி தந்திரங்களை முழுமையாக உடைத்தெறிந்துள்ளது. இந்தச் சேமிப்புகள் மற்றும் கடன் தவணைகள் அனைத்தும் கணவனின் தனிப்பட்ட சொத்துக்களே தவிர, செலவுகள் அல்ல என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது. கட்டாய சட்டப்பூர்வ வரிகளைத் தவிர எதையும் வருமானத்தில் இருந்து கழிக்க முடியாது என்று கூறி, சிறீதேவி மற்றும் மாயாவிற்கு அவர்களின் தகுதியான சமமான வாழ்க்கை தரத்தை (Comparable Standard of Living) நீதிமன்றம் உறுதி செய்தது.
இரண்டாம் போர்க்களம்: நீதிமன்ற வன்முறையும், நீதிபதிகளின் ஒருதலைப்பட்சப் பார்வைகளும்!
கணவனால் ஏற்படுத்தப்படும் பொருளாதாரப் புறக்கணிப்பைத் தாண்டி, நீதிமன்றத்திற்குள் நுழையும் ஒரு பெண் பொது ஆவணங்களில் பதியப்படாத பல அடுக்கு மன உளைச்சல்களையும், வன்முறைகளையும் எதிர்கொள்கிறாள். சட்ட நடைமுறைகளே கணவனால் பெண்ணைப் பழிவாங்கும் ஓர் ஆயுதமாக மாற்றப் படுகின்றன. கணவர்கள் வேண்டுமென்றே வழக்கைத் தள்ளிப்போட்டு (Adjournments), பெண்ணை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவழைக்கிறார்கள். தனியாக வேலை செய்துகொண்டோ அல்லது குழந்தையைப் பராமரித்துக்கொண்டோ ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு வருவது அந்தப் பெண்ணிற்குப் பெரும் சுமையாகும்.
ஒவ்வொரு நீதிமன்ற நாளும் அவளுக்கு ஒரு மன உளைச் சலைத் தருகிறது. தன்னைத் துன்புறுத்திய கணவன் மற்றும் அவனது குடும்பத்தினருக்கு அருகிலேயே, நெரிசல் மிகுந்த நீதிமன்ற வராண்டாக்களில் அவள் பல மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டியுள்ளது. அவர்களின் ஏளனப் பேச்சுகளையும், மிரட்டல் பார்வைகளையும் அவள் எதிர்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, குழந்தை மாயா விற்குப் பராமரிப்புத் தொகை கேட்கும்போது, தாயைப் பயமுறுத்தி வழக்கைத் திரும்பப் பெற வைப்பதற்காகவே கணவர்கள் குழந்தையின் ‘காவல் உரிமை’ (Custody) கோரி எதிர்வழக்குத் தொடங்குவது ஒரு வழக்கமான தந்திரமாக உள்ளது.
இந்தத் துயரங்களை மேலும் அதிகமாக்குவது நீதிமன்றங்களில் நிலவும் ஒருதலைப்பட்சமான நீதித் துறைப் பார்வைகளாகும் (Judicial Bias). நீதிபதிகள், தங்களின் சட்டப் பயிற்சிகளையும் தாண்டி, தாங்கள் வாழும் சமுதாயத்தின் ஆணாதிக்கச் சிந்தனைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக இருப்பதில்லை. நீதிமன்றத்தில் தன் உரிமைகளுக்காகப் பேசும் அல்லது பொருளாதாரப் பங்கைக் கேட்கும் ஒரு பெண்ணை “பிடிவாதக்காரி,” “அடங்காதவள்” அல்லது “குடும்பத்தை உடைப்பவள்” என்ற கண்ணோட்டத்திலேயே பல நீதிபதிகள் அணுகுகிறார்கள்.
விசாரணையின் போது, பல நீதிபதிகள் தங்களின் நடுநிலைத் தன்மையை மறந்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு “சகிப்புத்தன்மை,” “விட்டுக்கொடுத்துப் போதல்” மற்றும் “குடும்பத்தின் மேன்மையைக் காப்பாற்றுதல்” குறித்துப் பாடம் நடத்தத் தொடங்குகிறார்கள். ஒரு பெண் நீதிமன்றத்திற்கு நேர்த்தியாக உடையணிந்து வந்தால், “இவள் பாதிக்கப் பட்டவள் போல் தெரியவில்லை” என்று அவளது துயரம் எளிதாக நிராகரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், கடுமையான கேள்விகளால் அவள் அழுகையோ அல்லது கோபமோ அடைந்தால், அவள் “மனநிலை சரியில்லாதவள்” என்று முத்திரை குத்தப்படுகிறாள். இந்தச் சட்ட இயந்திரம் ஒருதலைப்பட்சமாகவே இயங்குகிறது: கணவனின் கோபம் நியாயமானதாகவும், மனைவியின் வாழ்வாதாரக் கூக்குரல் ஓர் ஒழுக்க மீறலாகவும் பார்க்கப்படுகிறது.
சமுதாய அவப்பெயர் மற்றும் அதன் தாக்கங்கள் (Social Stigma & Impact)
சமூகத் தாக்கங்கள்
பாதுகாப்பு அரண்: கணவனின் மொத்த வருமானத்தின் அடிப்படையில் பராமரிப்புத் தொகை கணக்கிடப்படும் போது, பெண்களை எளிதாக ஏமாற்றி விட முடியாது என்ற பயம் சமூகத்தில் உருவாகிறது.
வழக்குச் சோர்வு (Litigation Fatigue): பணபலம் கொண்ட கணவர்கள் வழக்கை பல ஆண்டுகள் இழுத்தடிக்கும் போது, ஏழைப் பெண்கள் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி ஏறி மனரீதியாகவும், நிதி ரீதியாகவும் சோர்வடைந்து போகிறார்கள். இந்தத் தாமதமே பெண்களுக்கு நடக்கும் மற்றொரு அநீதியாகும்.
அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு: ஒரு தாய் தன் உரிமைக்கான தொகையைப் பெறும்போது, அவளது குழந்தை மாயாவின் எதிர்காலம் பாதுகாக்கப்படுகிறது. அது அந்தக் குழந்தையின் கல்வியையும் நல்வாழ்வையும் உறுதி செய்கிறது.
சமுதாய அவப்பெயர் (Social Stigma)
“பண ஆசை பிடித்தவள்” என்ற முத்திரை: வாழ்வூதியம் கேட்கும் பெண்கள் மீது சமூகம் குத்தும் முதல் முத்திரை, அவர்கள் கணவனின் பணத்தைப் பறிக்கப் பார்க்கிறார்கள் என்பதாகும். அவள் குடும்பத்திற்காகத் தன் வாழ்நாளை, உழைப்பைத் தியாகம் செய்ததை இந்தச் சமூகம் எளிதாக மறந்துவிடுகிறது.
குடும்பத்தை உடைத்தவள் என்ற பழி: எவ்வளவுதான் குடும்ப வன்முறையையும், சித்திரவதைகளையும் ஒரு பெண் அனுபவித்திருந்தாலும், “ஒரு பெண்ணாக இவள் சகிப்புத்தன்மையுடன் இருந்திருக்கலாம், குடும்பத்தை உடைத்துவிட்டாள்” என்ற பழிச்சொல் அவள் மீதுதான் சுமத்தப்படுகிறது.
சமூகப் புறக்கணிப்பு: மணவிலக்கு பெற்ற அல்லது கணவனைப் பிரிந்த பெண்கள் இன்றும் பல இனிய நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப் படுகிறார்கள். வாடகைக்கு வீடு தேடும்போது கூட, தனித்து வாழும் பெண் களுக்கு வீடு தரப் பலர் தயங்குகிறார்கள்.
கண்ணுக்குத் தெரியாத மனக்காயங்கள்: உணர்வு பூர்வமான மற்றும் மூடிய அறைக்குள் நடக்கும் வன்முறை களுக்குப் புற ஆதாரங்கள் இல்லாததால், நீதிமன்றத்தில் பேசும் பெண் சொந்த பந்தங்களாலும் சமூகத்தாலும் தப்பாகப் பேசப்படுகிறாள். “இவ்வளவு காலம் ஏன் பொறுத்திருந்தாய்?” அல்லது “அவனை நீ எப்படி ஆத்திரமூட்டினாய்?” போன்ற கேள்விகளால் வன்முறையாளர் தப்பித்துக் கொள்ள, பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றவாளியாக்கப்படுகிறாள்.
இறுதியாக!
இந்தியக் குடும்ப நலச் சட்டங்களின் வரலாறு, கர்த்தாவின் முழுமையான அதிகாரத்திலிருந்து உயர் நீதிமன்றங்களின் கடுமையான நிதி வெளிப் படைத்தன்மை விதிகள் வரை, பின்தங்கியவர்களைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிகப் பெரிய மைல்கற்களை எட்டியுள்ளது என்பதை நிரூபிக்கிறது.
இருப்பினும், நீதிமன்ற வராண்டாக்களும், சமுதாயத்தின் பார்வைகளும் மாறாதவரை இந்தச் சட்டங்கள் முழுமையான நீதியைத் தராது. சட்டம் தன் நிறுவனமயமாக்கப்பட்ட ஒருதலைப்பட்சப் பார்வைகளைக் களைந்து, பெண்ணின் பொருளாதாரப் போராட்டத்தை ஒரு தார்மீகத் தோல்வியாகப் பார்ப்பதை இச்சமூகம் நிறுத்தும்போதுதான் உண்மையான பாலின நீதி நிலைநாட்டப் படும். அதற்கான போராட்டங்களாக சமூகத்தில் மனமாற்றம் ஏற்படவும், சட்டங்களில் நெருக்கடி கொடுக்கவும் என இருமுனையிலும் மேற்கொள்ளவேண்டும்.
குறிப்பு: எளிதில் புரிந்துகொள்வதற்காக சிறீதேவி, கமல் என்று பெண், ஆண் பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
– கோ.கீதாஞ்சலி ஸ்ருதி கமலா
