சென்னை, செப்.2-தமிழ்நாட்டிற்கு ஒன்றிய தொகுப்பு மின் நிலையங்களில் இருந்து நாள்தோறும் சராசரியாக 5,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 3,400 முதல் 3,500 மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதனால், அதிகரித்து வரும் மின் தேவையை நிறைவு செய்வதில் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி, திருவள்ளூர் வல்லூர், தூத்துக்குடி, கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஒன்றிய அரசின் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் ஆந்திரா, கருநாடகா, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங் களிலும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான மின் நிலையங்கள் உள்ளன.
இந்த மின் நிலையங் களில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு தினமும் 7,000 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மின் நிலையங்களில் ஏற்படும் பழுது உள்ளிட்ட காரணங்களால், சராசரியாக 5,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்தது.
இந்த நிலையில், தெலங்கானாவில் உள்ள ராமகுண்டம் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், நெய்வேலி மின் நிலையத்தின் 3 அலகுகளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒன்றிய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கப் படும் மின்சாரம் கடந்த சில நாட்களாக 3,400 முதல் 3,500 மெகாவாட்டாக குறைந்துள்ளது.
தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஒன்றிய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் குறைந்துள்ளதால், மின் தேவையை சமாளிப்பதில் தமிழ்நாடு மின் வாரியத் திற்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
