மும்பை, செப். 6- மகாராட்டிர மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள 10 நாள் நவராத்திரி வழிபாட்டு நிகழ்ச்சிகள், ‘கர்பா’, ‘தாண்டியா’ நடனங்களில் முஸ்லிம்கள் பங்கேற்கத் தடை விதிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) முடிவு செய்துள்ளது.
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத், நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலகளாவிய ஒற்றுமை குறித்துப் பேசி ஒரு வாரமே ஆன நிலையில், வலதுசாரி அமைப்பான விஎச்பி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விஎச்பி தேசிய செய்தித் தொடர்பாளரும், இணைச் செயலாளருமான சிறீராஜ் நாயர் கூறியதாவது:
நவராத்திரி விழாவில் கர்பா-தாண்டியா நடனங்களில் முஸ்லிம்கள் பங்கேற்க அனுமதிப்பதில்லை என நாங்கள் முடிவு செய்துள்ளோம். நவ ராத்திரி விழா என்பது வெறும் பாட்டும் கூத்தும் அல்ல; அது அம்பாளை வழிபடும் ‘புனித’மான நிகழ்வு. உருவ வழிபாட்டை எதிர்க்கும் முஸ்லிம்கள் இந்த விழாவில் ஏன் பங்கேற்க வேண்டும்?’
இருப்பினும், இந்தத் தடை எந்த வொரு சமூகத்துக்கும் எதிரானது அல்ல. மதமாற்றம் மற்றும் பசு வதைக்கு எதிரான கொள்கைகளில் விஎச்பி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது.
விழாவில் பங்கேற்பவர்களின் ஹிந்து அடையாளத்தைச் சரி பார்க்க அவர்களின் அடையாள அட்டை களைப் (ஆதார்) பரிசோதிக்க வேண்டும் என்றும், நெற்றியில் திலகம் இடுவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முஸ்லிம்களுக்கோ அல்லது வேறு எந்தச் சமூகத் தினருக்கோ எதி ரானது அல்ல. முஸ்லிம்கள் நவராத்திரி விழாவில் பங்கேற்க விரும்பினால், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வர வேண்டும் அல்லது தங்கள் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்களில் நவராத்திரி விழாக்களை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு சிறீராஜ் நாயர் கூறினார்.
