வல்லம், செப். 5- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 02.09.2026 அன்று மாலை 3.00 மணிக்கு பல்வேறு பள்ளிகளில் சிறப்பாக பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா நேபாளத்தை சேர்ந்த ராஜேந்திர தவாடி அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
நேபாளத்தில் வெள்ள அபாய அறிவிப்பு வந்தவுடன் மிக விரைவாக செயல்பட்டு மாணவ, மாணவிகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் உயிரைக் காப்பாற்றிய நேபாளத்தை சேர்ந்த திரிபுவன் திரிசூலி உயர்நிலைப்பள்ளி முதல்வர் ராஜேந்திர தவாடி அவர்களின் வீரத்தையும், மனித நேயத்தையும் பாராட்டும் விதமாக விருதுகள் விழா அர்ப்பணிக்கப்பட்டது.
மேலும், கல்விப்பணியை கனவாகக் கொண்டு மாணவ சமுதாய முன்னேற்றத்தை நனவாகக் கண்டு சிகரத்தை நோக்கிய சாதனைப்பயணத்தில் மாணவ மாணவிகளை அழைத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல் தங்களது சிறப்பான பணிகளால் சமூக மாற்றத்திற்கு பாடுபடும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து. அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் விழாவில் தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் கே.டி.ராஜாராமன் தனது சிறப்புரையில் நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் நிர்ணயிக்ப்படுகின்றது என்று கூறிய அவர் மாணவர்கள் முன்னேற்றம் ஆசிரியர்கள் கையில் உள்ளது என்று குறிப்பிட்டார். காலத்திற்கு ஏற்றபடி வேகமாக வளரும் நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு ஆசிரியர்கள் மாற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் ஆசிரியர் களாகிய நீங்கள் பெறும் நல்லாசியர் விருதுகள் உங்கள் உழைப்பிற்கும் சமூகப் பணிக்கும் கிடைத்த வெகுமதி என்று கூறினார்.
விழாவில் தலைமை தாங்கி உரையாற்றிய பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் க.ப. வெள்ளிங் கிரி ஆசிரியர் அறப்பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஆசிரியர்கள் இந்திய நாட்டின் செல்வங்களான மாணவ மாணவிகளின் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் விருது பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
விழாவில் வாழ்த்துரை வழங்கிய இப்பாலிடெக்னிக் கல்லூரி துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் துவக்கம், அதன் வளர்ச்சி, பாலிடெக்னிக் கல்லூரியின் சாதனைகள் மற்றும் விருதுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.
மேலும் அவர் நமது நாட்டின் மனித வளங்களான மாணவச் செல்வங்களின் தனித்திறமைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அவர்களின் சுயமான சிந்தனைத்திறனை வளர்த்து நற்பண்புகள், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் மனிதநேயத்தை விதைக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் இந்த செயற்கரிய செயலை செய்துவரும், ஆசிரியர்கள் சமூகத்திற்கு வாழ்த்துகளை கவிதை வடிவில் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளிலிருந்து சுமார் 60 ஆசிரியர்கள் விழாவிற்கு வருகை தந்து நல்லாசியார் விருதுகளை பெற்றுக் கொண்டனர். விழாவில் முன்னதாக பாலிடெக்னிக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி எஸ். சாஹித்யா வரவேற்புரை வழங்கினார். விருதுகளை பெற்றுக்கொண்ட 3 ஆசிரியர்கள் ஏற்புரை வழங்கினார்கள். விழாவிற்கு வருகை தந்து விருதுகளைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் அனைவரும் குழு ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர். விழாவிற்கு வருகை தந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் சிற்றுண்டியும் தேநீரும் வழங்கப்பட்டது.
விழாவில் இரண்டாம் ஆண்டு மாணவி ஆ.தேவதர்ஷினி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.
