புதிய அரசாணையால் 15 ஆயிரத்திற்கும் மேலான சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை மூடும் நிலை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

சென்னை, செப். 04-  ‘தமிழ்நாடு அரசின் புதிய அரசாணை நடைமுறைபடுத்தப்பட்டால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்ளை மூட வேண்டிய நிலை ஏற்படும். சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குமுறைச் சட்ட விதிகள் 2018-அய் எளிமைப்படுத்தும் நோக்கத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 13.02.2026 அன்று அரசாணை எண் 41 மூலம் வெளியிடப்பட்டது. அதன்படி, அடிப்படை பரிசோதனை நிலையங்கள் என்பவை ரத்த சக்கரை அளவு, ஹீமோகுளோபின் போன்ற சாதாரண, எளிமையான பரிசோ தனைகளை செய்கின்ற ஒரு லேப் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை லேப்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களில் லேப் டெக்னீசியன்களால் மேற் கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகளின் அறிக்கையில், ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ நோய்க்குறியியல் அல்லது மருத்துவ நுண்ணுயிரியியல் அல்லது மருத்துவ உயிர் வேதியியலில் முதுநிலை படிப்பு படித்தவர் கையெழுத் திடவேண்டும், அதுவும் படிப்பை முடித்த பிறகு ஓராண்டு அனுபவம் உள்ளவர்தான் கையெழுத்திட வேண்டும் என புதிய நிபந்தனை இந்த அரசாணை மூலம் விதிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ரத்தப் பரிசோதனை நிலையங்களை நடத்திடவும், சோதனை முடிவுகளில் கையெழுத்திட்டு வழங்குவதற்கும் கல்வித் தகுதிகள் ஏற்கெனவே வரையறை செய்யப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அது நடைமுறையில் உள்ளது.

அதன் அடிப்படையில், இது வரை லேப் டெக்னீசியன்களே, பரிசோதனை முடிவுகளில் கையெழுத்திட்டு வருகின்றனர். அதற்கு மாறாக திடீரென புதிய நிபந்தனைகளை விதிப்பது சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களில் 80 விழுக்காடு பரிசோதனை நிலை யங்கள் சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களாகும். இச்சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மூலமாகவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஏழை – எளிய மக்கள் அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின், இரத்த வகைகள் மற்றும் இதர ரத்தப் பரிசோதனைகளை தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே குறைந்த கட்டணத்தில் எளிதாக செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் அரசின் புதிய அரசாணை நடைமுறை படுத்தப்பட்டால் ,15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்ளை மூட வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில், அவற்றால் மருத்துவர்களையோ அல்லது மருத்துவ நோய்க்குறியியல், அல்லது மருத்துவ நுண்ணுயிரியியல் அல்லது மருத்துவ உயிர் வேதியியலில் படிப்புகளில் முதுநிலை படிப்பு படித்தவர்வர்களையோ ஊதியம் கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாது.

இந்த புதிய விதிமுறை, நாடு முழுவதும் சங்கிலித் தொடர் போல் லேப்களை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும். ஏழை, எளிய மக்களுக்கும், சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கும் எதிராக அமையும். எனவே, இந்த அரசாணை எண் 41/2026-அய் தமிழ் நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களையும், அவற்றை நடத்துகின்ற லேப் டெக்னீசியன்கள் மற்றும் அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தையும் காத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *