அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் நெஞ்சில் சுமந்து ஓய்வறியாமல் ஓடிக்கொண்டிருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்!

9 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

கழகத் தலைவரின் வாகனத்தின் சக்கரங்கள் கூட ஒரு நேரத்தில் ஓய்ந்துவிடும்; அவரது கால்களோ ஓடிக்கொண்டே இருக்கும்!

பிறந்த மண்ணின் நினைவுகளோடும்… இயக்கப் பணியின் வேகத்தோடும்… ஓய்வறியாமல் பயணித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்

சிலருக்குப் பிறந்த ஊர் என்பது வாழ்க்கை. சிலருக்கு அது வாழ்வின் இனிய நினைவுகளைச் சுமந்து நிற்கும் மண்.

சிலருக்குப் பிறந்த ஊருக்குச் செல்வது உறவுகளையும் பழைய நண்பர்களையும் சந்தித்து, சிறிது நேரம் பாசத்தில் திளைத்து மீண்டும் திரும்பி வருகிற ஒரு பயணம்.

ஆனால், ஒரு மனிதர் தனது பிறந்த மண்ணுக்குச் செல்லும்போதுகூட, அந்த மண்ணின் நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடியே, ஒரு நொடியையும் தனக்காக ஒதுக்காமல் இயக்கப் பணிக்காக ஓடிக்கொண்டிருந்தால்?

அந்த மனிதர்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்!

திராவிடர் கழகம்

கடந்த ஆகஸ்ட் 29, 30 ஆகிய இரண்டு நாள்கள் அவர் மேற்கொண்ட பயணம், ஒரு சாதாரண பயணமாக இருக்கவில்லை.

அவரது பயணத்தில் பிறந்த மண்ணின் பாசமும் இருந்தது. பழைய நினைவுகளும் இருந்தன. பெரியார் இயக்கக் குடும்பங்களின் அன்பும் இருந்தது. திருமண வாழ்த்துகளும் இருந்தன.

மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையும் இருந்தது. மழையிலும் தொடர்ந்த பொதுக்கூட்டமும் இருந்தது. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில்களும் இருந்தன. இயக்கக் குடும்பங்களுக்கான அறிவுரைகளும் இருந்தன. இவை அனைத்திற்கும் மேலாக ஓய்வறியாத உழைப்பும் இருந்தது!

காலை 6 மணிக்குத் தொடங்கிய பயணம்…

29.8.2026 அன்று காலை 6 மணியளவில் சென்னையி லிருந்து கடலூர் நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

வாகனத்தில் ஏறி அமர்ந்ததும், மற்றவர்களுக்கு அது  ஒரு பயணம் அவ்வளவுதான். வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஆனால் ஆசிரியர் அவர்களுக்கு அப்போதுதான் அன்றைய பணிகளே தொடங்குகின்றன.

தமிழ், ஆங்கில நாளிதழ்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் புரட்டிப் படித்தார்.

திராவிடர் கழகம்

தமிழர் நலனுக்கு எதிரான செய்திகள், கருத்துகள், அரசியல் நிலைப்பாடுகள் எதுவாக இருந்தாலும் அவரது பார்வையில் இருந்து தப்புவதில்லை.

படிப்பது மட்டுமல்ல; இதற்கு என்ன பதில்? இதன் பின்னணி என்ன?

மக்களிடம் இதை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும்? என்று அடுத்த நொடியிலேயே சிந்தனை தொடங்கிவிடுகிறது.

அடையாறு இல்லத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வாகனம் சென்று கொண்டிருக்கிறது.

சாலையில் வாகனம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது சிந்தனையோ அதைவிட வேகமாக அன்றாட வேலைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அன்றைய நிகழ்ச்சிகள், சந்திக்க வேண்டியவர்கள், ஆற்ற வேண்டிய பணிகள்ஒவ்வொன்றையும் திட்டமிட்டுக் கொண்டே பயணம்.

காலை 9 மணியளவில் புதுச்சேரி. காலை உணவு. அவ்வளவுதான்.

அடுத்த பயணம் உடனே கடலூரை நோக்கி. பிறந்த மண்ணில் சில நிமிடங்கள்…

திராவிடர் கழகம்

கடலூரில் தனியார் நிறுவன திறப்பு விழா. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள், அறிவுரைகள். உரை நிகழ்ச்சி முடிந்தது. நேரம் 12.30 மணி.

அதன் பிறகு அவர் தனது பிறந்த ஊரான கடலூரை வலம் வருகிறார்.

அது வெறும் சுற்றிப்பார்த்தல் அல்ல.

ஒரு மனிதர் தனது இளமைப் பருவத்தைத் தொட்டுச் சென்ற மண்ணை மீண்டும் பார்க்கிறார்.

ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் வருகை தந்த இடம்.

பெரியார் அரசு கலைக் கல்லூரி. கடலூர் வெள்ளிக் கடற்கரை சாலை.

கடற்கரை.

பழைய நினைவுகள்.

அந்த மண்ணோடு கலந்த வாழ்க்கையின் சில பக்கங்களை நினைவுகூர்கிறார்.

வாழ்க்கை எவ்வளவு தூரம் அழைத்துச் சென்றாலும், பிறந்த மண்ணின் நினைவுகள் மட்டும் ஒருபோதும் தொலைந்து போவதில்லை அல்லவா?

ஆனால் அந்த நினைவுகளில் நீண்ட நேரம் தங்கிவிட அவருக்கு நேரமில்லை.

மீண்டும் பயணம்.

திராவிடர் கழகம்

கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அறிவுப் பயணம்

புதுச்சேரி.

பிற்பகல் 2.30.

மதிய உணவு.

சிறிது நேரத்தில் மீண்டும் பணிக்குத் தயாராகிறார்.

மாலை 5 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு.

கேள்விகள் வருகின்றன.

ஒவ்வொரு கேள்விக்கும் பதில்.

பின்னணி.

புள்ளிவிவரம்.

ஆதாரம்.

விளக்கம்.

எந்தக் கேள்வியாக இருந்தாலும், அதற்கான முழு விவரங்களுடன் பதிலளிப்பதுஆசிரியர் அவர்களின் நீண்டகால அரசியல், சமூக, வரலாற்றுப் படிப்பின் விளைவு!

அய்ம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மண்…

பின்னர் பாகூர்.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் உரையாற்றிய பகுதி.

அய்ம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மண்ணில் மேடையேறுகிறார்.

மேடையேறிய உடனேயே மழைத் தூறல்.

மழை அதிகரிக்கிறது.

ஆனால் கூட்டம் கலையவில்லை.

தலைவரும் நிற்கவில்லை.

வானத்திலிருந்து மழை பொழிந்தது.

மேடையிலிருந்து கருத்துகள் பொழிந்தன.

மக்கள் மனங்களில் அவை ஆழமாகப் பதிந்தன.

மழை கொட்டினாலும் ஆய்வுரை தொடர்ந்தது.

கூட்டம் இரவு 9.15 மணிக்கு முடிந்தது.

அதன்பின் இரவு 10.15 மணிக்கு விழுப்புரம் பயணியர் மாளிகை.

இரவு உணவு.

தேவையான பணிகள்.

பின்னர்தான் ஓய்வு.

மறுநாள் காலை 7.30 மணிக்கே மீண்டும் மேடையில்!

இரவு எப்போது தூங்கினார்?

எவ்வளவு நேரம் தூங்கினார்?

அதைப் பற்றி யாரும் கேட்கவில்லை.

ஏனெனில் மறுநாள் காலை 7.30 மணிக்கே அவர் அடுத்த நிகழ்ச்சிக்கான மேடையில் நின்றுகொண்டிருந்தார்!

விழுப்புரத்தில் பேராசிரியர் அறவேந்தன் இல்ல  இணையேற்பு விழா.

மணமக்களை வாழ்த்தினார்.

திருமணத்தை நடத்தி வைத்தார்.

சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

காலை 9 மணிக்கு மீண்டும் பயணியர் மாளிகை.

காலை உணவு.

அங்கு காத்திருந்த கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள்.

அவர்களுடன் உரையாடல்.

அவர்களிடம் கழகச் செய்திகளை கேட்டறிதல்.

பின்னர் மீண்டும் புறப்பாடு.

கொசப்பாளையம்  ஒரு கழகக் குடும்பத்தின் கதை

காலை 9.30 மணியளவில் கொசப்பாளையம்.

பெரியார் பெருந்தொண்டர் மறைந்த பெரியசாமி அவர்களின் இல்ல இணையேற்பு விழா.

பெரியசாமி அவர்கள் ஒரு சாதாரண குடும்பத் தலைவர் அல்ல. கழகத்தின் வேராக இருந்தவர்.

ஊராட்சி மன்றத் தலைவர் தொடங்கி பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

அவருடைய குடும்பமும் இயக்கப் பணியோடு பின்னிப் பிணைந்த குடும்பம்.

அய்ந்து பெண் பிள்ளைகள்.

அய்ந்து ஆண் பிள்ளைகள்.

அவர்களில் மூவர் மத்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றுகின்றனர்.

ஒருவர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிறார்.

அவருடைய மகன் பாரதி, தந்தையின் வழியில் சமூகப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

நிலா கல்வி அறக்கட்டளை.

அதன் கீழ் பள்ளி.

650-க்கும் மேற்பட்ட மாணவர்கள்.

விடுதி.

ஒருகாலத்தில் காவல்துறைப் பணிக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

3,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பணியைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கல்விப் பணியில் முழுக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்தப் பணியை பாரதி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை…

ஆசிரியர் அவர்கள் அந்தக் கல்வி வளாகத்திற்குள் நுழைந்தபோது

மாணவர்கள் அணிவகுத்து நின்றனர்.

அணிவகுப்பு மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

ஒரு தலைமுறை விதைத்த விதை,

மற்றொரு தலைமுறையின் கண்களில் நம்பிக்கையாக முளைத்திருப்பதைப் போல அந்தக் காட்சி இருந்தது.

மணவிழாவை நடத்தி வைத்து, கல்விப் பணியைப் பாராட்டினார்.

மணமகன் விக்னேஷ் தற்போது அந்தப் பள்ளியின் முக்கியப் பணிகளை முன்னெடுத்து வருவதையும் அறிந்து மகிழ்ந்தார்.

கிராமத்தின் இயற்கை எழிலுக்கு மத்தியில் அமைந்திருந்த அந்தக் கல்வி வளாகம், பெரியசாமி குடும்பத்தின் சமூக அக்கறைக்கு ஒரு சாட்சியாக நின்றது.

மணவிழா நண்பகல் 12.30 மணிக்கு முடிந்தது.

மீண்டும் அடுத்த பயணம்.

விருத்தாசலம்  இயக்கக் குடும்பங்களின் சங்கமம்

பிற்பகல் 2 மணிக்கு விருத்தாசலம்.

பெரியார் இயக்கக் குடும்பங்களின் ஒன்றுகூடல்.

பெரியார் பிஞ்சு முதல் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை

30 குடும்பங்களைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்டோர்.

கலை நிகழ்ச்சிகள்.

இசை நிகழ்ச்சிகள்.

குழந்தைகளின் திறமைகள்.

மகளிர் தோழர்களின் உரைகள்.

பங்கேற்றவர்களுக்கு பரிசுகள்.

அனைத்தையும் அன்போடு கவனித்தார் ஆசிரியர் அவர்கள்.

பின்னர் இயக்கக் குடும்பங்களிடம் உரையாற்றினார்.

அந்த உரையில் அரசியல் மட்டுமல்ல.

வாழ்க்கை இருந்தது.

குடும்பம் இருந்தது.

உடல்நலம் இருந்தது.

குழந்தைகளின் எதிர்காலம் இருந்தது.

அடுத்த தலைமுறை பற்றிய அக்கறை இருந்தது.

பெரியார் உடற்பயிற்சிக் கூடங்கள் தொடங்கப்பட வேண்டும்.

ஆண்களுக்கு சமையல் பயிற்சி வழங்க வேண்டும்.

மகளிருக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க வேண்டும்.

மருத்துவப் பரிசோதனையைத் தவறாமல் செய்து கொள்ள வேண்டும்.

சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் தூங்க வேண்டும்.

உணவை வீணாக்கக் கூடாது.

“குழந்தைகளுக்குப் பயிற்சி முகாம்கள் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ‘பெரியார் பிஞ்சு’ சந்தா இருக்க வேண்டும்.

குழந்தைகளின் தனித்திறன்களைக் கண்டறிய வேண்டும்.

அவர்களிடம் கேள்வி கேட்கும் உணர்வை உருவாக்க வேண்டும்.

அவர்களைப் பகுத்தறிவாளர்களாக வளர்க்க வேண்டும்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளை குடும்பம் குடும்பமாகக் கொண்டாட வேண்டும்.

விருத்தாசலம் கழக மாவட்டம் முன்னோடியாக மேற்கொண்டுள்ள இந்த முயற்சி 38 மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும்” என்ற நோக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சி 3.30 மணியளவில் முடிந்தது.

ஓய்வு? இல்லை. மதிய உணவை முடித்தார்.

சில நிமிடங்கள்கூட ஓய்வெடுக்காமல் மாலை 4 மணிக்கு நெய்வேலி நோக்கிப் புறப்பட்டார்.

4.45 மணிக்கு நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பயணியர் விடுதி.

சிறிது நேர ஓய்வு.

அதுவும் முழுமையான ஓய்வாக இருந்திருக்காது.

மாலை 6.30 மணிக்கு மீண்டும் புறப்பட்டது வாகனம். பண்ருட்டி புதுப்பேட்டை மாநாட்டு மேடைக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரவு 7.45 மணிக்கு வருகை தந்தார். பறை இசை முழங்க உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கழகத் தலைவரின் வருகையால் ஒரு சில மணித்துளிகள் போக்குவரத்து பண்ருட்டி நகரை ஆக்கிரமித்துக் கொண்டது.

மேடைக்கு வரும் வழியில் இருபுறம் இருந்த பொது மக்கள் கழகத் தலைவரை வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

தலைவர் மேடையை அடைந்தவுடன் மாநாடு தொடங்கியது.

தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூகநீதிப் பயணங்களை குறிப்பிட்டு, திராவிட இயக்கத் சாதனைகளையும் உரையாற்றிய பெருமக்கள் பட்டியலிட்டு எடுத்துக்காட்டினர்.

சரியாக 8:30 மணிக்கு உரையைத் தொடங்கியத் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் 81 ஆண்டுகளுக்கு முன்பு இதே புதுப்பேட்டையில் திராவிடர் கழகத் திறந்தவெளி மாநாட்டில் கலந்து கொண்டேன் சிறுவனாக… என்றார்.

இன்று 94ஆம் வயது எட்டப்போகும் திராவிடர் கழகத் தலைவராக தமிழர் தலைவராக தகைசால் தமிழராக விடுதலை ஆசிரியராக நம்மை வழி நடத்துகின்றவர் – இன்று அதே புதுப்பேட்டையில் உரையாற்றுவதாகக் குறிப்பிட்டு உரையைத் தொடங்கினார்.

“தந்தை பெரியார் பேசியதைப் பார்த்த 92 வயது உடையவரும் இங்கே இருக்கிறார். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நானும் இங்கே வந்திருக்கிறேன்” என்று சொன்னதும் பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்

மாநாட்டு நிறைவுரை சரியாக 9.25 மணித் துளிகளுக்கு முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் விடைபெற்று இரவு 9.45 மணிக்கு சென்னை நோக்கி வாகனம் புறப்பட்டது.

சரியாக 10.45 மணி அளவில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகில் உள்ள வழக்கமான பெட்ரோல் பங்க் ஒன்றில் வாகனம் நிறுத்தப்பட்டு இரவு உணவு எடுத்துக்கொண்ட பிறகு –

சென்னை – அடையாறு இல்லத்திற்கு சரியாக பின்னிரவு 2.30 மணிக்கு வாகனம் வந்தடைந்தது..

ஓய்வெடுக்கலாம்…. ஆசிரியர் அவர்கள் ஓய்வெடுப்பதில்லை!

இரண்டு நாள்களின் பயணத்தைத் திரும்பிப் பார்த்தால் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகள்.

ஒரு நிகழ்ச்சியிலிருந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு இடைவிடாத பயணம்.

மணவிழாக்கள்.

பொதுக்கூட்டம். செய்தியாளர் சந்திப்பு. இயக்கக் குடும்பச் சந்திப்பு.

மாணவர்களுடன் சந்திப்பு. கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல்.

நிர்வாகப் பணிகள். படிப்பு. எழுத்து. உரை. ஆலோசனை.

வாழ்த்து. வழிகாட்டுதல். எதற்கும் இடையில் அவருக்கென்று ஓர் ஓய்வு நேரம் கூட இல்லை.

உடல் சோர்வை அவர் பொருட்படுத்தவில்லை.

தூக்கக் குறைவை அவர் பொருட்படுத்தவில்லை.

நீண்ட பயணத்தை அவர் பொருட்படுத்தவில்லை.

மழையையும் பொருட்படுத்தவில்லை.

வயதையும் பொருட்படுத்தவில்லை.

மக்களின் நலன் ஒன்றையே தன்னலமற்ற உழைப்பின் இலக்காகக் கொண்டு அவர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.

அதனால்தான் கழகத் தலைவரின் வாகனத்தின் சக்கரங்கள் கூட ஒரு நேரத்தில் ஓய்ந்துவிடும்…அவரது கால்களோ ஓடிக்கொண்டே இருக்கும்!

பிறந்த மண்ணின் பாசத்தையும் நெஞ்சில் சுமந்து,

பெரியாரின் கொள்கையையும் நெஞ்சில் சுமந்து,

இயக்கக் குடும்பங்களின் அன்பையும் நெஞ்சில் சுமந்து,

அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் நெஞ்சில் சுமந்து

ஓய்வறியாமல் ஓடிக்கொண்டிருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்!

– உடன் பயணித்த செய்தியாளர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *