பழிவாங்கும் அரசியல் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை என்பதைப் புதிய அரசும், முதலமைச்சரும் உணர்வது நல்லது!

இணையவழி கையெழுத்து இயக்கம்

அன்றாடம் சீர்கேடு அடையும் சட்டம் ஒழுங்கைச் சரிப்படுத்தி,
மக்கள் நாயக ஆட்சியை நடத்தவேண்டும் என்பதே பொதுவானவர்களின் கருத்து!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

‘‘பழிவாங்கும் அரசியல் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை’’ என்ற பழைய பாடத்தைப் புதிய அரசும், முதலமைச்சரும் உணர்வது நல்லது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், மேனாள் அமைச்சரும், இந்நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் அவரது சகோதரர்கள் இல்லங்கள், அலுவலகங்களில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை நேற்று (5.9.2026)  சென்று, சோதனைக்கு மேல் சோதனை போட்டனர்.

இதற்குமுன் சட்டமன்றத் தி.மு.க.வின் கொறடாவும், மேனாள் அமைச்சருமான திரு.எ.வ.வேலு அவர்கள் மீதும் குற்றச்சாட்டு கூறி, வழக்குத் தொடர்ந்ததில், நீதிமன்றத்தின் ஆணைப்படி அப்படியே அது நிற்கும் நிலை.

தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை உண்டா?

பழிவாங்கும் அரசியல்தான் கடந்த 100 நாள் ஆட்சியில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஆளுங்கட்சியாளர்கள் மீதோ, மற்றபடி முதலமைச்சர், அமைச்சருக்குத் ‘‘தெரியாமல்’’ கூட்டணிக் கட்சியாகிய, ஆதரவு தந்து வருகின்ற கட்சியினர் மீது அடக்குமுறைப் பாய, ஆயத்தமாகக் குறிப்பெடுப்பதற்கும், மாணவர்கள் பற்றிய விவரச் சேகரிப்பிற்கும் காரணமானத் தலைமைச் செயலாளர் மீது, அக்கட்சிகளின் பொறுப்பு மிகுந்த தமிழ் மாநில செயலாளர்கள் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை அறிவித்தும், இதுவரை எந்த சிறு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

ஏன்? காவல்துறையின் பல நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட துறை ஆளுமைகளுக்கே தெரியாத வண்ணம் ‘Administrative Excutive’  ஆக அதிகார வர்க்கத்தின்மூலம் நடைபெறும் அவலம் (மேற்சொன்ன தொடர் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகளின் தீர்ப்பு ஒன்றில் ஒரு நீதிபதி, மக்கள் ஓட்டுப் போட்டு ஆட்சியை நடத்துபவருக்கு ‘Political Excutive’ என்ற புது சொற்றொடர் தரப்பட்டது).

இதுவரை போடப்பட்ட வழக்குகளில், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் விசாரணைகளில் ஆளும் அரசுக்குச் சாதகமாக இல்லாததே, பழிவாங்கும் அரசியல் நடைபெறுகிறது என்பதற்கான மறைமுகச் சுட்டிக்காட்டுதல் போன்ற நிலை அல்லவா? அது ஒருபுறம் இருக்கட்டும்!

 ‘‘எங்கள் மீது சுமத்தப்பட்டவை ஆதாரமற்றவை என்று நாங்கள் நிரூபிப்போம்!’’ – கே.என்.நேரு

விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக்  கொடுத்து, நீதிமன்றங்களில், ‘‘எங்கள் மீது சுமத்தப்பட்டவை ஆதாரமற்றவை என்று நாங்கள் நிரூபிப்போம்’’ என்று கூறியுள்ளதோடு, ‘இந்த அச்சுறுத்தல் அரசியலை எதிர்கொள்ளத் தயார்’ என்று கே.என்.நேரு கூறியுள்ளார்.

அதோடு, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு குடும்பம் பாரம்பரியமான வியாபாரத்திலும், விவசாயத்திலும் லால்குடி பகுதி, மற்ற பகுதிகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு, வசதி படைத்தக் குடும்பத்தினர். இதற்கு முன் ஒன்றிய அரசின் வருமான வரித் துறை வழக்குகளைச் சமாளித்து, தங்களது நிலைப்பாட்டை நிரூபித்து, நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்டவர்கள்.

இதனால், ‘‘தமிழ்நாட்டின் ஆக்கப்பூர்வ அரசியல் நடைபெறாமல், பழிவாங்கும் எதிர்மறை அரசியல்தான் நடக்கிறது ‘ஜனநாயகன்’ ஆட்சியில்’’ என்று ஓட்டுப் போட்ட மக்களே உணரும் நிலை இப்போது! (ஆதரவு தரும் கூட்டணிக் கட்சியினரின் அதிருப்தி, மலைபோல இருக்கும் நிலையில்).

மக்கள் நாயக ஆட்சியை நடத்த வேண்டும் என்பதே பொதுவானவர்களின் கருத்து!

எனவே, ஆக்கப்பூர்வ ஆட்சியை நடத்தி, அன்றாடம் சீர்கேடு அடையும் சட்டம் ஒழுங்கைச் சரிப்படுத்தி, மக்கள் நாயக ஆட்சியை நடத்தவேண்டும் என்பதே பொதுவானவர்களின் கருத்து என்பதை மறந்தால், அதன் விளைவை அறுவடை செய்யவேண்டிய பொறுப்பு ஆளுங்கட்சியையே சாரும்.

எந்த ஆட்சியானாலும், ‘‘பழிவாங்கும் அரசியல் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை’’ என்ற பழைய பாடத்தைப் புதிய அரசும், முதலமைச்சரும் உணர்வது நல்லது!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

6.9.2026          

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *