‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு’’ ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

8 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘‘எனக்கு வயதாகிவிட்டதே தவிர, என் இயக்கத்திற்கு வயதாகவில்லை; என் கொள்கைக்கு வயதாகவில்லை; என் கொள்கை வெற்றி பெறும்’’ என்றார் தந்தை பெரியார்!
பெரியாருக்குப் பின்னால், ஒன்றுமே இருக்காது என்றார்கள்!
இன்றைக்கு உலகளாவிய இயக்கமாய் இருக்கிறது; ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்!’’

ராஜபாளையம், செப்.7  ‘‘எனக்கு வயதாகிவிட்டதே தவிர, என் இயக்கத்திற்கு வயதாகவில்லை; என் கொள்கைக்கு வயதாகவில்லை. என் கொள்கை வெற்றி பெறும்’’ என்று சொன்னார் தந்தை பெரியார். பெரியாருக்குப் பின்னால், ஒன்றுமே இருக்காது என்றார்கள். இன்றைக்கு உலகளாவிய இயக்கமாய் இருக்கிறது; ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

ராஜபாளையத்தில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’!

்கடந்த 20.08.2026 அன்று மாலை 5.30 மணிக்கு, விருதுநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’ ராஜபாளையம் மதுரை ராஜா கடை தெருவில், ஏ.எஸ்.ஆர்.தங்கராசா அவர்களின் நினைவாக மேடை அமைக்கப்பட்டு நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

‘‘பெரியார் இருக்கிற வரைக்கும் தான் இயக்கம் இருக்குமே தவிர, வேறு வாய்ப்புக் கிடையாது.  அவருக்கு வயதாகிவிட்டது’’ என்று ஒன்றிய அமைச்சராக இருந்த உமாசங்கர் தீட்சத் சொன்னார்.

எனக்கு வயதாகிவிட்டதே தவிர,
என் இயக்கத்திற்கு வயதாகவில்லை;
என் கொள்கைக்கு வயதாகவில்லை!

இந்தச் செய்தி அன்றைய மாலை பத்திரிகை யில் வந்தது.  அய்யாவும், நாங்கள் எல்லோரும் கோயம்புத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தோம். அப்பொழுது மாநகரம் அல்ல, நகராட்சிதான். அந்தச் செய்தியை அய்யாவிடம் சொன்னேன். உடனே தந்தை பெரியார் அவர்கள் கூட்டத்தில் உரையாற்றும்போது அதற்குப் பதில் சொன்னார், ‘‘இந்த மாதிரி வீரமணி சொன்னார்; எனக்கு வயதாகிவிட்டது என்றார்கள் என்று. ஆமாம், எனக்கு வயதாகிவிட்டதுதான். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. நான் என்ன வயதைக் குறைத்துக் காட்டப் போகிறேனா? நான் என்ன ராமச்சந்திர அய்யர் – சீப் ஜஸ்டிஸ் மாதிரி வயதைக் குறைத்து கணக்குக் கொடுக்கப் போகிறேனா?’’ இப்படி சொல்லிவிட்டு, ‘‘எனக்கு வயதாகிவிட்டது; ஆனால், மாண்புமிகு அமைச்சர் அவர்களே, மத்திய அமைச்சருக்கு நான் சொல்கிறேன், எனக்கு வயதாகிவிட்டதே தவிர, என் இயக்கத்திற்கு வயதாகவில்லை; என் கொள்கைக்கு வயதாகவில்லை. என் கொள்கை வெற்றி பெறும்’’ என்று சொன்னார். எவ்வளவு உண்மை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சரி, பெரியாருக்குப் பின்னால்,  ஒன்றுமே இருக்காது என்றார்கள். இன்றைக்கு உலகளாவிய இயக்கமாய் இருக்கிறது; ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்று இங்கு உரையாற்றும்போது பெரியார் செல்வம் குறிப்பிட்டார்.

ஜப்பானில் இரண்டு நாள்கள் சுயமரியாதை இயக்க மாநாடு நடைபெறவிருக்கிறது!

வருகிற அக்டோபர் மாதம், ஜப்பானில் இரண்டு நாள்கள் சுயமரியாதை இயக்க மாநாடு நடைபெறவிருக்கிறது. சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவில், அதற்கு முந்தைய ஆண்டுகளில் பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில்  அமெரிக்காவில், ஜெர்மனியில், அய்ரோப்பாவில், கனடாவில். உலகளாவிய அளவுக்குப் பெரியார். உள்ளூரில் மட்டும் பெரியார் அல்ல; ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்று ஆகிக் கொண்டிருக்கிற கட்டம். பெரியாரோடு போகவில்லை.

அதற்கடுத்தது, எங்களைப் போன்றவர்கள் வருகி றோம்.  மாணவ பருவத்தில் இருந்து தயாரிக்கப்பட்டவன் நான்.

மம்சாபுரத்தில்
44 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவம்!

இந்த ஊருக்கு வந்த அந்த அனுபவத்தை உங்க ளுக்குச் சொல்கிறேன். இன்றைய இளைஞர்களுக்குச் சொல்கிறேன். 44 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சம்பவம் நடைபெற்றது. பக்கத்தில் உள்ள மம்சாபுரத்தில், 1982 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 20 ஆம் தேதி என்று நினைக்கிறேன்; மம்சாபுரத்தில் ஒரு மருத்து வமனையைத் திறப்பதற்காக டாக்டர் பாலன் அவர்கள் அழைத்திருந்தார். ராஜபாளையத்தில் வந்து தங்கி, மாலையில், திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, இரவு சென்னைக்குத் திரும்பிச் செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.

1982 ஜூலை 20 ஆம் தேதி – 44 ஆண்டுகள் நிறைவு.  44 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஓர் அனுபவம். இந்த நகரத்தில், காலையில் தோழர்கள் வந்து சந்தித்தார்கள். ஹைவேஸ் டிபி (டிராவலர்ஸ் பங்களா) இருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அய்யா சிலைக்குப் பக்கத்தில் இருக்கும். அங்கே நான் தங்குவதற்காக அறை பதிவு செய்திருந்தார்கள். நான் அங்கே வந்து தங்கினேன். சில பேர் அங்கே வந்து என்னைப் பார்த்தார்கள். நம்முடைய தோழர்கள் தான் என்று நான் நினைத்தேன். வந்திருந்த நான்கு பேர், ‘‘அய்யா, மம்சாபுரத்திற்குப் போறீங்களே, எந்த வழியாகப் போகப் போறீங்க’’ என்று கேட்டார்கள்.

நான் சொன்னேன், ‘‘எனக்கு எந்த வழியில் செல்லப் போகிறோம் என்று தெரியாது.  உள்ளூர் தோழர்கள் தான் முடிவு செய்வார்கள். மதுரை தலைவர் நண்பர் தேவசகாயம் அம்பாசிடர் காரில் வந்திருக்கிறோம். அவர்கள்தான் முடிவு செய்வார்கள், அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’’ என்றேன்.

உள்ளூர் தோழர்களும், ‘‘நேராக மெயின் ரோடு போய், அங்கிருந்து மம்சாபுரத்திற்குப் போகிறோம்’’ என்று சொன்னார்கள்.

கல், தடி கொண்டு
தாக்கினார்கள்!

நாங்கள் தயாராகி, மாலையில் மம்சாபுரத்திற்குச் செல்வதற்காகப் புறப்பட்டோம். கார், புதுப்பட்டியில்் திரும்புகின்ற வழியில் ஒரு கிணறு இருந்தது. நன்றாக எனக்கு நினைவில் இருக்கிறது. அங்கே கார் திரும்பு கிறபோது, மூன்று, நான்கு பேர்  தி.மு.க. கொடியைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் இரண்டு பேர் அங்கே வந்து, ஒரு ரோஜாப்பூ மாலையைக் கையில் வைத்துக்கொண்டு, ‘‘கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க’ என்று சொல்லிக் கொண்டே,  எங்களுடைய காரை நிறுத்தச் சொல்கிறார்கள். காரின்முன் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். தேவசாயமும் காரில் அமர்ந்திருந்தார். ‘‘தி.மு.க.காரர்கள் நிற்கிறார்கள், மாலை போடுவதற்காக காரை நிறுத்தச் சொல்கிறார்கள்; ஆகவே, அவர்களுக்கு மரியாதைக் கொடுத்து, இறங்கிச் சென்று வாங்க வேண்டும்’’ என்று நினைத்தேன். ஏனென்றால், தோழர்கள் அன்பாக வந்து, சால்வையோ, துண்டோ அணிவிக்க வரும்போது, எழுந்துதான் அதனை வாங்கு வேன். என்னதான் வயதாகி இருந்தாலும், எழுந்து நிற்பேன், எவ்வளவு உடல் வலியாக இருந்தாலும். அமர்ந்துகொண்டே வாங்குவதை நான் சங்கடமாக நினைப்பேன். இயல்பானது அது எனக்கு. அதைத் திட்டமிட்டு நான் செய்வதில்லை. அணிச்சமானது அது.

எனக்கு மூக்கில் அடிபட்டு
ரத்தம் வழிந்தது!

அவர்கள் வரும்போது, காரின் கதவைத் திறப்ப தற்காகக் கைப்பிடியைப் பிடித்துத் திருகி, வெளியே இறங்கலாம் என்று இறங்க முற்பட்டபோது, ஒரு சத்தம் வந்தது; உடனே, ஒரு பெரிய கல் கார் கண்ணாடியின்  வின்ட் ஸ்கிரீன்  மேலே விழுந்து, அந்தக் கண்ணாடி உடைந்து, தூள் தூளாகி என்னுடைய தலையில் பட்டு, ரத்தம் வருகிறது. இன்னொரு பக்கம், மூக்கின் மேல் அடிபட்டு, மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது.  இதெல்லாம் கண் மூடிக் கண் திறப்பதற்குள் நடக்கிறது.  உடனே கார் ஓட்டுநர், மிக சாமர்த்தியமாக, டக்கென்று காரை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்துவிட்டார்.  மம்சாபுரத்தில், மருத்துவமனை திறப்பு விழாவிற்காக, வாசலிலேயே மருத்துவர்கள் எல்லாம் நிற்கிறார்கள். அங்கே போனவுடன், அந்த மருத்துவமனைக்குப் போன முதல் பேஷன்ட்டே நான்தான்.

நான் திறந்து வைத்த மருத்துவமனையில்,
நானே முதல் மருத்துவப் பயனாளியானேன்!

இது ஒரு விசித்திரமானது, என்னுடைய வாழ்க்கையின்  விசித்திரம். மருத்துவமனையைத் திறந்தால் மட்டும் போதாது;  மருத்துவப் பய னாளியாகவும், நானே அங்கு போகக்கூடிய அரிய வாய்ப்பையும் எனக்குக் கொடுத்தார்கள்.

என்னைப் பார்த்து, ‘‘அய்யா, நீங்கள் பேச வேண்டாம்; ரத்தம் வருகிறது’’ என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

நான் சொன்னேன், ‘‘இவ்வளவு பேர் இங்கே காத்துக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வளவு பெரிய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள். பரவாயில்லை, எனக்குக் கொஞ்சம் பஞ்சு வைத்து முதல் உதவி செய்யுங்கள், அது போதும்’’ என்று சொல்லிவிட்டு, ஒரு பத்து நிமிடத்தில் முதல் உதவி செய்தார்கள்.

இரத்தம் வருவதை அழுத்திக்கொண்டே, ‘‘பேச வேண்டாம் அய்யா, பேச வேண்டாம் அய்யா’’ என்று  சொன்னார்கள்.

‘‘அய்ந்து நிமிடம், 10 நிமிடம் பேசுகிறேன்’’ என்று சொல்லி, 15 நிமிடம் பேசினேன்.

ரொம்ப நன்றி, பாலன் ஒரு மருத்துவமனையைக் கட்டியிருக்கிறார் என்று தொடங்கிப் பேசினேன். இன்றைக்கு டாக்டர் பாலனுடைய பிள்ளைகள் எல்லாம், பெரிய அதிகாரியாக ரயில்வே துறையில் இருக்கிறார்கள். இன்னமும் இந்தக் கொள்கையில் இருக்கிறார்கள். நல்லத் தெளிவாக இருக்கிறார்கள்.

இந்தச் செய்தி உடனே, நம்முடைய தோழர்களுக்குத் தெரியாது. இப்போது உள்ளது போன்று கைப்பேசி எல்லாம் கிடையாது. கைப்பேசி இருந்திருந்தால், உடனே எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை ரத்து செய்ய சொன்னார்கள் தோழர்கள் – நான் செத்தாலும் பரவாயில்லை என்று நான் மறுத்துவிட்டேன்!

ராஜபாளையத்தில் உள்ள படிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சியை அன்றைக்கே வைத்திருந்தார்கள். அடுத்தக் கூட்டம் சிறீவில்லிபுத்தூரில் என்று திட்டமிட்டிருந்தோம்.

‘‘எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிடலாம்; நீங்கள் ஓய்வெடுங்கள்’’ என்று தோழர்கள் எல்லோரும் சொன்னார்கள்.

‘‘எந்த நிகழ்ச்சியையும் ரத்து செய்யக்கூடாது. நான் செத்தாலும் பரவாயில்லை. பொதுவாழ்க்கையில், இதுபோன்று நடப்பது எல்லாம் சர்வ சாதாரணம்’’ என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

ராஜபாளையத்தில் உள்ள படிப்பகத்தைத் திறந்து வைத்து,  15 நிமிடம் பேசினேன். பேசிவிட்டு, 12 மணிக்குப் புறப்பட்டோம். அதற்குள் தோழர்கள் திரண்டு விட்டார்கள். தி.மு.க. தோழர்கள், மற்ற கட்சித் தோழர்களும், கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா தோழர்களும் வந்தார்கள். அன்றைக்குப்  பெரிய பரபரப்பு ஏற்பட்டது.  இந்த ஏற்பாடுகளைச் செய்தது யார் என்று மக்களுக்குத் தெரியும். ஒரு பார்ப்பனருடைய தூண்டுகோல்தான் காரணம். அப்பொழுது எம்.ஜி.ஆர். ஆட்சி நடைபெறுகிறது.

அடுத்த நாள், பார்ப்பனர் எதிர்ப்பு மாநாடு; அதற்கு தான் பயன்பட்ட, ஓர் ஆழ்வாராக விபீஷணன் மாதிரி  சிறீவில்லிபுத்தூர்காரர் பயன்பட்டார். அவர் யார் என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும். அவருடைய கடைசி நிலை என்னவென்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. அதற்குப் பிறகு, அவரே வந்து,  ‘‘நான் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்.  நீங்கள் அந்தக் கூட்டத்திற்கு வரவேண்டும். நான், உங்களை வரவேற்கவேண்டும்’’ என்று சொன்னார்.

‘‘நான், வருவதற்குத் தயாராக இருக்கிறேன். உங்கள் மேல் எந்தக் கோபமும் எனக்கு இல்லை. நீங்கள் எய்தப்பட்ட அம்புதானே! ஆகவே, அம்பைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அம்பை எய்தக் கைதான் அப்படியே இருக்கிறது. அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை’’ என்று அவருக்குப் பதில் சொன்னேன்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் இருந்து
தொலைப்பேசி அழைப்பு!

பிறகு, நேராக திருச்சிக்குப் போனேன், விடியற்காலை ஆறு மணிக்கு. திருச்சி பெரியார் மாளிகையில் இருந்த போது, ஏழரை மணிக்கு முதலமைச்சர் எம்ஜிஆரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.

‘‘நான் கேள்விப்பட்டேன் வீரமணி, எப்படி அதுபோன்று நடந்தது?’’ என்று கேட்டார்.

‘‘எப்படி நடந்தது என்று உங்களுக்குத்தான் தெரிய வேண்டும்; ஏனென்றால், அரசாங்கம் உங்களிடம்தானே இருக்கிறது; என்னைக் கேட்கிறீர்களே’’ என்று தெளி வாகச் சொன்னேன்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *