பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல்: முந்திக்கொண்டது விருத்தாசலம்- நாடெங்கும் நடக்கட்டும் கொள்கைக்குடும்பப் பெருவிழா…

இணையவழி கையெழுத்து இயக்கம்

த.சீ. இளந்திரையன்

கட்டுரை

குருதி உறவை விட கொள்கை உறவு மேலானது என்பார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அதற்கான சான்று தான் விருத்தாசலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற பெரியார் கொள்கைக்குடும்பங்களின் ஒன்றுகூடல். ஒரு குடும்பம் என்பது குருதி உறவால் மட்டும் உருவாவதல்ல. ஒரே வீட்டில் பிறந்தவர்கள் உறவுகள் என்றால், பெரியார்  கொள்கைகளை வாழ்வியல் நெறியாகக் ஏற்றுக்கொண்டவர்கள் பெரியார் கொள்கைக் குடும்பத்தினர்!

அத்தகைய பெரியார் கொள்கைக் குடும்பங்களை ஒரே இடத்தில் இணைத்த வாழ்வின் சிறப்புமிக்க நிகழ்வாக, விருத்தாசலம் எனும் திருமுதுகுன்றத்தில் 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10. 45 மணிமுதல் மாலை 4 மணி வரை “பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல்” நிகழ்ந்தது. மறக்க முடியா மகிழ்வைத் தந்தது.

கொள்கைப் பெருவிழா….

பெரியார் கொள்கைக்குடும்பங்களின் ஒன்றுகூடல் என்பது குடும்பங்களின் வெறும் சந்திப்பு மட்டுமல்ல. இது முன் தலைமுறையின் வாழ்வியலை, போராட்டங்களை, கண்ட களங்களை, குவித்த கொள்கை வெற்றிகளை  அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்கும் கொள்கைத் தொடர்ச்சியின் நிகழ்வாக நிறைந்திருந்தது.

கட்டுரை

வேர்களை போற்றிய விழுதுகள்:

பெரியார் விதைத்த பகுத்தறிவு விதைகளைப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கையளித்த பெரியார் பெருந்தொண்டர்கள் எனும் வேர்களுக்கு இன்றைய தலைமுறையான விழுதுகள் தங்கள் நன்றிகளை தெரிவித்து, பெரியார் கொள்கை வெல்ல வாழ்வைக் கொடையளித்த கொள்கைச் சீலர்களை இன்றைய தலைமுறையினர் சார்பில் தமிழர் தலைவர் பாராட்டி மகிழ்ந்தார்.

“பெரியாரின் கொள்கைக் குடும்பம்!”

விருத்தாசலத்தில் ஒன்று கூடியவர்கள் ஒரே சிந்தனையில் வெவ்வேறு காலகட்டங்களில் பயணித்தவர்கள். அதனால் இந்தச் சந்திப்பில் கைகுலுக்கிய கைகள் மட்டும் ஒன்றாகவில்லை; பெரியார் பெருந்தொண்டர்கள் எனும் வேர்களும், இளந்தலைமுறை எனும் விழுதுகளும், பெரியார் பிஞ்சுகள் என்ற விதைகளும்  ஒன்றாகக் கூடிக் களித்தன. தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் கொள்கைகளை உரைத்தன.

கொள்கைக் குடும்பமாக
மலர வேண்டும் ஏன்?

பெரியாரைச் சுற்றி உருவான உறவு, அரசியல் உறவைக் கடந்தது. அது குடும்ப உறவாக மாறியது. ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் பெரியார் சிந்தனையைச் சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்; ஒரு குழந்தை வளர்ந்தால் பகுத்தறிவை ஊட்டும் குடும்பம்; ஒரு இளைஞன் உருவானால் சமூகநீதிப் பாதையை அறிமுகப்படுத்தும் இயக்கம்—இதுதான் பெரியார் கொள்கைக் குடும்பத்தின் உயிர்நாடி!

அந்தப் பணியின் தொடர்ச்சியாக – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்தக் கொள்கைக் குடும்பங்களை தலைமுறைத் தலைமுறையாக இணைத்துப் பாதுகாத்து வருகிறார்.

அறிவாசான் தந்தை பெரியார் மறைவுக்குப் பின்னர் இயக்கம் என்னவாகும் என்று பலர் எண்ணிய காலத்தில், பெரியாரின் கொள்கை என்பது ஏடுகளில் மட்டும் இருக்கக் கூடாது; அது தொடர்ந்து இயங்கும் சமூகத் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை செயலால் நிரூபித்தவர் நம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் காட்டிய பாதையைப் பாதுகாப்பதோடு நின்றுவிடாமல், அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பையும் அவர் தமது வாழ்வின் பணியாக ஏற்றுக்கொண்டு செயலாக்கி வருகிறார்.

அதனால்தான் இன்று பெரியார் கொள்கைக் குடும்பம் என்பது ஒரு தலைமுறையோடு முடிந்துவிடவில்லை.

அறிவாசான் தந்தை பெரியார்,  அன்னை மணியம்மையார்,  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  ஆகியோர் தலைமையில் புதிய தலைமுறையினர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தொடர்ச்சியின் உயிரோட்டத்தையே விருத்தாசலம் ஒன்றுகூடல் வெளிப்படுத்தியது.

கட்டுரை

பெரியார் பிஞ்சுகள் அரங்கம்
–  தலைமுறை தொடர்ச்சிக்கான நம்பிக்கை:

ஒன்றுகூடலில் பெரியார் பிஞ்சுகளுக்கு வழங்கப்பட்ட இடம் மிகவும் பொருள் பொதிந்தது. ஏனெனில், ஒரு கொள்கை உயிரோடு இருக்கிறதா என்பதை அறிய வேண்டுமென்றால், அதன் மேடையில் முதியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியதில்லை. அந்த மேடையில் குழந்தைகள் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும்!

பாடல், நடனம், திறமை வெளிப்பாடு, அறிவு விருந்து என குழந்தைகளுக்கான நிகழ்வுகள் அமைந்தது, பெரியார் சிந்தனை அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது என்பதற்கான அழகான அடையாளமாக அமைந்தது.

பெரியார் பிஞ்சுகள் மேடையில் நின்றபோது, அது வெறும் கலை நிகழ்ச்சியாகத் தோன்றவில்லை.

“இந்தக் கொள்கைக்கு எதிர்காலம் உண்டு!”என்ற அறிவிப்பாகவே அது ஒலித்தது.

பெண்களின் பங்கேற்பு – மாற்றத்தின் இன்னொரு முகம்:

பெரியார் இயக்கத்தின் சமூகப் புரட்சியில் பெண்களின் விடுதலைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அளப்பரியது.

பெண் கல்வி, சுயமரியாதை, சம உரிமை, திருமணச் சீர்திருத்தம், கைம்மை மறுப்பு என பெண்களின் வாழ்வைச் சுற்றியிருந்த கட்டுகளை உடைப்பதற்காக பெரியார் எழுப்பிய குரல், இன்றும் சமூகத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக மகளிர் அரங்கமும் இடம்பெற்றது.

ஒரு கொள்கைக் குடும்பத்தின் முழுமை என்பது ஆண்களின் பங்கேற்பால் மட்டும் உருவாகாது. பெண்களும் சமமான சிந்தனையாளராக, செயல்பாட்டாளராக, வழிகாட்டியாக நிற்கும் இடத்தில்தான் பெரியாரின் வெற்றி முழுமை பெறுகிறது.

அறிவு விருந்தோடு
அறுசுவை விருந்து :

ஒன்றுகூடலில் உணவு என்பது வயிற்றை நிரப்புவதற்கான ஏற்பாடு மட்டும் அல்ல. பிறப்பால் உயர்வு–தாழ்வு இல்லை. உணவில் வேறுபாடு இல்லை.உறவில் பாகுபாடு இல்லை.மனிதன் என்ற ஒரே அடையாளமே போதும். தந்தைபெரியார் விரும்பிய சமத்துவத்தின் எளிய வடிவம் கூட இத்தகைய ஒன்றுகூடல்களில் வெளிப்பட்டது.

அதனால் இந்த ஒன்றுகூடல் அறிவுக்கும் அன்புக்கும், கொள்கைக்கும் குடும்பத்திற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

முந்திக்கொண்ட
முதுகுன்றம்:

விருத்தாசலம் எனும் திருமுதுகுன்றம் ஒன்று கூடல் என்ற ஒரு நிகழ்வைக் காணவில்லை. ஒரு இயக்கத்தின் வரலாற்றை நேரில் கண்டது. நேற்றைய தலைமுறையின் நினைவுகளும், இன்றைய தலைமுறையின் செயல்களும், நாளைய தலைமுறையின் கனவுகளும் ஒரே நேரத்தில் காணும் வாய்ப்பு கிட்டியது

பெரியாரை நேரில் பார்த்தவர்கள் இருந்தனர். அவரது எழுத்துகளைப் படித்து வளர்ந்தவர்கள் இருந்தனர்.அவரது கொள்கைகளைப் புத்தகங்களில் அறிந்தவர்கள் இருந்தனர்.

அந்தக் கொள்கையை நாளைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப் போகும் பெரியார் பிஞ்சுகளும் இருந்தனர்.இதுதான் இந்த ஒன்றுகூடலின் மிகப்பெரிய வெற்றி. தமிழ்நாடு முழுவதும் இத்தகைய விழா நடத்தப்பட வேண்டும் என நாம் நினைத்திருந்தோம், அதற்கு முன்பாகவே விருத்தாசலம் முந்திக்கொண்டு சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது என தமிழர் தலைவர் புகழ்மாலை சூட்டினார்.

நாடெங்கும் நடக்கட்டும்
குடும்ப விழா….

விருத்தாசலத்தில் நடைபெற்ற  பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல்  ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

“நாம் யாருடைய குடும்பம்?” என்று கேட்டால், குருதியைக் காட்டிலும் கொள்கையைச் சொல்லும் பெரியார் குடும்பம். “நமது கொள்கை ஆசான் யார்?”என்று கேட்டால், தந்தை பெரியார்.“அந்தப் பாதையைத் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டி யார்?” என்று கேட்டால், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி! என்ற விடை வரலாற்றின் பக்கங்களில் பதிந்தது.

விருத்தாசலத்தில் கூடியது கூட்டம் அல்ல,பெரியார் விதைத்த விதைகளின் விளைச்சல்!கூடியது குடும்பம் அல்ல,கொள்கையால் இணைந்த பெருங்குடும்பம்!நடந்தது விழா அல்ல, ஒரு நூற்றாண்டு சமூகப் புரட்சியின் தொடர்ச்சி!

அந்தத் தொடர்ச்சியைத் தளர விடாமல், பெரியாரின் சிந்தனைகளை காலத்திற்கேற்ப எடுத்துச் சென்று, கொள்கைக் குடும்பங்களை தலைமுறைத் தலைமுறையாக இணைத்து நிறுத்தும் பணியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பங்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

எனவே, விருத்தாசலம் ஒன்றுகூடல் வழங்கிய ஒற்றைச் செய்தி.

“பெரியார் மறையவில்லை;

பெரியார் கொள்கைக் குடும்பமாக வாழ்கிறார்!அந்தக் குடும்பத்தைத் தலைமுறைகளோடு இணைக்கும் கொள்கைப் பாலமாகத் தமிழர் தலைவர் ஆசிரியர் திகழ்கிறார்.

விருத்தாசலம் முந்திக்கொண்டது போல அருமைத் தோழர்களே எல்லா மாவட்டங்களிலும் நடந்துங்கள் பெரியார் கொள்கைக்குடும்ப விழாக்களை. பெரியார் கொள்கை வெல்லட்டும் – ஆசிரியர் அகம் மகிழட்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *