நாகர்கோயில், செப். 2- கன்னியாகுமரி மாவட்ட கழக மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 30.8.2026 அன்று காலை 11 மணிக்கு நாகர்கோயில் ஒழுகினசேரியில் உள்ள பெரியார் மய்யத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி தந்தை பெரியார் பிறந்த நாள் விழா குறித்து உரையாற்றினார்.
மாவட்டக் கழகத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக பொறுப்பாளர்கள் திட்டுவிளை ஞா.பிரான்சிஸ், பாறைக்காவிளை மு.பால் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்தநாள் விழாவினை கொண்டாடுவது குறித்தும், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மாவட்டம் முழுவதும் சிறப்பான வகையில் கொண்டாடப்படவேண்டும் தந்தை பெரியாருடைய கருத்துகளை கிராமங்கள் தோறும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் திராவிடர் கழகத்தை எழுச்சிகரமாக வழி நடத்தி வரும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கழகத் தோழர்களுக்கு வழங்கிய பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும், இயக்கத்தில் அதிக மாணவர்கள், இளைஞர்களை சேர்க்க வேண்டும், பாசிச பாஜகவின் சூழ்ச்சிகளை மக்கள் மத்தியில் முறியடிக்க வேண்டும் எனவும் உலகத் தலைவர் தந்தை பெரியாரின் பிறந்த நாள் கொள்கை திருவிழாவாக நடத்த வேண்டும் எனவும் எடுத்துக்கூறி கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
அறிவுலகப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்தநாள் விழாவினை கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கிராமங்கள் தோறும் கொண்டாட வேண்டும், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், துண்டறிக்கைப் பிரச்சாரங்கள் செய்ய வேண்டும், பள்ளி, கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் போட்டிகள் நடத்த வேண்டும் எனவும், விழிக்கொடை வழங்குவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன,
