முதலமைச்சர் தொகுதி அலுவலகம் பொதுமக்களால் முற்றுகை! அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் குற்றச்சாட்டு!

4 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 18- சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக தலைவர் விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, தற்போது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தேர்தலுக்கு முன்னதாக, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு வந்த தவெக தலைவர் விஜய், வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையில் 10 நிமிடங்கள் பொதுமக்களிடம் பேசிவிட்டு சென்றார். அதன் பிறகு வெற்றி பெற்று பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மற்றபடி அவர் தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், அவரது அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று (17.8.2026) முற்றுகையிட்ட நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 34ஆவது வார்டு, கொடுங்கையூர் சேலவாயல் வேதாந்த முருகப்ப சாலை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் கழிவுநீர் வசதி இல்லை. இந்த வசதிகளை செய்ய பொதுமக்கள் முயற்சி செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த 2 பேர் நீதிமன்றத்தில் சொத்து பிரச்சினைக்காக வழக்குத் தொடர்ந்து உள்ளனர். அதனால் நீதிமன்ற ஆணையுள்ளது என்று கூறி அந்த இடத்தில் மேற்கண்ட சாலை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்ய விடாமல் அவர்கள் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் பல்வேறு இடங்களில் மனுக்கள் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. தவெக அரசு பொறுப்பு ஏற்று இந்த 100 நாளில் 2 முறை அப்பகுதி மக்கள் பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில் தங்கள் பகுதிக்கு அத்தியாவசியத் தேவையான கழிவுநீர் வசதியையும், சாலை வசதியையும் உடனடியாக செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100 பேர் வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் உள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சட்டமன்ற அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த எம்கேபி நகர் காவல் துறையினர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து அவர்கள் எங்களது கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம், என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தவெக மாவட்ட செயலாளர் சிவா, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக முதலமைச்சர் கவனத்திற்கு இதை கொண்டு சென்று உங்களது பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக கூறி சமாதானம் செய்தார். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

பெங்களூரு பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல்நலக் குறைவு!

பன்றிக் காய்ச்சல் பரவல் அபாயம்!

பெங்களூரு, ஆக.18– பெங்களூரு ரிச்சர்ட்ஸ் டவுன் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கிளாரன்ஸ் பள்ளியில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 21 ஆசிரியர்களும் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கடுமையான காய்ச்சல், இருமல், சளி மற்றும் உடல் வலி போன்ற ஒரே மாதிரியான வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. இதில் இருவருக்கு H1N1 (ஸ்வைன் காய்ச்சல்) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வைரஸ் தொற்று மற்ற மாணவர்களுக்கும் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பேரிடரைக் கட்டுப்படுத்த உள்ளூர் சுகாதாரத் துறை மற்றும் குடிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாள்களில் பள்ளி வளாகத்தை முழுமையாகச் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆதாரமின்றி ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறக் கூடாது!

சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு

பேரவைத் தலைவர் உத்தரவு

சென்னை, ஆக. 18– தமிழ்நாடு சட்டப் பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர்கள் ஆதாரங்களின்றி ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கக் கூடாது என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

பேரவை விவாதங்களின் போது, முந்தைய ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும், தனி நபர் சார்ந்த புகார்கள் குறித்தும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச் சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இதனால் அவையில் அடிக்கடி காரசாரமான வாக்குவாதங்கள் எழுந்து வந்தன.

இது தொடர்பாக மூத்த உறுப்பினர்கள் சிலர் பேரவைத் தலைவரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து, பேரவை அலுவல்களை ஆக்கபூர்வமாக நடத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் நாள்களில் எந்தவொரு உறுப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளைப் பேசினால், அதற்குரிய தகுந்த ஆதாரங்களை அவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அவைக் குறிப்பில் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் பேரவைத் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *