புதிய தலைமைச் செயலகம், ஒலிம்பிக் நகரம், 10 ஆயிரம் காவலர்கள் நியமனம் முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 04- ‘‘சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடியில் உருவாக்கப்படும்’’ என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.

இதுதொடர்பாகச் சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (3.9.2026) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிப்பதாவது: கிழக்கிந்திய கம்பெனியால் சென்னையில் வணிக செயல்பாட்டுக்காக வாங்கப்பட்ட நிலத்தில், கடந்த 1640-ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1644-ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

இது 1652-இல் பிரசிடென்சி நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையிடமாகத் திகழ்ந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாடுஅரசின் தலைமைச் செயலகமாக தொடர்ந்து செயல்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசின் நிர்வாக மய்யமாகவும், மாநிலத்தின் ஆட்சிப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது.

சுமார் 107 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டுக்காகச் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. மீதம் உள்ள நிலப்பரப்பு இந்தியப் பாதுகாப்புத் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

எனவே, இந்த வளாகத்தை விரிவுபடுத் தவோ, மேம்படுத்தவோ முடியவில்லை. தற்போது தலைமைச் செயலகம் 2 கட்டடங்களில் செயல்படுகிறது. இதில் பிரதானக் கட்டடமாக அறியப்படும் புனித ஜார்ஜ் கோட்டை, ஆளுநரின் இருப்பிடமாகக் கட்டப்பட்டது.

இங்கு சட்டப்பேரவை, முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலரின் அறைகள், நிதி உள்ளிட்ட முக்கிய துறைகள் செயல்படுகின்றன. இந்த வளாகம் 2.07 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

விரிவடைந்து வரும் நிர்வாகத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில், நாமக்கல் கவிஞர் மாளிகை 1978-ஆம் ஆண்டு 3.75 லட்சம் சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் கட்டப்பட்டது. இந்த கட்டடங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலர்கள், அலுவலர்கள் மற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இடப்பற்றாக்குறை காரணமாக நிர்வாக நலன் கருதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. பின்னர், அந்தக் கட்டடம் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டதால் தலைமைச் செயலகம் தொடர்ந்து கோட்டை வளாகத்திலேயே செயல்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் தலைமைச் செயலகத்தின் அனைத்து அரசுத் துறை களின் பணியாளர்கள் எண்ணிக்கையும், நிர்வாகப் பொறுப்புகளும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளன. எனினும், தற்போதைய கட்டமைப்புகள் பெரும் பாலும் மாற்றப்படாமல் இருப்பதால் தேக்கநிலை அடைந்துள்ளது.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்துக்கும் உலகத்தரத்திலான பொது நிர்வாக உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பது அவசியம்.

புதிய தலைமைச் செயலகக் கட்டடத் தில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும். தீயணைப்பு, மாற்றுத் திறனாளிகள் சென்றுவர வசதிகள், பசுமைக் கட்டட தர நிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.

போதுமான வாகன நிறுத்துமிடம், மாநாட்டு அரங்குகள், மக்கள் சேவை மய்யங்கள், அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். வருங்காலத் தலைமுறையினர் அறியும் வகையில் கோட்டையின் பாரம்பரியக் கட்டடங்கள் வரலாற்று மரபுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்படும்.

அடுத்த 100 ஆண்டுகளின் தேவையை நிறைவு செய்யும் வகையில், நவீன வசதி களுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடியில் உருவாக்கப்படும்.

ஒலிம்பிக் நகரம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் பிற பன்னாட்டு விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையில் பதக்கங்களை வெல்லும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ அமைக்கப்படும்.

தேசிய மற்றும் பன்னாட்டு அளவி லான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு, ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக் கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு உதவும் ஒருங்கிணைந்த விளையாட்டு மய்யமாக இது திகழும். இவ்வாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.

10 ஆயிரம் காவலர்கள் நியமனம்

சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதுநேற்று (3.9.2026) விவாதம் தொடங்கியது. முன்னதாக, காவல் மற்றும் தீயணைப்புத் துறை தொடர்பான 59 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார்.

அவர் பேசும்போது, ‘‘தமிழ்நாடு காவல்துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும். மேலும், காவல் துறையில் 22 சதவீதமாக உள்ள பெண் காவலர்களின் எண்ணிக்கையை 30 சதவீதமாக உயர்த்த, முதல் கட்டமாக 5,000 பெண் காவலர்கள் உட்பட 10,000 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *